Written by London Swaminathan
Date: 29 May 2018
Time uploaded in London – 14-35
Post No. 5058
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத சக்திகள்! (Post No.5058)
தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் அறிந்ததே:
கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;
கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;
ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;
கட்செவி எடுத்தாட்டலாம்
வெந்தழலின் இரதம் வைத்தைந்து லோகத்தையும்
வேதித்து விற்றுன்ண்ணலாம்;
வேறொருவர் கானாமல் உலத்துலாவரலாம்
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடிருக்கலாம்
மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;
சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்
தன்னிகரில் சித்தி பெறலாம்
சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.
அற்புதங்களின் ப்ட்டியலைத் தரும் தாயுமானவர் மனதை அடக்குவதுஅதை விடக் கடினம் என்கிறார்.
இந்த மாதிரி அற்புதங்களை தமிழ் சித்தர்கள் சர்வ சாதாரணமாகச் செய்து வந்தனர். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல! இறைவனின் அற்புதங்களை சொல்லும் தமிழ் மொழி நூல்களும் அதை திரு ‘விளையாடல்’ என்றே செப்பும். ஸம்ஸ்க்ருதத்தில் அதை லீலா விநோதங்கள் அல்லது விபூதி என்பர்.
இதற்கெல்லாம் மிக மிக முந்தைய அற்புத துதிகள் உலகின் மிகப் பழமையான ரிக் வேதத்தில் உள்ளன.
ரிக் வேதம் 3500 ஆண்டு முதல் 8000 ஆண்டுவரை பழமையுடைத்து என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு. அதில் பத்தாவது மண்டலத்தில் ஜடை தரித்த (கேசீ) முனிவர்களைப் பற்றியும் அந்த முனிவர்களின் சக்தி குறித்தும் வருகிறது
ஏழு ரிஷிகள் சூரியனை முனிவனாக உருவகித்து பாடிய பாடல் அது.
அதில் வரும் சில வரிகளைக் காண்போம்:
கேசீ பூமியையும் சோதியையும் தாங்குகிறான்
முனிவர்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். காற்று போலச் செல்கிறார்கள்.
நாங்கள் காற்றின் மேலே ஏறினோம்; மானுடர்களே; நீங்கள் தூல தேகத்தையே பார்க்கிறீர்கள்
காற்றின் குதிரையும் வாயுவின் நண்பனுமான முனி, தேவனால் ஊக்கம் அடைந்து, கிழக்கு மேற்கிலுள்ள இரு கடல்களுக்கும் செல்கிறான்.
அப்சரஸ், கந்தர்வர்கள் செல்லும் இடங்களிலும் வனவிலங்குகள் செல்லும் இடங்களிலும் ( வானம், காடு) முனிவன் சஞ்சரிக்கிறான்.
கேசீ ஜடையுள்ளவன். அவன் ருத்திரன் விஷத்தை அருந்தினான்.
இந்தப் பாடலில் வரும் விஷம் அருந்தும் வரிகள் நமக்கு விஷம் உண்டு பெயர் பெற்ற திரு நீலகண்டன் (சிவ பெருமான்) கதையை நினைவு படுத்துகிறது.
இந்தத் துதியின் அடிக்குறிப்பில் ரிக் வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்த ஜம்புநாதன் கூறுவதாவது:-
முனிவர்கள் தங்கள் நேர்மையான வாழ்க்கை நடைமுறைகளால் வாயு, ருத்திரன் போன்ற தேவர்களின் தன்மையை அடிய முடியும். அவர்களைப் போல சிறந்த சக்திகளையும் பெற முடியும். எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்; நீண்ட அழகான முடியுடைய முனிவர்கள் தவத்தின் போது மழிப்பதில்லை. தீ ஜோதி, பூமி ஆகியவற்றைத் துதிப்பார்கள்.
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ‘தீக நிகாயம்’ என்ற பௌத்த மத நூலும் ஆறு அதி மானுட சக்திகளை விவரிக்கிறது. ரிக் வேதம் காலத்தினால் பழமையானதால் அவர்கள் மறை பொருளில் பேசுவர். ஆனால் பிற்காலத்தில் எழுந்த பௌத்த, சமண சமய நூல்கள் நமக்குப் புரியும் நடையில் எல்லாவற்றையும் நுவல்வர்.
இதோ புத்த மத நூல் இயம்புவன:
“ஒரு மனிதன் பல மனிதர்கள் ஆகலாம்; பலர் ஒன்றாகலாம்.
மலைகள், சுவர்கள் ஊடே நுழைந்து செல்லலாம்
தண்ணீருக்குள் முங்கு நீச்சல் அடிப்பது போல பூமிக்குள் மூழ்கி எழுந்திருக்கலாம்.
தண்ணீர் மீது நடந்து செல்லல்லாம்
யாருக்கும் தெரியாமல் மாயமாய் உலவலாம்
காற்றின் மீது சம்மணம் போட்டவாறு பறக்கலாம்.
நிலவையும் கதிரவனையும் தொடலாம்;
பிரம்ம லோகம் வரை மானுட உடலில் செல்லலாம்.”
இவை அனைத்தும் சாதாரண மனிதனால் செய்ய இயலாது.
சமண மத நூல்களும் இதையே சொல்லும்.
அஷ்டமா சித்திகள்
ஹேம சந்திரர் எழுதிய த்ரிசதிசலாகா புருஷ சரிதத்தில் வரும் விஷயம் பின்வருமாறு:
“ஊசியின் காதில் நுழையும் அளவுக்கு உருவத்தைக் குறுக்கலாம்.
மேரு மலையை முழங்கால் அளவாகக் காட்டும் வரை உயரலாம்
காற்றை விட லேஸாகலாம்.
இந்திரனின் வஜ்ராயுதத்தை விட வலிமை பெறலாம்.
பூமியில் இருந்தவாறே கிரஹங்களைத் தொடலாம்
நீரின் மீது நடக்காலாம். பூமிக்குள் பு குந்து எழலாம்
பொந்துக்குள் நுழைவது போல மலைகளுக்குள் எளிதில் நுழையலாம்.
உருவமே தெரியாமல் மறையலாம்; வானம் முழுதும் வியாபித்தும் நிற்கலாம்.”
ஆக ரிக் வேதம், பழங்கால மொழியில் பகன்றதை பிற்கால நூல்கள் எளிய மொழியில் செப்பின என்றால் மிகை இல்லை.
அஷ்டமா சித்திகள் — அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசிதை என்னும் எட்டுவகைச் சித்திகள்.
அஷ்டமா சித்திகள் என்பதில் மேற் சொன்ன அற்புதங்கள் எல்லாம் அடக்கம். ஆனால் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை எண்வகைச் சித்திகளில் மட்டுமே காணப்படுகிறது. இது பர காயப் பிரவேசம் ஆகும். அதாவது ஒருவர் உடலில் உள்ள உயிர் வேறு ஒருவரின் உடலுக்குள் புகலாம். இதைத் திருமூலர் கதையில் விளக்கியுள்ளேன்
–சுபம்–