சுமேரியாவை இந்திரன் தாக்கியது ஏன்?

interpreter

Indus Valley Interpreter in Akkadian Cylinder Seal

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1338; தேதி அக்டோபர் 10, 2014.

உலகின் மிகப் பழமையான சமய நூலான ரிக்வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. இதில் எட்டாவது மண்டலத்தில் பல புரியாத, புதிர்கள், மர்மமான விஷயங்கள் இருந்தன. இப்போது மேற்காசியாவில் உள்ள சுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் பற்றி மேலும் மேலும் தகவல் கிடைக்கவே ஒவ்வொரு புதிராக விடுவிக்கப்படுகின்றது. எட்டாவது மண்டலத்தில் நிறைய வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அவைகள் —அசுரர்கள் பற்றியவை. அசுரர்கள் என்போர் — வேத காலத்தில் பிரிந்து சென்ற இந்துக்கள் தான்.

ரிக்வேதத்தில் மிகவும் விரிவாகப் பேசப்படும் யுத்தம்—தச ராக்ஞ யுத்தம்—அதாவது பத்து ராஜா போர் — இந்தப் போருக்குப் பின்னர் பல இந்துக்கள் மேற்கே ஈரானிலும் இராக்கிலும் குடியேறினர். வேதங்களைப் படித்த ஜொராஸ்தர் என்பார் தனியாக ஒரு கோஷ்டியைக் கூட்டிக்கொண்டு ஈரானுக்குப் போய் பார்ஸி மதத்தை ஸ்தாபித்தார். அவர் நிறுவிய மதம் வேத கால யாக யக்ஞங்களைப் பின்பற்றினாலும் வேதம் யாரை தேவர் என்று சொல்கிறதோ அதை அவர்கள் அசுரர் என்பர் — அதாவது கோஷ்டிப் பூசல் — ( திராவிட கழகம் உடைந்து நமது காலத்திலேயே பல ‘’மு.க.’’ க்கள் உண்டானது போல)

இது ஒரு புறமிருக்க — சில மன்னர்களின் பெயர்கள் ரிக் வேதத்திலும் பார்ஸி மதப் புத்தகமான சென் ட் அவஸ்தாவிலும் ஒன்றாக இருப்பதை பலரும் கவனித்தனர். சுமேரியாவில் பயன்படுத்தப்படும் ‘’மாண’’ என்ற எடை ரிக் வேதக் கவிதையிலும் உள்ளது. இதைக் கண்ட மாக்ஸ்முல்லர் கூட, இந்த ஒப்பீடு சரி என்றால், வேதத்தின் இந்தப் பகுதி மிகப் பழமையானதாகத் தான் இருக்கும் என்றார். இப்போது அந்தப் பகுதி எல்லாம் கி.மு.2000 ஐ ஒட்டியது என்பது ‘’நிரூபணம் ஆகிவிட்டது.’’

talageri good

Vedic Hindus Migratory Route from Talagei’s book The Rig Veda- A Historical Analysis.

உலகம் முழுதும் சுமேரிய, எகிப்திய, சீன, எபிரேய (ஹீப்ரு) வரலாற்று நூல்களில் வரும் மன்னர்களுக்கு எல்லா என்சைக்ளோ பீடியாக்களிலும் (கலைக் களஞ்சியம்) தேதி — ஆண்டு குறித்து விட்டனர். இந்தியாவில் மட்டும் 150 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பழைய வரலாற்றை மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்!!!!!!!!

புதிய வரலாற்றின்படி பார்த்தால் எது கி.மு.2000 என்று வருகிறதோ அதுதான் ரிக்வேதத்தின் கடைசி பகுதி. இதை வைத்து ஸ்ரீஈகாந்த் தலகரி போன்றோர் இதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது ரிக் வேதத்தின் பழைய பகுதி என்று காட்டுகின்றனர். சுருங்கச் சொன்னால் வேதத்தின் பல பகுதிகள் கி.மு 4000–ஐ ஒட்டி எழுந்தது எனலாம். இற்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன்னர்!!!

பாரசீக மொழி ஆய்வாளர்களும் ரிக்வேதத்தின் எட்டாவது மண்டல காலமும் சென் ட் அவஸ்தாவின் காலமும் நெருங்கியவை என்று காட்டுகின்றனர். இரானிய சம்பிரதாயமும் ‘’ட்ராய்’’ நகர யுத்தத்துக்கு 600 ஆண்டுகளுக்கு முன் ஜொராஸ்தர் (கி.மு1800) வாழ்ந்தார் என்பர். காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கங்களில் சௌராஷ்டிர (குஜராத்) பகுதியில் இருந்து சென்றவரே ஜொராஸ்தர் என்கிறார் — சௌராஷ்டிர = ஜொராஸ்ட்ர.

துவாரகாபுரியில் கடலடியில் கிடைத்த பொருட்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் என்பதால் க்ருஷ்ணரின் ஆட்சிக்குப் பின்னர் துவாரகை மூழ்கியது என்ற புராணச் செய்தியும் உண்மையாகி விட்டது. ‘’இந்துக் கடவுளரின் கடற்படைத் தாக்குதல்கள்’’ — என்ற எனது பழைய கட்டுரையில் கிருஷ்ணர், காலதேயர் (சால்டியர்), நீவாட கவசர்கள் (கடற் கொள்ளை யர்கள்) மீது கடற்படைத் தாகுதல் நடத்தி வெற்றி கொண்டதையும் காட்டியுள்ளேன். இதே போல முருகப் பெருமான், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் தென் பகுதியில் கடற்படைத் தாக்குதல் நடத்தி கடம்பறுத்த தையும், கடல் நடுவில் இருந்த மாமரம் அழித்ததையும் (சூரபன்மன்), யவனர்களை மொட்டை அடித்து தலையில் எண்ணை பூசியதையும் காட்டியுள்ளேன் — (மாமரம் ,கடம்பமரம் என்பன அவர்களது சின்னங்கள்=காவல் மரங்கள்)

talageri rivers

இவை எல்லாம் காட்டுவது யாதெனில் இந்தியாவின் மகத்தான கடற்படை எகிப்துவரை சென்று ஆட்சி அமைத்ததாகும். மேற்காசியாவில் உள்ள மிட்டன்னிய (சிரியா) ஆட்சியாளர் அனைவரின் பெயரும் தூய சம்ஸ்கிருதத்தில் இருப்பதை உலக அறிஞர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டு விட்டனர். காசைட்டுகள், ஹிட்டைட்டுகள் ஆகியோர் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் உலகம் ஒப்புக்கொண்டுவிட்டது. எகிப்தைத் தாக்கிய ஹிக்சோஸ் என்பவர் யக்ஷர்கள் என்றும் பலர் கருதுவர். ஆனால் உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை கிடைத்த சான்றுகள் அனைத்தும் கி.மு 2000 முதல் கி.மு 1800 வரை பெரிய குடியேற்றம், படை எடுப்பு இருந்ததைக் காட்டுகின்றன. சுமேரியாவில் பல மொழிகள் பேசப்பட்டதையும் உலகம் அறியும். மெலுஹா (சிந்து சமவெளி) என்னும் இடத்தில் இருந்து வந்த மொழிபெயர்ப்பாளரின் உருவம் அக்கடிய மன்னன் படத்துடன் உள்ள சிலிண்டர் முத்திரை கிடைத்து இருக்கிறது. அது கி.மு 2500-ஐச் சேர்ந்த்து —( நரம் சின்= நரச் சந்திர என்ற மன்னன் உடையது — சின் என்பது சந்திர என்ற சொல் ஆகும் — நாம் ராமச் சந்திர, ஹரிச் சந்திர என்பது போல)

சுமேர் பகுதியில் 3000 கடவுள் பெயர்கள் இருப்பதை முன்னரே ஒரு கட்டுரையில் காட்டிவிட்டேன். ஏன் இவ்வளவு கடவுள் பெயர்கள்? ஏன் இவ்வளவு மொழிகள், ஏன் இவ்வளவு மொழி பெயர்ப்பாளர்கள்? ஏன் இவ்வளவு மொழி பெயர்ப்புகள்? அதுவும் கி. மு.3000-த்தில்? ஏன் என்றால் அது உலக மக்களின் படை எடுப்புத்தளமாக விளங்கியது. சம்ஸ்கிருத நூல்களில் எகிப்துக்கும் ‘’மிஸ்ர தேசம்’’ என்று பெயர்—அதாவது கலப்பட பூமி—ஆக தூய இரத்தம் உடைய ஒரே இடம் பாரத பூமி – மற்ற எல்லா இடங்களும் ‘’கலப்படங்கள்’’ என்பது 4000 வருஷத்துக்கு முன்னிருந்த நிலை! அதாவது கி.மு. 2000.

ரகசிய எட்டாம் மண்டலம் தரும் விசித்திர தகவல்கள்
RV. 8-5-37
புரோகிதருக்கு காசு என்ற மன்னன் (இரானியர்) 100 ஒட்டகங்களையும், 10,000 பசுக்களையும் தானம் கொடுத்தான்.
((ஆர். வி. என்ற ஆங்கில எழுத்து ரிக் வேதம் என்பதன் சுருக்கம்))
RV 8-64-6
பரசு, திரிந்திர (ஈரானிய பாரசீக=பரச=பெர்சிய) ஆகியோர் ஒரு லட்சம் பரிசு தந்தனர்.
RV 8-12-9
சூரிய கிரணங்கள் எரிப்பது போல இந்திரன் அர்சசானாவை (ஈரானிய எர்ஷான்) அழித்தான்
RV 8-32-2
அர்சசானா (ஈரானிய எர்ஷான்), ஸ்ரீபிந்து, அஹி சுஷ்வ ஆகியோரைக் கொன்றான்.
RV 8-46-32
பலபூதனும், தார்க்ஷனும் புரோகிதருக்கு 100 ஒட்டகங்கள் தானம் கொடுத்தார்கள்.

இதில் ஒட்டகம் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய மொழிகள் அனைத்திலும் சம்ஸ்கிருதப் பெயர்தான் (உஷ்ட்ர=ஒட்டை=ஒட்டகம்) பயன்படுத்தப்படுகிறது. இது ராஜஸ்தானுக்கு அப்பால் பாலைவனங்களில் வசிப்பது. ஈரானியர்களும் பிராமணர்களை மதித்து தானம் கொடுத்தது அவர்களும் நம்மவரே என்பதற்குச் சான்று பகரும். சங்கத் தமில் இலக்கியத்தில் ஒட்டகம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடப்படுகிறது!
earliestcivilsation map

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் – தொடர்ந்து 1500 ஆண்டுகளுக்கு—ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து — அரண்மனைகளைத் தரைமட்டமாக்கி—பெண்களின் முடியைக் கத்தரித்து—கயிறு திரித்து வெற்றி பெற்ற மன்னரின் தேரை இழுத்து வந்ததையும்—இரத்த ஆறு ஓடியதையும்—சங்க இலக்கியத்தில் படிக்கிறோம். ஆனால் அவர்கள் தூய தமிழர்கள். அது போலவே இந்திரனால் தாக்கப்பட்ட ஆட்களும் நம்மவரே! நமது காலத்திலேயே இலங்கைத் தமிழர் குழுக்கள் ஒருவரை ஒருவர் குண்டு வைத்து தகத்து அழித்ததையும் கண்டோம்.- ஆனால் எல்லோரும் தமிழர்களே!!

மேலும் இந்திரன் என்பது ராஜா=மன்னன் என்று பொருள்படுமேயன்றி ஒரு தனி நபரைக் குறிப்பது அல்ல.

சுமேரியா மீது தாக்குதல்

தெற்கு மெசபொடோமியாவில் லார்சா என்னும் நகரம் இருக்கிறது. இங்கிருந்து ஆண்ட மன்னர்களில் ஒருவர் எமிசம் (கி.மு2004). இவருடைய பெயர் ரிக் வேத எட்டாம் மண்டலத்தில் எமுசா என்று உள்ளது. இது சம்ஸ்கிருத சப்தமில்லாத ஒரு விநோதப் பெயர். அவரை இந்திரன் கொன்றான் (8-76 முதல் 78 வரை). இதைப் பாடிய ரிஷி குருசுதி தனக்கு ‘’மாண’’ அளவு தங்கம் வேண்டும் என்று பாடுகிறார். ‘’மாண’’ என்பது அரை பவுண்டு (சுமார் முப்பது சவரன்) – என்று நூல்கள் சொல்லும்.

தைத்ரீய சம்ஹிதையில் வரும் ஒரு குறிப்பும் இதை உறுதிப்படுத்துகிறது:
‘’நீ போக முடியாத இடங்களில் எல்லாம் போய் வெல்லுவேன் என்று சொன்னாய். அசுரன் வனமோசா, ஏழு மலைகளுக்கு அப்பால் அசுரர்களுக்குக் காவலாக நிற்கிறான். அவனை அழித்து தேவர் விரும்பும் செல்வத்தைக் கொண்டுவா. அந்தப் பன்றியைக் கொல்’’.

இந்தப் பிரார்த்தனையைத் தொடர்ந்து ‘’இந்திரன் ஒரு தர்ப்பைக் கட்டின் முடிச்சைப் பிடித்து மலைகளைப் பிளந்து அவனைக் கொன்றான்’’.

ஆக எமுஷா என்பவனிடம் நிறைய செல்வம் இருந்தது தெரிகிறது. அவன் அசுர மன்னன் என்பதும் தெரிகிறது. அசீரியாவை (அசுர பூமி) ஆண்ட பல மன்னர்களின் பெயரில் அசுர என்ற சொல் இருப்பதையும் கவனிக்க வேண்டும். விஷ்ணுவின் வராக அவதார கதையும் இதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

((சிறு வயதில் அம்புலி மாமாவிலும் வேறு பல இடங்களிலும் ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில்……………………. என்று கதைகள் படித்தோம். அவை எல்லாம் வேத கால வசனங்கள் என்பதைக் குறிப்பிடலும் பொருத்தம்))
peryplus_first_century_AD_1000px

எட்டாவது மண்டலத்தில் வரும் பல பெயர்கள் வேதத்தில் இருப்பதைப் போல அவஸ்தா நூலிலும் உள்ளன:

சுஷ்ரவ = ஹுஷ்ரவ
இஷ்டஸ்வ (1-122) = விஸ்டஸ்ப
இந்த்ரோத (8-68) = பாபிலோனிய மன்னன் இந்தாது
ஹுஷ்ரஸ்வவுடன் வேத கால மன்னன் திவோதச அதிதிக்வ உடன்பாடு செய்து கொண்டதையும் வேதம் பகரும் (1-53-9)

((சுதாச, திவோதாச என்னும் வேத கால மன்னர்களின் பெயரில் தாச என்ற பின்னொட்டு இருப்பதைக் கவனித்தல் நலம் — தாச, தஸ்யூ என்பவர்கள் திராவிடர்கள் என்று வெள்ளைக்காரன் கட்டிவிட்ட பொய் மூட்டைகள் எல்லாம் இதன் மூலம் அவிழ்ந்து உதிர்ந்து விழுந்து அழியும். அவர்களுக்கு உதவியவர்கள் விஸ்வாமித்ரர், வசிஷ்டர் என்ற இரண்டு மிகப்பெரிய ரிஷிக்கள் ஆவர். புரானங்களிலும் கூட அசுர குரு சுக்ராசார்யார் என்றும் அவர் ஒரு பிராமணர் என்றும் படிக்கிறோம் சங்கத் தமிழ் இலக்கியமும் கூட குரு, சுக்ரன் ஆகிய இருவரையும் இரண்டு அந்தணர்கள் என்று புகலுவதையும் மனதிற் கொள்க. புகல்=பகர்=சொல்))

மெகஸ்தனீஸ் சொல்லும் அதிசயச் செய்தி!!!
2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனீஸ் என்ற கிரேக்க தூதர் ஒரு முக்கிய செய்தியைச் சொல்கிறரார்:-

உலகநாடுகளில் ஒரு ஒப்பற்ற இடத்தை வகிப்பவர்கள் இந்தியர்கள். அவர்கள் பதி எழு அறியாப் பழங்குடியினர். தந்தை பாக்கஸ் முதல் மஹா அலெக்சாண்டர் வரை அவர்கள் இதுவரை 154 மன்னர்களைக் கண்டுவிட்டனர். அவர்கள் ஆண்ட காலம் 6451 ஆண்டுகள் 3 மாதங்கள்.
(மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா நமக்குக் கிடைக்காத போதிலும் பிளினி, அர்ரியன் மேற்கோள்கள் மூலம் இவற்றை நாம் அறிகிறோம். இதை அப்படியே நாம் எடுத்துக் கொண்டால் மகத சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் 2300+6451= 8751 ஆண்டுகளுக்கு முன் இருந்திருப்பான். அதாவது சுமேரிய, எகிப்திய நாகரீகங்கள் நமக்கு கொசுப் போல. நாம் இயமலை!!! — ஆயினும் அறிஞர் பெரு மக்கள் ஒரு மன்னருக்கு 20 ஆட்சி ஆண்டு சராசரி என்று நிர்ணயித்து இருப்பதால் மெகஸ்தனீசுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதே பொருத்தம். அதாவது இற்றைக்கு 5300 (2300+3000 = 5300) ஆண்டுகளுக்கு முன்— கலியுக துவக்கம் போதுதான் புதிய ஆட்சி மலர்ந்தது என்பது மகத சாம்ராஜ்யத்துக்குப் பொருந்தும் (மெகஸ்தனீஸ் நமக்கு 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்))

கிரேக்க ஆசிரியர்கள் பாக்கஸ், ஹெர்குலீஸ் என்றெலாம் நம்மவருக்கு பெயர் சூட்டுவதிலும் ஒரு தாத்பர்யம்—சூட்சுமம்—இருக்கிறது. அவர்களும் நம்மையே அவர்களுடைஅய மூதாதையர்களாகக் கருதுகின்றனர்!!!!!

silkroads2000BCE

இறுதியாக ஒரு எச்சரிக்கை:
வெள்ளைகாரர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து விடக்கூடாது. இந்திரன் என்ற சொல்லைக் கண்டவுடன் அவனுக்கு காலம் நிர்ணயித்து விடக்கூடாது. இது மன்னன், ராஜ என்ற பொதுப் பெயர்.

இரண்டாவது எச்சரிக்கை:
தசரதன், எமுஷா என்று பெயரைப் பார்த்தவுடன இவன் அவனேதான்— என்று முடிவு செய்துவிடக்குடாது. ராமாயண தசரதன், சிரியாவை ஆண்ட தசரதன் (கி.மு1400), அசோகனுடைய பேரன் தசரதன், எனது நண்பர் விருதுநகர் தசரத நாடார் ஆகிய பல தசரதன்கள் உண்டு. ராமசெஸ் என்ற பெயரில் மட்டும் எகிப்தில் 11 மன்னர்கள் உண்டு. அலெக்சாண்டர் என்ற பெயரில் நமது தாத்தா காலம் வரை பல மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆக ரிக் வேதத்தின் எட்டாம் மண்டலத்தின் காலம் கி.மு. 2000 ஐ ஒட்டி என்று முடிவு கட்டிவிட வேண்டாம். ஒரே பெயரில் பல மன்னர்கள் இருப்பது தெரியவந்தால் இதுவும் மாறலாம்!!!

சுபம்.

Leave a comment

2 Comments

  1. னது நண்பர் விருதுநகர் தசரத நாடார் ஆகிய பல தசரதன்கள் உண்டு.

  2. எனது நண்பர் விருதுநகர் தசரத நாடார் ஆகிய பல தசரதன்கள் உண்டு. 🙂

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: