
Post No. 11,614
Date uploaded in London – – 2 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
அறப்பளீசுர சதகப் பாடல் 43-ல் மனு நீதிப்படி ஆட்சி செய்யும் மன்னர் ஒளியும் அறிஞர்களின் பேரொளியும் சூரியன் ஒளியும் எட்டு திக்கிலும் பரவும் என்கிறார் அம்பலவாணர். ஒவ்வொரு படியாக ஒளியின் அளவையும் ஒப்பிடுகிறார். மாணிக்கம் ஒளிமிக்கது. அதைவிட ஒளியுடையது மின்மினி உமிழும் புழுக்கள். அதை விட ஒளிமிக்கது விளக்கு; அதைவிட ஒளியுடையது வர்த்தி. ஞாயிற்றினுக்கும்,மனுநீதி மன்னர்க்கும் ,வீரமுடைய அறிஞருக்கும், மேலே சொன்ன எல்லாவற்றையும் விட ஒளி இருக்கும்; அது எட்டு திக்கிலும் பிரகாசிக்கும் என்கிறார் அம்பலவாணர் .
xxxx
இதோ கம்பனை ஒப்பிட்டுப் பார்ப்போம்
ஆரண்ய காண்ட, அகத்தியப் படலத்தில் கம்பன் மனு நீதி பற்றிக் கூறுகிறான்:–
வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும்
தாழும் இமையோர் உயர்வர் தானவர்கள் தாழ்வார்
ஆழி உழவன் புதல்வ ஐயம் இல்லை மெய்யே
ஏழ் உலகும் வாழும் இனி இங்கு உறைதி என்றான்.
பொருள்:–
“தசரத சக்ரவர்த்தியின் திருமகனே! நீ இங்கே தங்கினால் வேதங்கள் வாழும்; மனு நீதி வாழும்; அறம் வாழும்; இன்று வரை அரக்கரால் தாழ்வடைந்த தேவர்கள் (இமையோர்) உயர்வர்; அரக்கர்கள் (தானவர்கள்) தாழ்வு அடைவார்கள். இதில் சந்தேகமே இல்லை; அதனால் நீ இங்கேயே தங்கு” என்று இராமபிரானிடம் அகத்தியன் பகர்ந்தான்.
Xxxx
கிஷ்கிந்தா காண்டத்தில் நிறைய இடங்களில் மனு நீதியைப் பாராட்டும் பாடல்கள் வருகின்றன; சில பாடல்களை மட்டும் காண்போம்:–
இராமனை வாலி குறைகூறும் பாடல் இதோ:-
அரக்கர் ஓர் அழிவு செய்து கழிவரேல் அதற்கு வேறுஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ
இரக்கம் எங்கு உகுத்தாய் என்பால் எப்பிழை கண்டாய் அப்பா
பரக்கழி இது நீ பூண்டால் புகழையார் பரிக்கற்பாலார்
பொருள்:-
ஐயா! அரக்கர் செய்த தீமைக்காக குரங்குகளின் மன்னனைக் கொல்லுமாறு மனுநீதி கூறிற்றோ? நினக்கே உரித்தான அருளை எங்கு விட்டாய்? என்னிடத்தே என்ன பிழையைக் கண்டாய் பெரும்பழியை உன்னைப் போன்றவர் ஏற்றால் புகழை ஏற்க வல்லவர் வேறு எவர் உளர்?
இதற்கு இராமன் அளித்த பதில்:–
தக்க இன்ன தகாதன இன்ன என்று
ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள
மக்களும் விலங்கே மனுவின் நெறி
புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே
(எது சரி, எது சரியில்லை என்று தெரியாத மக்கள் விலங்குகளே; மனு நீதிப்படி நடக்கும் விலங்கும்கூட தேவர்களுக்குச் சமம்)
இன்னொரு பாடலில் இராமனைப் புகழும் கம்பன்,
மனுநீதியான் என்ற அடைமொழியைச் சூட்டுகிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் “மனு நூலில் சொன்னபடி அறநெறி தவறாது நடப்பவனான இராமன்” என்று வியாக்கியானம் செய்கின்றனர்.
இதை வலியுறுத்தும் ஒரு பாடலும் கிஷ்கிந்தா காண்டத்தில் உண்டு:
நஞ்ச மன்னவரை நலிந்தாலது
வஞ்சமன்று மனு வழக்காதலால்
அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்
பொருள்:-விஷம் போன்ற கொடியவரைத் தண்டித்தால் அது கொடுமை இல்லை ஏனெனில் அது மனு நீதியில் சொல்லப்பட்டதாகும் ஆகையால இதனை 5 வயதிலும் 50 வயதிலும் அறியாத சுக்ரீவனிடம் எடுத்துச்சொல்வாயாக என்று இராமன் கோபத்துடன் கூறியது கிட்கிந்தைப் படலத்தில் வருகிறது.
இங்கே இன்னும் ஒரு அழகையும் கண்டு ரசிக்கலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற தமிழ்ப் பழமொழியையும் கம்பன் நமக்கு நினைவு படுத்துகிறான் யோகாசனம் பயிலுவோர் ஐந்து வயது முதல் பழக வேண்டும். ஐம்பது வயதில் உடம்பு வணங்காது ; பல்லக்கு மூங்கில் வேண்டுவோர் மூங்கிலை இளமை நிலையிலேயே வளைத்து வைப்பர் ; பல ஆண்டுகளுக்குப்பின்னர் பல்லக்கு செய்ய அதைப் பயன்படுத்துவார்கள்.
Xxx
மனு நீதி நூலில் பிற்காலத்தில் சூத்திரர்களுக்கு எதிராக நுழைக்கப்பட்ட 40, 50 பாடல்களை நீக்கிவிட்டால் கம்பனும் கல்வெட்டுகளும் மனு நீதியைப் புகழ்ந்தது ஏன் என்பது விளங்கும்
Xxx
அறப்பளீசுர சதகம் 45ஆவது பாடலில் எதை, யார் செய்தால் சிறப்பாக இருக்கும் என்கிறார்:
நல்ல செயலானாலும் கெட்ட செயலானாலும் பெரியோர் செய்தால் சிறப்பு.;
பெரிய அரசியல் தலைவர்கள் தெருக்கூட்டினால் பத்திரிக்கையாளர் புகைப்படம், வீடியோ படம் எடுப்பர்
காம சம்பந்தமான செயல்களை பருவ மங்கையர் செய்தால் பிரபல மடையும் ; இதை சினிமாக்காரிகள் வாழ்வில் பார்க்கிறோம். அவர்கள் விளம்பரத்துக்குப் போஸ் கொடுத்தால் அதற்கும் கோடி ரூபாய் கிடைக்கும்
வாரி வாரி வழங்கிய வள்ளல்களுக்கு உயர்விலும் தாழ்விலும் புகழ் மங்காது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி கதையில் இதைக் கேட்கிறோம்
போர் வீரர்களுக்கு விழுப்புண்கள் அதிகமானால் மேலும் அழகுதான். புறநானூற்று வீரத்தாய் கதையில் இதை அறிகிறோம்
தவறி விழுந்தாலும் யானையிலிருந்து விழுந்தால் பெருமைதான்; நாயின் மேலிருந்து விழுந்தால் நகைப்புக்கு உள்ளாவோம் .
தமிழ் கூட குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும் என்போம்.
ஏதேனும் ஒருவகையில் உயர்ந்த நிலைக்குப் போய் விட்டோருக்கு தாழ்வே கிடையாது.
xxxxx
அறப்பளீசுர சதகம் 43, 44, 45
அறப்பளீசுர சதகம் 43. ஒளியின் உயர்வு
செழுமணிக் கொளி அதன் மட்டிலே! அதினுமோ
செய்யகச் சோதம் எனவே
செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி! அதனினும்
தீபத்தின் ஒளிஅ திகமாம்!
பழுதிலாத் தீவர்த்தி தீபத்தின் அதிகமாம்!
பகல்வர்த்தி அதில்அ திகமாம்! ப
ாரமத் தாப்பின்ஒளி அதில் அதிகமாம்! அதிலுமோ
பனிமதிக் கொளிஅ திகம்ஆம்!
மிக்கவொளி திசைதொறும் போய்விளங் கிடும்என்ன
விரகுளோர் உரைசெய் குவார்!
அழல்விழிகொ டெரிசெய்து மதனவேள் தனைவென்ற
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அழல் விழிகொடு எரிசெய்து மதனவேள் தனைவென்ற
அண்ணலே – தீவிழியினாலே காமனை எரித்து வென்ற பெரியோனே!,
அருமை ……. தேவனே!,
செழுமணிக்கு அதன்மட்டிலே ஒளி – நல்ல
மாணிக்கத்துக்கு அதன் அளவிலேதான் ஒளியுண்டு, அதினும் செய்ய
கச்சோதம் எனச் செப்பிடும் கிருமிக்கு மிச்சம்ஒளி – அம்மணியைக்
காட்டினும் சிவந்த மின்மினியெனக் கூறப்படும் புழுவுக்கு மிகுதியான ஒளி
உண்டு, அதனினும் தீபத்தின் ஒளி அதிகம்ஆம் – அந்த மின்மினியினும்
விளக்கின் ஒளி மிகுதியாகும், தீபத்தின் பழுதுஇலாத் தீவர்த்தி அதிகம்
ஆம் – விளக்கினும் குற்றமற்ற தீவர்த்தியின் (ஒளி) மிகுதியாகும், அதில்
பகல்வர்த்தி அதிகம் ஆம் – அதனினும் பகல்வர்த்தி(யின் ஒளி)
மிகுதியாகும், அதில் பார மத்தாப்பின் ஒளி அதிகம் – பகல்வர்த்தியினும்
பெரிய மத்தாப்பின் ஒளி மிகுதியாகும், அதிலும் பனிமதிக்கு ஒளி அதிகம்
ஆம் – மத்தாப்பினும் குளிர்ந்த திங்களின் ஒளி மிகுதியாகும், விழைவுதரு
பரிதிக்கும் மனுநீதி மன்னர்க்கும் வீரவிதரணிகருக்கும் – விருப்பம் ஊட்டும்
ஞாயிற்றினுக்கும் செங்கோல் அரசர்க்கும் வீரமுடைய அறிஞருக்கும்,
மிக்கஒளி திசைதொறும் போய்விளங்கிடும் என்ன விரகு உளோர்
உரைசெய்குவார் – பேரொளி எட்டுத்திக்கினும் சென்று விசும் என்று
அறிவுடையோர் கூறுவர்.
Xxx
அறப்பளீசுர சதகம் 44. நன்று தீதாதல்
வான்மதியை நோக்கிடின் சோரர்கா முகருக்கு
மாறாத வல்வி டமதாம்!
மகிழ்நன் றனைக்காணில் இதமிலா விபசரிய
மா தருக் கோவி டமதாம்!
மேன்மைதரு நற்சுவை பதார்த்தமும் சுரரோகம்
மிக்கபேர்க் கதிக விடமாம்!
வித்தியா திபர்தமைக் கண்டபோ ததிலோப
வீணர்க்கெ லாம்வி டமதாம்!
ஈனம்மிகு புன்கவி வலோர்க் கதிக சபைகாணில்
ஏலாத கொடிய விடமாம்!
ஏற்றமில் லாதபடு பாவிகட்க றமென்னில்
எந்நாளும் அதிக விடமாம்!
ஆனதவ யோகியர்கள் இதயதா மரையுறையும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆன தவயோகியர்கள் இதய தாமரை உறையும் அண்ணலே
– ஆக்கம்பெற்ற தவயோகியரின் உளத்தாமரைமலரில் வாழும் பெரியோனே!
அருமை …….. தேவனே!,
சோரர் காமுகருக்கு வான்மதியை நோக்கிடின்
மாறாத வல்விடமது ஆம் – திருடருக்கும் காமநோயாளருக்கும் வானத்தில் திங்களைப் பார்த்தால் நீங்காத கொடிய நஞ்சு ஆகும். இதம்இலா விபசரிய
மாதருக்கு மகிழ்நன்தனைக் காணில் விடமது ஆம் – நன்மையில்லாத
தீயொழுக்
கப் பெண்டிருக்குக் கணவனைப் பார்த்தால் நஞ்சுபோல் இருக்கும்,
சுரரோகம் மிக்கபேர்க்கு மேன்மைதரு நல்சுவை பதார்த்தமும் அதிகவிடம்
ஆம் – வெப்புநோய் மிகுந்தவர்கட்கு உயர்ந்த இனிய சுவைமிக்க கறிகளும் மிகுந்த நஞ்சாகும், அதிலோப வீணர்க்குஎலாம் வித்தியாதிபர் தமைக்
கண்டபோது விடமது ஆம் – மிகுந்த ஈகைப் பண்பிலாத வீணர்கள்
யாவருக்கும் கலைவல்லோரைக் கண்டபோது நஞ்சாகும், ஈனம்மிகு புன்கவி
வலோர்க்கு அதிக சபை காணில் ஏலாத கொடியவிடம் ஆம் – இழிவு
மிக்க புன்கவிவாணருக்குப் பேரவையைக் கண்டாற் பொறுக்கமுடியாத தீய நஞ்சாகும், ஏற்றம் இல்லாத படுபாவிகட்கு அறம் என்னில் எந்நாளும்
அதிகவிடம் ஆம் – மேன்மையில்லாத பெரும் பாவிகளுக்கு அறம்
என்றால் எப்போதும் பெருநஞ்சு ஆகும்.
Xxxxx
அறப்பளீசுர சதகப் பாடல் 44-ல் யாருக்கு எது பாகற்காயாகக் கசக்கும் என்ற பட்டியலை அம்பலவாணர் தருகிறார் :-
திருடர்களுக்கும் காம வேட்டை ஆடுவோருக்கும் — நிலவு ஒளி பிடிக்காது.
தீய ஒழுக்கமுள்ள பெண்களுக்கு – கணவனே பாகற்காய்தான் ;
நோயுள்ளோருக்கு நல்ல கறிவகை – கசப்பானதே;
கருமிகளுக்கு கலைஞர்கள் வந்தால் பாகற்காய்;
போலி கவிஞர்களுக்கு சபையே கசப்புதான் ;
பாவிகளுக்கு தர்மம் என்றால் நஞ்சு போன்றதே
இவை அனைத்தும் உலகம் அறிந்த உண்மைகளே.
xxx
அறப்பளீசுர சதகம் 45. தாழ்வும் உயர்வுபெறும்
வெகுமானம் ஆகிலும் அவமானம் ஆகிலும்
மேன்மையோர் செய்யில் அழகாம்!
விரகமே ஆகிலும் சரசமே ஆகிலும்
விழைமங்கை செய்யில் அழகாம்!
தகுதாழ்வு வாழ்வுவெகு தருமங்க ளைச்செய்து
சாரிலோ பேர ழகதாம்!
சரீரத்தில் ஓரூனம் மானம்எது வாகிலும்
சமர்செய்து வரில்அ ழகதாம்?
நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
நாளும்அது ஓர ழகதாம்!
நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர்
நகைசெய்தழ கன்றென் பர்காண்!
அகம்ஆயும் நற்றவர்க் கருள்புரியும் ஐயனே!
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அகம்ஆயும் நல்தவர்க்கு அருள்புரியும் ஐயனே –
உள்ளத்திலே ஆராயும் நல்ல தவத்தினர்க்கு அருள்செய்யும் தலைவனே!,
ஆதியே – முதல்வனே!, அருமை …….. தேவனே!, வெகுமானம் ஆகிலும்
அவமானம் ஆகிலும் மேன்மையோர் செய்யில் அழகுஆம் – பெருமதிப்புச்
செயலானாலும் இழிவுச் செயலானாலும் பெரியோர்கள் செய்தால்
அழகுதரும். விரகமே ஆகிலும் சரசமே அகிலும் விழைமங்கை செய்யில்
அழகுஆம் – காமநோயானாலும் காமக்கூட்டம் ஆனாலும் விரும்பத்தக்க
மங்கைப் பருவப் பெண் கொடுத்தால் அழகு ஆகும், வெகு தருமங்களைச்
செய்து தகுதாழ்வு வாழ்வு சாரில் பேரழகு ஆம் – மிக்க அறங்களைப்
புரிந்து தக்க தாழ்வாயினும் வாழ்வாயினும் பெற்றால் மிகுந்த அழகு ஆகும்,
சமர்செய்து சரீரத்தில் ஓர் ஊனம் மானம் எதுவாகிலும் வரில் அழகது
ஆம் – போர்புரிந்ததால் உடம்பில் ஏதாயினும் காயமாவது பெருமையாவது உண்டானால் அழகு ஆகும். நகம்மேவு மதகரியில் ஏறினும் தவறினும்
அதுநாளும் ஓர் அழகது ஆம் – மலைபோன்ற மதயானையின்மேல்
ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் அச்செய்கை எப்போதும் ஓரழகாக இருக்கும்,
நாய்மீதில் ஏறினும் வீழினும் கண்டபேர் நகைசெய்து அழகு அன்று என்பர்
– நாயின்மேல் ஏறினாலும் தவறி வீழ்ந்தாலும் பார்த்தபேர் நகைத்து
அழகாகாது என்று கூறுவர்.
–subham—
Tags- அறப்பளீசுர சதகம் 43, 44, 45. மனு நீதி, மன்னர்களின் ஒளி, பிரகாசிக்கும், அம்பலவாணர்