சுருங்கக் கூறி விளங்க வைக்கும் தமிழின் அழகு! (Post No.9497)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 9497
Date uploaded in London – – –16 APRIL 2021   
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; 
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.comசுருங்கக் கூறி விளங்க வைக்கும் தமிழின் அழகு!
ச.நாகராஜன்

தமிழ் மொழியின் பல அழகுகளுள் ஒன்று எதையும் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் பாங்காகும். ஒரு செறிவுள்ள சொல்லே பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும் - தமிழில்! இப்படி செறிவான சொற்களை அழகுறப் பூட்டி எந்த ஒரு அரிய விஷயத்தையும் விளங்க வைப்பது தமிழுக்கான தனிச் சிறப்பாகும்.

வாய்மை, நல் ஆறு, பழமை, வெண்மை போன்ற சொற்களுக்கான பொருள் தான் என்ன என்று கேட்போரை வள்ளுவர் தன் அருகே அழைத்து செறிவார்ந்த சொற்களால் சுருக்கமாக குறள் பாவால் விளக்கி விடுகிறார்.
வள்ளுவரின் 1330 குறள் பாக்களில் ‘எனப்படுவது’ என்னும் சொல் ஐந்து இடங்களில் கையாளப்படுகிறது.

வாய்மை எனப்படுவது யாது? (குறள் 291) 
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் 
தீமை இலாத சொலல் 
வாய்மை எனப்படுவது யாது என்றால் அது ஏனையோருக்குச் சிறிதும் தீங்கு பயக்காத சொற்களைக் கூறுவதே ஆகும்.

நல் ஆறு எனப்படுவது யாது? (குறள் 324)
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் 
கொல்லாமை சூழும் நெறி 
நல்ல நெறி எனப்படுவது யாது என்று கேட்டால் அது எந்த உயிரையும் கொல்லாது இருப்பதற்காகக் கடைப்பிடிக்கப்படும் அற நெறியே ஆகும்.
 
உடையர் எனப்படுவது எதை உடையவர்? (குறள் 591)
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார் 
உடையது உடையரோ மற்று
உடைமை என்றாலே அது ஊக்கமுடைமை தான். உடையர் எனப்படுபவர் யார் என்று கேட்டால் ஊக்கம் உடையவரே தான்! அது இல்லாதவர் வேறு எதனைப் பெற்றிருந்தாலும் அவரை உடையவர் என்று சொல்லும் தகுதி உடையவர் ஆவாரோ? (ஆகவே உடையவர் என்பவர் ஊக்கம் உடையவரே!)
 பழமை எனப்படுவது யாது? (குறள் 801)
பழமை எனப்படுவது யாது எனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு 
பழமை எனப்படுவது யாது என்று கேட்டால் பழகிய நண்பர் நட்பின் உரிமையால் செய்யும் எந்தச் செயலையும் அவமதிக்காமல் ஏற்றுக் கொள்ளும் பண்பு ஆகும்.
வெண்மை எனப்படுவது யாது? (குறள் 844)
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை 
உடையம் யாம் என்னும் செருக்கு
ஒண்மை, அதாவது புல்லறிவு எனப்படுவது யாது என்று கேட்டால், யாம் நிறைந்த அறிவு உடையோம் என்று தம்மைத் தாமே மதித்து செருக்கு கொள்வதே ஆகும்.
அருமையான சொற்களால் வள்ளுவர் போல இப்படி பல பண்புகளுக்கு விளக்கம் கொடுக்கும் இன்னொரு சங்கப் புலவர் நல்லந்துவனார். கலித்தொகையில் 133வது பாடலாக மலரும் பாடலைப் புனைந்தவர் இவரே.
நெய்தல் கலியில் வரும் இப்பாடல் தோழி ஒருத்தி தலைவனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது, இன்னும் சிறப்பு வாய்ந்ததாக ஆகி விடுகிறது.
தோழி தலைவனை நோக்கி இப்படி அழைக்கிறாள்:
 
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்:  (வரிகள் 1-5) 
பொருள் :- முண்டகப்பூ, தில்லைப் பூக்களோடு ஒருங்கே மலர்ந்திருக்கும் கானல் நிலத்தில், உயர்ந்த மணல் மேட்டில், சீர் மிகு சிறப்பினோனான முனிவன் தன் கையில் கரகம் தொங்க விட்டுக் கொண்டிருப்பதைப் போல, தாழம்பூ மலர்ந்து தொங்கும் துறையைக் கொண்டவனே, நான் சொல்வதைக் கேள்!
இதை அடுத்து அவள் தரும் பண்பாட்டு விளக்கங்கள் தலைவனுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே பொருந்துவனவாக அமைகின்றன!
திருவள்ளுவர் ‘எனப்படுவது யாது எனின்’ என்று சொல்லி ஐந்து சொற்களுக்கு விளக்கம் அளித்ததைப் போல இங்கு நல்லந்துவனார், ‘எனப்படுவது என்பது யாது என்பதை’ ஒன்பது பண்புகளுக்கு அழகுற விளக்குகிறார் இப்படி:
'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;
'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்; 
'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்; (வரிகள் 6 முதல் 14)
பொருள் :- 
ஆற்றுதல் என்பது அலைக்கழிவோருக்கு உதவுவதாகும்.        போற்றுதல் என்பது தம்மைப் புணர்ந்தவரைப் பிரியாமல் இருத்தலாகும். பண்பு என்பது எது பெருமை தரத்தக்கதோ அதை அறிந்து அதன்படி நடத்தலாகும்.                              அன்பு எனப்படுவது தன் உறவை விட்டு அகலாமை ஆகும்.           அறிவு எனப்படுவது அறியாதவர் சொல்லும் சொற்களைப் பொறுத்துக் கொள்ளலாகும்.                                 செறிவு எனப்படுவது தான் சொன்ன சொல்லை மறந்து விடாமல் அதைக் காக்கும் தன்மையாகும்.                            நிறை எனப்படுவது மறைக்கப்பட வேண்டியவற்றைப் பிறர் அறியாது காத்தலே ஆகும்.                                         முறை எனப்படுவது குற்றம் செய்தவனை பாரபட்சம் பார்க்காமல் தண்டிப்பதே, -உயிரை வாங்குதலே - ஆகும்.                             பொறை எனப்படுவது தன்னைப் போற்றாதவர் செய்யும் பிழைகளைப் பொறுத்தலே ஆகும்.                          இந்த ஒன்பது பண்புகளும் கொண்ட தலைவன் - அல்லது இந்த ஒன்பது பண்புகளையும் தலைவன் கொண்டிருப்பதாகத் தானும் தலைவியும் நினைத்துக் கொண்டிருக்கும் தலைவனானவன் - இதிலிருந்து நழுவக் கூடாது.
அலைக்கழிக்க விடக் கூடாது. தன்னைப் புணர்ந்தவளைப் பிரியக் கூடாது. பெருமைத் தரத் தக்கதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். உறவை விட்டு அகலக் கூடாது. அறியாமல் ஏதேனும் சொல்லி இருந்தால் அதைப் பொருட்படுத்தக் கூடாது. சொன்ன சொல்லை மறக்கக் கூடாது. மறைக்க வேண்டிய ரகசிய செய்திகளை மறைக்க வேண்டும். தண்டிக்கும் குற்றம் செய்திருந்தால் தண்டிக்க வேண்டும். ஒருவேளை, போற்றாமல் இருந்திருந்தால் கூட அதைப் பொருட்படுத்தாமல் பொறுக்க வேண்டும்.
இப்படி தோழி தலைவனுக்கு உணர்த்தும் பாங்கு வெகு அழகாக இருக்கிறது.
நாட்டுக்கும் பொருந்தும் நல்ல பண்புகள், வீட்டுக்கும் பொருந்துகிறது.
மேலே தோழி கூறி முடிக்கிறாள் இப்படி :-
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி  
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே!    (15 முதல் 19 வரிகள்)
இதை எல்லாம் இப்படி நீர் அறிந்தவர் என்றால் என் தோழியின் நலத்தை உண்டபின் அவளைக் கைவிடுவது எப்படி இருக்கிறது தெரியுமா? பால் குடிப்பவர் பாலைக் குடித்த பின்னர் அந்தக் கலத்தைத் தூக்கி எறிவது போன்றதாகும். இருக்கிறது. உனக்காக அவள் வருந்திக் கொண்டிருக்கிறாள். அவள் துயரம் களைவது உனது பொறுப்பு. அதற்காக உடனே செல்க, உனது தேரைப் பூட்டுக. 
வார்த்தை வார்த்தையாக இதைப் படித்து ரசித்தால் தலைவன், தலைவி, தோழி ஆகியோரை நாடக பாணியில் திரைக் காட்சி போல மனதினுள் உருவகப்படுத்தி விடலாம்.
இந்தப் பண்புகளின் விளக்கத்தை ஒரு பெண் - ஒரு தோழி விளக்கும் போது பண்பார்ந்த தமிழகத்தையும் அதன் மாண்பு மிக்க பெண்களையும் நினைத்துப் பெருமை கொள்ளலாம், அல்லவா!
இப்படி பண்புகளை விவரிக்கும் பாங்கு தமிழ் நூல்களுக்கே உள்ள தனிச் சிறப்பாகும். ஆகப் பெரிய விஷயங்களை, சுருக்கமாகச் சொல்லும் நூற்றுக்கணக்கான வரிகள் சங்க இலக்கியத்திலும் பின்னர் பக்தி இலக்கியத்திலும் ஏன், இப்போது சம காலத் திரைப்படப் பாடல்களிலும் நிறைய காணலாம். தமிழ் வாழ்க! வெல்க!! வளர்க!!!!
***


tags- 

தமிழின் அழகுLeave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: