ஓரிக்கை மணி மண்டப தரிசனமும், உண்மைச் சாமியார் விமர்சனமும்! (Post No.11,863)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,863

Date uploaded in London – –  2 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட நேரமாக இருந்தது. இந்த முறை காஞ்சி காமாட்சி கோவில் , காமகோடி மட த்தில் சங்கராச்சாரியார் சமாதிஆகிய  இரண்டையும் மட்டும் தரிசித்துவிட்டு 12 மணிக்குள் ஓரிக்கை மணி மண்டபத்தை அடைந்தோம். இன்னும் அரை மணி நேரம் திறந்திருக்கும் என்பதால் சட்டைகளைக் கழற்றிவிட்டு மேல் துண்டுடன் மகாபெரியவர் சிலை இருக்கும் மண்டபத்தை அடைந்தோம். ஏராளமானோர் பூக்கள் பழங்களுடன் வந்திருந்தனர்.

வெளியே எண்கோண வடிவ குளம் இருப்பதற்கான போர்டு இருந்தது. அதைக்கூ டப் பார்க்க முயலவில்லை. ஏனெனில் அதை விட அற்புதமான காட்சி மணி மண்டபத்திலேயே காணக் கிடைத்தது. அதாவது பிராமணச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் சம்பிரதாய குருகுல முறைப்படி வேதம் படித்துக் கொண்டிருந்தனர்.அவர்கள் எங்களை சட்டை செய்யாமல் வேதம் படிப்பதில் முனைப்பாக இருந்தனர். அ வர்களுடைய அனுமதியைக் கேட்டுவிட்டு , புகைப்படம் எடுத்தேன். ஒரு மாமி மட்டும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றார் . நான் வேதம் பரவுவதை ஆதரிப்பவன்; இப்படியோர் நல்ல பணி நடப்பது நாலு பேருக்குத் தெரிய வேண்டாமா என்றேன். அவரும் பதில் பேசவில்லை . படிப்போர் பெண்களாக இருந்திருந்தால் கட்டாயம் அவர் சொன்னதைக் கேட்டிருப்பேன். ஆனால் ஆண்கள் என்பதால் எடுத்தேன்.. பின்னர் அவர்கள் அனைவரும் சந்நிதிக்கும் வரிசையாக வந்தனர் .

வேதத்தின் ஒரு கிளை (shaka) யையும் வேதத்தின் ஆறு அங்கங்களையும் (Ancillary subjects) ஒருவர் கற்றுத் தேற வாழ்நாள் முழுதையும் செலவிடவேண்டும். அதற்குத் துணிந்து அங்கே வந்திருந்த இளைஞர்களுக்கு காமாட்சி அன்னையின் அருளும் காஞ்சிப் பெரியவரின் பரிபூரண ஆசியும் உண்டு என்பதில் ஐயமில்லை. ஆயினும் வேதத்தில் நம்பிக்கையுடைய நம்மைப் போன்றோர் நன்கொடை தந்தும் வேறு பல வழிகளில் உதவியும் வேதாகம  கல்வியைப் பரப்ப வேண்டும்.

நானும் ராமர் பாலம் கட்ட அணில் உதவியதுபோல கொஞ்சம் உதவினேன்.

xxx

மணி  மண்டப மகிமை

இது 2011ல்தான் பாலாற்றங்கரையில் வெங்கடேச அய்யர் என்பவரின் முயற்சியால் உருவானது. பல சதுர ஏக்கர் பரப்பில் கோவிலும் (மணி மண்டபம்) குளமும் ‘கோ’ (cow) சாலையும் அமைந்துள்ளது ; பெரிய கோபுரமும் பெரியவர் வாழ்ந்த 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் 100 தூண் மண்டபமும் பாண்டிய, சோழ , பல்லவ கட்டிட  பாணியில் அமைக்கப்பட்ட்டுள்ளன. பெரிய நந்தி, பெரிய மணி , சிற்ப வேலைப்பாடமைந்த தூண்கள், எண்கோண குளம், நடுவில் மண்டபம் எல்லாவற்ரையும் அமைக்க அவர்கள் எத்தனை அரும் பாடு பாட்டார்களோ !.

புதுப்புது கோவில்கள், புதுப்புது சிலைகள் அமைப்பதைவிட 1000 ,2000 ஆண்டு பழமை உடைய கோவில்களை பராமரிக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆயினும் 100 ஆண்டு வாழ்ந்து காஞ்சிக்கும் இந்து மதத்துக்கும் புகழ் சேர்த்த மஹா பெரியவருக்குக் காஞ்சியில் மணி மண்டபம் அமைத்தது சாலப்பொருத்தமே..

Xxx

இந்து மதத்தில் உண்மைச் சாமியார் உண்டா?

கொஞ்ச காலத்து முன்னர் எனக்கு ஆங்கிலத்தில் ஒரு ஈமெயில் email வந்தது.

ஐயா /  Sir

நீங்கள் எழுதிய கட்டுரைகளைப் படித்து மெத்த மகிழ்ச்சி . எனக்கும் ஒரு நல்ல சாமியாரைப் பார்க்க ஆசை. யாராவது ஒருவர் பெயரைச் சொல்லி, அவர் இருக்கும் முகவரியையும் தந்து உதவுங்கள் என்று எழுதி இருந்தார்.

நான் அவருக்குப் பணிவுடன் பதில் எழுதினேன். ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னர் இதே கேள்வியைக் கேட்டிருந்தால் காஞ்சிப் பெரியவர் பெயரைச் சொல்லி முகவரி கொடுத்திருப்பேன். அதற்கு முன்னர் ரமண மகரிஷி, ராம கிருஷ்ண பரமஹம்சர் முதலியோர் இருந்தனர். இப்போது அப்படி திறந்த குடிசையில் வாழும் சாமியார்கள் இல்லாததால் நான் துணிவுடன் யார் பெயரையும் சொல்ல மாட்டேன்.

கட்டாயம் நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர்களை எழுதினால் நீங்கள் எனக்கு 100 துணைக் கேள்விகளை எழுப்பித் துளைத்து எடுத்து விடுவீர்கள்.

அவர் ஏன் காரில் போகிறார்?

அவர் ஏன் கூலிங் கிளாஸ் அணிகிறார்?

அவருக்கு எதற்கு எலக்ட்ரானிக் கேட் செக்யூரிட்டி?

அவர் ஏன் பல மாடிக்கட்டிடத்தில் வசிக்கிறார் ?

அவர் ஏன் ஆண்களையும்,பெண்களையும் தனித்தனியே தனது அறைக்கு அழைக்கிறார்?

இப்படி 100 கேள்விகள் கேட்பீர்கள்; நானும் அவர்களுடன் வாழாததால் உங்களுக்கு உண்மையான பதில்களைத் தர இயலாது. காஞ்சிப் பெரியவர், ரமணர் முதலிய பெரியோர் விஷயத்தில் இந்தக் கேள்விகளே எழாது.

ஆகையால் நீங்களே பிரபல மடங்களுக்குச் சென்று உண்மைப்பொருளைத் தேடுங்கள் ; கட்டாயம் சிருங்கேரி, காஞ்சி போன்ற  மடங்களில் பெரியார்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வு திறந்த குடிசையில் இல்லாததால் நீங்களே சென்று ஐயம் தெளியுங்கள் என்றேன்.

xxx

இங்கே, காந்திஜி சொன்ன விஷயம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது.

ஓ  காந்திஜி அவர்களே! தினமும் மாலையில் பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் போகும்போது, எதற்காக இரண்டு இளம்பெண்களின் தோள்களில் கைகளைப் போட்டுக்கொண்டு போகிறீர்கள்? கைத்தாங்கல் கொடுக்க வேறு ஆளே கிடைக்கவில்லையோ.? என்று ஒருவர் கடிதம் எழுதினார்.

அவருக்கு காந்திஜி பணிவுடன் பதில் எழுதினார். மிகவும் நியாயமான கேள்வி. இதற்கு நான் எத்தனை நீளமான பதில் எழுதினாலும் நீங்கள் நம்பாது போகலாம். தயவு செய்து  என்னுடன் சில நாட்களுக்காவது வந்து தங்கிப் பாருங்கள் என்று.

இப்படி இன்று எத்தனை தலைவர்கள் எழுத முடியும் ? சிந்தித்துப் பாருங்கள்

xxxx

உங்களிடம், உங்கள் 20 வயது மகனோ மகளோ இப்படி நல்லவர் யார் எனக்குக்  காட்டுங்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?

அப்படியே நீங்கள் பதில் சொன்னாலும் அவர்கள் எதிர்க் கேள்வியோ, புதிர்க் கேள்வியோ போடாமல் நீங்கள் சொல்லுவதை அப்படியே ஏற்பார்களா? எண்ணிப் பாருங்கள் .

xxx

சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள்

அடடா, முடிப்பதற்குள் வேறு இரண்டு விஷயங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன . ரிக் வேதக் கிளை (சாகை) ஒன்றை முழுதுமாகக் கற்றுத்  தேர்ந்து காஞ்சி மஹா சுவாமிகளிடம், சால்வை, பசுமாடு, தங்கக்காசு பெற்றவர் கூத்தனூர் சிங்கார சுப்பிரமணிய சாஸ்திரிகள். மதுரை டி .வி. எஸ் நிறுவனத்தார் அவரை ராமாயண சொற்பொழிவுகளை நிகழ்த்த அழைப்பார்கள்.அவர் தங்கும் நாட்களை நீடிக்கச் செய்து எங்கள் வீட்டுக்குப்  பக்கத்திலுள்ள கிருஷ்ணாராயர் தெப்பக்குளத்தெரு ஆஞ்சனேயர் கோவிலிலும் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தச்  சொல்லுவார்கள் . நாங்கள் மதுரை வடக்கு மாசி வீதி, குட்ஷெ ட் தெருக்களில் வசித்த காலங்களில் எங்கள் வீட்டில்தான் தங்குவார். நாங்களும் தினமணிப் பத்திரிகையில் அவருடைய உபன்யாசங்களை வெளியிட்டு வந்தோம் .

அவர் உத்தமோத்தமர்களே ! என்று சொல்லி உபன்யாசத்தைத் துவங்குவார். என் அருகில் தினமும் அமரும் ஒரு அன்பர். இங்கு எவன் உத்தமன்; என் உள்பட எல்லோரும் அயோக்கியர்கள் என்பார். அவருடைய ஹானஸ்டியை HONESTY மெச்சி நானும் ‘ஆமாம் சாமி’ போடுவேன்.சமயச் சொற்பொழிவு கேட்போரிடையே இந்த நிலை  என்றால், வேறு இடங்களில் கேட்கவே வேண்டாம்.

Xxxx

சுவாமி சாந்தானந்தாவின் ஸத்யமான வாக்கு

புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் , காடுகளில் தவத்தை முடித்துக்கொண்டு பொது சேவையில் இறங்கிய காலம். எப்போது மதுரைக்கு வந்தாலும் எங்கள் வீட்டில் பிட்சை (அன்னம்) ஏற்றுவிட்டு என் தந்தை வெ . சந்தானத்திடம் ‘தினமணி’க்கான செய்திகளைக் கொடுத்து விட்டுப்போவார். பிரமாண்டமான சஹஸ்ர சண்டி யக்ஞத்தை ஏற்பாடு செய்த சமயம். அப்போது திராவிடக் கழகத்தினர் , யாகத்துக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அதை எனது தந்தை அவரிடம் சுட்டிக்காட்டியபோது,

அவாள் ஏன் அப்படிச் செய்யறாள் ? நான் ஸத்யமான வாக்கைத்தானே சொல்லறேன் ;

நான் சொல்றது ஸத்யமான வாக்கு ,ஸத்யமான வாக்கு  என்று திரும்பத் திரும்பச் சொல்லுவார்.

அவர் போன பின்னர் நாங்கள் எல்லோரும் அடக்கடவுளே, உலக நடப்புகளை அறியாத அப்பாவி (INNOCENT) சாமியாராக இருக்கிறாரே என்று அதிசயப்படுவோம். நெடிய உருவம். முகத்திலோ ஆயிரம் வாட் பல்பு 1000 WATT BULB போட்டது போல தேஜஸ். நீண்ட சடையோ 100 கிலோ வெயிட் WEIGHT  இருக்கும். அது தரையில் புரள நடந்துவருவார். அற்புதமான காட்சி.

xxx

தேனி வேதபுரி ஆஸ்ரம ஓம்காரானந்தா

Following matter is repeated by me :

முன்னரே நான் எழுதியதை மீண்டும் சுருக்கமாக எழுதி விடை பெறு கிறேன் . அண்மைக் காலத்தில் கொரோனா வியாதியால் திடீரென்று உயிரிழந்த உத்தமர் , பேரறிஞர், தேனி நகர ஓம்காரானந்தா ஆவார் . அவரை இரண்டு முறை லண்டனுக்கு அழைத்து உபன்யாசங்களை ஏற்பாடு செய்தேன் . மூன்றாவது முறை அவரே டாக்டர் சொன்னதால் லண்டன் பயணத்தை CANCEL கேன்சல் செய்தார்.

அவருக்கு லண்டனில், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் சிவன் கோவிலில் ஒரு சொற்பொழிவு ஏற்பாடு செய்தேன்.

முதல் நாள் போன் PHONE  செய்து,  நாளை எவ்வளவு கூட்டம் வரும்? எத்தகைய ஆடியன்ஸ் AUDIENCE  என்று தெரிந்தால் சுவாமிகளிடம் முன்கூட்டியே சொல்லிவிடுவேன் என்றேன்.

அவர் சொன்னார் : தம்பீ, கவலைப்படா தீங்க ; தமிழ் ஸ்கூல் பிள்ளைகள் 100 பேரையும் ஆசிரியர்கள் அழைத்து வந்துவிடுவார்கள்.

இதைக்கேட்ட எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே! அவர் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்தவர். வேத வேதாந்தங்களின் கரை கண்டவர். சின்னப் பிள்ளைங்க வருவாங்கன்னு சொல்றீங்களே !என்றேன் (டெலிபோனில்)

அவர் சொன்னார்; தம்பீ ! நீங்க உண்மையான சாமியார் ஒருவர் இந்தியாலேருந்து வரார்னு சொன்னீங்க. . எங்க பிள்ளைங்க எல்லாரும் சினிமாவிலே வேஷம் போட்டு வரும் சாமியாரத்தான் பாத்திருக்காங்க. அதானாலத்தான்….. என்று இழுத்தார்.

ஒரு நொடியில் அவர் என் ஞானக் கண்களைத் திறந்தார். உண்மையான , திறந்த வாழ்வு உடைய சாமியார்களை நம் சிறுவர்களுக்குக் காட்டினாலே போதும். அவர்கள் பெரிய, அடுக்கு மொழிச் சொற்பொழிவுகளை பேச வேண்டும் என்று அவசியமில்லை.! அது ஞான ஒளியைப் பரப்பும் என்பதில் ஐயமில்லை .

உண்மைச் சாமியார்களைத் தேடுவோம்அவர்களையே நாடுவோம்

–subham—

Tags- உண்மைச் சாமியார் , ஓரிக்கை மணி மண்டபம், சிங்கார சுப்ரமண்ய சாஸ்திரிகள் ,  சுவாமி சாந்தானந்தா, ஓம்காரானந்தா

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: