
Post No. 8595
Date uploaded in London – – –30 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
சென்ற கட்டுரையின் தொடர்ச்சி!
ச.நாகராஜன்
மூளையால் சுயமாகவே செரோடோனினை உருவாக்க முடியும்!
செரோடோனின் என்பது மூளைக்கு மிகத் தேவையான ஒரு இரசாயனப் பொருள். ஏனெனில் அது தான் மன உறுதியை அதிகரிக்க வைக்கிறது; மன நிறைவு அடைவதை தாமதமாக்குகிறது; கவன சக்தியைக் கூட்டுகிறது.
ஏராளமான மருந்துகளையும் துணைஉணவுப் பொருள்களையும் நீங்கள் எடுத்துக் கொண்ட போதிலும் கூட உங்கள் மூளையானது சுயமாகவே செரோடோனினை உற்பத்தி செய்யும் வல்லமை படைத்தது. ஒருவேளை, ஏதோ ஒரு காரணத்தினால் செரோடோனின் அளவு உங்களுக்கு மிகவும் குறைந்து விட்டால் ஒரு காரியத்தை முடிப்பதில் உங்களுக்குக் கஷ்டம் ஏற்படும்; சுறுசுறுப்பாகச் செயல்பட முடியாது. உங்கள் மனத் துடிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.
செரோடோனினை கீழ்க்கண்ட மூன்று விதங்களில் உங்கள் மூளை உருவாக்க முடியும்:
சூரிய ஒளி : இது யுவி எனப்படும் அல்ட்ரா வயலட் ஒளியைக் கொண்டுள்ளது. அது தோலினால் கிரகிக்கப்படும் போது விடமின் D ஐ உருவாக்குகிறது. உடனே செரோடோனின் உற்பத்தியாகிறது.
மசாஜ் : கர்ப்பிணிகளைக் கொண்டு நடந்த ஒரு ஆய்வில் வாரத்திற்கு இரு முறை மசாஜை செய்து கொண்ட பெண்மணிகள் செரோடோனின் அளவை 30 சதவிகிதம் அதிகம் கொண்டுள்ளது தெரிய வந்தது.
உடல்பயிற்சி : எண்டார்பின் அளவைக் கூட்ட உடல்பயிற்சி இன்றியமையாதது என்பதோடு செரோடோனினை அது கூட்டுகிறது.
தங்கள் உடல் எடையைக் குறைக்க எவரும் “சிந்திக்கலாம்: எடையைக் குறைக்கலாம்!

ஹார்வேர்ட் உளவியல்பிரிவில் ஒரு சிறிய சோதனை நடத்தப்பட்டது. ஆய்வாளர்கள் லேங்கர் என்ற உளவியலாளர் தலைமையில் சோதனையைச் செய்தனர். அவர்கள் ஹோட்டலில் பருமனாக இருந்த பல பேரை சோதனை ஆய்வுக்கு அழைத்தனர். உடல்பயிற்சியைச் செய்த போதும் கூட அவர்களில் 67 சதவிகிதத்தினர் தங்களால் சுறுசுறுப்பாக வேலை செய்யமுடியவில்லை என்று ஹோட்டல் பணியாளர்கள் கூறினர்.
லேங்கர் பணியாளர்கள் தங்கள் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை விதைத்துக் கொண்டதாலேயே அவர்களால் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முடியவில்லை என்று எடுத்துரைத்தார்.
தான் சொன்னதை நிரூபிக்க அவர் எல்லா பணியாளர்களையும் அழைத்தார். அவர்களை இரு குழுக்களாகப் பிரித்தார்.
முதல் குழுவினரிடம் அவர்களது உடல் அளவை எடுத்தார். அவர்கள் பரிந்துரைக்கப்பட்ட உடல்பயிற்சிகளை விட மிக அதிகமாகச் செய்வதை எடுத்துக் காட்டினார்.
அடுத்த குழுவினரிடம் ஒரு வித தகவலும் தரப்படவில்லை.
ஒரு மாதம் கழிந்தது. லேங்கர் அனைவரையும் மதிப்பீடு செய்ய அழைத்தார். லேங்கர் பேசி தகவல் தந்த முதல் குழுவினர் தங்களது உடல் எடை குறையக் கண்டனர்; இரத்த அழுத்தம் சீராக இருந்தது; வெயிஸ்ட் டு ஹிப் விகிதம் எனப்படும் இடைக்கும் இடுப்பிற்கும் உள்ள விகித அளவு குறைந்திருந்தது!
தகவல் தராத இரண்டாம் குழுவினருக்கு இந்த முன்னேற்றம் ஏற்படவில்லை!
லேங்கர் மனதில் சிந்தனையால் ஏற்பட்ட ஒரு சிறு மாற்றமே முதல் குழுவினரின் முன்னேற்றத்திற்கு காரணம் என்று சுட்டிக் காட்டி – ‘மைண்ட்செட்’ – சீரான மனப் பக்குவம் தேவை என்றார்.
பாஸிடிவ் எண்ணங்களும் தியானமும் வாழ்வில் ஆயுளைக் கூட்டுகிறது!
1989ஆம் ஆண்டு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் ஸ்பைஜெல் (Dr. David Spiegel) மார்பகப் புற்றுநோய் கொண்ட 86 பெண்மணிகளை ஒரு ஆய்வுக்காக அழைத்தார். அவர்கள் அனைவரும் நோய் முற்றிய நிலையில் இருந்தனர். அவர்களை டேவிட் இரு குழுக்களாகப் பிரித்தார்.
ஒரு குழுவினருக்கு அவர்களுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.
இன்னொரு குழுவினருக்கு மருத்துவ சிகிச்சையைத் தவிர அவர்களுக்கு உதவும் வகையில் வாராந்திர கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டங்களில் நோயாளிகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர்கள் தங்கள் தங்கள் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்த்தனர்; அங்கு வந்த இதரர்களோடு நன்கு அளவளாவினர்; ஒரு பாஸிடிவான சூழ்நிலை அங்கு ஏற்பட்டது. அது அவர்களது நோயை நன்கு எதிர்கொள்ள வழியை வகுத்தது.
ஆய்வின் முடிவில் இப்படிக் கூட்டங்களுக்கு வருகை புரிந்தோர் மற்றவர்களை இரு மடங்குக் காலம் கூட நன்கு வாழ்ந்தது தெரிய வந்தது!
இதே போல 1999ஆம் ஆண்டு கான்ஸர் நோயாளிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒருவிதமான ஆதரவும் இன்றி ஊக்கம் தர யாரும் இல்லாதவர்கள் உயிரோடு இருப்பதற்கான குறைந்த வாய்ப்புகளே இருப்பதை உறுதி செய்தது.
டேவிட் செய்ட்லர் என்பவர் ப்ளாடரில் கான்ஸர் வந்ததால் அவஸ்தைப்பட்ட நோயாளி. இரண்டு வாரங்களில் அறுவைச் சிகிச்சை செய்தே ஆகவேண்டும் என்று அவரிடம் கூறப்பட்டது. செய்ட்லர் அதைத் தவிர்த்து தியானம் செய்ய ஆரம்பித்தார். தியானப் பயிற்சிகளை தீவிரமாக மேற்கொண்டார். குறிப்பாக ஆரோக்கியமான ப்ளாடர் இருப்பதாகத் தொடர்ந்து தியானித்து வந்தார்.
இரண்டு வாரங்கள் கழித்து அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன் எடுக்கப்படும் சோதனையில் டாக்டர் கான்ஸருக்கான எந்த விதமான அறிகுறியும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். சந்தேகமடைந்த அவர் இன்னும் நான்கு வெவ்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தச் சொல்லி அவருக்கு கான்ஸர் இல்லை என்பதை உறுதிப் படுத்தினார். செய்ட்லர் ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ என்ற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஆவார்.

ப்லசீபோ விளைவு! (The Placebo Effect)
ப்லசீபோ என்பது போலி மாத்திரைகளைக் குறிக்கும் ஒரு சொல். இப்படிப்பட்ட மாத்திரைகளைக் கொடுத்து உளவியல் ரீதியாக நோயாளியின் மனத்தை ஊக்கப்படுத்திப் பயத்தைப் போக்கி நோயைக் குணப்படுத்துவது ஒரு பாரம்பரியமான பழக்கம்.
ஆய்வுகளின் முடிவின் படி இப்படிப்பட்ட மாத்திரைகள் நிஜமான மாத்திரைகளை விட அதிகப் பயன் அளிப்பதைப் பார்த்து மருத்துவர்களே வியந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. இதனால் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளே பயப்பட்டு எங்கே தங்கள் மாத்திரைகளின் விற்பனை பாதிக்கப்படுமோ என்ற அளவிற்கு பயந்து விட்டனராம்.
Prozac என்பது மனத்தளர்ச்சி, ஏமாற்றம், சோர்வு ஆகியவற்றைப் போக்குவதற்காக நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து. ஆனால் போலி மாத்திரைகள் இதை விட நன்றாக செயல்படுவதால் இதைத் தயாரிப்பவர்கள் வியந்து போய் ப்லசிபோவைத் தவிர்ப்பது எப்படி, தங்கள் மார்க்கெட்டைத் தக்க வைப்பது எப்படி என்பது பற்றிய தீவிர ஆய்வை மேற்கொண்டுள்ளனராம்.
இப்படி மனதின் அபூர்வ சக்தியைப் பல ஆய்வுகளும் உறுதிப்படுத்துவதைப் பார்க்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி அதை நாம் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உறுதியாகிறது அல்லவா!
முற்றும்
***
TAGS – மனதின், அபூர்வமான சக்தி! – 2,