பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்! (Post No.4381)

Written by London Swaminathan 

 

Date: 9 NOVEMBER 2017

 

Time uploaded in London- 14-25

 

 

Post No. 4381

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

வள்ளுவன் பாடிய முப்பாலில், அதாவது தமிழ் வேதமான திருக்குறளில், கடைசி பாலான காமத்துப் பாலை மொழிபெயர்க்க கிறிஸ்தவ பாதிரிகள் மறுத்து விட்டனர். இதென்னடா! அபசாரம், அபசாரம்; ஹராம், ஹராம்! இதெல்லாம் மக்களுக்குச் சொல்லக் கூடாது என்று மறைத்து விட்டனர். இதெல்லாம் சுமார் 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்னர். ஆனால் இந்துக்களோவெனில் வேத காலம் முதல் ‘செக்ஸ்’ SEX உவமைகளை, சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர். ரிக் வேதத்தில் உள்ள சில மந்திரங்களை மிகவும் செக்ஸியானது SEXY– குறிப்பாக பிராமண நூல்களில் உள்ள சில விஷயங்கள் “அசிங்கமானவை” என்று வெள்ளைக்காரர்கள் மொழிபெயர்க்காமல் விட்டதை பழைய புத்தகங்களைப்  படிப்போர் அறிவர்.

உலகில் இந்துக்கள் எல்லா விஷயங்களிலும் முதன்மை என்பதைப் பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன். அது போல காம நூல் விஷயத்திலும் 2000 ஆண்டுக்கு முன்னர் வாத்ஸ்யாயனர் எழுதிய காமசாஸ்திரம்தான் அவ்வகையில் முதன்மையானது.

 

இதோ வள்ளுவன் குறளும் ஒரு ஆங்கில சம்பவமும்:

வள்ளுவன் அதிசயப் படுகிறான் ‘ஏ பெண்ணே! நான் இப்படி ஒரு தீயைக் கண்டதே இல்லை. நீ அருகில் வந்தால் குளிர்ச்சியாக இருக்கிறது. தூரத்தில் போய்விட்டாலோ உடம்பே உன்னை நினைத்து நினைத்து பற்றி எரிகிறது (காமத் தீயால்)’ என்கிறான்.

 

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள் ( குறள் 1104)

 

பொருள்

இவளை விட்டு நீங்கினால் சுடுகிறது; அருகில் வந்தால்

குளிர்கிறது: இந்த புதுவகைத் தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?

கண்களில் தீ

இங்கிலாந்தில் டெவன்ஷைர் என்னும் பகுதியின் பிரபுவுடைய மனைவி (Duchess of Devonshire) பேரழகி. ஒரு நாள் அவள் தான் சென்ற வாஹனத்தில் இருந்து இறங்கினாள். அந்த நேரம் பார்த்து குப்பை வண்டிக்காரன் (Dustman) தெருவிலுள்ள குப்பைகளை அள்ள நின்று கொண்டிருந்தான்; வழக்கம்போல சிகரெட்டைப் பற்ற வைப்பதற்காக தீப்பெட்டியை எடுக்கத் திரும்பினான்.

 

அந்த நேரத்தில் அவன் இந்த பேரழகியைக் கண்டான். அவனோ குப்பை அள்ளுபவன்; இவளோ பிரபுவின் மனைவி. I Love You ‘ஐ லவ் யூ’ என்றா சொல்ல முடியும்?

 

அவன் சொன்னான்,

“அடக் கடவுளே! எத்தனை அழகு! கடவுள் காப்பாற்றட்டும்; கொஞ்சம் நில்லுங்கள்; கண்களில் இருந்து சிகரெட்டுக்கு நெருப்பு மட்டும் எடுத்துக் கொள்கிறேன்!”

 

அவள் கண்களில் அத்தனை ஒளியாம்; இதைக் கேட்டதி ,,,ருந்து இந்தச் சொற்கள் அவள் காதில் ரீங்காரம் செய்துகொண்டே இருந்தது. யார் அவளை என்ன புகழ்ந்தாலும் அவளுக்கு ருசிக்கவில்லை; “இதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அந்தக் குப்பைக்காரன் நெஞ்சைத் திறந்து சொன்னானே அதுதான் உண்மையான வருணனை” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

xxxx

 

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

பிரெஞ்சு மொழியில் கதைகள் எழுதும் ஆசிரியரும் மூன்று கல்விக் கழகங்களின் தலைவருமான ஃபாண்டநெல் (Fontenelle), ஒரு அழகியை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருப்பார். அந்த அழகியும் , அவருடைய காதல் மொழிகளை ரசித்துக் கேட்பாள்.

ஃபாண்டநெல்லுக்கு வயது 97; ஒரு நாள் ஒரு பொது இடத்தில் வேகமாகச் சென்று  — அதாவது அழகியையும் பார்க்காமல்– வேறொரு இடத்தில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.

 

இந்த அழகிக்குக் கோபம் வந்துவிட்டது; “அடச்சீ! இவ்வளவுதானா? உங்கள் காதல் வசனங்கள். பாராமுகமாகப் போகிறீர்களே? இதற்கு என்ன அர்த்தமாம்! என்றாள்

அவர் சொன்னார்,  “அன்பே உண்மைதான்; உன்னைப் பார்த்துவிட்டால் — பார்த்திருந்தால் அச்சுப்போல நின்றிருப்பேனே! நகரவா முடியும்?” – என்றார்.

 

அந்தப் பெண்ணும் உச்சிகுளிர்ந்து போய் அப்படியே  சிலை போல நின்றுவிட்டாள்.

 

பெண்களின் அழகிற்கு ஆண்கள் அடிமை!

ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!

 

xxxx

 

ஒரு பெண் பேச்சில் கில்லாடி; அழகிலோ லம்பாடி!

அவளைப் பற்றி புகழ்பெற்ற ஒரு அறிஞர் சொன்னார்:

ஓ, அவளா! பேசிப் பேசியே அழகை உருப்பெறச் செய்துவிடுவாளே!

-என்று

xxxx

 

ஆப்ரஹாம் லிங்கனின் அழகு!!!

 

ஆப்ரஹாம் லிங்கனுக்கு குழந்தைகள் மீது அலாதிப் பிரியம்; இதை ஊரே அறியும்; ஆகையால் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்வர்.

 

ஆப்ரஹாம் லிங்கன், குணத்தில் உயர் குன்று; அழகிலோ சிறு மணல் மேடு.

 

 

இதுபற்றி வீட்டில் அங்க்கலாய்க்கும் ஒருவர் தனது  மகளை–பள்ளிக்கூடச் சிறுமியை– ஆப்ரஹாம் லிங்கனைக் காண அழைத்துச் சென்றார்.

 

லிங்கனும் அந்தச் சிறுமியை மடியில் வைத்துக் கொண்டு, ஒரு தந்தை கொஞ்சுவது போலக் கொஞ்சிப் பேசினார். அவள் லிங்கனின் முகத்தைப் பார்த்து விட்டு படீரெனச் சொன்னாள்:

அப்பா! ஆப்ரஹாம் லிங்கன் ஒன்றும் அவலட்சணமாக இல்லையே!

 

பிறகு என்ன? திருடனுக்குத் தேள் கொட்டிய கதைதான்; சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது.

 

xxxx

 

டேய்! போண்டா மூக்கு!

ஒருவருக்கு அதி பயங்கர கோபம்! அவர் மூக்கினை யாரோ நக்கல் அடித்தாராம்.

 

அந்த ஆளும் எதிரில் தென்பாட்டான்.

“ஏய் என்ன தைரியம் உனக்கு; நான் இல்லாதபோது என்னை ‘போண்டா’ மூக்கன் என்று கிண்டல் செய்தாயாமே!

நானா! அப்படிச் சொல்லவே இல்லையே! ஆனால்………….. ஆனால்………… இப்பொழுது உங்கள் மூக்கைப் பார்த்தால், உண்மையில் அது ‘போண்டா’ மூக்குதான்! என்றான்.

பின்னர் நடந்ததை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!!!

 

TAGS:— மூக்கு, கண், அழகு, கண்களில் தீ, லிங்கன் அழகு, குப்பைக்காரன்

—சுபம், சுபம்–

 

திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? (Post No.4086)

Written by London Swaminathan


Date: 16 July 2017


Time uploaded in London- 6-34 am


Post No. 4086


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

திருக்குறளைப் பாராட்டி 53 புலவர்கள் பாடிய பாடல்கள் திருவள்ளுவ மாலையில் இடம் பெறும். இதைத்தவிர அவ்வையார், இடைக்காடர் ஆகிய இருவர் பாடல்களையும் சேர்த்து 55 பாடல்கள் என்றும் கொள்வர். இதில் பல புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதத்துடன் ஒப்பிட்டு திருக்குறளை தமிழ் வேதம் என்று அழைக்கின்றனர். அவர்கள் சூட்டிய பெயர்தான் தமிழ் வேதம். இதோ அந்தப் பாடல்கள்:

 

ஆரியமுஞ் செந்தமிழும் ஆராய்ந்திதனினிது

சீரியதென் றொன்றைச் செப்பரிதா – லாரியம்

வேதமுடைத்துத் தமிழ்திரு வள்ளுவனா

ரோது குறட்பா வுடைத்து

வண்ணக்கஞ் சாத்தனார்.

 

சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் ஆராய்ந்து இதைக் காட்டிலும் இது சிறப்புடைத்தென்று ஒன்றைத் தெரிந்து சொல்லுதல் முடியாது; சம்ஸ்கிருதம் வேதமுடையது; தமிழ் திருவள்ளுவர் தந்த குறட் பாக்களை உடையது.

 

இங்கு சம்ஸ்கிருதத்துக்கு வேதத்தால் பெருமை; தமிழுக்கு திருக்குறளால் பெருமை என்று வண்ணக்கஞ் சாத்தனார் கூறுகிறார்

 

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் கூறுகிறார்:-

 

ஐயாறு நூறு மதிகார மூன்றுமா

மெய்யாய வேத பொருள்விளங்கப் – பொய்யாது

தந்தானுலகிற்குத் தான் வள்ளுவராகி

யந்தா மரை மேலயன்

 

அதிகாரம் நூற்று முப்பத்து மூன்றுமாம்,  உண்மையான வேதப்பொருள் பொய்யாது விளங்க அழகிய தாமரை மலர் மேல் வீற்றிருக்கின்ற பிரம்மா, வள்ளுவராகி உலகில் வந்தான்.

 

பிரம்மாவின் நான்கு முகங்களிலிருந்து நான்கு வேதங்கள் வந்தன என்று புராண, இதிஹாசங்கள் விளம்பும். அது போல திருக்குறள் என்னும் தமிழ் வேதத்தை அளித்ததும் அவனே— என்பார் காரிக்கண்ணனார்.

 

வெள்ளி வீதியார் சொல்வார்

செய்யா மொழிக்குந் திருவள்ளுவர் மொழிந்த

பொய்யா மொழிக்கும் பொருளொன்றே — செய்யா

வதற்குரியா ரந்தணரே யாராயி னேனை

யிதற்குரியா ரல்லாதாரில்

ஒருவராலே செய்யப்படாத மொழியாகிய வேதத்துக்கும் —–(அபௌருஷேயம்=வேதங்கள் மனிதன் இயற்றியது அல்ல) —திருவள்ளுவாரால் அருளிச் செய்யப்பட்ட பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே. ஆராய்ந்து பார்த்தால்  செய்யப்படாத அந்த வேதம் ஓதுதற்குரியோர் அந்தணர் மட்டுமே; ஆனால் திருக்குறளை ஓதுதற்குரியவர் எல்லோரும் ஆவர்.

 

நாமகள் செப்பியது

நாடா முதனான் மறைநான் முகனாவிற்

பாடா விடைபாரதம் பகர்ந்தேன் — கூடாரை

யெள்ளிய வென்றி யிலங்கிலைவேன் மாற பின்

வள்ளுவன் வாயதென் வாக்கு

 

பொருள்:

பகைவரைப் புறமுதுகு காட்டச் செய்து வெற்றி பெற்ற, வேற் படையுடைய பாண்டிய ராஜனே!  படைப்புக் காலத்தில் பிரம்மாவின் வாயிலிருந்து நான்கு வேதங்களைப் பாடினேன்; இடைக்காலத்தில் பாரதம் பகர்ந்தேன்; அதற்குப் பிற்பட்ட காலத்தில் என்னுடைய வாக்கு வள்ளுவன் வாயின் கண்ணதாயிற்று

 

ஆகவே சரஸ்வதியின் கூற்றுப்படி, வேதமும், பாரதமும், திருக்குறளும் ஒவ்வொரு காலத்தில் சரஸ்வதியின் வாயிலிருந்து வந்தவையே.

வேதம் = மஹா பாரதம் = திருக்குறள்

மஹா பாரதத்தை பஞ்சமோ வேத: = ஐந்தாவது வேதம் என்பார்கள்.

திருக்குறளை ஆறாவது வேதம் என்று சொல்லாமல் சொல்கிறாள் சரஸ்வதி!

Tags:- தமிழ் வேதம், தமிழ் மறை, திருக்குறள்

–சுபம்–

 

லண்டனில் நான் கற்ற பாடம் Post No.4022)

Written by London Swaminathan
Date: 21 June 2017
Time uploaded in London- 15-12
Post No. 4022
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

1987 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி லண்டனில் தரை இறங்கினேன். பி.பி.சி. ( B B C Wold Service) தமிழோசை ஒலிபரப்புக்காக பிரிட்டிஷ் அரசு என்னை அழைத்தது (உலக சேவை அரசின் நேரடி பார்வையில் உடையது. சாதரண பி.பி.சி.(BBC One, BBC Two) மக்கள் தரும் லைசென்ஸ் பணத்தில் ஓடும் அமைப்பு).

 

இந்தியாவில் 25 ஆண்டுக்காலம் ஆர்.எஸ்.எஸ். முதலிய அமைப்புகளில் இருந்தும்கூட லண்டனில், — புதிய நாடு, புதிய தட்ப வெப்ப நிலை, புதிய சூழ்நிலை காரணமாக — ஒன்றும் செய்ய இயலவில்லை. இப்போது போல தடுக்கி விழுந்தால் தமிழர்களைக் காணும் காலம் அல்ல அது. தமிழர்களும், வெஜிட்டேரியன் உணவும் தேடிக் கண்டு பிடித்த காலம் அது. இப்பொழுது தோழான், துருத்தி அகதி, சகதி எல்லோரும் வரலாம்.

 

 

1993 முதல்தான் நிறைய பொதுப் பணிகள் செய்ய வாய்ப்பு கிடைத்தது. நாலு சங்கங் களில் பொறுப்பு வகித்து சுமார் பத்து அமைப்புகளுக்கு இரண்டு லட்சம் பவுன்களுக்கு மேலாக நிதி சேகரித்து அளித்தேன். அதில் ஒரு அனுபவம்:—

 

பல ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மாவட்டம் தேனியில் இருந்து சுவாமி ஓம்காரானந்தா வந்தார். அவர் இரு முறை லண்டனுக்கு வந்த போதும் நான் சார்ந்திருந்த அமைப்புகள் மூலம் பல இடங்களில் கூட்டங்கள் ஏற்பாடு செய்தேன் அவர் பெரிய தத்துவ வித்தகர். உண்மைச் சாமியார்; நான் கூட்டம் ஏற்பாடு செய்த கோவில்களில் ஒன்று லூயிஷாம் என்னும் இடத்திலுள்ள சிவன் கோவில்; இலங்கைத் தமிழர்களால் சிறப்பாக நடத்தப்படும் கோவில்.

 

ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தால் அதற்கு முதல் நாள் அவர்களுக்கு நினைவுபடுத்தி “எப்போது அழைத்து வரலாம், எவ்வளவு நேரம் பேச வேண்டும், என்ன வயதுக்கார ர்கள்? எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர் பார்க்கிறீர்கள்? என்றெல்லாம் விசாரித்து பேச்சாளர்களுக்கு சொல்லுவது என் வழக்கம். அதன்படி சிவன் கோவில் நிகழ்ச்சிப் பொறுப்பாளரை டெலிபோனில் அழைத்து விசாரித்தேன்.

“தம்பி நாளை காலை பத்து மணிக்கு சுவாமிகள் பேசலாம். பின்னர் கேள்விகள் கேட்டால் பதில் சொல்லட்டும் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந், தால் போதும்; அப்புறம் கோவில் நிர்வாகிகளும் குருக்கள்களும் மரியாதை செய்வார்கள் என்றார். யார் வருகிறார்கள் என்று கேட்டேன்.

“அதுவா, நம்ம தமிழ் ஸ்கூல் பிள்ளைகள்தான். ஆரம்ப வகுப்பு முதல் பள்ளி இறுதிப் படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர். ஆனால் பெருமளவு சின்னக் குழந்தைகள்தான்” என்றார்.

 

எனக்கு தூக்கிவாரி போட்டது. டெலிபோனில் அதைக் காட்டவா முடியும்? பெரிய பதட்டத்துடன் “அடக் கடவுளே, அவர் பெரிய அறிஞர். வேதங்கள், உபநிஷத்துகள், கீதை பற்றி பெரியோர்களுக்காக பேசக்கூடியவர். அரிய வாய்ப்பை நழுவவிடுகிறீர்களே” — என்றேன்.

அவரோ நிதானமாக ,

“தம்பி; நீங்கள் அவர் ஒரு நல்ல , உண்மையான சந்யாசி என்று சொன்னதால்தான் இப்படி செய்திருக்கிறேன். எங்கள் பிள்ளைகள் பார்ப்பது எல்லாம் சினிமாவில்—தெய்வீகத்  திரைப்படங்களில் வரும் நடிப்பு சந்யாசிகளைத் தான் பார்த்திருக்கிறார்கள்; நிஜ வாழ்விலும் இப்படி மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் சொல்லினால் விளக்கி புரியவும் வைக்க முடியாது. ஆகையால் கூப்பிட்டுக் கொண்டு வாருங்கள் அவரைப் பார்த்தால் போதும். அவர் எதுவும் பேசலாம்; ஆசியைகளுக்கும் கோவிலுக்கு வரும் மற்ற பெரியோர்களுக்கும் அறிவித்திருக்கிறோம் அவர்களும் வருவார்கள்” என்றார்.

என் கண்களில் நீர் வராத குறைதான். அவருடைடய அணுகுமுறை என் உள்ளத்தை உருக்கிவிட்டது. நானும் ஒரு பாடம் கற் றேன். ஒரு தனி மனிதன் நல்லவனாக இருந்தால், ஆன்மீக வாதியாக இருந்தால் அவருடைய தோற்றம் எத்தனை இளம் உள்ளங்களின் அடி மனதில் — பிஞ்சுப் பருவத்தில் – பதியும் என்று அந்த கோவில் நிர்வாகிக்கு இருந்த அனுபவ அறிவு எனக்கு இல்லாததை உண ர்ந்தேன்.

சுவாமிகளும் எல்லா வயதினரையும் வசப்படுத்தும் — பரவசப்படுத்தும் — அருளுரை வழங்கினார்.

 

இதை நான் சென்ற சனிக்கிழமை லண்டன் மித்ர சேவா அமைப்பில் பேசியபோது சொன்னேன்; எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்தும் இருக்கிறேன்.

 

ஆக நமக்கு வேண்டியது எல்லாம் உதாரண புருஷர்களே; காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ரமண மகரிஷி போன்று ஏழைக் குடிசையில், ரிஷி முனிவர் போல, வாழ்பவர்கள் காலில் உலகமே விழும்; சரண் அடையும்.

 

(( இப்பொழுது என் மனதில் ஓடும் எண்ணங்களையும் எழுதுகிறேன்:

நடிகர்கள் என்பவர்கள் வெறும் நடிகர்களே; சுய வாழ்வில் யோக்கியர்கள் அல்ல. நடிப்புக்கு பணம் வாங்குதலிருந்து எல்லாமே திரை மறைவு வேலைகள்தான். அவர்கள் உலகிற்குப் பாடம் கற்பிக்க முடியாது. இதே போல திருக்குறளை மேடையில் முழக்கி நாம் எல்லோரும் தமிழர்கள் என்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை நூறு முறை சொல்லி ஏமாற்றும் மேடைப் பேச்சாளர்களையும் நாம் அறிவோம்.

இயற்கையில் ஒரு விதி இருக்கிறது. எங்கு சத்தியம் இல்லையோ அது அழிந்தே தீரும் இது நானோ ஒரு சந்யாசியோ போடும் சாபம் அல்ல. இயற்கை நியதி. பாரதியார் பாஞ்சாலி சபதத்தின் இறுதியில் சொன்னது நினைவுக்கு வருகிறது

“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்

தருமம் மறுபடி வெல்லும் எனுமியற்கை

மருமத்தை நம்மாலே உலகங் கற்கும் வழிதேடி விதி இந்தச் செய்கை செய்தான்”.

–SUBHAM–

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ!- வள்ளுவன், மனு ‘மூட நம்பிக்கை’

Written by London Swaminathan
Date: 15 June 2017
Time uploaded in London- 11-16 am
Post No. 4003
Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.
contact: swami_48@yahoo.com

 

 

வள்ளுவன், காளிதாசன், மனு ஆகியோர் எல்லாம் ஒரு கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகின்றனர். ஆனால் பகுத்தறிவு பேசும் பகலவன்களுக்கு அது வேப்பங் காயாகக் கசக்கும். ஒரு நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் அங்கு விதை விதைக்காமலேயே தானியம் முளைக்குமாம்! நல்ல அறுவடை கிடைக்குமாம்!

 

அதே போல விருந்தாளிகளைக் கவனித்தால் நல்ல விளைச்சல் வருமாம். விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியாத எதுவும் மூட நம்பிக்கைதானே

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம் (85)

 

பொருள்:

வந்த விருந்தினரை முதலில் உண்ண வைத்துவிட்டுப் பின்னர் மீதியை உண்பவனுடைய விளை நிலத்திற்கு விதையும் விதைக்க வேண்டுமா?

 

அதாவது அவன் நிலத்தில் தானாக தானியம் முளைக்கும்; நெல் விளையும்!!

விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் பத்து குறள்களில் அப்படிப்பட்ட விருந்தாளிகளை வரவேற்க தேவலோகத்தில் தேவர்கள்வேறு காத்திருப்பார்கள் என்று இன்னும் ஒரு குறளில் செப்புகிறான். சங்க இலக்கிய நூலான புறநானூறும் செப்புவது அதே! ஆய் அண்டிரன் இறந்தவுடன் இந்திர லோகத்தில் அவனை வரவேற்க டமாரங்கள் (முரசு) முழங்கினவாம்.

 

மனு நீதி நூலும் இதையே பகர்வது பகுத்தறிவுப் பகலவர்களுக்குப் பாகற்காயாகக் கசக்கும்:

நல்லாட்சி நடத்தும் அரசன்  நாட்டில் விவசயிகள் பயிரிட்டது போல பயிர்கள் தானே விளையுமாம்; குழந்தைகள் இளம் வயதில் சாக மாட்டர்களாம். யாரும் உடலூனத்துடன் பிறக்க மாட்டார்களாம்! (மனு 9-247)

 

வள்ளுவனும், மனுவும் சொல்லுவது மூட நம்பிக்கையா?

 

இதற்கெல்லாம் மூல காரணம் வேதங்கள் ஆகும். ஆரமபத்திலேயே “அதிதி தேவோ பவ” = ‘விருந்தாளிகள் கடவுள்’ (தைத்ரீய உபநிஷத், சிக்ஷாவல்லி 1-20) என்று சொல்லிவிட்டது.

வேதத்தில் பல இடங்களில் விருந்தோம்பல் கருத்து உளது:

அதர்வ வேதத்தில் (14-11) ஒரு பாடல்-

“இந்த அறிவு உடைய விராத்யன் விருந்தாளியாக வரட்டும்;

உடனே எழுந்து நின்று, விராத்யனே, நீ  நேற்று இரவு எங்கு தங்கினாய்? இதோ தண்ணீர் இருக்கிறது.

முதலில் கொஞ்சம் சிரம பரிகாரம் செய்; உனக்கு என்ன வேண்டுமோ அதெல்லாம் கிடைக்கும், விராத்ய, நீ விரும்பியதெல்லாம் நடக்கட்டும்; விராத்ய, உன் ஆசைகள் எல் லாம் நிறைவேறட்டும்

 

இது போன்ற கருத்து ரிக் வேதத்திலும் உள்ளது (10-117); பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் கருத்து இப்பாட்டில் தொனிக்கிறது.

 

நல்லாட்சி நடந்தால் புலியும் மானும் ஒன்றை ஒன்று தாக்காது என்று காளிதாசன், கம்பன், இளங்கோ சொல்லியதை முன்பே கண்டோம். இதுவும் பகுத்தறிவுகளுக்கு ஒவ்வாத தமிழ் மூட நம்பிக்கை.

 

இந்த விருந்தோம்பல் என்னும் கருத்து வெளி நாட்டுப் பண்பாட்டில் அறவே கிடையாது! ஆனால் நம் நாட்டிலோ இமயம் முதல் குமரி வரை அன்ன சத்திரங்கள் ஆயிரம் ஆயிரம். அதாவது Free Boarding and Lodging ( போர்டிங் அண்ட் லாட்ஜிங் ப்ரீ)! சாப்பாடும் தங்கும் இடமும் இலவசம். உலகில் எங்கும் இல்லாப் புதுமை. ஆரியர்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கும் அம்சம்.

இது ஏன் வெளி நாட்டில் இல்லை?  இமயம் முதல் குமரி வரை குறைந்தது 2500 ஆண்டுகளுக்காவது உளதே? என்றால் பேந்தப் பேந்த முழிப்பர். இது இந்தியாவில் வந்தவுடன் அவர்கள் உருவாக்கியது என்று சொல்லி பூசி மெழுகுவர்; அதாவது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதை! அவர்களை எல்லாம் மறந்துவிட்டு இந்த அற்புதமான கருத்தை சீதையும் கண்ணகியும் தன் வாக்கில் சொல்லி மகிழ்வதை மீண்டும் நினைவு கொள்வோம்.

My Old Articles on the Hospitality

உண்டி கொடுத்தோர் | Tamil and Vedas

https://tamilandvedas.com/…/உண்டி-கொடுத்தோ…

 

Written by London swaminathan. Date: 7 APRIL 2017. Time uploaded in London:- 14-55. Post No. 3796. Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. விருந்தோம்பல் என்னும் …

மணிமேகலை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/மணிமேகலை/

 

விருந்தோம்பல், தேவதானம், புலவரை ஆதரித்தல் என்பது வேறு. சமூக சேவை என்பது வேறு. தண்ணீர் பந்தல் கதைகளும் மணிமேகலை சிறைச் …

 

—subham–

பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****

 

 

 

 

நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

நிழல் போலத் தொடரும்-புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே- Part 5 (Post No.3928)

 

Written by London Swaminathan

 

Date: 21 May 2017

 

Time uploaded in London: 7-42 am

 

Post No. 3928

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-4 (3914) 16th May 2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-3 (3901) 12-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (3899) 11-05-2017

புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-1(3896) 10th May 2017

 

தீயவை

வள்ளுவர் சொன்னார்,

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடிஉரைந்தற்று (குறள் 208)

பொருள்

தீய செயல்களைச் செய்தவர்கள் தீச்செயலின் பயனை அனுபவித்து அழிவது உறுதி. இது ஒருவனுடைய நிழல் அவனோடு பின் தொடர்ந்து சென்று அவன் அடியில் இருப்பது போன்றது.

ஒருவனுடைய நிழல் ஒருவனை எப்படித் தொடர்கிறதோ அப்படி அவன் செய்த செயல்களும் அவனுடன் வரும்.

புத்தர் சொன்னார்

ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்குத் துன்பம், வண்டி மாட்டின் மீது அந்த வண்டிச் சக்கரங்கள் எப்படி தொடர்ந்து வருகின்றனவோ அப்படி வரும்.

 

ஒருவன் நல்ல எண்ணத்துடன் பேசினாலோ, செயல்களைச் செய்தாலோ அவனுக்கு இன்பம், ஒருவனுடைய நிழல் எப்படி அவனைத் தொடர்ந்து வருகின்றதோ அப்படி வரும்.

தம்மபதம் 1,2

 

xxx

 

வள்ளுவர் சொன்னார்,

 

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல் (குறள்-314)

 

ஒருவர் யாராவது நமக்குத் தீங்கு செய்தால் அவர் வெட்கப்படும்படி நாம் அவருக்கு நன்மை செய்ய வேண்டும்; பின்னர் அவர் செய்த தீமையையும் நாம் செய்த நல்லதையும் மறந்து விட வேண்டும்.

புத்தர் சொன்னார்,

வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது; வெறுப்பை அன்பினால்தான் வெல்ல முடியும்; இது அழியாத உண்மை தம்மபதம் (5)

xxx

 

மலையின் மீது இருந்து காணும் காட்சி

வள்ளுவர் சொன்னார்,

 

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று

உண்டாகச் செய்வான் வினை (திருக்குறள் 758)

 

தன் கையில் பொருள் ஒன்றை வைத்துக் கொண்டு கவலையில்லாமல், காரியத்தினைத் தொடங்குவது, மலையின் மீது நின்று கொண்டு கீழே நடக்கும் யானைகளின் சண்டையைக் காண்பது போன்றது.

புத்தர் சொன்னார்

புத்திசாலி மனிதன் விழிப்புடன் இருந்து எண்ணங்களைக் கட்டுப்படுத்தினால்  அவன் துன்பங்களை உதறிவிட்டு, மேலே உள்ள ஞானம் என்னும் அரண்மனைக்குச் செல்வான். அதன் பலகணியிலிருந்து  துன்பப் படுவோரைக் காண்பான். இது குணம் என்னும் குன்று ஏறி நின்ற முனிவர்கள் மலை உச்சியிலிருந்து சமவெளியிலுள்ள அஞ்ஞானிகளைக் காண்பதற்குச் சமம்.

தம்மபதம் 28

xxx

 

இந்திரனே சான்று

வள்ளுவர் சொன்னார்,

 

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி (திருக்குறள் 25)

 

ஐம்புல ஆசைகளை ஒழித்த ஒருவனுக்கு எவ்வளவு ஆற்றல் உண்டு என்பதற்கு இந்திரனே சாட்சி.

((இந்தக் குறளுக்குப் பொருள் தருவதில் பரிமேல் அழகர்கூட தவறு செய்துவிட்டதை எனது பழைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். அவர், இது இந்திரனைக் கிண்டல் செய்வது என்று நினைத்து விட்டார். உண்மையில் இந்திரன் புலனடக்கம் மிக்கவன். அகல்யை சம்பவம் உதாரணம் ஆகாது))

புத்தர் சொன்னார்

புலன்களின் சேட்டை பற்றி விழிப்புடன் இருந்ததாலேயே, இந்திரன் தேவர்களுக்குத் தலைவன் ஆனான். இதைக் கடவுளரும் பாராட்டுகின்றனர். விழிப்பின்மையை எல்லோரும் தூற்றுவர்.

தம்மபதம் 30

அதர்வண வேதத்திலும் (11-5-19) இக் கருத்து உளது.

 

xxx

 

அருள் புரிக

வள்ளுவர் சொன்னார்,

 

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்

மெலியார் மேல் செல்லும் இடத்து (திருக்குறள் 250)

 

ஒருவன் தான் பலசாலியாக இருக்கும்போது மற்றவனைத் துன்புறுத்துவது சரியல்ல. அவன், தன்னைவிட பலசாலியான ஒருவன் தன்னை இப்படித் துன்புறுத்தினால் எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல் ( திருக்குறள் 318)

 

ஒருவன் தனக்குத் துன்பம் இழைக்கும்போது அதனால் ஏற்படும் கஷ்டத்தை அறிந்த மனிதன், பிற உயிர்களுக்கு துன்பம் இழைப்பது யாது கருதியோ?

புத்தர் சொன்னார்

 

பிறருடைய குற்றத்தைப் பற்றியோ, அவர்கள் என்ன செய்தார்கள் , என்ன செய்யவில்லை என்றோ எண்ணாதீர்கள். உங்களுடைய தவறுகளையும் நீங்கள் எதைச் செய்தீர்கள், எதைச் செய்யத் தவறினீர்கள் என்று சிந்தியுங்கள்

ஒருவன் தான் செய்த தீமையின் விளைவுகள் தெரியாத வரை அதைத் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான்; அது அவனுக்கு இன்பமாகத் தோன்றும். ஆனால் தீய செயல்களின் விளைவுகள் அவனுக்குத் திரும்பும்போது அவன் அதை அனுபவித்து அறிவான் தம்மபதம்-119

 

-Subaham-

 

 

தான் மட்டும் உண்பவன் பாவி- ரிக் வேத மந்திரம் (Post No..3926)

Written by London Swaminathan

 

Date: 20 May 2017

 

Time uploaded in London: 17-20

 

Post No. 3926

 

Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

வள்ளுவர் திருக்குறளில் சொல்வது என்ன?

 

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் 322)

 

பொருள்

தம்மிடமுள்ள உணவை எல்லோருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்ண வேண்டும்; பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும்; நல்லோர் கூறிய எல்லா அறங்களிலும் இதுவே சிறந்த தர்மம்.

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனும் புற நானூற்றில் இதையே பாடினான்; அமிர்தமே கிடைத்தாலும் தான் மட்டும் உண்பவர் இந்தியாவில் கிடையாது; புகழ் என்றால் உயிரையும் கொடுப்பர்; பழி வருமானால் உலகமே கிடைத்தாலும் வேண்டாம் என்பர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் ,உயிரும் கொடுக்குவர்; பழி எனின்,

உலகுடன் பெறினும், கொள்ளலர்

–புறம் 182, க.மா. இளம்பெருவழுதி

 

பகவத் கீதை 3-13-ல் கண்ணனும் மொழிந்தது அதுவே:

 

யஜ்ஞசிஷ்டாசினஹ சந்தோ முச்யந்தே சர்வகில்பிஷைஹி

புஞ்சதே தே த்வகம் பாபா யே பசந்த்யாத்மாமகாரணாத்

(பகவத் கீதை 3-13)

 

பொருள்

யக்ஞம் செய்து மிஞ்சியதை உண்ணும் சாதுக்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் எவர்கள் தமக்கெனவே சமைக்கின்றார்களோ அந்த பாபிகள் பாவத்தையே உண்கிறார்கள்.

 

அதாவது பஞ்ச யக்ஞம் எனப்படும் ஐந்து வேள்விகளை தினமும் செய்ய வேண்டும்; இதில் மனிதர்கள், தேவர்கள், பிற உயிர்கள், விருந்தாளிகள், இறந்து போனோர் ஆகியோருக்கு படைப்புகள் கொடுப்பது ஐந்து வித வேள்வி – பஞ்ச யக்ஞம் — எனப்படும்.

 

இப்படி கண்ணன், வள்ளுவன், இளம்பெருவழுதி என்று பலரும் சொல்லக் காரணம் ரிக்வேத மந்திரமாகும். பத்தாவது மண்டலத்தில் உள்ள இந்த மந்திரம் மிகவும் அருமையான மந்திரம். ஒரு கவிஞர் பொழிந்து தள்ளி விட்டார். இதிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் ஒரு கட்டுரை எழுதலாம். அவ்வளவு ஆழமான பொருளுடைத்து. இப்போது ஒரு மந்திரச் செய்யுளை மட்டும் காண்போம்..

 

“உணவு கேட்டு வந்த நண்பனுக்கு இல்லையென்று கைவிரிப்பவன் நண்பனே இல்லை.

ஏழைகளை பணக்காரர்கள் திருப்தி செய்ய வேண்டும். அதுதான் போகும் வழிக்குத் துணை (அதாவது மறுமையில் பலன் தரும். இறந்த பின்னர் ஒருவன் புண்ணியம் மட்டுமே அவனுடன் கூட வரும்)

 

செல்வம் என்பது இன்று வரும்; நாளை வேறு ஒருவரிடம் போய்விடும். இது வண்டிச் சக்கரம் போல் சுழலக் கூடியது.

 

யார் ஒருவன் உழைக்காமலே உணவு பெறுகிறானோ அவன் முட்டாள்; அது அவனைப் பாழாக்கி விடும்

(‘ஐயமிட்டு உண்’ என்று சொன்ன அவ்வைப் பாட்டியே ‘ஏ ற்பது இகழ் ச்சி’ என்றும் சொன்னது போல)

 

யார் ஒருவன் பகுத்துக் கொடுக்காமல் சாப்பிடுகிறானோ அவன் குற்றம் புரிந்தவனே. அவன் தோழர்களுக்கு உணவு அளிக்காவிடில் அவனை நேசிப்போர் யாரும் இரார்– இது ரிக் வேத மந்திரத்தின் ஒரு பகுதி (10-117-4/6)

 

திரு மூலரும் இதையே செப்புவார்:

 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

 

– திருமந்திரம்

 

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக.

 

கிருஷ்ண பரமாத்மாவும், வள்ளுவனும் இளம்பெருவழுதியும், திருமூலரும் பிற்காலத்தில் சொன்ன கருத்தை, அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பகன்ற ரிக் வேத ரிஷியைப் போற்றுவோம்.

 

தமிழில் பழ மறையைப் பாடுவோம்—பாரதி

 

–SUBHAM–

 

செய்தக்க அல்ல செயக்கெடும் –புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (Post 3899)

Written by London Swaminathan

 

Date: 11 May 2017

 

Time uploaded in London: 21-58

 

Post No. 3899

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

(முதல் பகுதி நேற்று வெளியாகியது)

 

செய்தக்க அல்ல செயக்கெடும்  செய்தக்க

செய்யாமை  யானும் கெடும் (குறள் 466)

பொருள்:

ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய் தாலும் கெட்டுப்போவான்; மற்றும் செய்ய  வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் கெட்டழிவான்.

 

இதைத் தான், கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கும் சொன்னார். நீ க்ஷத்ரியன்; போர் செய்வது உன் தொழில். எழுந்திரு (உத்திஷ்ட) என்றார்.

 

புத்தனும் தம்மபதத்தில் (314) இதைச் சொல்கிறான்:

“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும்.  ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – இது புத்தன் வாக்கு.

கண்ணனும் பகவத் கீதையில் “ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40)-

“நல்லது செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான்” என்பது கண்ணன் வாக்கு.

 

ஒரு நீதிபதி இருக்கிறார். அவர் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை அளிக்க வேண்டிய தருணத்தில் ஜீவகாருண்யம் பற்றிப் பேசிவிட்டு கடமையைச் செய்யமாட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எத்தனை பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவர் கொலை செய்தவராகக்  கருதப்பட மாட்டார்.

 

இது போல போர் வீரர் ஜாதியில் பிறந்த அர்ஜுனன் போர் செய்யாமல் தப்பிக்க முயன்றபோது கிருஷ்ணன் கண்டிக்கிறான்

 

ச்ரேயான் ஸ்வதர்மஹ– அவனவன் தொழிலே சிறந்தது (3-36)  என்றும் கண்ணன்  மொழிகிறான்.

 

to be continued………………………….

 

–Subham–

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள்! (Post no.3880)

Written by London Swaminathan

 

Date: 5 May 2017

 

Time uploaded in London: 6-16 am

 

Post No. 3880

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் அழகாகச் சொல்லுகின்றனர்:

 

1.காலை எழுந்திரு

 

2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்)

 

3.மாலையிலும் குளி

 

4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு.

 

5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை)

 

6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).

 

 

காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்

மாலை குளித்து மனை புகுதல் – சால

உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்

கற்றாயோ காக்கைக் குணம்

 

வள்ளுவனும் தமிழ் வேதமாகிய திருக்குறளில்  செப்பினான்:

 

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

 

பொருள்:-

 

பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் ஒரு கட்டுரையில் முன்னரே தந்து விட்டேன்

 

 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள  (குறள் 527)

 

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும்

 

My articles on Crows

INDIAN CROW by Mark Twine ; 9 February 2013

 

What can a Crow Teach You?

Date : 5  August  2015

Strange Belief about Crows in India and Britain!!

Research Article No. 1678; Dated 26 February 2015.

 

Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

Research Article No. 1679; Dated 27 February 2015.

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

28 March 2013

 

–Subahm–

வள்ளுவர் குறளில் வடமொழிச் சொற்கள் (Post No.3873)

TIRUVALLUVAR STATUE AT LONDON UNIVERSITY

 

Written by S NAGARAJAN

 

Date: 3 May 2017

 

Time uploaded in London:-  5-45 am

 

 

Post No.3873

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

குறள் வேதம்

 

முக்கியக் குறிப்பு:

 

வைஷ்ணவ பரிபாஷை என்ற அழகிய நூலை எனக்கு அனுப்பி உதவியவர் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்கள்.

அவ்வப்பொழுது அவர் அனுப்பும் மின் நூல்கள் அற்புதமானவை; பொருள் பொதிந்தவை. அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

 

வள்ளுவர் குறளில் கையாண்ட வடமொழிச் சொற்கள்

 

ச.நாகராஜன்

 

 

சங்க காலம் தொட்டே சம்ஸ்கிருதமும் தமிழும் ‘கொண்டு கொடுத்து’ உறவைச் செழுமைப் பயன்படுத்திக் கொண்ட மொழிகள்.

 

 

தமிழிலிருந்து சம்ஸ்கிருதத்திற்குச் சென்ற வார்த்தைகள் ஏராளம். அதே போல சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு வந்த வார்த்தைகளும் ஏராளம்.

காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, பகை இன்றி தமிழ்ப் புலவர்களும் சம்ஸ்கிருத பண்டிதர்களும் தேவையான இடங்களில் நல்ல பதங்களை தங்கள் கவிதைகளிலும் காவியங்களிலும் நயம் படக் கையாண்டு வந்தனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் தம் திருக்குறளில் கையாண்ட வடமொழிச் சொற்களைக் கூறலாம்.

இதைப் பட்டியலிடும் அரும் பணியில் ஈடுபட்ட எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் வைஷ்ணவ பரிபாஷை என்ற தனது அரிய நூலில் கீழ்க்கண்ட பட்டியலைத் தந்துள்ளார். நூலின் பெருமையைப் பற்றி தனியே இனி எழுத இருக்கும் ஒரு கட்டுரையில் காணலாம்.

 

இப்போது குறள்களின் பட்டியல்:-

குறள் 1

அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

குறள் 9

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை

குறள் 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

குறள் 19

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்

குறள் 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது

குறள் 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானொன்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

குறள் 60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு

குறள் 102

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது

குறள் 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்

குறள் 215

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு

குறள் 261

உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே

தவத்திற் குரு

குறள் 266

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட்பட்டு

குறள் 271

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்

குறள் 337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல

குறள் 360

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்

குறள் 490

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து

குறள் 580

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்

குறள் 636

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை

குறள் 667

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து

குறள் 682

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று

குறள் 706

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்

குறள் 738

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து

குறள் 763

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்

குறள் 931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று

குறள் 958

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

குறள் 1029

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு

குறள் 1073

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்ல்

குறள் 1086

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்

குறள் 1116

மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன்

குறள் 1157

துறைவன் துறந்தமை தூற்றாக்கொல் முன்கை இறைஇறவா நின்ற வளை

மேலே உள்ள குறள்களின் எண்ணிக்கை மொத்தம் 30

இவற்றில் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் தடித்து சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன.

சொற்களின் பட்டியல்:

ஆதி

பகவன்

குணம்

பூசனை

தானம்

தவம்

குணம்

கணம்

தெய்வம்

மங்கலம்

காலம்

வாணிகம் (இரு முறை)

நீர்

உரு

தவம்

கருமம்

ஆசை

பூதங்கள்

கோடி

காமம்

நாமம்

பருவம்

நாகரிகம்

மதி

அதி

அச்சாணி

தூது

முகம்

அணி

நாகம்

சூது

குலம்

குடும்பம்

தேவர்

புருவம்

மதி

பதி

வளை

சம்ஸ்கிருதச் சொற்களின் மொத்த எண்ணிக்கை 39.

இவற்றில் இரு முறை வந்த சொற்கள் :குணம், தவம், வாணிகம்,மதி ஆகியவை.

ஆக மொத்த எண்ணிக்கையில் ஆறைக் கழித்தால் வரும் சம்ஸ்கிருத்ச் சொற்கள் 33.

 

சில அறிஞர்கள் இன்னும் சில சொற்களையும் கூட சம்ஸ்கிருதப் பட்டியலில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால் எம்பார் கண்ணன் ரங்கராஜன் அவர்கள் தந்துள்ள பட்டியலில் இடம் பெறுபவை இவை மட்டுமே.

வள்ளுவர் சொல்லின் மகிமையை அறியாதவ்ர் இல்லை.

அணுவைத் துளைத்து பொருளைத் தரும் அற்புதக் குறளின் வன்மையை அறியாதவர் யார்?

அவர் நினைத்திருந்தால் இவற்றைத் தவிர்த்திருக்கக் கூடும்.

ஆனால் எடுத்துக் கொண்ட பொருளின் தன்மை கருதி உரிய கருத்திற்கு உரிய இடத்தில் அவற்றைப் பயன் படுத்தி இருக்கிறார்.

குறள் தமிழ் மறை. இதற்கு மேலும் விவரிக்க வேண்டாமே!

இனி அடுத்த கட்டுரையில் தமிழ்த் தாய் வாழ்த்தில் இடம் பெறும் சம்ஸ்கிருதச் சொற்களைக் காண்போம்.

 

PLEASE READ THE OLD POSTS

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் | Tamil …

https://tamilandvedas.com/…/வள்ளுவன்-ஒரு-சம்…

5 Nov 2012 – Picture: Tamil Poet Valluvar’s statue at SOAS, University of London பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரியசம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த …

 

Who was Tiruvalluvar? written and posted by me on 24 July 2013

Abert Einstein and Tiruvalluvar, posted on 17 December 2013

Tamil Merchant who dumped god into sea, posted on 17 August 2014

Elelasingan Kathai (Tamil), posted on 17 August 2014

 

வள்ளுவனும் வன்முறையும் (ஜூலை 24, 2013)

 

வள்ளுவன்  ஒரு  சம்ஸ்கிருத  அறிஞன் (நவம்பர் 5, 2012)

 

வள்ளுவான் சொன்ன புராண, இதிஹாசக் கதைகள் (ஜூலை 30, 2013)

 

வள்ளுவன் காமெடி ( 5 ஜனவரி, 2015)

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

 

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா? (Post No.3068); Date: 17th August 2016

–SUBHAM–