
Post No.7866
Date uploaded in London – 22 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
கோழி அடிச்சு கும்பிட்ட சுவையான சம்பவங்களைக் காண்போம்.
தமிழில் கோழி பற்றிய 28 பழமொழிகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே தொகுத்து அளித்தேன் (கீழே இணைப்பைக் காண்க) . அதில் ஒரு பழமொழி – ‘ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம்’ — என்பதாகும். தாமதமாகச் செய்வதைக் கிண்டல் செய்யும் பழமொழி இது. சம்ஸ்கிருதத்தில் அத்தகையோரை ‘தீர்க்க சூத்ரி’ என்று அழைப்பர் ; அதாவது நீண்ட கயிறு; தமிழில் ‘கை நீளம்’ என்றால் ஆள் ஒரு திருடன் என்று அர்த்தம்; சம்ஸ்க்ருதத்தில் ‘கயிறு நீளம்’ என்றால் ஆள் படு சோம்பேறி என்று அர்த்தம். நாம் அவர்களைத் ‘திரு நாளைப் போவார்’ என்றும் கிண்டல், கேலி, பகடி, நக்கல் செய்வோம். இப்படி ஒரு ‘லேட்’ (late) டாகக் கோழி அடிச்சுக் கும்பிட்ட சம்பவம் ரோமாபுரியில் நடந்தது.
கோழி அடிச்சு சாமி கும்பிடும் வழக்கம் கிரேக்க நாட்டிலும் இத்தாலி நாட்டிலும் (ரோம் சாம்ராஜ்யம்) உண்டு.

கிரீட்டோ – சாக்ரடீஸ் (Crito- Socrates)
புகழ்பெற்ற கிரேக்க தத்துவ வித்தகர் சாக்ரட்டீஸ், மரணதண்டனை விதிக்கப்பட்டு , அதன் காரணமாக, விஷம் குடித்து இறந்தார். அவர் கடைசியில் தனது ஆப்த நண்பனுக்கு- உயிர்த் தோழனிடம் என்ன சொன்னார்?
“ஏ , கிரீட்டோ ! மறக்காமல் அ ஸ்க்ளிப்பியஸ் (Asclepius) தேவனுக்கு சேவலை பலி கொடுத்துவிடு . நான் சொல்வதை அலட்சியம் செய்யக்கூடாதென்றார். அவரும் நான் ‘அப்படியே செய்கிறேன்’ என்று சொன்னவுடன் சாக்ரட்டீஸின் ஆவி பிரிந்தது. அஸ்க்ளிபியஸ் என்பது கிரேக்க நாட்டு மருத்துவ தேவன் ஆகும்.
(Aesculapius /Asclepius is the god of medicine)
Xxx
கோழி ஜோதிடம்

ரோமாபுரியில் கோழியால், போரில் தோற்றுப்போன வரலாறு ஒன்றுண்டு.
சிசிலி தீவில் த்ரப்பனா (Drepana in Sicily) என்னுமிடத்தில் கார்த்தஜீனிய தளபதி அதிர்பாலனின் கடற்படை நின்று கொண்டிருந்தது. அதை திடீரென்று தாக்குவதற்கு ரோமாபுரி தளபதி பப்லியஸ் க்ளாடியஸ் (Publius Claudius) திட்டம் போட்டான். நாம் சகுனம் பார்ப்பது போல (சகுனம் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு பறவை என்று அர்த்தம் . அதைவைத்து ஆரூடம் பார்ப்பதே சகுன சாஸ்திரம்) ரோமானியர்களும் சகுனம் பார்ப்பார்கள். கோழிக் குஞ்சுகளுக்கு இரை போட்டான் . அவை சாப்பிட மறுத்தன. அதாவது அபசகுனம். கோபம் வந்தது ‘இரை சாப்பிடாவிட்டால் அவை தண்ணீர் குடிக்கட்டும்’ என்று சொல்லி கடலில் தூக்கி எறிந்தான். கப்பற்படையுடன் சிசிலி தீவை நோக்கிப் புறப்பட்டான். இதற்குள் எதிரி அதிரபாலனின் ( Adherbal of Carthage) கப்பற்படை அவனை சூழ்ந்துகொண்டது. பெரும்பாலான கப்பல்களை அவன் இழக்க நேரிட்டது. பருவ நிலை மோசமானதும் இதற்கு ஒரு காரணம்.
தோற்றுப்போன பப்ளியஸ் ரோமாபுரிக்குள் அவமானத்துடன் நுழைந்தான். அவனை ரோம் அரசு நாடுகடத்தியது. தோற்றுப் போனதற்காக அல்ல; கோழி ஜோதிடத்தை (sacrilege) அவமதித்ததற்காக ! ரோமானியர்களுக்கு சகுன சாஸ்திரத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை!
நாம் நம்புகிறோமோ இல்லையோ , இன்றும்கூட நமது பஞ்சாங்கங்களில் பஞ்ச பட்சி சாஸ்திரம் உள்ளது. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வராஹமிஹிரரும் ஆருடம் பற்றி எழுதியுள்ளார். காளிதாசன் எழுதிய உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத காவியத்தின் பெயரே பறவைப் பெண்- காட்டில் கிடந்த பெண்ணை சகுந்தங்கள் வளர்த்ததால் அவள் பெயர் – சகுந்தலா – பறவைப் பெண். அவளை கதாநாயகியாக வைத்து காளிதாசன் எழுதிய நாடகமே சாகுந்தலம்.
கோழி பற்றிய பழமொழிகள் | Tamil and Vedas
tamilandvedas.com › tag › கோழ…
24 Sep 2017 – 27.பெட்டைக் கோழி தட்டிக் கூவுமா? 28.ஆடி கழிஞ்ச அஞ்சாம் நாள் கோழி அடிச்சுக் கும்பிட்டானாம். ஒவ்வொரு பழமொழியையும் …
Tags — கிரீட்டோ , சாக்ரடீஸ், கோழி அடிச்சு,கோழி , ஜோதிடம்
–subham–