வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை! (Post No.5324)

Written  by London swaminathan

Date: 15 August 2018

 

Time uploaded in London –11-40 am (British Summer Time)

 

Post No. 5324

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை- நறுந்தொகை , அதிவீர ராம பாண்டியன்

 

அவந்தி தேசத்தில் அக்கிரஹரரத் தெருவில் ஒரு ஏழைப் பார்ப்பனன் இருந்தனன். அவன் பெயர் குசேலர் அல்லது சுதாமா. அவன் ஏழ்மையோடு வேறு ஒரு பிரச்சனையும் சேர்ந்து கொண்டது. அவனுக்கு 27 பிள்ளைகள்!! எப்போது பார்த்தாலும் அம்மா பசிக்குதே! அப்பா பசிக்குதே! என்ற பல்லவியுடன் சோக கீதம் ஒலித்துக் கொண்டே இருந்தது வீட்டீல்!

வறிஞர்=ஏழைகள்

குசேலனின் மனைவி அவரை நச்சரித்தாள்; கரப்பான் பூச்சி போல அவரை என்றும் மொய்த்தாள்; பிய்த்தாள்.

என்னங்க ஒரு காசுக்கும் வழி தேட மாட்டிங்கிறீங்க; உங்கள்(classmate )கிளாஸ்மேட், கிருஷ்ண பரமாத்மா துவாரகாவில் பெரிய ராஜா என்று தினமும் பீத்திக்கிறீங்க! சோத்துக்கு வழி இல்லையே: அவர் கிட்ட போய் கொஞ்சம் கடன் வாங்கிட்டு வரக்கூடாதா? அல்லது அவர்தான் பெரிய மனசு பண்ணி, சம்திங் (something) கொடுக்கக்கூடாதா?

‘செல்வத்தின் பயனே ஈதல்’ என்று பெரியவங்க சொல்லுவாங்க. அவரும் தருவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்றாள்.

 

ஆனால் குசேல ஐயர்  மிகவும் மானம் மரியாதை உள்ளவர். என்ன இது? யாசகம் என்று கையேந்திப் போனால் அவமானம் இல்லையா? ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று பெரியோர் சொன்னதை அறியாயோ பெண் பிள்ளாய்? என்றார்.

அவள் சொன்னாள்; ‘ஏற்பது இகழ்ச்சி’ என்று சொன்ன கிழவி ‘ஐயமிட்டு உண்’ என்றும் சொல்லி இருக்கிறாளே. நான் கொஞ்சம் சோற்றுக்குத் தானே கெஞ்சுகிறேன் என்றாள்

 

வறுமையிலும் செம்மை தவறாத குசேலர் ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்னும் (principle) பிரின்ஸிபிள் உடையவர். ஆகையால் கந்தைத் துணிகளைக் கசக்கிக் கட்டிக் கொண்டார்; புறப்பட்டார்.

 

இந்தாங்க, கொஞ்சம் நில்லுங்க; பெரியவங்களைப் பார்க்கப் போனால் கையில் பழம் வெற்றிலை பாக்கு, ஸ்வீட் (sweet) எல்லாம் எடுத்துட்டு போகனும்; ஒன்னும் இல்லாட்டி வெறும் கையோடு போகாம ஒரு எலுமிச்சம் பழமாவது எடுத்துட்டு போகனும். நான் அடுத்தவீட்டு அம்மாளிடம் கடன் வாங்கிய அவல் கொஞ்சம் மிச்சம் இருக்கு. அதையாவது சாஸ்திரத்துக்குக் கொண்டு போய் கொடுங்களேன் என்றாள் மனைவி.

 

குசேலரோ நாணிக் கோணிக் குறுகி, இந்தக் கந்தல் ஆடையோடு போனால் காவல்காரன் என்ன அடிச்சு விரட்டுவான். இந்தக் கந்தல்ல அவலா? என்றார்.

இந்தாங்க! ‘சபரி’ங்கற கிழவி கடிச்சுக் கொடுத்த இலந்தைப் பழத்தைக்கூட ராமன் சாப்பிட்டதாக வால்மீகி எழுதி இருக்காராமே; அன்போடு கொடுத்தா, அது கோதுமை அல்வா கொடுப்பது போல என்றாள்.

அவரும் அரை மனதோடு அவலுடன் சென்றார். பழைய ஒரு சாலை மாணாக்கணாகிய கண்ணனைக் காணும் ஆவலுடன் – ஒரு கைப்பிடி அவலுடன் சென்றார்.

 

எதிர் பார்த்தது போலவே வாயிற் காரனும், ஏய் பிச்சைக்காரா, இது அரண்மனை, அக்கிரஹாரத்துல [ போய் பிச்சை கேளு என்று தடியை உயர்த்தினான்.

 

குசேலர் மிக தயக்கதோடு நானும் க்ருஷ்ணனும் ஒரே ஸ்கூகுல் (School) என்றும் ஒரே கிளாஸ் (class) என்றும் திரும்பத் திரும்ப சொன்னார். எல்லோரும் ‘கொல்’ என்று சிரித்தனர். அவர்களில் ஒரு நல்ல ஆத்மா ஐய்யோ பாவம், ஐயரை பார்த்தா பாவமா இருக்கு. இவர் சொல்றது பொய்யுன்னா நம்ம ராஜாவும் சிரிப்பார். அவருக்கும் ஒரு ஜோக் (joke) சொன்ன மாதிரி ஆச்சு என்று போய் ஆள் (address) அடரஸ், குலம், கோத்ரம் எல்லாம் சொன்னான்.

கண்ணனின் முகத்தில் ஆயிரம் செந்தாமரை உதித்தது போன்ற பொலிவு தோன்றியது குசேலன் என்ற பெயரைக் கேட்டவுடன். அங்க வஸ்திரம் காற்றில் பறக்க ஓடி வந்தான் அரண்மனை வாயிலுக்கு; கட்டி அணைத்தான் குசேலரை; அவரோ அன்பில் திக்கு முக்காடிப் போனார். “அண்ணி, எனக்கு என்ன கொடுத்து அனுப்பினாள்? வெறும் கையோடு அனுப்ப மாட்டாளே; வா, உள்ளே வா, ருக்மினி சத்ய பாமா எல்லாரையும் இன்ட் ர ட்யூஸ் (introduce) பண்ணுகிறேன். மனைவி, குழந்தைகளையும் அழைத்து வரக்கூடாதா? ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க’ என்பார்களே? 16 பெற்றாயா? என்றெல்லாம் வினவினார். குசேலன் செப்ப முடியுமா 27 குழந்தைகள் என்று.

 

உள்ளே போனவுடன் கந்தல் முடிச்சை அவிழ்த்தார்; கண்ணன் எடுத்தான் ஒரு பிடி அவலை; போட்டான் வாயில்;அடடா ஏமி ருசிரா! ராம நாமத்தைவிட ருசியாக இருக்கிறதே என்று சொல்லி எடுத்தான் இன்னும் ஒரு பிடியை.

ருக்மினி தடுத்தாள்! ஏழை வீட்டு அவலைத் தின்றால் காலரா வாந்தி பேதி வநது விடும் என்பதற்காக அல்ல. கண்ணன் முதல் பிடி சாப்பிட்டவுடனேயே அரண்மனையில் பாதி,  குசேலர் வீட்டுக்குப் போய்விட்டது. கடவுள அருளுடன் சாப்பிட்டால் அவருடைய செல்வம்- விபூதி-  மற்றவர்களுக்கும் கிடைக்கும். ருக்மினிக்குப் பயம்; இவர் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் செல்வம் எல்லாம் பறந்தோடிப் ஓய் விடுமோ என்று.

அன்பில் திளைத்த குசேலருக்கு வந்த காரியமே மறந்து போச்சு; பைஸா விஷயத்தை மறந்து விட்டு வெளியே நைஸா வந்தார். இவருடைய நட்பைத் தெரிவித்தாளே மனைவி மகிழ்ச்சி கொள்ளுவாள். அது வைர நெக்லஸ் வாங்கிப் போட்டது போல என்று குசேலர் நினைனத்தார். பாவம் பெண்ணின் ஸைகாலஜி (woman psychology) தெரியாதவர்!.

 

 

ஊருக்குத் திரும்பி அக்ரஹாரத்துக்குள்ள நுழைஞ்சா இவர் வீட்டக் காணல்ல; அடப் பாவி, இருந்த வீடும் போச்சே! இது என்ன ஆட்சி? யாரவது பட்டா போட்டு மாத்தி விட்டானோ என்று மலைப்பதற்குள் அப்பா! என்று 27 குழந்தைகளும் பட்டாடை உடுத்திய வண்ணம் கையில் பஞ்சுமிட்டாயுடன் ஓடி வந்தன.

‘மாயமோ மாயமோ என்று என்று பாடத் துவங்கும் முன் , ‘குறை ஒன்றும் இல்லை கோவிந்தா’ என்று குசேலர் மனைவி பாடிக்கொண்டே வந்தாள்.

கதையும் இனிதே முடிந்தது. யாசகம் கேட்கப்போன இடத்திலும் வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை தவறாத குசேலர் பிச்சை கேட்கவில்லை.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?என்று வியந்தார்.

 

-சுபம்–

 

Leave a comment

Leave a comment