பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458)

best bharat mata

Written by London swaminathan

Date: 4 January 2016

 

Post No. 2456

 

Time uploaded in London :–  8-30 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர், வாழ்க!” (பாரதியார்)

barati stat3

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனையுடைய நாடு பாரதம். இங்கு வாழ்ந்த சாது சந்யாசிகள், பெரியோர்கள், உத்தமர்கள், சத்யசந்தர்கள், உண்மை விளம்பிகள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், மஹநீயர்கள், ஞானிகள் — 3500 ஆண்டுகளாக ஒரே கருத்தை வலியுறுத்துவது, படித்துப் படித்து இன்புறத்தக்கது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –

என்ற புறநானூற்று வரிகளை (புறம் 192) அறியாதோர் யாருமில்லை; கனியன் பூங்குன்றன் இக்கருத்தைச் சொல்லுவது போலவே வடமொழி வாணவர்களும் செப்பி மகிழ்வர். வசுதைவ குடும்பகம்= உலகம் ஒரே குடும்பம் என்பது அவர்கள் கண்ட உண்மை.

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்

உதராசரிதானாம் து வசுதைவ குடும்பகம்

—ஹிதோபதேசம், பஞ்ச தந்திரம்

பொருள்:- இது தன்னுடையது, அது பிறருடையது என்பது சின்ன புத்தியுடையோரின் செய்கையாகும்; நற்குணம் பொருந்தியோருக்கோவெனில் இந்த உலகமே ஒரு குடும்பம்.

kanchi best anbe sivam

இந்தக் கருத்து பஞ்சதந்திரத்திலும், ஹிதோபதேசத்திலும் வலியுறுத்தப்படுவதால் இதன் முக்கியம் மேலும் தெளிவாகிறது.

 

பண்டிதா: சமதர்சின:

ஆனால் இதற்கெல்லாம் மூலக் கருத்து கண்ணபிரான் சொன்ன பகவத்கீதையில் இருக்கிறது. ஞான பண்டிதர்களுக்கு நாயும் பசுவும், யானையும் ஒன்றுதான்! அந்தணர்களும் புலையர்களும் ஒன்றுதான். காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதியின் வரிகள் – அவர்களுடைய கருத்தைப் பிரதிபலிக்கிறது.

இதோ பகவத் கீதை ஸ்லோகம்:

வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின:

(பகவத் கீதை 5-18)

வித்யா விநய ஸம்பன்னே = கல்வியும் அடக்கமும் நிறைந்த

ப்ராஹ்மணே = பிராமணனிடத்தும்

கவி ஹஸ்தினி = பசுவினிடத்தும், யானையினிடத்தும்

சுனி ச = நாயினிடத்தும்

ஏவ ச்வபாகே = அவ்வாறே நாயை உண்ணும் புலையனிடத்தும்

பண்டிதாஹா = ஆத்ம ஞானிகள்

ஸமதர்சினஹ = சமநோக்கு உடையவர்கள்.

baba closwe up

இதையே தாயுமானவரும்

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும்  அவ்வுயிராய்

அங்கிருப்பது நீ யன்றோ பராபரமே – என்பார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்……..

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

 

இது எவ்வளவு உண்மை; சிறு வயதில் எத்தனை கதைகள் கேட்டிருக்கிறோம்; ஒரு பெரிய பணக்காரனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லது ஒரு ராஜாவுக்கு இரண்டு குமாரர்கள்; ஒருவர் உயர்ந்தார்; மற்றொருவர் தாழ்ந்தார் என்றும் அதற்கான காரணம் என்னவென்றும் விதவிதமாக கதைகள் உள்ளன. அவரவர் செய்தொழிலால்தான் இந்த வேற்றுமைகள். இந்தக் கருது வள்ளுவனுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பிருஹதாரண்யக உபநிஷத்திலுமுள்ளது (பிருஹத் = பெரிய, ஆரண்யக = காட்டு).

 

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை.

சிறுவயதில் ஒரு கதை கேட்டிருப்போம்; உடலின் ஒவ்வொரு உறுப்பும் தான் தான் முக்கியமான வேலையைச் செய்வதாகச் சொல்லி தனகே முதல் மரியாதை வேண்டும் என்னும் கதை அது. தான் ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும் அனுப்பாவிடில் உடலே இயங்காது என்று இதயம் சொல்கிறது. நுரையீரலோ தான் ஆக்சிஜனைக் கொடுத்து, கரியமிலவாயுவை வெளியேற்றாவிடில் உடலில் நீலம் பாய்ந்து இறக்க நேரிடும் என்கிறது. மூளையோ தந்து உத்தரவுப்படியே நரம்புகள் செயல்படுகின்றன; ஒருவனுடைய மூளை இறந்துவிட்டால் இதயம் என்ன செய்ய இயலும்? என்று சொல்கிறது. இதே போல கை, கால், கண், மூக்கு, வாய், செவி, தோல் எல்லாம் சண்டையிடுகின்றன. ஆனால் இக்காலத்தில் ஒரு சிறுவனுக்குக் கூடத் தெரியும் உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை; ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அவன் உடலூனமுடையவனே என்று.

 

இதை ரிக்வேதமும் புருஷசூக்தத்தில் (10-8-90) அழகாகச் சொல்லும்; பிராமணன் என்பவன் சிந்திப்பவன்; க்ஷத்ரியன் என்பவன் தோள்வலியால் நாட்டையும் மக்களையும் காப்பவன்; வைஸ்யன் என்பவன் தொடை வலிமையால் வணிகம் செய்து காப்பான்; சூத்திரன் என்பவன் கால் வலிமையால் உழைத்துக் காப்பான் என்று.

ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்,

பாஹூ ராஜன்ய க்ருத:

ஊரு ததஸ்ய யத் வைச்ய:

பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத

பொருள்: பிரம்மாவை தேவர்கள் பலியிட்டபோது அவருடைய முகம் பிராமணனாகவும், கைகள் க்ஷத்ரியனாகவும், தொடைகள் வைச்யனாகவும், பாதங்கள் சூத்ரனாகவும் ஆயின.

 

at_the_feet_of_god_medium

எப்படி ஒரு உறுப்பில்லாமல் உடல் நன்கு செயல்படாதோ அப்படியே இந்த நான்கு வர்கமும் எந்த நாட்டிலும், எப்போதுமிருக்கும்! ஆனால் பிறப்பின் அடிப்பையிலன்றி செய்தொழிலின் அடிப்படையில்.

பிற்காலத்தில் இது வேறுபட்டது. முன்காலத்தில் சேர,சோழ, பாண்டிய மன்னன் மகன்கள் தான் ராஜாவாக இருக்கமுடியும். இன்றும் பிரிட்டனில் ராஜா அல்லது ராணி மகன் தான் அரசுகட்டிலில் ஏற முடியும். இன்றும்  நார்வே, சுவீடன், மொனாகோ என்று ஏராளமான நாடுகளில் இந்த வழக்கமுளது.பிரிட்டனில் பிரபுக்கள் மகன்தான் பிரபுவாகிறான். பரம்பரை மூலமே பிரபுக்கள் சபையில் இடம் பெறமுடியும். இந்திராகாந்தி, ராஜமான்யத்தை ஒழித்தபின்னர்தான் ஒவ்வொரு நாடாக அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற பலநாட்டு மக்கள் இன்றும் பிரிட்டிஷ் ராணியை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பிறப்பே, பதவியை முடிவு செய்கிறது! அதில் யாரும் தவறு கானவில்லை. ஒவ்வொரு தடவைக் கருத்துக் கணிப்பு நடக்கையிலும் ராஜா ராணிக்குப் பெரும்பானமை மக்கள் அதாரவு இருக்கிறது!

எதுவுமே மக்கள் பார்க்கும் பார்வையிலும், ராஜ குடும்பத்தினரின் செயல்பாட்டிலும்தான் இருக்கிறது. ஆக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கூட காலத்துக்கு காலம், நாட்டுக்கு நாடு வேறு படும். ஆனால் இந்திய ஆன்ம ஞானிகளுக்கு எல்லாம் எப்போதும் ஒன்றே.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் (திருமூலர்)

 

894_Bhagwat_Gita_thumb[13]

–சுபம்–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: