
Sheena Iyengar with her husband Garud
டைரக்டர் பாக்யராஜை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழான ‘பாக்யா’வில் அறிவியல் துளிகள் தொடர் கடந்த நாலரை ஆண்டுகளாக வெளி வருகிறது. அதில் 23-10-2015 தேதியிட்ட இதழில் வெளி வந்த 244வது அத்தியாயம்.
ஷீனா ஐயங்காரின் JAM STUDY ஜாம் ஸ்டடி!
Written by S NAGARAJAN
Post No.2266
Date: 23 October 2015
Time uploaded in London:10-11 AM
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
“தேர்ந்தெடுக்க நிறைய சாய்ஸ் இருந்தாலே குழப்பம் தான்! அது முடிவெடுப்பதை முடக்கி விடும். மகிழ்ச்சியைப் போக்கி விடும்”.
– உளவியல் மேதை பேரி ஷ்வார்ட்ஸ்

உளவியல் துறையில் இன்று பிரசித்தி பெற்று இருப்பவர் ஷீனா ஐயங்கார் என்ற இந்தியப் பெண்மணி. ஷீனா பஞ்சாபியப் பெண். சீக்கியர். கனடாவில் அவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். அவர் ஒரு ஐயங்காரை மணந்த பின்னர் ஷீனா ஐயங்கார் ஆகி விட்டார். அவரைப் பற்றிய வருத்தகரமான ஒரு செய்தி அவர் கண்பார்வை இல்லாதவர். சிறு வயதிலேயே விழித்திரையில் ஏற்பட்ட கோளாறால் அவரால் எதையும் பார்க்க முடியாது. ஆனால் படிப்பில் எல்லோரையும் அசத்தி விட்டார். இன்று கொலம்பிய பிஸினஸ் ஸ்கூலில் வணிகத் துறையில் பேராசிரியர். உளவியல் வேறு அவருக்கு அத்துபடி என்பதால் அந்தத் துறையையும் அவர் கவனித்துக் கொள்கிறார். ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஃபார்சூன், டைம் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் இவர் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவார். இவரது புத்தகமான ‘தி ஆர்ட் ஆஃப் சூஸிங்; விற்பனையில் சக்கை போடு போடுகிறது.
சீக்கியப் பெண்மணியான இவர் தனது ஆராய்ச்சிக்காக பல்வேறு மதங்களில் சம்பிரதாயமான பிரிவுகளி உள்ள கடும் ஆசாரத்தைப் பின்பற்றுவோர் மன விரக்தி அடையாமல் இருக்கின்றனரா அல்லது சற்று தாராளமான கொள்கைகளைக் கொண்டோர் மனவிரக்தி அடையாமல் இருக்கின்றனரா என அறிவியல் ரீதியாக ஆராய ஆரம்பித்தார். ஆய்வின் முடிவு இவருக்கே வியப்பைத் தந்தது.
சம்பிரதாயமான குடும்பங்களில் ஆசாரமாக வாழ்பவர்களே சந்தோஷமாக வாழ்க்கையை அணுக முடிகிறது என்பதை இவர் உறுதி செய்தார். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு சரியான கட்டுப்பாடும், தேர்ந்தெடுக்க சில விருப்பத் தேர்வுகளே இருப்பதும் இதன் காரணிகளாக அமைகின்றன.
வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் ஒவ்வொருவரும் இருப்பதால் அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக ஆகிறது.
இவரது ஜாம் ஸ்டடி (Jam Study) என்ற சுவையான ஆய்வு ஒன்று இவரைப் புகழேணியில் ஏற்றி வைத்தது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி மாணவியாக அவர் இருந்த போது அங்குள்ள மளிகைக் கடை ஒன்றுக்கு அடிக்கடி செல்வது அவரது வழக்கம். பிரம்மாண்டமான அந்த ஸ்டோரின் பெயர் டையாஜெர். அங்கு கடுகு மற்றும் சுவைச்சாறுகளில் மட்டும் 250 வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்குமாம். கறிகாய்கள், பழங்களிலோ 500 வகைகள் உண்டு. எதை வாங்குவது என்று தெரியாமல் அனைவரும் மலைத்துப் போவார்கள். ஏராளமாகக் குவிந்திருக்கும் காய்கறி, பழ வகைகளைப் பார்த்ததும் பரவசம் அடைவர் அனைவரும்.
ஒரு நாள் கடையின் மானேஜரைப் பார்த்த ஷீனா, “உங்கள் கடையில் எதை வாங்குவது என்று தெரியாமல் எல்லோரும் முழிக்கிறார்களே!” என்றார்.
இதைக் கேட்டு வியப்படைந்த மானேஜர், பஸ்களில் கூட்டம் கூட்டமாக அல்லவா மக்கள் இங்கு வருகிறார்கள், விற்பனை அமோகம் எனக்கு, என்று கூறினார். ஷீனாவோ மக்கள் வாங்குவதில் சிரமப்படுகிறார்களே என்றார்.
ஒரு சின்ன ஆய்வுக்கு மானேஜர் சம்மதித்தார். சோதனை அறை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் ஆறு விதமான சுவையுடைய ஜாம்கள் வைக்கப்பட்டன. இன்னொரு முறை 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்டன. 24 வகையான ஜாம் வைக்கப்பட்டபோது 60 சதவிகிதம் பேர் அந்த அறைக்கு வந்தனர். 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 40 சதவிகிதம் பேரே அங்கு வந்தனர்.
ஆனால் விற்பனை என்று எடுத்துக் கொண்டால் விளைவு நேர் எதிர்மாறாக இருந்தது. 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 30 சதவிகிதம் பேர் அவற்றை வாங்கினர். ஆனால் 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்ட போதோ வாங்கியவர்கள் 3 சதவிகிதம் பேர்களே!

Dr Iyengar with her son Ishan
இதையொட்டிய ஷீனா ஐயங்காரின் கண்டுபிடிப்பு வணிக விற்பனையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது. இந்த பிரபலமான ஆய்வு ஜாம் ஸ்டடி என்று அழைக்கப்பட்டது. சிலர் இதை ஜாம் ப்ராப்ளம் என்றும் கூறுவர்.
இதைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்றவர்கள் தங்கள் பணத்தை எப்படி கையாள விரும்புகின்றனர் என்பதில் அவர் பார்வை திரும்பியது. நிறைய விருப்பத்தேர்வுகள் இருக்கும் போது அவர்கள் திணறுகின்றனர்.
இது வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் ஏன் திருமணத்தில் பார்ட்னரைத் தேர்ந்தெடுப்பது வரை அனைத்திலும் பிரதிபலிக்கிறது.
செஸ் விளையாட்டில் ஒரு காயை நகர்த்த விரும்புவோருக்கு ஏராளமான விதங்கள் இருந்தாலும் தேவைக்கேற்ப அந்த சூழ்நிலையில் தேவையற்ற ‘மூவ்’களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பார்.
அதே போல எண்ணற்ற விருப்பத் தேர்வுகள் இருந்தாலும் நமது நோக்கம் என்ன என்பதை மனதில் உறுதி செய்து கொண்டால் தேர்ந்தெடுப்பது சுலபமாகும் என்கிறார் ஷீனா ஐயங்கார். அமெரிக்க வாழ்க்கை முறையில் சுதந்திரமும் தாராளமும் அதிகம். ஆகவே அங்கு சரியான நோக்கம் கொண்டவர்கள் ஜெயிப்பார்கள். அது இல்லாமல் இருப்பவர்கள் விரக்தி அடைவர்.
வாழ்க்கையில் அணுகுமுறை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. உலகின் பிரபல உளவியல் நிபுணரான ரொபர்டோ அஸாகியோலி சர்வாதிகாரி முஸோலினியால் சிறையில் தள்ளப்பட்டார். அவர் சிறைவாசத்தை சித்திரவதையாகவே எண்ணவில்லை. மாறாக தனித்து தியானம் செய்ய அருமையான இடம் என்று சொல்லியவாறே சிறைக்குள் சென்றார்.பின்னால் சைக்கோசிந்தஸிஸ் என்ற முறைக்கான பள்ளியையே அவர் ஸ்தாபித்தார்.
ஆகவே ஒரு நிலையை எப்படி நாம் மனதளவில் ‘ஃப்ரேம்’ செய்து கொள்கிறோம் என்பது முக்கியம் என்கிறார் ஷீனா. தினமும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விருப்பத்தேர்வுகள் நம் முன் வருகின்றன. நமது இலட்சியத்திற்கு அவை உதவுமா என்ற அணுகுமுறையுடன் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மொத்த வாழ்க்கைக்கும் உதவிகரமாக அமையும் என்கிறார் அவர்.
தான் பார்வையற்று இருந்தாலும், மற்றவர்களின் பார்வையைச் செம்மையாக்க உதவும் ஷீனா ஐயங்காரை வணிக விற்பன்னர்கள், பொருளாதார மேதைகள், ஊடகங்கள் மட்டும் மதிக்கவில்லை; சாமான்ய மக்கள் பெரிதாக மதிக்கின்றனர். எல்லாம் ஜாம் ஸ்டடியினால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?

அறிவியல் அறிஞர் வாழ்வில்
ஸ்வீடன் நாட்டின் அரசரான மூன்றாம் குஸ்டாவஸ் (Gustavus III) பாரிஸுக்கு ஒரு முறை விஜயம் செய்தார். அங்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எல்லோரும் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அப்போது அவர்கள் மன்னரைப் பார்த்து மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீலே (Scheele) அவர் நாட்டைச் சேர்ந்த அவரது குடிமகன் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் இப்படிப்பட்ட சிறந்த விஞ்ஞானியைக் கொண்டுள்ள மன்னரைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.
மன்னருக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது. விஞ்ஞானத்தை வளர்க்கத் தான் ஒன்றுமே செய்யவில்லையே, ஷீலே என்பது யார் என்றே தெரியவில்லையே என்று அவர் வேதனைப்பட்டார்.
உடனே தூதுவன் மூலமாக ஒரு அவசரச் செய்தியை தனது நாட்டின் பிரதம மந்திரிக்கு அனுப்பினார்: “உடனடியாக ஷீலேக்கு கவுண்ட் (Count)) அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கவும்.”
பிரதம மந்திரிக்குச் செய்தி கிடைத்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இந்த ஷீலே என்று. ஆனாலும் மன்னரின் ஆணையை நிறைவேற்ற அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். ஷீலேயைக் கண்டுபிடிக்கவும் என்று.
மந்திரிசபையின் செக்ரட்டரி – செயலாளர்- அவசரப் பணியை மேற்கொண்டார். பின்னர், முழுத்தகவலுடன் மந்திரி சபைக்கு வந்தார். “ஷீலே ஒரு நல்ல ஆள். அவர் ராணுவத்தில் லெப்டினண்டாக இருக்கிறார். பில்லியர்ட்ஸ் விளையாடுவதில் நிபுணர்”
மறுநாள் லெப்டினண்ட் ஷீலே, கவுண்ட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லெப்டினண்ட் ஷீலேயோ தனக்கு திடீரென்று கிடைத்த இந்த புதிய அந்தஸ்தைக் கண்டு பிரமித்து அதற்குக் காரணம் புரியாமல் விழித்தார்.
உண்மையான விஞ்ஞானி ஷீலேயைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவரைப் பற்றி யாருக்குமே தெரியவும் இல்லை!
அரசர்கள் இட்ட ஆணை சரியாக நிறைவேறுவது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பொறுத்தது. அன்றிலிருந்து இன்று வரை இது தான் உண்மை!
*********** நன்றி : பாக்யா
(Written by my brother S Nagarajan for Bhagya magazine;swami)
You must be logged in to post a comment.