கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் !! (Post No.9972)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9972

Date uploaded in London – 13 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கவசங்கள் பற்றிய ஒரு புஸ்தகத்தின்  முன்னுரையைப் படித்தபோது அதை வெளியிட்டவர் “காஞ்சி சுவாமிகள் கவசங்கள் வேதத்திலேயே உள்ளது” என்று கூறியிருக்கிறார் என்று எழுதி இருந்தது. இப்பொழுது ரிக்வேதத்தின் ஜம்புநாதன்  அச்சிட்ட தமிழ் மொழிபெயர்ப்பில் ஏழு பாகங்கள் முடித்துவிட்டேன்; இன்னும் மூன்று பாகங்களைப் படிக்கவேண்டும் ஆயினும் காஞ்சி சுவாமிகள் சொன்னதுபோல ஆங்காங்கே குறிப்புகள் வருகின்றன.

பிராமணர்கள் தினமும் சந்தியாவந்தனம் என்ற  வழிபாட்டை/ துதியை மூன்று முறை செய்யவேண்டும் . அதில் மத்தியானம் செய்யும் துதியில் ‘பஸ்யேம சரதஸ் சதம்’ என்ற மந்திரம் வருகிறது. அதில்  ‘சரதஸ் சதம்’ என்ற சொல் 100 ஆண்டுகள் நான் சரத் ருது எனப்படும் மழைக்காலத்தை அனுபவிப்பேன் ஆகுக என்று வேண்டுவதாகும் . நீர் இன்றி அமையாது உலகு என்று வள்ளுவரும் திருக்குறளில் வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் மழையைப் போற்றுகிறார். இதை பிராமணர்கள் தினமும் மந்திரமாகச் சொல்கின்றனர். அடுத்துவரும் மந்திரத்தில் நீரின் மந்திர சக்தியும் வருகிறது (ஆபோ ஹிஷ்டா மயோ …). இங்கே கவசம் பற்றி மட்டும் காண்போம்.

‘100 ஆண்டுக் காலம் வாழ்க நோய் நொடியில்லாமல் வாழ்க’ என்று வேண்டும் மத்தியான மந்திரத்தில் கண், காது ,மனம் புத்தி, உடல் வலு வேண்டும் என்ற கவசப் பகுதிகள் வந்து விடுகின்றன.

இன்னும் பல இடங்களில் எனக்கு எது வேண்டும் என்ற இடத்தில் கை , கால், பாதுகாப்பு பற்றிக் குறிப்பாக வேண்டும் மந்திரங்கள் வருகின்றன

நான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தினமும் விநாயக கவசம் படித்து  வருகிறேன். இதில் மரீசி முனிவர் ஒரு அருமையான லிஸ்ட் list  கொடுக்கிறார்.

அந்த LIST லிஸ்டில்

“மதி, ஞானம், தவம் ,தானம் , மானம் , ஒளி , புகழ் , குலம் , வண் சரீரம்

தானம், தான்யம், , மனைவி, மைந்தர்”  என்ற வரிகள் வருகின்றன.

இந்த லிஸ்ட் ரிக் வேதத்தில் தனித்தனி மந்திரங்களில் வருகிறது.

ஆனால் ,

கந்த சஷ்டிக் கவசத்தில் எதிரிகளை எப்படி அழிக்க வேண்டும் என்ற வரிகள் வருகின்றன. அதில் உள்ள விஷயம் அப்படியே ரிக்வேதத்தில் வசிஷ்டர் சொல்லும் ஏழாவது மண்டல மந்திரத்தில் வருகிறது.

இதோ ஒப்பிட்டுப் பாருங்கள் :–

முதலில் உடல் உறுப்புகளைக் காக்கும்படி வேண்டிவிட்டு பின்னர் காலை முதல் இரவுவரை எல்லா நேரங்களிலும் காக்கும்படி வேண்டிவிட்டு இந்த வரிகள் வருகின்றன.:-

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்

எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்

தண்டியக் காரரும் சண்டாளர் களும்

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்

பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்

நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்

காசும் பணமும் காவுடன் சோறும்

ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட

காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட

படியினில் முட்ட பாசக் கயிற்றால்

கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

செக்கு செக்கு செதில் செதிலாக

சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்

பற்று பற்று பகலவன் தணலெரி

தணலெரி தணலெரி தணலது வாக

விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட

தேளும் பாம்பும் செய்யான் பூரான்

கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்

வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்

சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர்தொடை வாழை

கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்

…………………………………………………

இதில் எல்லா நோய்களிலிருந்து பாதுகாப்பும் பாவ மன்னிப்பும் வேண்டப்படுகிறது

XXXXXXXXX

இதோ வசிஷ்டர் சொல்லும் மந்திரம் :–

ரிக் வேதம் 7-104

மந்திரம் 1 (7-104-1)

இந்திர சோமர்களே! அரக்கர்களை அழியுங்கள் இருளுக்கு இருள் சேர்க்கும் கீழானவர்களை வீழ்த்துங்கள்.புல்லர்களை அகற்றுங்கள். கொல்லுங்கள் ; தீக்கிரையாக்குங்கள்.

மந்திரம் 2

இந்திர சோமர்களே!  தீமை செய்பவனை ஒழியுங்கள்; யாகத்தில் போடப்படும் அவிஸ் எரிந்து சாம்பல் ஆவதைப்போல உங்கள் கோபம் அவர்களை சாம்பலாக்கட்டும்.. கடவுளை எதிர்ப்போரையும், கோணல் பார்வையுடைவனையும் மனிதர் மாமிசத்தை உண்பவனையும் வெறுத்து ஒதுக்குங்கள்.

மந்திரம் 3

துஷ்டர்களை ஆழ்ந்த இருட் குகைக்குள் அமுக்கி வெளியே வரமுடியாதபடி செய்யுங்கள்

மந்திரம் 4

துஷ்டர்களை /கெட்டவர்களை அழிக்கும் ஆயுதத்தை வானத்திலிருந்து வீசுங்கள்; எரிக்கும் தீயை மேகத்திலிருந்து செலுத்துங்கள்

(அவன் தலையில் இடி விழுக என்று நாம் திட்டுவது போன்றது இந்த மந்திரம்)

6

இந்திரனே சோமனே , நீங்கள் இருவரும் ரதத்தில் கட்டப்பட்ட இரண்டு குதிரைகள் போன்றவர்கள்; என் துதியை இரண்டு அரசர்களைப் போல ஏற்றுக்கொள்ளுங்கள்.

7. துரோகிகளான அரக்கர் களைக் கொல்லுங்கள் அவர்களுக்கு சுகமே வரக்கூடாது

8.என் மனம் சுத்தமானது ; பொய் சொல்பவனை , பழி கூறுபவனை கையில் உள்ள நீர் போல  வழிந்தோடச் செய்க

9.நான் சத்தியத்தைக் கடைப் பிடிப்பவன் ; என்னைப் பழிச் சொற்களால் துன்புறுத்துபவனை பாம்பு கடிக்கட்டும்; நிருதி என்ற துஷ்ட தேவதையிடம் அவனை அனுப்புங்கள்

10. திருடர்களும் கொள்ளையர்களும் சந்ததியின்றி அழிவார்களாகுக

11. இரவிலும் பகலிலும் எங்கள் நாசத்தை நாடும் அவர்களின் புகழ் கெடுக.

12.பொய் எது, உண்மை எது என்று அறியும் பகுத்தறிவு மனிதனுக்கு உளது. சோம தேவன் சத்தியத்தைக் காப்பாற்றி பொய்மையை அழிக்கிறான் .

14.நான் அசத்திய தேவர்களைப் போற்றினால் என்னை தண்டிக்கவும்

15. நான் அரக்கனாக இருந்தாலோ யாரையாவது துன்புறுத்தி இருந்தாலோ இன்றே நான் மரிப்பேனாக . என் மீது பொய்ப்பழி சுமத்துபவன் பத்து புதல்வர்களையும் இழக்கட்டும்

16.என்னை அரக்கன் என்று சொல்வோன் மிருகங்களுக்கும் கீழான நிலையை அடையட்டும்.

17. இரவில் ஆந்தை போல அலையும் பெண்கள்/அரக்கிகள் எல்லையற்ற குகையில் தலை கீழாக விழட்டும்

18.மருத் தேவர்களே ! இரவில் வந்து வேள்வியை அழிப்போரை தேடிக் கண்டுபிடித்து பொடிப் பொடியாக்குங்கள்

19.இந்திரனே வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு திசைகளிலுள்ள தீயோரை உனது வஜ்ராயுதத்தால் அழி .

20.நாய்களோடு வரும் கபடர்களை இந்திரன் வஜ்ராயுதத்தினால் அழிக்கிறான்

21.வனத்தில் மரங்களை வெட்டும் கோடாரியைப் போல, மண் பானைகளை உடைப்பது போல எதிரிகளை இந்திரன் அழிக்கிறான்

7-104- 22

ஆந்தை போலும் ஆந்தைக் குஞ்சு போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

 நாய் போலவும் சக்ரவாகப் பறவை போலவும் உள்ள அரக்கர்களை அழித்து விடு

பருந்தைப்போல, கழுதையைப் போல  உள்ள அரக்கர்களை அழித்து விடு

23. ஆணவம் பிடித்த தம்பதிகளை உஷா தேவி விலக்குவாளாகுக  பூமியிலும் வானத்திலும் எங்களுக்குத் துன்பம் நேரிடக் கூடாது.

24.

ஆண் வடிவம் எடுத்து வரும் அரக்கனைக் கொல்.

மாயையில் மகிழும் அரக்கியைக் கொல்

கபடத்தால் துன்புறுத்துவோரை அழி

கொலை செய்வோரின் தலைகள் வெட்டப்படட்டும் .

அவர்கள் இனி சூர்யோதயத்தையே காணாமற் போகட்டும்

7-104-25

இந்திரனே, சோமனே ! இருவரும் விழித்து இருங்கள்; சுற்றுமுற்றும் பாருங்கள் .

இம்சையே செய்யும் அரக்கர்கள் மீது\ ஆயுதத்தைச் செலுத்துங்கள்.

கந்த சஷ்டிக் கவசத்திலும் ரிக் வேதத்திலும் அகமும் புறமும் உள்ள எதிரிகள், பகைவர்கள், நம்மைத் துரத்தும் தீய குணங்கள் ஆகியன அழிந்து சுபீட்சம் பரவ வேண்டும் என்பதே. இரண்டு துதிகளுக்கும் இடையே 3000 ஆண்டு இடைவெளி இருந்தாலும்  உடல் நலம், மன நலம் வேண்டுவதிலும் நம் மனத்திலும் வெளியிலும் உள்ள பகைவர்கள் ஓடி ஒழிய வேண்டும் என்று கோருவதிலும் ஒற்றுமையைக் காண்கிறோம். அவர்களை நாம் அரக்கர் என்போம், பேய் பூதம் என்போம்.

கந்த சட்டிக் கவசத்தில் நீண்ட நோய்களின் பட்டியல் ஒன்று உளது. இது போல அருணகிரி நாதரின் திருப்புகழிலும் வியாதிகள் பட்டியல் உளது . இவைகளை சொல்லி அழியட்டும் என்று வேண்டும்போது நாம் நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாசிட்டிவ் positive thoughts  எண்ணமும் மேம்படுகிறது.

கவசத்தைப் படியுங்கள், வேதத்தை ஓதுங்கள்

-சுபம்–

கந்த சஷ்டிக் கவசம், ரிக்வேதம், RV 7-104, 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: