சங்கீதம் தோன்றிய கதை: ஒரு புராண வரலாறு

Musical Instruments3

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 976 தேதி- 13th April 2014

மனிதன் என்பவன் வெறும் வயிறு, மூளை மட்டும் படைத்தவன் அல்ல; அவனுக்கு இருதயம் என்ற ஒன்றும் இருக்கிறது. அதுதான் அந்த இரண்டையும் விட அதிக முக்கியப் பங்காற்றுகிறது.. அர்ஜுனன் வெறும் வீரனாகவும் வில் வீச்சு நிபுணனாகவும் மட்டும் இல்லை. அவன் இசையிலும் நடனத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தான். விராடனுடைய சபையில் (அஞ்ஞாதவாச காலத்தில்) அவன் பிருஹன்னளை என்ற பெயரில் மாறுவேடம் பூண்டு தங்கிய காலத்தில் அந்நாட்டு இளவரசிக்கு இரண்டு கலைகளையும் கற்பித்தான்.

இசைக்கு பாம்புகளும் மிருகங்களும் மயங்குகின்றன என்றால் மனிதர்கள் மயங்குவதில் வியப்பு என்ன? மிருகங்களைவிட கூடுதலாக மனிதன் ரசிக்காததே வியப்பான விஷயம்.

கல் மனத்தையும் கரைக்க வல்லது சங்கீதம். இறைவனை அடையவும் உயர்ந்த சிந்தனை ஏற்படவும் சங்கீதம் உதவும். இறைவனை அடைய சம்சார சாகரம் என்னும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க வேண்டும் என்று வள்ளுவர் முதல் நேற்றுவந்த கவிஞர்கள் வரை பாடி வைத்துள்ளனர். இந்தக் கடலைக் கடக்க பல வழிகள் உண்டு. ஞானக் கப்பல் அல்லது ஞானப் பாலம் என்பன சில வழிகள்.

good tabla

சங்கீதம் என்னும் பாலம் சுருக்கு வழியில் இறைவனை அடைய உதவுவதால் “நாளும் இன்னிசையால் தமிழ் (தேவாரம்) பரப்பிய” ஞான சம்பந்தர் முதலானோர் இந்த வழியைத் தேர்ந்தெடுத்தனர். ஊர் ஊராக அவர் பாடிக் கொண்டு செல்லுகையில் அவரைத் தொடர்ந்து 5000 பேர் வரை பாடிக் கொண்டு சென்றதாக நூல்கள் மூலம் அறிகிறோம்.

வேதத்தில் இருந்து தோன்றியது இசை என்றும் சொல்லுவர். சாமவேதம் இசையுடன் ஒதப் பட்டது. இராக்ஷசனாகிய ராவணன் சாமவேதத்தில் வல்லவன். தன் நாட்டுக் கொடியில் வீணைச் சின்னத்தைப் போட்டு இசைக்கு பெருமை சேர்த்தவன். சாம வேதம் இசையின் தோற்றுவாய். சாம வேதத்துக்கும் மூத்தவன் சிவன். அவனுக்குப் பிடித்த இசை சாமகானம்.

இந்த சங்கீதம் தோன்றியது பற்றி பிரம்ம புராணம் கூறும் கதை சுவையானது மட்டுமல்ல. ஒருவரை சிந்திக்கவும் வைக்கிறது. சிவனை “மகிழ்விக்க” சங்கீதம் தோன்றியதாம்! அப்போது அதை நம்மையும் மகிழ்விக்கும் தானே? இதோ கதை:–

தட்சனின் யாகத்தில் சிவனை அவமதித்ததைக் கண்டித்து பார்வதி தீக்குளித்த கதையும் அந்த சதி தேவியை சிவன் உயிர்ப்பித்த கதையும் அனைவரும் அறிந்த கதை.

Tambourine_21787

கைலாசத்துக்கு சிவனும் உமையும் திரும்பி வரும் செய்தியை தேவ லோக பத்திரிக்கை நிருபரான நாரதர் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் தெரிவித்தார். கோபக் கனல் பொங்க திரும்பிவரும் சிவனுக்கு ஆறுதல் தர அவர்கள் ஒரு வரவேற்பு உபசாரமும் இன்னிசை நிகழ்ச்சியும் ஏற்பாடு முடிவு செய்தனர். சங்கீதத்தில் நிபுணன் என்று தனக்குத் தானே பெருமை பாராட்டும் நாரதர் முந்திக் கொண்டு நான் தான் பாடுவேன் என்றார். தேவர்கள் எல்லோரும் சரி என்று சொல்லவே அவர் பாடத் துவங்கினார். ஒரே அபஸ்வரம்.

ராகங்கள், ராகினிகள் ஒவ்வொன்றும் மனிதன் போலவே உருவம் பெற்றவை. நாரதர் பாடிய அபஸ்வரத்தில் அவைகளின் முகம் நாணிக் கோணியது. தலைகள் அறுந்து விழுந்தன. எல்லோருக்கும் தர்மசங்கடம் ஆகிவிட்டது. ஒரு நல்ல பாடகரைக் கொண்டு இதைச் சரிக்கட்ட வேண்டும் என்று தேவர்கள் சபை ஏக மனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. நல்ல பாடகருக்கு எங்கே போவது?

trimurti

அட, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு யாராவது நெய்க்கு அலைவார்களா? இதோ நமது மாட்சிமை தங்கிய சிவபெருமானையே கேட்கலாமே என்று யோசனை கூறினர். கடவுள்களில் எளிதில் திருப்திப்படுத்தக் கூடியவர் சிவன் தான். கொஞ்சம் புகழ்ந்தாலும் போதும் வரங்களை அள்ளி வீசிவிடுவார். இதனால் இவருக்கு ‘ஆசுதோஷ்’ என்று பெயர். எளிதில் மகிழக்கூடியவர் என்று இதற்கு அர்த்தம்.

எல்லோரும் சிவனைத் தோத்தரித்து வேண்டவே அவரும் இசைந்தார். ஆனால் என் பாட்டை ரசிக்கக்கூடிய நல்ல ‘ஆடியன்ஸ்’ (ரசிகர் குழு) வேண்டும் என்று ஒரு நிபந்தனை போட்டார். உடனே உலக மகா ரசிகன், புல்லாங்குழல் வித்வான் விஷ்ணுவை (கிருஷ்ணாவதாரத்தில் ப்ளூட்) அழைத்து முதல் வரிசையில் உட்கார வைத்தனர். கச்சேரி களை கட்டியது. ஆடல் வல்லானாகிய நடராஜனுக்கு சங்கீதம் என்பது ரத்தத்தில் ஊறிய கலை. சாமகானப் ப்ரியன் வேறு. அவர் பாடப் பாட ராகங்களும் ராகினிகளும் முழு உருப்பெற்றனர். புதுப் பொலிவும் பெற்றனர்.

Musical Instruments

இது பிரம்ம புராணத்தில் உள்ள கதை. யாரோ ஒருவர் மிகைப் படுத்தி எழுதியதாக சிலர் சொல்லக்கூடும் ஆனால் இதில் இந்துக்களின் சிந்தனைப் போக்கு தெளிவாகத் தெரிகிறது. அது என்ன?
1. இசை என்பது இறைவனிடம் தோன்றியது.
2. இசை– துன்பம் கோபம் இவைகளைப் போக்கி ஒருவரை மகிழச் செய்யும்
3. இசைக்கு உயிர் உண்டு. இசை என்பதை சரியான ஸ்வரத்தில் பாடாவிடில் உரு மாறும். நன்றாகப் பாடினாலோ திரு ஏறும்.
4. சப்தம் என்பது சக்தி வாய்ந்தது. அஷ்டாவக்ரன் கதையில் தவறான வேத ஸ்வரம் எப்படிக் கருவில் இருந்த குழந்தையை அஷ்ட (எட்டு) வக்ரம் (கோணல்) அடையச் செய்ததோ அது போல ஒலி அலைகளுக்கு சக்தி உண்டு.
5. தேவலோகத்தில் இசையும் நடனமும் ஒரு முக்கியக் கலை.
இவ்வளவு விஷயங்களையும் இந்தக் கதையிலிருந்து உணரலாம். இந்த உண்மைகளைப் புகட்டவே ஒருவர் இப்படிப் புராணக் கதையை எழுதினார் என்று சொன்னாலும் மிகை இல்லை.

beautiful saraswati

இந்துக் கடவுள்களும் இசைக் கருவிகளும்

எகிப்து நாட்டு சிற்பங்கள், கிரேக்க நாட்டு சிற்பங்கள் ஆகியவற்றில் இசைக் கருவிகளைக் கண்டபோதிலும், அந்த தெய்வங்கள் மறைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கும் முன் சாமவேதத்தில் தோன்றிய இசையை இந்துக் கடவுள் கைகளில் உள்ள இசைக் கருவிகள் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆயுத பூஜை அன்று அத்தனை இசைக் கருவிகளையும் இறைவன் முன்னிலையில் சந்தனம் குங்குமம் இட்டுப் பூப்போட்டு பூஜை செய்யும் வழக்கம் உலகில் வேறு எங்கும் இல்லை!!

சரஸ்வதி கையில் வீணை
சிவன் கையில் உடுக்கை
விஷ்ணு கையில் சங்கு
கண்ணன் கையில் புல்லாங்குழல்
நந்தி கையில் மிருதங்கம்
நாரதர் கையில் வீணை
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிருங்கி, தும்புரு….. என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

நடராஜர் ஆடும் போது யார் யார் என்ன வாத்தியங்கள் இசைத்தனர் என்பதை சில ஸ்லோகங்களில் படித்தால் தேவலோக ‘ஆர்க்கெஸ்ட்ரா’ பற்றி நன்கு விளங்கும்.
Contact swami_48@yahoo.com

Leave a comment

1 Comment

  1. உங்கள் பதிவுகள் எல்லாமே சிந்திக்க வைக்கின்றன. பல புதிய செய்திகளை அறிய முடிகிறது. நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: