Research article written by London swaminathan
Date: 19 May 2016
Post No. 2823
Time uploaded in London :– 9-19 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
சங்க காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழர்களின் பொழுது போக்காக சில விளையாட்டுகள் இருந்து வருவது சிறப்புக்குரியது. சேவல் கோழி, கவுதாரி முதலிய பறவைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது, அதே போல ஆடு, மாடுகளை சண்டை போட வைத்து வேடிக்கை பார்ப்பது பற்றி சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் சுவையான செய்திகள் உள்ளன. இங்கே ஒன்றிரண்டைத் தொட்டுக் காட்டுகிறேன்.
கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் அயோத்தி நகர மக்களின் பொழுதுபோக்குகளை கம்பன் வருணிக்கிறான். கோசல நாடு பற்றி கம்பன் கூறியது அனைத்தும் சோழ நாட்டை மனதிற்கொண்டு சொல்லப்பட்டவையே.
கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி
உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றி சீறி
வெறுப்பு இல களிப்பின் வெம்போர் மதுகைய வீர ஆக்கை
மறுப்பட ஆவிபேணா வாரணம் பொருத்துவாரும்
பொருள்:–
சினம் மிகுந்த மனமும், கண்களைப் போலச் சிவப்பு நிறமுள்ள உச்சிக் கொண்டையும் தோன்ற, தமது காலிலே கட்டப்பட்ட கத்தியால் தம்முடன் போரிடும் கோழியைத் தாக்கி, முன்பகை ஏதுமில்லாமலே கோபித்துப் போர் செய்வதில் வெறுப்பில்லாதனவாகி, செருக்கினால் அப்போரில் வலிமை பெற்று, வீர வாழ்க்கைக்கு களங்கம் உண்டானால், உயிர்துறக்கும் சேவற் கோழிகளை சிலர் போர் செய்யுமாறு செய்தார்கள்.
எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்னத் தாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்
பொருள்:–
எருமைகள் பெற்றெடுத்த செந்நிறக் கண்களையுடைய ஒரு எருமைக் கடாவுடன், மற்றோர் எருமைக் கடா, இவை ‘உருமும் இடிகள்’ ஆகும், என்று சொல்லும்படி மோதி, இருட்டு, இரண்டு பகுதியாகிப் போர் செய்வது போல போரிட்டன. அந்தக் கடாக்களின் போரினை வேடிக்கை பார்த்து ஆரவாரித்து வண்டுகள் மேலே எழுந்தன. மக்களில் சிலர் வானம் வரை சப்தம் கேட்கும்படி ஆரவாரம் செய்தார்கள்.
தமிழர் நாகரீகமும் பண்பாடும் என்ற நூலில் அ.தட்சிணாமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்:–
வீரவுணர்வு மிக்க தமிழர்கள் ஆட்டுக் கிடாய்களையும், காடை, கவுதாரி, கோழி முதலான பறவைகளையும் பழக்கிப் போரிடச் செய்து மகிழ்வதில் நாட்டம் கொண்டிருந்தனர். ‘குப்பைக் கோழி தனிப் போர் போல’ (பாடல் 305) என்று குறுந்தொகைப் புலவர் ஒருவர் அரிய உவமையை ஆள்கின்றார். இதனால் கோழியைப் பழக்கிப் போரிடச் செய்தலும் வழக்கிலிருந்தது என அறியலாம். புறப்பொருள் வெண்பா மாலையில் பூழ்ப்போரும் தார்ப்போரும் வாகைத் திணையில் பேசப்படுகின்றன.
பூழ்= காடை, கானாங்கோழி பறவை வகைகள், தார்=ஆட்டுக் கிடா
நமது இலக்கியங்களில், குறிப்பாக கம்பராமாயணம், பெருங்கதை போன்ற இடைக்கால நூல்களில், இது போன்ற நிறைய குறிப்புகள் உள.
–சுபம்–
You must be logged in to post a comment.