அருணகிரிநாதரும் தமிழும்! – 5 (Post No.11,400)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,400

Date uploaded in London – –    31 OCTOBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதரும் தமிழும்! – 5 

ச.நாகராஜன் 

அருணகிரிநாதருக்கும் தமிழுக்கும் உள்ள இணைப்பு அதிசயமானது.

முருகனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு எத்தகையதோ அத்தகையது அந்த இணைப்பு.

பல இடங்களில் தமிழ் முருகனைத் தமிழால் போற்றிப் புகழ்ந்த அருணகிரிநாதப் பெருமான் தமிழையும் பல்வேறு விதமாக அழகுறப் போற்றி வணங்குகிறார்.

அவர் தமிழைப் பற்றிக் கூறும் இடங்களை இந்தத் தொடரில் காணலாம்.

  41) திருவருணை

முதிய மாதமி ழிசைய தாகவே

  மொழிசெய் தேநினைந்  – திடுமாறு

பாடல் எண் 443 : விதியதாகவே எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பழமையும் சிறப்பும் வாய்ந்த தமிழ்ப் பாக்களை இசையுடனே சாகித்யப்படுத்திப் பாட நினைந்திடும்படி…..

 42) சிதம்பரம்

தெள்ளுதமிழ் பாடியிட் டாசைகொண் டாடசசி

  வல்லியொடு கூடிதிக் கோர்கள்கொண் டாட இயல்

    தில்லைநகர் கோபுரத் தேமகிழ்ந் தேகுலவு – பெருமாளே

 பாடல் எண் 478 : முல்லை மலர் போலும் எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : தெளிவான தமிழ்ப் பாடல்களால் (உன்னை) அடியார் புகழ்ந்து பாடவும், ஆடவும், இந்திராணியின் மகளான தேவயானையோடு சேர்ந்து பல திக்குகளில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாட, தகுதி மிக்க சிதம்பரத்துத் திருக்கோயில் கோபுரத்தே மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும்  பெருமாளே!

 43) சிதம்பரம்

மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு

   முருகா தமிழ்ப்புலியூர் – பெருமாளே

பாடல் எண் 513 : மனமே உனக்குறுதி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே!

 44) திருக்கழுக்குன்றம் 

வேலெடுத்து நடந்த திவா கராசல

 வேடுவப் பெண் மணந்த புயா சலாதமிழ்

  வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ – குமரவேளே

 பாடல் எண் 543 : ஓலமிட்ட  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வேலாயுதத்தை ஏந்தி நடந்த ஞான சூரியனே! வள்ளிமலைக் குறப்பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த மலை போன்ற புயங்களை உடையவனே, தமிழ் முழங்கும் வேதகிரியில் (திருக்கழுக்குன்றத்தில்) வீற்றிருக்கும் அருளாளனே, சிவக் குமாரனாகிய தலைவனே!

 45) திருச்செங்கோடு 

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்

  கிரங்கார்க் கியற்றண் – டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்

 துளங்காத் திடப்புன் – கவி பாடி

 பாடல் எண் 589 : இடம் பார்த்து   எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : அழிந்து போகும் காலத்தில் கூட உள்ளம் நல்ல நிலை பெறாதவரிடம், இரும்பு போன்ற கடின மனத்தவரிடம், இரக்கம் இல்லாதவரிடம், தகுதி பெற்றுள்ள குளிர்ந்த தமிழ் நூல்களில் ஒருமைப்பட்ட  மனத்துடன் பாட்டுக்களை அமைத்து, வாட்டமுற்று மனம் கலங்கி, ஆனாலும் திடத்துடன் புனையப்பட்ட புன்மையான பாடல்களைப் பாடி…

 46) திருச்செங்கோடு 

பழய அடியவ ருடனிமை யவர்கண

 மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு

  பரவ வருமதி லருணையி லொருவிசை -வரவேணும்


பாடல் எண் 605 : கொடிய மறலி எனத் தொடங்கும் பாடல்

 பொருள் ; பழமையான அடியார்களுடன் தேவர் கூட்டம் இருபுறமும் மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேத கீதங்களையும் பாடி வணங்க, முன்பொரு முறை திருவண்ணாமலையில் என் முன் வந்தது போல இன்னொரு முறை வந்து அருளல் வேண்டும்.

47) கொல்லிமலை 

பல்ல பல நாதங்கள் அல்கபசு பாசங்கள்

  பல்குதமிழ் தானொன்றி – யிசையாகிப்

பாடல் எண் 607 : தொல்லை  எனத் தொடங்கும் பாடல்

பொருள் ; பலப்பல நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம் ஆகியவற்றில் தங்குவதாய், பெருகி வரும் தமிழ் மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி…

48) புகழிமலை 

புகலரிய தான தமிழ்முநிவ ரோது

   புகழிமலை மேவு பெருமாளே

 பாடல் எண் 619 : மருவுமலர் வாசம்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : சொல்லுதற்கு அரிதான தமிழ் முனிவராகிய அகத்தியர் புகழ்கின்ற புகழிமலையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

49) பெருங்குடி  

பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில் கொண்டெறி

  ப்ரசண்டக ரதண்டமிழ் – வயலூரா

பாடல் எண் 700 : தலங்களில் வரும்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : பலத்துடன் கிரௌஞ்ச மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம் கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே!

 50) உத்தரமேரூர்  

வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்

 வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்

  வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா வித்தக

பாடல் எண் 717 : மாதர் கொங்கையில்  எனத் தொடங்கும் பாடல்

 பொருள் : வேதப் பயிற்சியையும் கிரியை  மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படி செய்த அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத்தக்க அறிவாளனே! 

குறிப்பு நன்றி : https://www.kaumaram.com தளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இந்த தளத்தில் காணலாம்.

***

 புத்தக அறிமுகம் – 99 

விண்வெளியில் மனித சாதனைகள் (பாகம்-2)

பொருளடக்கம்

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

  1. விண்வெளியில் ஆதிக்கமா? 

 2. விண்வெளியில் விழுந்த புதையலைத் தேடி…

 3. அயல்கிரகவாசிகள் எங்கே? 

 4. நட்சத்திரக் குழந்தைகள்

 5. நிலவில் தேன் நிலவு  

 6. அற்புதமான ஒரு விண்வெளிக் கதை   

 7. நாஸா தேடும் ரகசியம்

 8. சந்திரனில் மட்டுமே கொட்டிக் கிடக்கும் அபூர்வ பொருள்

 9. ரஷ்யா சந்திரனில் அமைக்கும் தளம்   

10. ராக்கட் ரேஸ்    

11. சந்திரனுக்கு உரிமை கோரும் விவசாயி

12. சந்திரனில் பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் 1000 டாலர்

13. உலகப் பொருளாதாரத்தை மாற்றப் போகும் சந்திரன்    

14. சனியின் துணைநிலவு தரும் அதிசயத் தகவல்கள்

15. பரபரப்பூட்டும் பத்திரிகை தகவல்கள்   

16. நீங்களே ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷனைக் கட்டலாமே

17. விண்வெளியில் பிழைத்த விண்வெளி வீரர்கள்    

18. விண்வெளி ஆபத்திலிருந்து மீண்டது சோயுஸ் விண்கலம்   

19. வருகிறது தனிநபர் விண்கலம்    

20. நீங்களும் விண்வெளியில் பறக்கலாம்  

21. விண்கலத்தை விட்டு வெளியில் செல்லும் விளையாட்டு    

22. விண்கலத்தை விட்டு வெளியில் சென்று புரியும் ஆனந்த நடனம்  

23. விண்வெளி ஆசிரியர்கள்    

24. விண்வெளிப் பேனாவின் கதை   

25. விண்வெளி யுத்தம்    

26. விண்வெளிப் படை    

27. ராக்கெட் தோல்விக்கு காரணம் ஆவிகளா?   

28. சந்திர மனிதன்   

29. ஹிட்லர் தற்கொலையால்…! 

30. பூமிக்கு வரும் அபாயம் போக்க ஒரு உபாயம்

31. ALH 84001 மனித சாதனைகள்

32. விண்வெளி தூசிகள் பற்றிய ஆராய்ச்சி 

33. ஆகஸ்ட் புரளிகள்

34. இனிமேல் எட்டு கிரகங்கள்தான்  

35. புளூடோவின் இறக்கமும் உலகெங்கும் எழுகின்ற விமர்சனங்களும்

36. ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர்   

37. பெயரில் என்ன இருக்கிறது?

அணிந்துரை 

இந்த நூலுக்கு திரு வி.தேசிகன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையை முதல் பாகத்தில் காணலாம்.

 நூலுக்கு எனது முன்னுரை இது:

முன்னுரை 

     விண்வெளியில் மனித சாதனைகள் என்ற இந்தப் புத்தகம் விண்வெளி ஆர்வலர்களுக்கும் அறிவியலில் ஆர்வம் உடையவர்களுக்கும் ஏராளமான சுவையான செய்திகளை அளிக்கும் என நம்புகிறேன்.

     ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலிருந்தே விண்வெளி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைத் தொகுப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வம் உண்டு. பல்வேறு பத்திரிக்கைகளில் விண்வெளி பற்றிய சுவையான செய்திகளையும் விண்வெளியை வெற்றிக் கொள்ளத் துடிக்கும் மனிதனின் பேராவலையும் அவன் பெற்ற வெற்றிகளையும் எழுதி வந்தேன்.

     அகில இந்திய வானொலி நிலையத்திலிருந்து காஸினி விண்கல சாதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இல்லத்திலிருந்தே நேயர்களுடம் பேசும் அரிய வாய்ப்பும் எனக்குக் கிட்டியது.

      இந்த நிலையில் தான் எனது இனிய நண்பரும் டைரக்டரும் பிரபல கதாசிரியரும் பாக்யா ஆசிரியருமான டைரக்டர் கே.பாக்யராஜ் அவர்கள் என்னை விண்வெளி பற்றிய தொடர் ஒன்று பாக்யா வார இதழில் எழுதப் பணித்தார்.

சுமார் 156 வாரங்கள் இந்தத் தொடர் நீண்டது. இந்திய பத்திரிக்கைகளிலேயே விண்வெளி பற்றிய நீண்ட தொடர் என்ற புகழையும் பெற்றது.

      இதற்குக் காரணம் டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களின் தணியாத அறிவியல் தாகமும் அதை அப்படியே பிரதிபலித்த பாக்யா வாசகர்களின் ஆர்வமும் தான்.

       ஏராளமான பாராட்டுக் கடிதங்கள் மூலம் ஊக்கம் பெற்றதால், விண்வெளி பற்றிய  ஒரு கலைக் களஞ்சியத் தொடராக இதை என்னால் அமைக்க முடிந்தது.

        முதலில் சூரிய மண்டலம், அதில் உள்ள கிரகங்களின் விவரம், நட்சத்திர மண்டலங்கள், விண்கற்கள், எல்லையற்ற விண்வெளி, அதில் செல்வதற்கான விண்கலங்கள், விண்வெளி வீரர்களுக்கான உடல் மற்றும் உள்ளத் தகுதிகள், அவர்களுக்கான உடைகள், விண்வெளி செல்வதற்கான ஏராளமான பயிற்சிகள் போன்றவற்றையும் ககாரின், ஆர்ம்ஸ்ட்ராங், கல்பனா சாவ்லா உள்ளிட்ட வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் இந்தத் தொடரில் சொல்ல முடிந்தது.

அடுத்து விண்வெளி பற்றிய படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், அரிய புத்தகங்கள், செவ்வாய் சங்கம், விண்வெளிக் கொடி போன்ற சுவையான செய்திகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்துத் தர முடிந்தது,

எதிர்காலத்தில் விண்வெளியில் மனிதன் குடியேற இருப்பது மகத்தான ஒரு பெரிய விஷயம். அதற்கு மனிதனின் ஆயத்தங்களையும் இந்த நூலில் படித்து மகிழலாம்.

        ஒரே ஒரு விஷயத்தை இங்கு தெரிவிப்பது எனது கடமை ஆகிறது. பாக்யா வார இதழில் 2004ஆம் ஆண்டு நவம்பரில் ஆரம்பித்து 2007 நவம்பரில் இந்தத் தொடர் நிறைவு பெற்றது. 2007லிருந்து இன்று  வரை விண்வெளியில் மனிதன் பல்வேறு புதிய சாதனைகளைச் செய்து முடித்துள்ளான். ஆனால் வரலாற்றுப் பதிவு அப்படியே இருக்க வேண்டும் என்பதால் அத்தியாயங்களில் உள்ள விஷயங்கள்  மாற்றப்படாமல் அப்படியே தரப்பட்டுள்ளது. இன்றைய முன்னேற்றங்களை எனது நூல்களான அறிவியல் துளிகள், மாயாலோகம் ஆகியவற்றில் வாசகர்கள் படித்து மகிழலாம்.

   தொடரை முடித்தவுடன் இதை நூலாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை நண்பர்களும் வாசகர்களும் விரும்பித் தெரிவித்தனர்.இதை நிறைவேற்ற முடியுமா என்று மலைத்திருந்த போது லண்டனில் உள்ள நிலா பப்ளிஷர்ஸின் உரிமையாளரும் நிலாச்சாரல் ஆசிரியருமான திருமதி நிர்மலா ராஜு இதை மின்னணு முறையில் டிஜிடல் நூலாக வெளியிடும் பெரும் பொறுப்பை ஏற்க முன் வந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.

    நிலாச்சாரல் குழு ஒரு அற்புதமான, இனிய, ஆடம்பரமின்றி மறைந்திருந்து மாபெரும் சேவையை திருமதி நிர்மலா தலைமையில் ஆற்றிவரும் அதிசயக் குழு. அதில் ஈடுபட்டுள்ள எண்ணற்ற உறுப்பினர்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நகர்களில் வாழ்பவர்கள். அரசியலுக்காகவும் ஆதாயத்திற்காகவும் பெயர் மற்றும் விருதுகளுக்காகவும் தமிழை உதட்டால் ஓதாமல் உள்ளத்தால் தமிழுக்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள், முகம் தெரியாமலும் நேரில் பார்க்காமலும் என்னுடன் மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொண்ட இவர்களுக்கு எனது நன்றியை உளமார உரித்தாக்குகிறேன். குறிப்பாக திரு கார்த்திகை பாண்டியன், திருமதி யஷஸ்வினி ஆகியோருக்கு என் நன்றி.

    இந்த நூலுக்கு அணிந்துரை பெறுவதற்கான எண்ணம் என் மனதில் எழுந்தவுடன் அதற்கு மிகவும் பொருத்தமான ஒரே ஒருவராக விண்வெளி பற்றி நன்கு அறிந்தவரும் என் இனிய நண்பருமான திரு வி.தேசிகன் தான் நினைவில் வந்தார்.

தேசிகன் சிறந்த விஞ்ஞானி. ஆடம்பரமும் அகந்தையும் இல்லாத எளிமை கொண்ட அதிசய மனிதர்/. மதுரையைச் சேர்ந்த மாபெரும் குடும்பப் பின்னணியைக் கொண்டவர். பெரிய அறிவியல் விஷயங்களை எளிதில் விளக்கும் திறன் பெற்றவர்.  இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு நவீன சாதனங்களையும் நவீன தொழில் நுட்ப அமைப்புகளையும் நமது விமானப் படை உள்ளிட்ட முப்படைகளுக்கும் வடிவமைக்கும் நிறுவனத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர். டிபென்ஸ் ரிஸர்ச் அண்ட் டெவலப்மெண்ட் ஆர்கனைசேஷனில் (டி ஆர் டி ஓ- Defence Research and Development Organizations -DRDO)) இருபத்தி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி உயரிய பதவி வகித்தவர். 1983ஆம் ஆண்டுக்கான உயரிய விருதான “ஸயின்டிஸ்ட் ஆப் தி இயர்” என்னும் டிஆர்டிஓ விருதை பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தியிடம் பெற்றவர். உயர்ந்த பண்பாளரான இவர் சமூக சேவையிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். பங்களூரில்  ரோட்டரி சென்ட்ரல் கிளைக்கு தலைவராக இருந்து சேவை புரிந்தவர். இசையையும் டென்னிஸையும் இரு கண்களாகப் போற்றும் திரு தேசிகன் அவ்வப்பொழுது தனது உயரிய சிந்தனைகளை இணைய ப்ளாக்குகளிலும் உலவ விடுகிறார்.1997லிருந்து ஒரு  அரிய அறிவுரையைத் தரும் தனது ஆலோசனை நிறுவனம் ஒன்றையும் பங்களூரில் நடத்தி வருகிறார்.

திரு தேசிகனிடம் அணிந்துரை தர வேண்டிய போது மனமுவந்து அதை ஏற்றதுடன் அழகிய அணிந்துரை ஒன்றை அளித்து என்னை கௌரவித்துள்ளார். அவருக்கு என் இதய ஆழத்திலிருந்து ஆத்மார்த்தமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     வாசகர்களே தமிழ் உலகத்தின் ஜீவ நாடி. அவர்களே அறிவுச் செல்வத்தை வரவேற்பவர்கள்; ஆதரிப்பவர்கள்; பரப்புபவர்கள். அவர்கள் இன்றி எந்த ஒரு புத்தக வெளியீடும் இல்லை. புத்தகமும் இல்லை.எழுத்தாளரும் இல்லை. என்னை இடைவிடாது பல வருடங்களாக ஆதரித்து வரும் நேயர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

தொடர்ந்து என் எழுத்துப் பணியில் அக்கறை செலுத்தி பல்வேறு வழிகளிலும் உதவி வரும் என் மனைவி சித்ரா, மகன்கள் சத்யநாராயணன், விஜயகிருஷ்ணன், மருமகள் ப்ரஹன்நாயகி சத்யநாராயணன் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாசகர்கள் இந்த நூலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.

பங்களூரு                                      ச,நாகராஜன்

15-3-2012

தொடர்புக்கான மின்னஞ்சல் snagarajans@gmail.com

*நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

 This is the second part of the series which deals with humanity’s expeditions into space and beyond, as published in the weekly “Bhagya”. This book not only outlines several expeditions into space, but also explains how science and technology have improved continuously over years. The functioning of space satellites and space stations have also been detailed. This book is a must read for space enthusiasts.

 ‘பாக்யா’ வார இதழில் வெளியான அற்புத அறிவியல் தொடரின் இரண்டாம் பாகம் இப்பொழுது நூலாக! விண்வெளி பற்றிய கலைக்களஞ்சியமாகத் திகழ்வதோடு அறிவியல் முன்னேற்றம் எப்படி விண்ணளாவி உயர்ந்து வருகிறது என்பதையும் விளக்குகிறது. பல்வேறு விண்வெளிப் பயணங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. விண்கலங்களின் பயன்பாடுகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கிறது. அறிவியல் ஆர்வலர்கள் தவறாமல் படிக்க வேண்டிய நூல்! பரிசளிக்கவும் ஏற்ற நூல்!

 *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ விண்வெளியில் மனித சாதனைகள் -பாகம் 2’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Leave a comment

Leave a comment