அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)

Written by London swaminathan

 

Date: 28 December 2016

 

Time uploaded in London:-  11-05 am

 

Post No.3491

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“அழுத பிள்ளை பால் குடிக்கும்” என்பது தமிழ் பழமொழி. இது அநேகமாக பல்வேறு மொழிகளிலும் உள்ள பழமொழி. ஏசு கிறிஸ்துவும் மலைப் பிரசங்கத்தில் “அழுகின்றவான்களே பாக்கியவான்கள் ஏனெனில் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். அழுதே கடவுளை அடைந்தவர்கள் அல்லது அவன் அருளைப் பெற்றவர்கள் இந்து மதத்தில் நிறைய பேர் உண்டு.

 

துச்சாதனனால் துகில் உரிக்கப்பட்ட திரவுபதி தன் மானத்தைக் காக்க எவ்வளவு கதறியும் யாரும் காப்பாற்றவில்லை . அதுவரை புடவையை ஒரு கையால் பற்றி இருந்த திரவுபதி, இரு கைகளையும் உயர்த்தி கண்ணா காப்பாற்று என்று கதறியவுடன் இறைவனே வந்து ஆடை கொடுத்தான்.

 

இதனால் “எனக்கு எப்போதும் துக்கமே தா கண்ணா, அப்போதுதான் உன் நினைவு நீங்காது நிற்கிறது” என்பாள் இன்னொரு பெண்மணி: “துன்பக் கண்ணீரைத் துடைக்கும் உன் தரிசனம் துன்பம் வரும்போது கிட்டுவதால் அடிக்கடி துன்பம் வரட்டும் என்பது என் பிரார்த்தனை”– இது குந்தியின் பிராத்தனை.

 

முதலையிடம் சிக்கிய ஒரு யானையை எவ்வளவோ யானைகள் மீட்க முயன்றும் பலனில்லாமற் போகவே, ஆதிமூலமே என்று கதறியது அந்த யானை. உடனே கஜேந்திர மோட்சமளிக்க கருட  வாஹனத்தில் ஏறி விரைந்தோடி வந்தான் விஷ்ணு பகவான்.

 

கண்ணனும் பகவத் கீதையில் தன்னை நான்குவிதமான பக்தர்கள் நாடுகின்றனர் என்றும் அவர்களுக்குத் தான் அருள் பாலிப்பதாகவும் சொல்கிறான்.

 

அர்ஜுனா! துன்பம் அடைந்தோன், ஞானத்தைத் தேடுவோன், செல்வத்தை நாடுவோன், ஞானி ஆகிய நால்வரும்  என்னைப் பூஜிக்கும் புண்யவான்கள் ஆவர்.(பகவத் கீதை 7-16)

 

இதன் தாத்பர்யம் என்னவென்றால், ஒருவன் அழும் நிலைக்கு துக்கம் வரும்போது பரிபூரண சரணாகதி அடைந்து விடுகிறான். அதற்கு முன்வரை,  “தான்” என்னும் அஹங்காரத்துடன் சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு விதமான உபாயங்களையும் கடைப் பிடித்துப் பார்க்கிறான்.

மாணிக்க வாசகர் சொல்லுவதைக் கேட்போம்

யானே பொய் என் நெஞ்சும்

பொய் என் அன்பும் பொய்

யானால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின்

தெளிவே தித்திக்கும்

மானே அருளாய் அடியேன்

உனைவந்துறுமாறே

 

பொருள்:-

தேனும் அமுதமும் கருப்பஞ்சாறும் போலட் தித்திக்கும் பெருமானே! அடியேன் உன்னை வந்து அடையும் உபாயத்தினை அறிவித்து அருள்வாயாக. யானும், என் நெஞ்சும், அன்பும் பொய். ஆனாலும் வினையேனாகிய யான் அழுதால் உன்னை டையலாமா?

 

இந்தப் பாட்டில் கேள்வி கேட்பது போல உரை எழுதப்படிருந்தாலும், அழுதால் உன்னைப் பெறலாம் என்றே பொருள் கொள்ளவேஎண்டும் ஏனெனில் இரண்டு பாடல்களுக்கு முந்தியுள்ள பாட்டில்

அழுதேன் நின்பால் அன்பாய்

மனமாய் அழல் சேர்ந்த

மெழுகேயன்னார்  – என்ற வரிகளில் தான் தனித்து நின்று அழுவதாய்ப் பாடுகின்றார்.

 

பாரதியாரும் கூறுவார்:-

 

துன்பம் நெருங்கிவந்தபோதும் – நாம்

சோர்ந்து விடலாகாது பாப்பா!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

 

திருவிளையாடற் புராணத்தில் 2 கதைகள்

மதுரை மாநகரில் சிவபெருமான் நடத்திய 64 லீலைகளும் பல்வேறு நீதிகளை உணர்த்தும் கதைகளாம்.

 

பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் இரண்டு கதைகளில் இறைவனிடம் அழுது மன்றாடியவர்க்கு சிவ பெருமான் உதவிய கதைகள் வருகின்றன. இது போல தேவார மூவர் வாழ்விலும் பாம்புக் கடியினாலும் முதலைத் தாக்குதலினாலும் இறந்த பக்தர்களின் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோரின் அழுகை நீங்க, உயிர்மீட்ட வரலாற்றையும் படிக்கிறோம்.

 

மாமனாக வந்து வழக்குரைத்த படலம்

மதுரையில் வணிக குலத்தில் பிறந்து குபேரன் போலப் பெருஞ் செல்வம் படைத்து வாழ்ந்து வந்தான் தனபதி என்பான். அவன் மனைவி சுசீலை கற்பும் லெட்சுமீகரமும் பொருந்தி வாழ்ந்து வந்தாள். அவர்களுக்கு புத்திர  பாக்கியம் இல்லாததால்  தனபதி, அவருடைய தங்கை மகனை சுவீகார புத்ரனாக ஏற்று வாழ்ந்து வந்தார். நாளடைவில் தனபதிக்கும் அவருடைய தங்கைக்கும் இடையே பிணக்கு வளரவே, ஒரு நாள், பிள்ளைப் பேரற்ற பாவியே! என்னாலன்றோ உனக்கு ஒரு பிள்ளை கிடைத்தது? என்று சுடு சொற்களைப் பெய்துவிட்டாள். இதனால் மனமுடைந்த தனபதி, அடுத்த பிறவியிலாவது தனக்கு மகப்பேறு கிட்டவேண்டும் என்று தவம் செய்யும் நோக்கத்தோடு கானகம் சென்றான். போகும்போது தங்கையின் பிள்ளை பேருக்கே சொத்து சுகங்களை உடமையாக்கிச் சென்றான்.

 

நீண்டகாலத்துக்கு தனபதி திரும்பிவராததை அறிந்த தாயாதிகள் (தூரத்துச் சொந்தங்கள்) தங்கையின் பிள்ளையிடம் இருந்து சொத்துகளை அபகரித்தார்கள். இதனால் வருந்திய மகனும் தாயும் மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சோமசுந்தரப் பெருமானிடம் அழுது புலம்பினர்.  அவள் நித்திரையில் கனவில் வந்த சிவபெருமான், மறு நாள் தாயத்தாரை எல்லாம் வழக்கிற்கு இழுத்து அரண்மனைக்குச் சென்றால் தான் வந்து உதவுதாக சொன்னார்.

மறுநாள் அந்தப் பெண்மணியும் அரசனிடம் சென்று முறையிடவே அரசனும் சேவகர்களை அனுப்பி தாயாதிகளை அழைத்துவரச் செய்தான்.  “திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை” என்பது உண்மையாகிவிட்டது என்று மகிழ்ந்து மறுநாள் அவள் வழக்குரைத் தாள்.

 

அவர்களோவெனில், தனபதி இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த சொத்துகள் அனைத்தும் தங்கள் பங்கே என்று வாதிட்டனர். அந்த தருணத்தில் — காதில் விலைமிக்க குண்டலங்களையும், கழுத்திலே ரத்ன கண்டிகையையும், கையில் வைர மோதிரமும் விளங்க தனபதி செட்டியாரைப் போலவே சிவபெருமான் தோன்றினார். தன்னுடைய மருமகனுக்குத் தான் அணிவித்திருந்த ஐம்படை, காற்சிலம்பு, தோளில் மதாணி, காதில் கடுக்கன், நெற்றிச் சுட்டி ஆகியனவற்றைக் காணவில்லையே என்று கதறினார். அவர் தனபதி செட்டியார் அல்ல என்று தாயாதிகள் சொன்ன மாத்திரத்தில், தனபதி செட்டியாரின் வம்சத்தில் உதித்த அத்தனை முன்னோரின் பெயர்களையும் குண நலன்களையும் அவர் எடுத்துரைத்தவுடன் அதுவரை அங்கிருந்த தாயாதிகள் அனைவரும் ஆளுக்கு ஒரு சாக்குச் சொல்லி மறைந்தோடினர். . தனபதி செட்டியாராக வேடமணிந்து வந்த சிவபெருமானும் மறைந்தார். சொத்து சுகம் அனைத்தும் தங்கை மகனுக்கே கிடைத்தன.

 

வன்னியும் கிணறும் லிங்கமும் சாட்சியாக வந்த கதை

 

1400 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைப் பட்டிணம் ஒன்றில், புத்திர பாக்கியம் இல்லாத ஒரு செட்டியாரும் அவரது மனைவியும் ஒரு பெண்ணை சுவீகாரம் எடுத்து வளர்த்து வந்தனர். அவர்கள் இருவரும் அடுத்தடுத்து  இறந்தனர். அவர்களிடையே நிறைய செல்வம் குவிந்திருந்தது. இறப்பதற்கு முன்னரே அவர் மதுரையிலுள்ள தனது மருமகனுக்குத் தான் இந்தப் பெண் என்று கூறி வந்திருந்தார். அவர் இறந்தவுடன் அருகிலிருந்த உறவினர்கள் மதுரைக்கு ஓலை எழுதி அனுப்பினர். இறந்துபோன தனவந்தரின் விருப்பப்படி, இந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு சொத்துக்களை ஏற்றுக்கொள் என்று அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்தது.

 

ஓலை கிடைத்தவுடன் நல்ல நாள் பார்த்து அந்தப் பெண்ணை அழைத்துச் செல்ல அவன் பட்டிணத்துக்கு வந்தான். ஆனால் அவனுக்கு ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி மனைவியும் உயிரோடு இருந்தாள். அப்படியும் பட்டிணத்துக்கு வந்து புதுப் பெண்ணை அழைத்துச் சென்றான். மதுரையை நெருங்குவதற்கு முன்னர், தன்னுடன் வந்திருந்தோரை மதுரைக்கு அனுப்பிவிட்டு  அருகிலுள்ள கிணற்றில் நீராடிவிட்டு  அந்தப் பெண்ணுடன் சமைத்துச் சாப்பிட்டு விட்டு ஒரு வனி மரத்தடியில் படுத்து உறங்கினான். அப்பொழுது அவனை ஒரு விஷ நாகம் தீண்டவே அவன் இறந்துபோனான். அவனுடன் வந்த பெண்ணும் ஊராரும் கூடி அழுதனர். அந்தப் பக்கமாக யாத்திரை மேற்கொண்ட ஞானசம்பந்தப் பெருமான் இந்த அழுகுரலைக் கேட்டு விஷயத்தை அறிந்தார். உடனே அந்த தனவந்தரின் உடலில் இருந்த விஷத்தை இறக்கி அவனை உயிர்ப்பித்தார். அங்கேயே திருமணத்தையும் நடத்திவைத்தார்.

இருவரும் நன்றி கூறி மதுரை சென்றனர்.

 

அந்த இளைஞனின் முதல் மனைவிக்கும் இளையவளுக்கும் நாளடைவில் சக்களத்தி சண்டை வந்தது. மூத்தவள், இளைவளைப் பார்த்து என் புருஷனை ஏமாற்றிய காமக்கிழத்தி நீ, அவனுக்கும் உனக்கும் திருமணமே நடக்கவில்லை என்றாள்.  அவள் கோவென்று கதறி அழுது, தங்களுக்கு முறையான திருமணம் நடந்தது என்றும் சொன்னாள். அதற்கு யார் சாட்சி என்றவுடன், அப்பெண் தாங்கள் திருமணம் செய்துகொண்ட இடத்தில் ஒரு வன்னி மரமும் கிணறும் லிங்கமும் இருந்தது என்று சொல்ல, மூத்தவள் சிரி சிரி என்று சிரித்து உனக்கு சாட்சி சொல்ல அவை வருமா? என்றாள். அந்தப் பெண் கண்கலங்கி சோமசுந்தரப் பெருமான் கோவிலுக்குச் சென்று  நெஞ்சுருகப் பிரார்த்தித்தாள். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒரு வன்னி மரமும் லிங்கமும் கிணறும் அங்கே தோன்றின. உடனே எல்லோரையும் அழைத்துக் காண்பிக்க அவர்ர்கள் அனைவரும் வியந்து, சிவபெருமானை வணங்கினர். உடனே அவன் மூத்தவளை வீட்டைவிட்டு வெளியேறு என்று சொல்ல இளையவள் மன்றாடி அவளையும் உடனிருக்க  அனுமதிக்கும்படி கெ,,,சினாள். அவனும் மனமிறங்கி சரி என்று சொன்ன பின்னர் இருவரும் சுகமாக வாழ்ந்தார்கள்.

 

(இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வன்னிமரம், கிணறு, லிங்கம் சிலைகள் உள்ளன.)

 

நம்பினார் கெடுவதில்லை! இது நான்கு மறைத் தீர்ப்பு — மஹாகவி பாரதியார்.

–Subahm–

 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: