உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்

 

Goddess Lilith and Tutankhamun

(This article is available in English as well: swami)

தமிழ்நாட்டில் உள்ள எல்லா பெரிய கோவில்களிலும் ஆண்டுதோறும் உற்சவ காலங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அப்பொழுது இறைவனையோ இறைவியையோ அலங்கரித்து ஒரு வாகனத்தில் தெருக்கள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். எந்தெந்த சுவாமிக்கு எந்தெந்த நாட்களில் எந்த வாகனம் என்பதை ஆகமங்கள் எடுத்துச் சொல்லுகின்றன.

இந்த வழக்கம் ஒருகாலத்தில் உலகம் முழுதும் இருந்திருக்கிறது. ஆனால் அங்கெல்லாம் அழிந்த பின்னரும் இந்தியாவில் மட்டும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை நீடித்துவருகிறது. இந்துப் பண்பாடு காலத்தால் அழியாத ஒரு பொக்கிசம்.

வாகனங்கள் ஏன், எப்போது துவங்கின, அவைகளின் உள்ளர்த்தம் என்ன எனபவைகளைப் பார்ப்பதற்கு முன்னால் சில சுவையான விசயங்களை முதலில் காண்போம். எகிப்திலும் பாபிலோனியாவிலும் கூட இந்த வாகனங்கள் இருந்தன. துருக்கி சிரியா, இராக், ஈரான் முதலிய முஸ்லீம் நாடுகளில் ஒரு காலத்தில் இந்து கலாசாரம் இருந்தது. சம்ஸ்கிருத கல்வெட்டுகள் பற்றிய கட்டுரையில் இது பற்றி பார்த்தோம். துருக்கி –சிரியா எல்லைப் பகுதியில் பொகஸ்கோய் என்னும் ஊரில் கண்டு பிடிக்கப்பட்ட களிமண் படிவ கல்வெட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்கள் இருக்கின்றன.

காலக் கணக்கீட்டின்படி பார்த்தால், இந்தியாவுக்கும் முன்னதாக சுமேரிய, பாபிலோனிய,எகிப்திய ,கிரேக்க பண்பாட்டில் முதலில் வாகனங்களைக் காண்கிறோம். ஆக, அங்கிருந்து இவை இந்தியாவுக்கு வந்தனவா? அல்லது இந்தியர்கள் அதை அங்கு பரப்பினரா என்று கேட்டால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சொன்ன பதிலையே சொல்லுவேன். கபில+ஆரண்ய= கபிலாரண்யா=கலிபோர்னியா (அமெரிக்கா) என்று ஆனதாகச் சொல்லிவிட்டு உலகம் முழுதுமுள்ள இந்து தடயங்கள் சின்னங்கள் பற்றி குறிப்பிட்டுவிட்டு, இப்படிச் சொல்கிறார்: “உடனே இந்துக்கள் அங்கெல்லாம் போய் இதைப் பரப்பினார்கள் என்று நினைக்காதீர்கள். ஆதியில் உலகம் முழுதும் சநாதன தர்மம் (இந்துமதம்) ஒன்றுதான் இருந்தது” என்று 1935-ஆம் ஆண்டு சென்னை தொடர் சொற்பொழிவில் கூறுகிறார்.

வேதத்தில் பல மிருகங்கள் குறிப்பிடப்படுகின்றன. புராண இதிகாசங்களில் வாகனங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் ஒரு முத்திரையில் யானை மீது ஒரு ஆணோ பெண்ணோ நிற்கும் காட்சி இருக்கிறது. இதைப் பற்றி யானை வாகனத்தில் இந்திரன் அல்லது இந்திராணி என்று ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ஆகவே 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் வாகனம் உபயோகத்துக்கு வந்துவிட்டது..கி.மு இரண்டாம் நூற்றாண்டு காசுகளில் மயில்வாகனத்தில் முருகன் காட்சி தருகிறான். இந்தியா, கம்போடியா, இந்தோநேசியா ஆகிய இடங்களில் வாகன சிற்பங்கள் உள்ளன.

Astarte and Hathor

இந்து வாகனங்கள் உலகம் முழுதும் இருந்ததற்கான சான்றுகள் இதோ:

எகிப்தில் துதன்காமுன் (கி.மு. 1333) என்ற மன்னனை கருஞ்சிறுத்தை மீது நிற்பதாகக் காட்டியுள்ளனர். எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள்) இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவனுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்து இந்துப் பண்பாட்டில் இருந்த தொடர்பு இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். மிட்டன்னி (சிரியா/துருக்கி/இராக் பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள்) மன்னர் தசரதன், தன் பெண்களை எகிப்திய மன்னனுக்கு மணம் முத்துவிட்டு எழுதிய கடிதங்கள் இன்றும் எகிப்தில் உள்ளன. துதன்காமுனுக்குப் பின் சேதி என்ற மன்னர் ஓவியங்களிலும் வாகனத்தைப் பார்க்கலாம்.

இந்துக் கடவுள்களில் துர்க்கா தேவி, அய்யப்பன், புத்த மதத்தில் பத்மசம்பவர் ஆகியோர் புலி வாகனத்தில் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கின்றனர்.

சீம்ம வாகனம்

வாகனங்களில் மிகவும் பழைய வாகனம் சிம்ம வாகனம். இன்றும் துர்கா தேவியின் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தேவி, காளி வழிபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் சிம்ம வாகனம் இருக்கிறது.

கதேஸ் என்று சிரியா நாட்டிலும் ஹதோர் என்று எகிப்திலும் வழிபடப்பட்ட தேவியின் வாகனம் சிங்கம். நிர்வாணமாக நிற்கும் இந்தக் கடவுளின் ஒரு கையில் பாம்பு இருக்கும். இனவிருத்திக்கான தேவதை.

Adad on bull. Indra onVan, and Durga on vahanas

ஹீப்ருக்கள் வணங்கிய லிலித் என்ற தேவதை இரண்டு சிங்கங்களின் மீது நிற்பதாகக் காட்டப்படுகிறது. லிலித், முதல் மனிதன் ஆன ஆதாமின் மற்றொரு மனைவி. ஜில்காமேஷ் கதையிலும் லிலித் வருகிறாள். அவர் தாக்கியவுடன் லிலித் பாலைவனத்துக்குள் ஓடியதாக கதை.

கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று அசீரிய காதல்-போர் அதி தேவதையான இஷ்டாரையும் சிம்ம வாகினியாகக் காட்டுகிறது.

கி.மு 133 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழிலிகாயாவில் அரின்னா, சுர்ருமா ஆகிய தெய்வங்களும் சிம்ம வாகனத்தில் நிற்கின்றனர்.

காளை வாகனம்

காளையை இந்திரனுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் உவமையாகக் கூறுவதை வேதத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் காளையை சிவனுக்கு வாகனமாக்கினர்.5500 ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் ஒருகாளை மீது தெய்வம் உட்காரும் ஆசனம் போடப்பட்டிருக்கிறது

கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று புயலுக்கு அதிபதியான பாபிலோனிய அதாத் என்னும் கடவுளை காளை வாகனத்தில் நிற்கும்படி செதுக்கியுள்ளது. அதாத் இந்திரன் போல கையில் வஜ்ராயுத்தை தாங்குகிறார்.

இந்திய வாகனங்களுக்கும் முற்கால வெளிநாட்டு வாகனங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அந்த கடவுள்கள் வாகனங்கள் மீது நிற்பார்கள். இந்துக் கடவுளோவெனில் வாகனத்தில் அமந்திருப்பார்கள்.

பாபா இயாகா என்ற ஸ்லாவ் இனக் கடவுள் பன்றியின் மீது பயணம் செய்கிறார்.  (தொடரும்)

உலக விஞ்ஞானிகள் வியக்கும் தமிழனின் பஞ்சாங்கம்!

படம்: ஒரு பஞ்சாங்கத்தின் முகப்பு அட்டை

உலக விஞ்ஞானிகளை வியக்க வைக்கும் தமிழனின் பஞ்சாங்கம்!

ச.நாகராஜன்

ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

பல பிரம்மாண்டமான நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லை? இதை எப்படித் துல்லியமாக தமிழர்களால் கணிக்க முடிகிறது என்று உலகெங்கிலும் உள்ள வானியல் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படுகின்றனர்! உலகமே வியக்கும் பஞ்சாங்கம் தமிழனின் அபூர்வ வானியல், கணித, ஜோதிட அறிவைத் தெள்ளென விளக்கும் ஒரு அபூர்வ கலை! இப்படிப்பட்ட பஞ்சாங்கம் நம்மிடம் இருப்பதை எண்ணிப் பெருமைப்படாமல் அதை இகழும் பகுத்தறிவாளர்களை தமிழர்கள் என்று எப்படிக் கூற முடியும்? இதை நாம் ‘பேடண்ட்’  எடுக்காவிட்டால் மஞ்சளைத் துணிந்து பேடண்ட் எடுக்க முயன்றது போல் இதையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தனதுடைமையாக்கிக் கொள்ளும்!

 

தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று! அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்து விடுவது வியப்புக்குரிய ஒன்று. ஐந்து விரல்களை வைத்துக் கொண்டு ஜோதிடர்கள் துல்லியமாகப் போடும் கணக்கு நேரில் பார்த்து வியத்தற்கு உரியதாகும்! தமிழர் அல்லாத இதர பாரத மாநிலங்கள் காதி ஒன்பது எழுத்துக்கள்,டாதி ஒன்பது எழுத்துக்கள்,பாதி ஐந்து எழுத்துக்கள்,யாதி எட்டு எழுத்துக்கள் ஆக 31எழுத்துக்களைக் கொண்டு பஞ்சாங்கத்தைக் கணிக்கிறார்கள்!

 

சூரிய கிரகணம் சந்திர கிரகணம் ஆகியவற்றை இவர்கள் துல்லியமாகக் கணித்து பஞ்சாங்கத்தில் பதிவது உள்ளிட்ட ஏராளமான திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் பற்றிய உண்மைகளைப்  பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. இது இல்லாமல் நமது வாழ்க்கை முறை இல்லை!

 

1980ல் ஏற்பட்ட முழு சூரியகிரகணம் பற்றிய தினமணியின் செய்திக் கட்டுரை

காலம் காலமாக கிரகணங்களைப் பற்றிய உண்மைகளைப் பஞ்சாங்கம் தெரிவித்து வருகிறதென்றாலும் கூட 1980ல் அபூர்வமாக ஏற்பட்ட முழு சூரிய கிரகணம் நமது பஞ்சாங்கம் பற்றிய அருமையை உலகம் உணர வழி வகுத்தது.16-21980 சனிக்கிழமை அமாவாசையன்று  கேது கிரஸ்தம் அவிட்ட நக்ஷத்திரம்  சென்னை நேரப்படி பகல் இரண்டு மணி 29 நிமிட அளவில் பூரண சூரிய கிரகணம் ஆரம்பமாகி மாலை 4-35க்கு முடிவடைந்தது. உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் அபூர்வமாக நிகழும் இந்த பூரண சூரிய கிரகணத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தவும் அனுபவபூர்வமாகப் பார்ப்பதற்கும் இந்தியாவில் சூரிய தேவன் ஆலயம் இருக்கும் கோனார்க் நோக்கி விரைந்து வந்தனர். ஏனெனில் இப்படிப்பட்ட பூரண சூரிய கிரகணம் அடுத்தாற்போல இன்னும் 360 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஏற்படும்!

அந்த சூரிய கிரகணத்தை ஒட்டி தினமணி நாளேடு தனது 14-2-1980 இதழில்புராதனமான கணித சாஸ்திர வெற்றி’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த சிறப்புச் செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்:

“இந்தியர்களின் வான இயல் கணித மேன்மைகள் இன்று நிரூபிக்கப்படுகிறது. காலம் காலமாக வான இயல் வல்லுநர்கள் கிரக சாரங்களையும் அதன் சஞ்சாரங்களையும் மிக துல்லியமாக மதிப்பிட்டு பலவற்றைச் சொல்லி உள்ளார்கள்.அவர்களுக்கு இன்றைய விஞ்ஞானத்தின் வசதிகள் எதுவும் கிடையாது. கம்ப்யூட்டர்கள் கிடையாது. மிக நுட்பமான வான ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடையாது.அவர்களிடம் ராக்கெட் மூலம் படம் எடுத்து  பார்க்கத்தக்க கருவிகள் கிடையாது.எதுவுமே இல்லை. கணக்குத் தான் உண்டு.

 

நாள் தவறினாலும் பஞ்சாங்கம் பார்க்காத நபர்கள் மிகக் குறைவு.இந்த பஞ்சாங்கம் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கிறது. காகிதமும் அச்சும் வருவதற்கு முன்பு கூட ஏடுகளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. பஞ்சாங்கம் கணிப்பவர்கள் ஓராண்டுக்கு முன்பாகவே இன்ன தேதி, இத்தனை வினாடியில் சூரிய சந்திர  கிரகணம் தோன்றும்,  கிரகண அளவு (பரிமாணம்)இவ்வளவு,இந்தெந்த பகுதிகளில் தெரியும் அல்லது தெரியாது என்பவற்றை எல்லாம் மிக கச்சிதமாக எழுதி வைப்பார்கள்.அதில் ஒரு வினாடி தப்புவது கிடையாது.கிரகண காலத்தில் இவைகளைச் செய்யலாம் செய்யக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 

கிரகணத்தைப் பற்றி மட்டும் அவர்கள் கூறுவது சரியாய் இருக்குமானால் சாஸ்திரம் செய்யக் கூடாது என்று கூறுவது பொய்யாகவா இருக்கும்?சாஸ்திரம் என்பது ஒரு கடினமான கணக்கு.அதுவும் ஒரு வகை விஞ்ஞானம்.வயிற்றுப் பிழைப்புக்காக அதைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டத்தால் அதன் மதிப்பு குறைந்து விட்டது.ஆனால் நமது முன்னோர்கள் கிரகணம் பற்றி முன்பே கூறும் அளவில் வானவியல் கணித மேதைகளாக இருந்துள்ளார்கள்.இதை உலகம் இந்த கிரகணம் பற்றிய அவர்களது மதிப்பீட்டில் இருந்து தெரிந்துகொண்டு வாழ்த்துகிறது.

இப்படிப்பட்ட கணித இயல் நமக்கு இருந்தும் இதை மேலும் மேலும் ஆராய்ந்து வளர்த்துக் கொள்ள முன்வரவில்லை.அதனால் உலகில் நாம் இன்று பின் தங்கி உள்ளோம். இனியாவது நமது வான இயல் கணிதங்களை ஆராய்ந்து தெளிவாக்கி முன்னேறுவோமா என்பது தான் கேள்வி.”

 

தினமணியின் அருமையான கட்டுரை 1980ல் சுட்டிக் காட்டிய அவல நிலை முப்பத்தோரு வருடங்கள் ஆகியும் இன்னும் நீங்கவில்லை என்பது வருத்தம் தரும் ஒரு உண்மை. அரசும் பொது மக்களும் பஞ்சாங்கக் கலையை வளர்க்கவும் முன் வரவில்லை; அதைக் கணிக்கும் பஞ்சாங்க ஜோதிடர்களைக் கௌரவிக்கவும் இல்லை.

சங்க இலக்கியம் தெரிவிக்கும் சந்திர சூரிய கிரகணங்கள்

இப்படிப்பட்ட அருமையான கிரகண செய்திகளை சங்கத் தமிழ் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டிற்கு இரு குறிப்புகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

கலித்தொகையில் மட்டும் எடுத்துக்கொண்டால் பல இடங்களில் சந்திரகிரகணம் (சந்திரனை ராகு பற்றுதல்) குறிப்பிடப்படுகிறது.  ”ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாரா மையின் மதியின் விளங்கு முகத்தாரை (கலி 62;13-14)

 

அடுத்து சூரிய கிரகணம் (சூரியனை கேது பற்றுதல்) பற்றி மலைபடுகடாம் இப்படிக் குறிப்பிடுகிறது:-“பாஅய்ப் பகல்செய்வான் பாம்பின் வாய்ப் பட்டான் கொல்” (வெண்பா 1)

 

செக்கோஸ்லேவிகிய விஞ்ஞானியும் பஞ்சாங்கமும்

 

இது ஒருபுறம் இருக்க பஞ்சாங்கம் கூறும் உண்மை ஒன்றைக் காண செக்கோஸ்லேவிகியா விஞ்ஞானி ஒருவர் செய்த ஆராய்ச்சி வியப்புக்குரிய ஒன்றாகும். அது என்ன என்பதைப் பின்னர் பார்ப்போம்!

இதே பிளாக்-கில் கணிதப் புலமையை வெளிப்படுத்தும் மற்ற கட்டுரைகள்:

1.தமிழர்கள் கணித மேதைகள்,

2.உலக செஸ் சாம்பியன் ஆனந்த்,

3.Amazing Tamil Mathematics

 

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –2

 

Picture shows Arctic Circle (North Pole)

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 2

                                       ச.நாகராஜன்

தெய்வப் பணி, நாட்டுப் பணி, தமிழ்ப் பணியை முனைந்து செய்து வந்த செட்டியார் குலத்தில் தோன்றிய உலகம் சுற்றிய தமிழன் திரு ஏ.கே.செட்டியார் குமரி மலரில் வெளியிட்ட மகாமேரு யாத்திரையின் சென்ற இதழ் தொடர்ச்சியைக் கீழே படிக்கலாம் :

இவ்விடத்தில் ஒரு ஆப்சர்வேடரி ( நக்ஷத்திர யந்திரசாலை) வைக்கப் பட்டிருக்கிறது.கணித சாஸ்திரம், வான சாஸ்திரங்கள் படிக்கும் ஐரோப்பியர், அமெரிக்க மாணவர்கள் பள்ளிக்கூடப் படிப்பு முடிந்தவுடன் ஒரு வருஷம் இவ்விடம் வந்து பயிற்சி பெற்றுப் போவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களில் ஜர்மன் தேச மாணவருடன், சூரியன் நாடோறும் மாறும் வர்ணங்களைக் குறித்தும் படவுதவியுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது இதற்கு அடுத்தது உருக்கின தங்க

 

வர்ணம் நாளைக்குப் படத்தில் வருமென்று நான் சொன்னவுடன் அவருக்கு ஆச்சரியமுண்டாயிற்று.”எப்படி ஐயா, தங்களுக்கு இவ்வளவு நிச்சயமாகத் தெரியும்?” என்று என்னைக் கேட்டார். உடனே நான், உத்தராயண முதலில் தாமிர வர்ணமும், பிறகு அருணம், அப்புறம் பப்புரு நிறம் கடைசியில் ஸுமங்கல் (உருக்கின தங்க வர்ணமென்று) ஸ்ரீ ருத்திரத்தில் கூறியிருப்பதைச் சொன்னேன். உடனே அம்மாணவர் வியப்புற்றார்.ருக் வேதத்தில் சூரியனுக்குத் தங்க வர்ணத்திற்கு மேலான வெண்மை நிறத்தை வர்ணிக்கவில்லை என்பது ஆர்க்டிக் பிரதேச சூரியனைக் குறிப்பதாகும்.இதற்கு நேரே வடக்கில் “மேரு நுனி” இருக்கிறது. இந்த இடத்திலிருந்து தான் பௌதிக நூல் வல்லார் மேரு நுனியைக் காணப் போய்க் காலமடைந்தார்கள். அவர்களது யந்திரம் முதலியவைகளை ஞாபகார்த்தமாக இவ்வூர்க் கோவிலில் வைத்திருக்கிறார்கள்.

 

இது முதல் வடக்கே சென்றால் அவிச்சின்ன சூரியனைப் பார்க்கலாம். ஆகையால் “உதயாஸ்தமனம் இல்லாத”  சூரியனைச் சில விரதக்காரர் உபாசிக்க வேண்டுமென்று வேதத்தில் கூறியதை அனுஷ்டிக்க விரும்பினால் அவர்கள்  இந்த ஸ்தானத்தை அடைய வேண்டும்.

 

என் வாழ்நாள் முழுதும் கண்ணுக்குக் கண்ணாடியில்லாமலும் கண்ணாடி போட்டுக் கொண்டிருப்பவர்களை யோகப்பயிற்சியின் பலனாக எடுக்கும்படியும் செய்திருப்பதுண்டு.நாம் அதை உபயோகியாததினால் ஸம்ஸ்கிருதத்தில் கண்ணிலணியும் கண்ணாடிக்குப் பெயர் இல்லை. நாள்தோறும் சுமார் பத்து மணி வரை பகலில் ஏட்டுச் சுவடியிலுள்ள சிறிய எழுத்துக்களைப் படித்துக் காலங் கழித்து வருவேன். ஒரு நாள் பகலில் சூடான ஓரிடத்தில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது சூரிய ஒளி மூளையில்  (ஸன் ஸ்ட்ரோக்) விழக் கண்களுக்குக் கெடுதல் நேர்ந்தது. கர்ம விபாக சாஸ்திரப்படி உதயாஸ்தனமில்லாத சூரியனைத் தரிசித்து அவனைப் பார்த்துக் கொண்டே சூரிய அஷ்டோத்திரத்தை சில ஆயிரம் ஜபித்துப் பிறகு ஸ்ரீ ருத்திரத்தினாலும் “வயஸ் ஸுபர்ணா” என்கிற மந்திரத்தினாலும் புரச்சரணை செய்து விரத சமாப்தி செய்வதாக சங்கல்பித்தேன். உடனே யாத்திரையை ஆரம்பித்து ஆர்க்டிக் பிரதேசம் வந்தேன்.

 

நாள்தோறும் கப்பல் எஜமானனைப் பார்த்து ‘ட்றோம்ஸோ போனவுடன் சூரியன் மேகத்தாலும், பனிமழைகளினாலும், மறைபடாமல் எனக்கு தரிசனம் கிடைக்குமா?” என்று ஆவலுடன் கேட்பேன்.அப்பொழுதெல்லாம் அவரும் கப்பலில் அமைந்திருக்கிற யந்திரத்தைப் பார்த்துக் கொண்டே கால நிலைமையை முன்னே யறிந்து சொல்ல முடியாதென்று கூறுவார்.

நானோ இந்தியாவிலிருந்து சுமார் 8000 மைல் வரை யாத்திரை செய்து பெருஞ் செலவில் அதை நிறைவேற்றப் போனவன். “அவிச்சின்ன சூரிய” தரிசனமில்லாமல் திரும்பினால் இதை விட மனோ துக்கம் எனக்கு வேறு என்ன வேண்டும்? எனக்காகக் கப்பலை நிறுத்த முடியுமா?

 

ஒரு நாள் மாலை என் மனத்தில் ஈசுவர கிருபையினால் ஒன்று தோன்றிற்று. அதாவது சூரியனை நினைத்து “சூரியனே! நீ நாளை முதல் மூன்று தினங்கள் மேகம் முதலியவற்றால் மறையாமல் தரிசனம் கொடுத்து என் விரதத்தை முற்றுப் பெறச் செய்யாவிடில் என் சாபத்துக்கு உட்பட நேரும். ஈசுவராதிகளெல்லாம் பக்தர் சாபத்தால் தசாவதாரம் எடுக்க நேர்ந்ததை ஞாபகப் படுத்துகிறேன்” என்று சொல்லி விட்டு என் அறைக்குள் போய் சிரம பரிகாரம் செய்து கொண்டேன்.

 

சில மணி நேரத்துக்கெல்லாம் கப்பல் தலைவன் என்னிடம் ஓடி வந்து ‘சூரியன் இனிப் பிரகாசமாகுவான்; யந்திரமும் அப்படியே தெரிவிக்கிறது. தாங்களும் விரதத்தை நிறைவேற்றலாம்” என்று சொன்னான். நான் அவரை ஒரு தேவ தூதனாக நினைத்து உடனே விரதத்தை மேற்கொண்டேன்.

 

கப்பல் போகக் கூடிய “வடக்கு முக்கு” என்று ஓர் இடம் இருக்கிறது. அதையடைந்த  பிறகு  கொஞ்சம் தென் கிழக்காகக் “கர்கிஸ்” என்ற சிற்றூர் போய்ச் சேர வேண்டும். அது தான் யாத்திரா முடியும் இடம். இவ்விடத்தில் நிலக்கரி கிடைக்கிறது. ஆகையால் ஒரு காலத்தில் இந்த இடம் நம் தேசம் போல அதிக வெப்பமுள்ளதாய் மரம் செடிகள் நிரம்பப் பெற்று பூகம்பம் முதலானவற்றால் அழிந்து ஆயிர வருஷக் கணக்காக அப்படியே யிருந்திருக்க வேண்டுமென்று நம்பலாம்.

சில காலங்களில் வருஷம் பூராவும் சூரிய ஒளியின்றி பனி மழையால் உணவுக்கு வேண்டிய பயிர் முதலாயின உற்பத்தியாகாமல் போனதினால் நம் முன்னோர் இதை விட்டுத் தெற்கே சென்றார்கள் என்று சாந்தோக்கிய உபநிஷத்தில்  முதல் அத்தியாயத்தில் கூறியிருக்கிறது.

 

வடக்கு நுனியிலிருந்து மேற்கு நுனிக்கு சுமார் 190 மைல் இருக்கிறதென்று ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்கள். அந்த இடம் எப்படியிருக்கிறதென்பதைப் பார்க்க அறிஞர்களால் முடியவில்லை. ஆகாயவிமானமாவது கப்பலாவது அவ்விடம் போகவியலவில்லை. மேரு நுனியை நெருங்கின விமானமும், கப்பலும் கிழக்கே யிழுக்கப்பட்டு சுமார் 500 மைலுக்கு அதிக தூரத்தில் தள்ளப்படுகின்றன.

 

(வடக்கே காட்டுகிற முள்ளை) நீங்கள் சாதாரணமாகப் பார்த்திருப்பீர்கள். மேரு நுனிக்குப் போனால் அந்த முள் எந்தப் பக்கம் திரும்புகிறதென்று தெரிய வேண்டும். இது தான் ரஹஸ்யம். இந்த வடக்கு நுனியிலிருந்து கொஞ்ச தூரத்தில் வடமேற்காக ‘ஸ்விஸர்பர்கு தீவு’ இருக்கிறது.அவ்விடத்திலிருந்து மேரு நுனி சுமார் இருநூறு மைலுக்குள்ளேயே இருக்கக் கூடும். அங்கிருந்து மேரு நுனிக்குப் போனாலும் முன் நேர்ந்த கதி தான். ஆண்டுதோறும் உத்தராயணத்தில் மேல் நாட்டுப் பேரறிஞர் பலர் முயற்சி செய்துகொண்டே வருகிறார்கள். ஏதாவது ஒரு தடை நேருகிறது.

அதனாலேயே தைத்திரிய ஆரணத்தில் ஒரு ரிஷி மற்றொருவரைப் பார்த்து ‘நான் மேருவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய பார்த்ததில்லை” என்றார்.

அதற்கு மற்றொருவர், “நான் நேரே பார்த்தேன்” என்றார்.

அவர் மகான்; நாம் மனிதர்; ஆகையால் மேருவைப் பார்க்க முடியாது. நான்கு தினங்களில் சூரியனைத் தரிசித்து ஜபம் செய்து திரும்பவும் ட்றோம்ஸோவுக்கு வந்தேன்.

 

மேரு யாத்திரை முற்றும்.

 

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 1

Picture shows Sun is visible 24 hours a day.

ஏ.கே செட்டியார் வெளியிட்ட மகாமேரு யாத்திரை! –பகுதி – 1

ச.நாகராஜன்

கோவில்களைக் கட்டுவதற்கும் கட்டிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கும் தமிழ் வளர்ச்சிப் பணிக்கும் தங்கள் உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்த அற்புதமான குலம் செட்டியார் குலம். இவர்களின் பணிகளைப் போற்றுவார் இன்று இலர். தமிழகத்தின் இன்றைய பல துரதிர்ஷ்டங்களில் இதுவும் ஒன்று!

உலகம் சுற்றும் தமிழன் என்று புகழப்பட்ட திரு ஏ.கே.செட்டியார் (தோற்றம்: 3 நவம்பர் 1911 மறைவு 10 செப்டம்பர் 1983)சிறந்த தேசபக்தர். நேதாஜியை படம் எடுத்தவர். குமரி மலர் என்ற அற்புதமான பத்திரிக்கை மூலம் தமிழ்ப் பணி ஆற்றியவர்.

வெள்ளை வெளேரென்று தும்பைப் பூ போல சட்டையும் வேஷ்டியையும் அணிந்து வருவார். தும்பைப் பூ போன்ற ஆவி பறக்கும் சூடான இட்டிலிகளின் மேல் தேனை ஊற்றிக் கொண்டு சாப்பிடுவார். மென்மையான குரல். எப்போதும் புன்முறுவல் தான்! அழகிய வெள்ளைப் பற்கள் தெரிய அவர் பேசுவதைக் கேட்பதும் ஓர் இனிய அனுபவம். குமரி மலர் சந்தாவைத் தானே நேரில் பெற வருவார்.

அவரது குமரி மலர் பத்திரிக்கை ஒரு பெரும் பொக்கிஷம். பார்த்துப் பார்த்துப் பழைய கட்டுரைகளை வெளியிடுவார்.

அவரது குமரிமலர் பத்திரிக்கையில் வெளி வந்த ஒரு அற்புதமான கட்டுரையைப் பார்ப்போம்!

கட்டுரையின் தலைப்பு : மகா மேரு யாத்திரை (1934)

எழுதியவர் :   ஆர். அனந்த கிருஷ்ண சாஸ்திரி

நார்வே தேசத்தில் ட்றோணியம் என்ற கடற்கரை நகரிலிருந்துதான் மகாமேரு பிரதேசத்திற்குப் புறப்பட வேண்டும். மகாமேரு பிரதேசத்திற்கு ஆர்க்டிக் பிரதேசம் என்று பெயர் வழங்குகிறது. இவ்விடத்திலிருந்து மகாமேரு சுமார் ஆயிரம் மைல் தூரத்திலிருக்கிறது.

 

ட்றோணியத்திலிருந்து யாத்திரை செய்த கப்பல் தபால் கொண்டு போவது; ஆகையால் ஒவ்வோரிடத்திலும் தபாலைக் கொடுத்து வாங்கச் சுமார் அரை மணி நேரம் வரை நிற்கும். அப்பொழுது நான் கீழே இறங்கி அந்தக் கிராமங்களைச் சுற்றிக் கொண்டு வருவேன். தலையில் தலைப்பாகையும் கழுத்தில் சால்வையும் அணிந்து கொண்டுள்ள மஞ்சள் நிற மனிதனை அத்தேசத்தார் பார்த்திராததினால் என்னைப் பார்த்து வியப்புற்றனர்.சிலர் கப்பல் அதிகாரியிடத்தில் போய் என் வரலாற்றை வினவியதுமுண்டு.

 

கப்பல் ஏறின முதல் நாளில் கப்பல் அதிகாரியைச் சந்தித்து மறுநாள் காலையில் தண்ணீரில் ஸ்நானத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லப் போனேன்.தண்ணீரில் வைகறையில் ஸ்நானம் செய்தலென்பதை அவர் கேட்டிராதவர்.ஆதலால் அஞ்சி உடலுக்குத் தீமை வந்தால் தாம் பொறுப்பேற்க நேருமாகையால் நான் எவ்வளவு தூரம் பிரார்த்தித்தும் சாவியைக் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார். அவருடைய மனைவியிடத்தில் சென்று சிறிது நேரம் வேதாந்தம் பேசிக் கொண்டிருந்த பிறகே இந்தியாவில் குளிர்காலத்தில் கூடப் பலர் கங்கை முதலான நதிகளில் வைகறையில் நாலு மணிக்கு ஸ்நானம் செய்யும் வழக்கத்தையும் இந்துக்களின் ஆசாரத்தையும் சொல்லி உறுதிப் படுத்தினேன். அவ்வம்மை தயையால் தண்ணீர் அறைச் சாவியை வாங்கி மறுநாள் வைகறையில் ஸ்நானம் செய்தேன். பிறகு ஜபம் பூஜை முதலிய எல்லாம் முடிந்து வெளியில் வந்தவுடன் எனக்கு ஸ்நானத்தினால் கெடுதல் உண்டா என்று பார்க்கப் பலர் வந்தார்கள்.

பால், பழம், பச்சைக் காய்கறியாகிய உணவைப் பார்த்து நான் ஒரு ஸித்த புருஷன் என்றும் கீழ் நாட்டில் அவதரித்திருப்பதாகவும் சொல்லலாயினர்.

என்னைப் போல் இந்தியாவில் கோடிக்கணக்கான  பேர் உண்டு என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை.இதை வழக்கத்தினால் சம்பாதிக்கலாம்; இஃது ஒன்றினாலேயே மோக்ஷம் கிடைத்து விடாது என்று நான் அவர்களுக்குக் கூறுவேன். என்ன சொன்னாலும் அவர்கள் அவற்றை அங்கீகரிக்கவில்லை.

பிறகு மெள்ள மெள்ள 66-வது கோடு (லாடிடியூட்) தாண்டினேன். கணித சாஸ்திர வித்வானாகிய பாஸ்கராசாரியார் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் எழுதிய ‘சித்தாந்த சிரோமணி” என்னும் நூலில்

66-வது கோடு தாண்டி வடக்கே போகப் போகப் பகல் நேரம் மிகுதியாகவும், மேருவில் ஆறு மாதம் ஒரே பகலாகவும் இருக்கும் என்று கூறியது ஞாபகத்துக்கு வந்தது; பகல் அதிகரிக்கலாயிற்று.

ட்றோம்ஸோ என்கிற இடத்தில் 68-வது கோட்டில் மே மாதம் 14-ந் தேதி இரவு 11-45 மணிக்கு மேற்கு நோக்கி நின்று சூரியன் வரவை எதிர்பார்த்தேன். ஈசுவர கிருபையினால் அன்று வானில் மேகம் பரவுவதும் பனி விழுவதும் இன்றி இருந்தது. மேலைக் கடலிலிருந்து ஒரு ஒளிப்பிழம்பு தோன்றி உடனே வடக்கே ஓடிவிட்டது. இதைத் தான் ‘பாதி ராத்திரி உதய ஸுர்ய’ னென்றும் மேற்கில் உதித்து கிழக்கில் அஸ்தமனமாகிறதென்றும் வேதம் கூறுகிறது.இந்த ட்றோம்ஸோவில் பாதி ராத்திரியில் உதித்த ஸூர்யன் உடனே  அஸ்தமனமாகாமல் சரியாக நூற்றொரு நாட்கள் வானில் குயவன் சக்கரத்தை யொப்ப தணிந்து சுழற்றிக் கொண்டு ஆகஸ்டு மாதம் கடைசியில் கிழக்கே அஸ்தமனமடைகிறான். அப்படியே தக்ஷிணாயனத்தில் 101 நாட்கள் சூரியன் ஒளியின்றி ஒரே இரவாக இருக்கும். இந்த இடத்தில் தான் முன்னையோர் “சதராத்திரக்கிரது” நடத்தியதாக ச்ரௌத சூத்திரங்கள் கூறுகின்றன. 101 நாட்கள் ஒரே இரவாயிருக்கிற வேறோரிடம் இதற்கு நேரே கீழ்ப் பூமியிலாகும்.  அந்தப் பூமி அமெரிக்காவின் வட பாகத்தில் ஆர்க்டிக் பிரதேசத்தில் அலாஸ்கா என்கிற இடமாகும். ஆரியர் அந்தப் பிரதேசத்தில் பண்டைய நாளில்  வசித்து வந்ததாகச் சரித்திரங்களினால் விளங்கவில்லை; ஆகையால் இந்தப் பிரதேசத்திலேயே ஓர் இரவு முதல் நூறு இரவு வரையில் நம் பெரியோர் யாகம் நடத்தியிருக்க வேண்டும்; இதை மனதிற் கொண்டு ருக் வேதத்தைப் படித்தால் அதில் வர்ணித்திருக்கிற சூரிய வர்ணங்கள் ஆறு மாதம் சூரியனும் ஆறு மாதம் சூரியனில்லாத காலமும், பலவித உதய காலமும் மூன்று முதல் ஐந்து வரையிலுள்ள ருதுக்களும் கணித சாஸ்திர முறைப்படி நன்கு விளங்கும்.

 

ஆர்க்டிக் பிரதேசத்தில் சூரியன் எப்பொழுதும் மறைவின்றி யிருப்பதால், பூமியில் உள்ள நிலங்களில் தானியங்கள் மும்முறை விதைத்து அறுவடை செய்யப்படுகிறது.ஆகையால் உணவுப் பண்டங்களுக்கு குறைவேயில்லை. தக்ஷிணாயனத்தில் ஒரே பனி மழை; அப்பொழுது பயிர்த் தொழில்கள் நடப்பதில்லை.கைத்தொழில் வேலைகள் நடக்கும். ஒரே இராத்திரி காலங்களில் சூரிய ஒளியே இல்லாததால் சந்திரனுடைய நிலவாலும் விடியற்கால (அருணோதய) பிரகாசத்தினாலும் மகா மேருவிலிருந்து ஒரே ஒளிப் பிழம்பு தெற்கே பார்த்து வீசும் பிரகாசத்தினாலும்  (ஆறோ போரியாலிஸ்) இருட்டே தெரிவதில்லை. நம் தேசத்தில் சூரியனை மறைத்து இருளுடன்  மழை பெய்யும் காலத்துப் பகல் போல இருக்கும். ஆனால் அடிக்கடி ஒளி மாறும்.

-அடுத்த இதழில் கட்டுரையின் இறுதிப் பகுதி தொடரும்

 

வியப்பூட்டும் அதிசய மரங்கள்

Picture shows Udumpara (Aththi in Tamil, Ficus glomerata, Ficus Racemosa)

உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது. பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’!

பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்தியொவெனில் ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். (இது குறித்து ‘இந்திய அதிசயம்:ஆலமரம்’ Indian Wonder: The Banyan Tree என்ற நீண்ட கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்).

தாவரவியல் என்பதும் மரங்களை இனம் வாரியாக, குடும்பம் வாரியாகப் பிரிப்பதும் 1735ஆம் ஆண்டு முதல்தான் லின்னேயஸ் என்பவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் (மஹாபரதத்தின் ஒருபகுதி) 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பின்பற்றிவிட்டது. விஷ்ணுவின் பெயராக வரும் ஆல், அரசு, அத்தி மூன்றும் மோரேசி என்னும் குடும்பத்தையும் பைகஸ் என்ற ஜீனஸ்—ஐயும் சேர்ந்தவை!! (Family Moraceae, Genus: Ficus)

புத்த கயாவில் புத்தர் நின்று போதித்த அரச மரம் உள்ளது. இதை போதி மரம் என்று அழைப்பர். கயாவில் அக்ஷய வடம் எனப்படும் அழியாத ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. இவ்விரு மரங்களையும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்வது வழக்கம்.

உலகிலேயே மரங்களை இன்றும் வழிபடும் ஒரே மதம் இந்து மதம்தான். ஆலமரம் அரசமரம், உடும்பரா எனப்படும் அத்திமரம் ஆகியனவற்றை புராணங்கள் முழுதும் போற்றுகின்றன. அரச மரத்தில் மும்மூர்த்திகளும் இருப்பதாக தர்ம சாத்திரங்கள் பகர்கின்றன.

வேதத்திலும் உபநிஷத்துக்களிலும் மரங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. உபநிஷதத்தில் ஒரு ரிஷியின் பெயரே பிப்பலாடன் (அதாவது திருவாளர் அரசமரம்).

ஒவ்வொரு யாகத்துக்கும் அரச மரம், ஆலமரக் குச்சிகளுடன் வேறு பல மரக்குச்சிகளும் தீயில் ஆஹுதி செய்யப் படுகின்றன. சந்தன மரத்தின் பெருமையை தமிழ், வடமொழி இலக்கியங்கள் பக்கம் பக்கமாகப் புகழ்கின்றன.

மரத்தின் பெயரால் பிரதேசங்களை அழைக்கும் வழக்கம் தமிழிலும் புராணங்களிலும் உண்டு.(இதுபற்றி தமிழர்களின் பூக்கள் மோகம் Flowers in Tamil Culture என்ற கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்)

புனித ஆலமரம்

கண்ணன் பகவத் கீதையை உபதேசித்த குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. இது 5000 ஆண்டு பழமையானது என்றும் கிருஷ்ணன் இங்கேதான் கீதோபதேசம் செய்தான் என்றும் மக்கள் நம்புகின்றனர். இதே போல புத்தர் தங்கி தியானம் புரிந்த போதி (அரச) மரத்தின் கிளைகள் இலங்கை முதலான நடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஒரிஜினல் ஆலமரமோ அரச மரமோ இன்று இல்லாவிட்டாலும் அவற்றின் கிளைகள், விதைகளில் இருந்து தழைத்த மரங்கள் இருக்க வாய்ப்பு உண்டு.

அத்திமர அதிசயம்

அத்திமரத்துக்கு அற்புத சக்தி இருப்பதாக அதர்வண வேதம் (AV.xix-31) கூறுகிறது. இதில் தாயத்து செய்து போட்டுக் கொண்டதாகவும், அரிச்சந்திர மகாராஜா இதிதான் கிரீடமும் சிம்மாசனமும் செய்துகொண்டார் என்றும் புராணங்கள் பேசுகின்றன.

தமிழ்நாட்டுக் கோவில்தோறும் ஸ்தல மரமும், மன்னர்களுக்கு காவல் மரமும் இருந்தன. இது பற்றியும் இலக்கியத்தில் நிறைய விஷ்யங்கள் உண்டு. திருஞான சம்பந்தப் எருமான் ஆன் பனையைப் பெண்பனையாக மாற்றி அற்புதம் செய்ததைத் தேவாரத்தில் காணலாம்.

அற்புத வில்வ மரம்

கடலாடி பர்வத மலையில் மல்லிகார்ஜுனர் கோவிலில் ஒன்பதும் பதினொன்றும் தளங்கள் (இலைகள்) உடைய மஹா வில்வ மரங்கள் இருக்கின்றன. இது அபூர்வமாகவே காணப்படும். சிவ பெருமானுக்கு மிகவும் விஷேசமானவை.மலை மீது வளரும் கல் மூங்கில்கள் காஞ்சி சங்கராசார்ய சுவாமிகளின் தண்டத்துக்காக (கையில் வைத்திருக்கும் கம்பு) வரவழைக்கப்படுகின்றன. மதுரையின் தல விருட்சம் கடம்ப மரம், காஞ்சியின் தல விருட்சம் மாமரம் (ஆம்ர) போன்று ஒவ்வொரு கோவிலும் ஒரு மரத்துக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

 

திருத்தணி கன்னிக் கோயிலில் 7 மரம்

(தினமணிக் கதிர், 7-8-1983)

திருத்தணியில் கன்னிக் கோயில் உள்ளது. இது சப்த கன்னிகையால் ஆதியில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆத்மசுத்தி பெற்ற மகா சித்தர்கள் வசித்த இடம் சித்தர்களின் ஞான கடாக்ஷத்தால ஞான சுத்தி பெறக்கூடிய மரங்களை பிரதிஷ்டை செய்து வளர்த்துள்ளனர். அவை இன்றும் உள்ளன. ஒரு பெரிய மரத்தையொட்டி வளர்ந்துள்ள ஏழு மூலிகை மரங்கள் பின்னிப் பிணைந்து ஒன்றாக இருக்கின்றன.

அவை 1.அரசு. 2.கல்லரசு 3.கரும்பிலி 4.தேவ ஆதண்டம் 5. இருளி 6.வேம்பு 7. கார்த்திகம்

இது எங்கும் காண இயலாத ஒரு அற்புதச் சேர்க்கை. இது தவிர ஏழு கன்னிகைகள் வழிபாடு நடக்கிறது. கடுங்கோடையிலும் வற்றாத ஏழு தீர்த்தங்கள் 1. தாமரை 2.தாழை 3.திருமஞ்சனம் 4. அல்லி 5. பஞ்சேந்திரம் 6. பொய்கை 7. கர்ப்பவர்த்தி இருக்கின்றன. (தினமணிக் கதிர் சுருக்கம்)

வற்கலையில் அதிசயம்

கேரளத்தில் உள்ள வற்கலை ஜனார்த்தனம் கோவிலில் ஐந்து ஸ்தல விருட்சங்கள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளன. இவை வெவ்வேறு வகை மரங்களாகும் (ஞானபூமி ,ஏப்ரல் 1985)

யானைப் புளியன்கொட்டை மரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரிகம் என்னும் ஊரில் அதிசய புளியமரம் ஒன்றுள்ளது. அதன் காய்கள் மிகமிகப் பெரிதாக உள்ளது. அந்த வியப்பிற்குரிய மரத்தின் காய்களை பலர் எடுத்துச் சென்று அம்மாதிரி ரக புளியை வளர்க்க முயன்றுவந்தனர். ஓசூரில் நடந்த ஒரு பொருட் காட்சியில் இதன் காய்களை வேளண்மைத் துறையினர் காட்சிக்கு வைத்திருந்தனர். (மின் தமிழ் உறுப்பினர் நூ.த.லோ.சு.மயிலை தந்த தகவல்)

(இந்த மரத்தை ஆனைப் புளியங்கொட்டை மரம் என்று சொல்லுவார்கள். தாவரவியல் படிப்பவர்களுக்கு இதுபற்றித் தெரியும் ஏர்க்காடு பகுதியில் தாவரவியல் சுற்றுலாச் சென்றபோது பேராசிரியர்கள் இதைப் பறித்து எங்களுக்கு பாடம்சொல்லிக் கொடுத்தனர். மதுரைக் கல்லூரி தாவரவியல் சோதனைக் கூடத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்றும் இருக்கக் கூடும்: லண்டன் சுவாமிநாதன்).

வெள்ளை வேப்ப மரம்

நாகை மாவட்டம் திருவாவடுதுறையில் உள்ள வேப்ப மரம் ஒன்றின் இலைகள் முழுதும் வெள்ளையாகவே இருக்கின்றன. அதன் கீழே அமர்ந்துள்ள அம்மனும் வெள்ளை மாரியம்மன் என்றே அழைக்கப்படுகின்றார். திருவாவடுதுறையில் இருந்து வழிவிடும் விநாயகர் கோவிலை அடுத்து ஒரு பாதை செல்கின்றது. சிறிது தூரம் சென்றால் ஒரு ஆறு வரும். அந்த ஆற்றங்கரையில் அம்மன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். (இது மின் தமிழிலிருந்து எடுக்கப்பட்டது).

தினமலரில் வந்த செய்தி:

சேர்ந்தமரம்: சேர்ந்தமரம் அருகே வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன்குளத்தில் உள்ள நாகமலை பாலமுருகுன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் அருகே மாரியம்மன் சிலை ஒன்றும் உள்ளது. இந்த சிலை அருகே சிறிய வேப்பமரம் உள்ளது. மரத்தின் அடிப்பாகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பால் வடிய துவங்கியது.  இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பால்வடியும் வேப்பமரத்திற்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.Dinamalar 8th February 2012

மரங்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான அதிசயங்களில் சிலவற்றை மட்டுமே கண்டோம். தருணம் வரும்போது மேலும் பல அதிசயங்களைக் காண்போம்.

 

கமில் சுவெலபில் மொழி பெயர்த்த தமிழ் தாத்தாவின் ‘என் சரித்திரம்’!

கமில்சுவெலபில்மொழிபெயர்த்ததமிழ்தாத்தாவின்என் சரித்திரம்‘! 

.நாகராஜன்

 

தமிழ் தாத்தா உ.வே.சுவாமிநாதையரின் (1855-1942) தமிழ் தொண்டை உலகமே அறியும். தமிழர்கள் தம் பெருமையை அறிய தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். இரவு பகல் பாராது தமிழ் சுவடிகளைச் சேகரித்து ஆராய்ச்சியில் மூழ்கி ஒவ்வொரு சொல்லின் பொருளையும் தேர்ந்து அதை உலகிற்குத் தந்தவர். சில சமயம் ஒரு சொல்லின் பொருளைக் கண்டுபிடிக்க இவர் செய்த முயற்சிகள் நம்மை பிரமிக்க வைக்கும். அவரது என் சரித்திரம் என்ற நூல் மிகச் சிறந்த நூல்.தமிழ் வரலாறை அறிய விரும்புவோர் தமிழ் தாத்தாவின் அரிய சரித்திரத்தை நிச்சயம் படிக்க வேண்டும். சுவையான நூல். சுவை படைத்த அரிய விஷயங்களை நல்கும் நூல்.

 

இதை மொழிபெயர்க்க செக்கோலேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் (பிறப்பு : 17-11-1927 மறைவு 17-1-2009) மிகுந்த ஆசைப்பட்டு அற்புதமாக ஆங்கிலத்தில் இரு பாகங்களாக மொழி பெயர்த்துள்ளார். கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், ருஷியன், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை கமில் நன்கு அறிவார். ஹிந்தி, மலையாளம், பிரெஞ்சு, இத்தாலி, போலந்து போன்ற மொழிகளையும் இவர் அறிவார்.

 

என் சரித்திரத்தில் ஏராளமான தமிழ் பாடல்கள் இடம் பெறுகின்றன. சுவையான நிகழ்ச்சிகள் அடங்கியுள்ளன. இவற்றை ஆங்கிலத்தில் சுவை குன்றாது மொழி பெயர்ப்பது ஒரு பெரிய அரிய கடினமான பணி. இதை அவர் சிறப்பாகச் செய்துள்ளார். முருகன் மீது பக்தி கொண்ட இவர் “சுவாமிநாதனின்” சரித்திரத்தை மொழி பெயர்க்க முன் வந்தது தமிழரின் பாக்கியமே! ஆனால் இவர் முன்னுரையில் தெரிவிக்கும் ஒரு சிறு விஷயம் நம் மனதை நெருடுகிறது! அவர் சொற்களில் அந்த சின்ன விஷயத்தைப் பார்ப்போம்:

“Although various well-meaning friends and colleagues tried to dissuade me from translating this large work of reminiscences, and although I, too, might have had my doubts myself, yet I did persevere in this task which I had to set myself in the sprit of affectionate service to the greatest figure of the ‘Tamil Renaissance’, and I shall hopefully bring it in due time to end. The main objections against this work of translation was that I should have “better things” to do; publish original scholarly works – books, papers, reviews – since there are, apparently, not so many of us in the field of Dravidology, and  since I presumably have still so much to say.

 

இந்த பெரிய நினைவுகள் நிரம்பிய நூலை மொழிபெயர்ப்பதிலிருந்து என்னை நல்லெண்ண நண்பர்களும் சகாக்களும் தடுத்த போதிலும், நானும் கூட என்னைப் பற்றிய ஐயம் கொண்டிருந்த போதிலும், நான் இந்தப் பணியில் விடாமுயற்சியுடன்  தமிழ் மறுமலர்ச்சியின் மிகப் பெரும் தோற்றமானவருக்கு பிரியமுடன் சேவை செய்யும் உணர்வுடன் இதைச் செய்ய ஆரம்பித்தேன். உரிய நேரத்தில் இதை முடிக்கும் நம்பிக்கையும் உண்டு. இந்த மொழிபெயர்ப்பு பணிக்கு எதிரான ஆக்ஷேபணைகளுள் பிரதானமாக இருந்தவை: “இதை விட சிறந்த வேலைகள்” நான் செய்வதற்கு உள்ளன; மூலமாக நானே எழுதும் அறிவு சார்ந்த ஆய்வுகள் – புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், மதிப்புரைகள் – உள்ளன – ஏனெனில் திராவிடாலஜி என்ற தளத்தில் அநேகர் இல்லை, இன்னும் நான் உண்மையெனக் கருதிச் சொல்ல வேண்டியது நிறைய உள்ளது என்பதால்!

தமிழுக்காக வாழ்ந்து அயரா உழைப்பை மேற்கொண்டு பத்துப்பாட்டு, எட்டுத் தொகையுள் ஐந்து, மூன்று பெரும் காப்பியங்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட இலக்கியங்கள், இலக்கண நூல்கள் உள்ளிட்ட தமிழ் செல்வத்தை ஈந்து தமிழருக்குத் தமிழ் பற்றி முகவரி தந்த ஒரு பெருமகனாரின் சரித்திரத்தை மொழிபெயர்க்க ஒரு சிறந்த தமிழ் அறிஞர் முன் வந்த போது அதைத் தடுக்க முயன்றனர் என்ற செய்தியே நம்மை திடுக்கிட வைக்கிறது. இது சாதாரண விஷயமாக இருந்தால் கமில் இதை முன்னுரையில் ஒரு முக்கியத்துவம் கொடுத்துக் கூறியிருக்க மாட்டார். அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இதையும் மீறி நான் ஏன் இதைச்  செய்தேன் என்று தொடரும் அவர் இரண்டு காரணங்களைச் சொல்கிறார். 1) மொழிபெயர்ப்பு என்பது ஒரு  பெரும் கலை.மிக முக்கியமான ஒன்று.ஆகவே இதை மொழிபெயர்ப்பது அவசியம் 2) டாக்டர் ஐயர் அவர்கள் வார்த்தைகளாலேயே அவர் எப்படி இப்படி ஆக நேர்ந்தது என்பதை அறிவது மிக முக்கியமானது!

 

அற்புதமான மொழிபெயர்ப்பைப் படித்து முடித்த சந்தோஷத்தை  விட சிறந்த தமிழ் பணியை தடுக்க முயன்றவர்களை எண்ணி வருத்தம் சற்று மேலோங்கவே செய்கிறது.

*****************************

 

அதிசயமான அகத்திய நட்சத்திரம்!

Picture: Canopus known as Agastya Nakshatra is part of Carinae Constellation in Southern Sky.

 

நட்சத்திர அதிசயங்கள் 

அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!

If you want more information about Agastya in English, Please read London Swaminathan’s article ‘IS BRAHMASTRA A NUCLEAR WEAPON?’

அதிசயமான அகத்திய நட்சத்திரம்!

ச.நாகராஜன்

கானோபஸ் எனப்படும் அகத்தியர் 

கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.

27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!

 

கடல் நீரைக் குடித்த கதை 

அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.

அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர்  சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!

நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!

 

அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை 

இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.

வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.

இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!

‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!

அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.

வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.

குள்ளமான அகத்தியரின் பெருமை மிகவும் உயர்ந்தது!

************************

ரேவதி நட்சத்திர ரஹஸ்யம்!

 

Pisces constellation that includes REVATHI star

நட்சத்திர அதிசயங்கள் 

இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 நட்சத்திரங்களில் கடைசி நட்சத்திரமான ரேவதி அறிவியல் வியக்கும் நட்சத்திரங்களில் முதலிடத்தை வகிக்கிறது.அப்படி அதிகம் வியக்கும்படி அந்த நட்சத்திரத்தில் எதைத் தான் விஞ்ஞானிகள் கண்டார்கள்?இதோ பார்ப்போம்!

ரேவதி ரஹஸ்யம்!

ச.நாகராஜன்

ரைவதனின் பெண் ரேவதியின் கதை!

 

வேதம் கூறும் 27 நட்சத்திரங்களில் கடைசியாக இருப்பது ரேவதி. அதி அற்புதமான அறிவியல் ரகசியத்தை அறிவிக்கும் நட்சத்திரம் இது. புராணம் கூறும் ரேவதியின் கதையே ஆச்சரியமானது.  ரைவதன் என்ற மன்னனுக்குப் பிறந்த பெண்ணின் பெயர் தான் ரேவதி!அவன் வாழ்ந்த காலத்தில் மனிதர்கள் அனைவரும் இப்போது இருப்பதை விட இன்னும் அதிக உயரம் உடையவர்களாக இருந்தார்கள். தன் பெண் ரேவதிக்கு தகுந்த மாப்பிள்ளையைத் தேட ஆரம்பித்தான் மன்னன் ரைவதன்.அவளுக்கு ஏற்றபடி ஒருவரும் சரியாக அமையவில்லை.ரைவதன் கவலைப்பட ஆரம்பித்தான். நாளடைவில் கவலை பயமாக மாறியது. இவளுக்கு உரிய மணாளன் யார், அவனை எப்படிக் கண்டுபிடிப்பது? சிந்தித்தான். சிந்தனையின் முடிவில் ஒரு வழி தோன்றியது.

 

இவளைப் படைத்த பிரம்மனையே நேரில் சென்று கேட்டு விட்டால் என்ன? இவளுக்காக யாரைப் படைத்தீர்கள் என்று சுலபமாகக் கேட்டு விடலாமே! உடனே நேரே சத்யலோகத்துக்குத் தன் பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்றான்.அவன் பிரம்ம லோகம் சென்ற சமயம் அங்கு ஒரு பெரிய வேள்வி நடந்து கொண்டிருந்தது. பிரம்மா அவனை வரவேற்று சைகையால் சற்று இருக்குமாறு சொன்னார்.ரைவதனும் காத்திருந்தான்.

 

வேள்வி முடிந்ததும் பிரம்மா ரைவதனிடம் வந்த விஷயம் என்ன என்று அன்புடன் கேட்டார். ரைவதன் தன் கவலையைச் சொன்னான். ரேவதிக்கு உரிய மணாளன் யார் எனத் தாங்கள் தான் எனக்குச் சொல்ல வேண்டும் என்று வேண்டினான்.பிரம்மா சிரித்தார்.

“ரைவதா! ஏமாந்து விட்டாயே! நீ இங்கே வந்த போது பூமியில் கிருத யுகம் நடந்து கொண்டிருந்தது. வேள்வி முடிந்து விட்ட இந்த சமயத்திலோ அங்கு கலி யுகம் நடந்து கொண்டிருக்கிறது!பூமியின் காலமும் இங்குள்ள கால நிர்ணயமும் வேறு! இனி இவளை பூமியில் உள்ள யாரும் மணம் புரிந்து கொள்ள முடியாது. அதோ, பூமியைப் பார். அங்கு அனைவரும் உயரம் குறைந்தவர்களாக இருப்பதைப் பார்,” என்றார். ரைவதன் கலங்கிப் போனான். அருள் புரிய பிரம்மனை வேண்டினான்.

பிரம்மாவும் அருள் கூர்ந்து அவனை நோக்கி, “ரைவதா, கவலைப்படாதே! பூமியில் பத்து அடி உயரம் உள்ள பலராமன் என்பவர் பிறப்பார். அவர் இவளைத் தன் கலப்பையால் உயரத்தைக் குறைத்து மணப்பார். இனி, கவலையை விடு” என்றார்.

பிரம்மா சொன்னபடியே பலராமனும் கலப்பையால் ரேவதியின் தலையில் ஒரு குட்டு குட்டி அவள் உயரத்தைக் குறைத்து அவளை மணம் புரிந்தார். இப்படி முடிகிறது. கதை. இதைப் பல புராணங்களிலும் படிக்க முடிகிறது.

இதில் விஞ்ஞானிகள் வியப்படைய என்ன இருக்கிறது/ அதில் தான் சுவாரசியமே இருக்கிறது! பூமிக்கும் விண்வெளியில் உள்ள லோகங்களுக்கும் உள்ள கால நிர்ணயம் வேறு என்று பிரம்மா சொல்வதை விஞ்ஞானிகள் இப்போது கண்டு பிடித்து வியக்கிறார்கள். ஹிந்து மத புராணங்களில் அப்போதே எப்படி இவ்வளவு தெளிவாக ஒரு அரிய உண்மையைக் கதை மூலமாகக் கூற முடிந்தது என்பதே அவர்களின் வியப்புக்குக் காரணம். பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் போது காலத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. இதற்கு டைம் டைலேஷன் (Time Dilation) என்று பெயர். பூமியிலிருந்து விண்வெளிக்குப் பயணப்பட்ட விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நெடுங்காலம் சுற்றித் திரிந்து விட்டு பூமிக்குத் திரும்பினால் அவர்கள் ஆயுளில் இளைஞர்களாக இருக்க பூமியில் உள்ளவர்களோ வயதானவர்களாக ஆகி இருப்பார்கள்.

 

மையர்ஸ் டேபிள் 

பூமியிலிருந்து ராக்கெட்டில் புறப்பட்ட விண்வெளி வீரர் பயணம் செய்யும் வருடமும் அப்போது பூமியில் நாம் கழிக்கும் வருடமும் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

———————————————————————————————————————அட்டவணை

விண்வெளி வீரர் பயணத்தில் கழிக்கும் ஆண்டு        பூமியில் நாம்

கழிக்கும் ஆண்டுகள்                                                                         ———————————————————————————————————————————

1                                      1

2                                      2.1

5                                      6.5

10                                    24

20                                  270

30                                3100

50                          4,20,000 (கலியுக வருடங்கள்)

 

———————————————————————————————————————

மேலே உள்ளது Meyers Handbook of Space என்ற விண்வெளி அறிவியல் கையேடு தரும் அற்புத அட்டவணையாகும். இதிலிருந்து நாம் ஊகிக்க முடிவது இது தான்: ரைவதன் 50 ஆண்டுகள் பயணத்திலும் பிரம்ம லோகத்தில் காத்திருப்பதிலும் கழித்திருந்தால் பூமியில் 4,20,000 ஆண்டுகள் கழிந்திருக்கும்! அதாவது ஒரு யுகம் கழிந்திருக்கும். கிருதயுகத்தில் பயணத்தை ஆரம்பித்த ரைவதன் பூமியில் கலியுகத்தை இதனால் தான் பார்க்க நேர்ந்தது.

பராசக்தியின் கரு 

ரேவதி 32 நட்சத்திரங்கள் கொண்ட தொகுதி. மீனைப் போலத் தோற்றமளிப்பது. வானவியில் இதை Zeta Piscum என்று குறிப்பிடுகிறது. ஜோதிட நூல்களோ ரேவதியை வெகுவாகப் புகழ்கின்றன. பராசக்தியின் கருவாகக் குறிப்பிடப்படும் இது ஆரம்பத்தையும் (ஜனனம்) முடிவையும் குறிப்பிடுகிறது. பயணத்திற்கு உகந்தது.தொலைந்து போன பொருளைத் தேட உகந்தது. ஆகவே தொலைந்த பொருள்கள் உடனே கிடைக்கும்.இசை, நடனம், நாடகம், இலக்கியம் ஆகிய அனைத்தும் இந்த நட்சத்திரக்காரர்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு. பெரும் அற்புத ரகசியங்களளை உள்ளடக்கிய இந்த நட்சத்திரத்தின் முதல் ரகசியம் விண்வெளி லோகங்களுக்கும் நமக்கும் உள்ள கால வேறுபாட்டைக் கூறுவது தான். ஆக 27 நட்சத்திரங்களில் கடைசியாக இடம் பெறும் இது அறிவியலில் உன்னத ரகசியத்தை வெளியிடுவதில் முதலாவதாகத் திகழ்கிறது.

***************

வீரத் தாயும் வீர மாதாவும்

 

படம்: ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி. அலாவுதீன் கில்ஜியின் கைகள் தன்மீது பட்டுவிடக் கூடாதென்பற்காக ஆயிரம் மங்கைகளுடன் தீயில் பாய்ந்த உத்தமி (இது கி.பி.1303 ஆம் ஆண்டில் நடந்தது)

English version of this article is already posted in the blog: London Swaminathan)

இந்தியா ஒரே நாடு! இந்திய சிந்தனை ஒரே சிந்தனை! “செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்!” என்று சும்மாவா சொன்னார் பாரதி? வீரத் தாய், வீர மாதா என்ற புகழுரையை உலகிலேயே மிகப் பழமையான ரிக்வேதத்திலும் காண முடிகிறது. அதற்கு ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வந்த காளிதாசன், புறநானூற்றுப் புலவர் காவற்பெண்டு, பாரதி பாடல்களிலும் காண முடிகிறது.

புறநானூற்றில் ஒரு அழகான பாட்டு:

புறம் 86 (காவற்பெண்டு)

சிற்றில் நற்றூண் பற்றி, ‘நின் மகன்

யாண்டுள்ளனோ? என வினவுதி; என் மகன்

யாண்டு உளன் ஆயினும் அறியேன்;ஓரும்

புலி சேர்ந்து போகிய கல் அளை போல

ஈன்ற வயிறோ இதுவே;

தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!

பொருள்: என் மகன் எங்கே என்று கேட்கிறீர்களா? எனக்குத் தெரியாது. ஆனால் இந்த வயிறு புலிகளின் உறைவிடமான குகை போன்றது. ஆகவே அவன் போர்க்களத்தில்தான் இருப்பான்.

உலகில் எந்த ஒரு பெண்ணும் கோழையைப் பெற விரும்புவதில்லை. ஆனால் அதைக் கவிதையில் வடித்த பெருமை இந்தியர்களுக்கே உண்டு.

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் வரும் பாடல் (10-85-44), நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது.

காளிதாசனின் காவியங்களில் எண்ணற்ற இடங்களில் வீரத் தாய் பற்றி வருகிறது. குமார சம்பவத்தில் (7-87) உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா, நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி) என்று வாழ்த்துவதாகக் கூறுகிறான்.

ரகுவம்சத்தில் (2-64;14-4) வீர என்ற சப்ததைப் பெறும் முறைகளை விளக்குகிறார். தமிழ் இலக்கியம் போலவே மார்பில் விழுப்புண் தாங்குவதைப் போற்றுகிறார் (3-68).

உலகப் புகழ்பெற்ற சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரப்ரசவினீ பவ= வீரர்களின் தாயாக விளங்குவாயாக என்று வாழ்த்துகின்றனர்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் லலிதாம்பிகையைப் போற்றும் 1008 நாமங்களில் ஒன்று வீர மாதா என்னும் போற்றி ஆகும்:

“ப்ராணேச்வரி ப்ராணதாத்ரீ பஞ்சாசத்பீடரூபினி

விஸ்ருங்கலா விவிக்தஸ்தா வீரமாதா வியத்ப்ரஸூ:”

பாரதி இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ‘மலடி’ என்பதற்குப் புதிய விளக்கமே கொடுக்கிறார்:

“வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை

ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு”

படம்: ஜான்சி ராணி லெட்சுமிபாய், ஆங்கிலேயரால் கொல்லப்பட்டாள்.

போரில் இறந்தால் சொர்க்கம்

தமிழ், வட மொழி நூல்களில் காணப்படும் மற்றொரு ஒற்றுமை போரில் இறப்பவர்கள் சொர்க்க லோகத்துக்குப் போவார்கள் என்பதாகும். சங்கத் தமிழ் இலக்கியத்தில் மேல் உலகம், துறக்கம், தேவர் உலகம் பற்றிய குறிப்புகள் ஏராளம். ஆனால் போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு “நேரடி டிக்கெட்” கிடைக்கும் என்ற செய்தி சில பாடல்களில் தெளிவாகவே உள்ளது (புறம்.26, 62, 93, 287, 341, 362 பதிற்றுப் பத்து 52):

வாடாப் பூவின் இமையா நாட்டத்து

நாற்ற உணவினோரும் ஆற்ற

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்றனரால்; (புறம்.62)

அவ்வையார் தரும் ஒரு சுவையான செய்தி இதோ:

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செவ்வுழி செல்க என

வாழ் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ (புறம்.93)

பொருள்: போரில் இறக்காமல் வேறு காரணங்களால் இறந்த மன்னர்களை வேதம் படித்த பிராமணர்கள் வந்து, தர்ப்பைப் புல்லைப் பரப்பி, மன்னரின் சடலத்தை அதன் மீது வைத்து, வாளால் வெட்டி போரில் இறந்தவர்கள் செல்லும் வீர சுவர்க்கத்துக்கு நீயும் போவாயாக என்று மந்திரம் சொல்லுவர். (இதைப் போரில் விழுப்புண் தாங்கி இறக்கும் தருவாயில் இருக்கும் அதியமானிடம் அவ்வையார் கூறி ‘நீ அதிர்ஷ்டசாலி அப்பா! உன்னை இப்படி வாளால் வெட்டி சுவர்க்கத்து அனுப்ப வேண்டாமல் நீயே உன் வீரத்தால் வீர மரணத்தைத் தழுவிக்கொண்டாய்’  என்று பொருள்படப் பாடுகிறார்.)

பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்லுவதும் இதுதான்:

குந்தியின் மகனே! கொல்லப்பட்டாலோ நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்;ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு! (கீதை 2-37)

படம்: கிட்டூர் ராணி சென்னம்மா

 

ரத்த கோஷம் !!

இப்போதெல்லாம் அரசியல் தலைவர்களின் தீவிர பக்தர்கள்/ தொண்டர்கள் அந்தத் தலைவர்களுக்கு ஆதரவாக இரத்தத்தில் கோஷங்களை எழுதுவதைப் பார்க்கிறோம். இது ஆதிகால வழக்கம் என்னும் சுவையான செய்தியை காளிதாசன் நமக்குச் சொல்லுகிறான் (ரகு.7-65):

அஜன், ரகு ஆகிய சூரியகுல மன்னர்கள் எதிரிகளை வென்ற பின்னர் அவர்கள் நாட்டு வீரர்களை இரக்க உணர்ச்சி காரணமாக கொல்லாமல் விட்டு விடுவார்களாம். ஆனால் மன்னர்களின் தீவிர விசுவாசிகள் அம்புகளை எடுத்து அவைகளை ரத்தத்தில் தோய்த்து கொடிகளில் கோஷங்களை எழுதுவார்களாம்: “இப்பொழுது ரகுவின் புத்ரன் அஜனால் உங்கள் கீர்த்தி/ புகழ் கவரப்பட்டுவிட்டது; ஆனால் தயை காரணமாக உங்கள் உயிர் கவரப்படவில்லை” என்ற கோஷம் எழுதப்படும்!

காளிதாசன் இன்னும் ஒரு சுவையான தகவலையும் தருகிறான். ராவணனே நேருக்கு நேர் சண்டை போட வந்தவுடன் நாமனுக்கு ஏகப்பட்ட சந்தோஷமாம் (ரகு 12-89). ராவணனை மஹா பராக்ரமசாலி என்று ராமன் மதிக்கிறான். ராமனைப் போன்ற வீரர்கள் பலம் குறைந்தவர்களுடனோ, கோழைகளுடனோ சண்டை போடமாட்டார்கள்.

சங்க இலக்கியப் புலவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஆறு கட்டுரைகளில் எழுதினேன். இந்தத் தலைப்பின் கீழும் இதற்குப் பல உதாரணங்கள் கிடைத்தன. வீரம் பற்றி நாடு முழுதும் ஒரே கொள்கை நிலவிய காலத்தில் இப்புலவர்கள் வாழ்ந்தனர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

*************

பகுதி 2 – கடலில் மர்மத் தீ

Picture shows Horse Head Nebula in Orion Constellation; it is 1500 light years away from earth.

 

( கடலில் தோன்றும் மர்மத் தீ–இரண்டாம் பகுதி–Please read the first part before you read this Second Part)

ஊழித் தீ அல்லது மடங்கல் என்று சங்கத் தமிழ் நூல்கள் கூறுவது வடமுகாக்னி என்னும் வடவைத் தீயைத்தான். இதில் இந்துக்கள் எல்லோரும் நம்பிக்கை வைத்திருப்பதால் வடக்கு தெற்கு என்ற பாகுபாடு பார்க்கத் தேவை இல்லை. இதைப் பற்றி பல புராணக் கதைகள் உண்டு.

இதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்

1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்)  கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.

2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.

பதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:

“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”

பல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

இதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான். நெபுலா என்பது வானத்தில் தூசியும் வாயுவும் மிதக்கும் ஒரு இடமாகும். ஒரு நட்சத்திரம் பிறக்கும் இடம் இது. ஒரு நட்சத்திரம் இறந்த பின்னரும் இப்படி தூசி, வாயுவைக் கக்கும். திருவாதிரை, மிருகசீர்ஷம் விண்மீன்கள் உடைய ‘ஒரையன்’ தொகுதியில் குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ இருக்கிறது. இதை பைனாகுலர், டெலஸ்கோப்பு கொண்டு பார்க்கலாம். ஆனால் இதற்கும் குதிரை முகத் தீக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.

கபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர். இது காளிதாசன் சாகுந்தலம், ரகுவம்சம் ஆகிய நூல்களில் கூறிய கருத்து. இதன் மூலம், கபிலருக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.

வடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். பூமியின் காந்த மண்டலம் காரணமாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் இரவு நேரத்தில் வானத்தில் வண்ண மிகு ஒளிகள் இந்திர ஜால வித்தைகள் காட்டும். சில நாட்களில் பிரிட்டனின் வட பகுதியான ஸ்காட்லாண்டிலும் கூட இதைக் காணலாம். ஆனால் இது வடவைத் தீ அல்ல.

ஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம். இது உலகை அழித்தது இல்லை என்பதால் இதையும் வடவை தீ இல்லை என்றே சொல்லவேண்டும். பின்னர் வேறு எதைத் தான் நம் முன்னோர்கள் வடவைத் தீ என்று சொன்னார்கள்? இதற்கு விஞ்ஞான விளக்கம் என்ன என்பது இதுவரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.

ஆந்திரத்தைப் புயல் தாக்கியபோது ஏற்பட்ட கடல் அலைத் தீ (இதன் விவரம் கட்டுரையின் முதல் பகுதியில் உள்ளது) போல, இனி எதிர்காலத்தில் ஏற்படலாம். உலகம் அழியும் போது குதிரை வடிவில் தோன்றக் கூடும். கலியுக முடிவில் தோன்றப் போகும் கல்கி அவாதாரத்தையும் நாம் குதிரையுடன் சம்பந்தப்படுத்தியே பேசுகிறோம். வெண் புரவியில் வரும் கல்கி பகவான் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவார் என்று இந்து மத நூல்கள் கூறுகின்றன.

கட்டுரையை முடிக்கும் முன், சில இலக்கியக் குறிப்புகளைப் படியுங்கள்:

1.நதியில் தண்ணீர் குடித்த முனிவரை காட்டு மிருகம் என்று எண்ணி அம்பு எய்திக் கொன்ற தசரதனுக்கு அம்முனிவர் ஒரு சாபம் கொடுக்கிறார். அதாவது தசரதனும் புத்திர சோகத்தால் சாகவேண்டும் என்று. அதைக் கேட்ட தசரதன் மனம் வடவைத் தீயை உள்ளே வைத்திருந்த கடல் போல இருந்தது என்று அழகாக உவமிக்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 9-82). மேலும் பல இடங்களிலும் (11-85) காளிதாசன் வடவைத் தீயை உவமையாகத் தருகிறான்.

 

2.கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்

உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்

3.“Siva’s fiery wrath must still burn in you

Like Fire smouldering deep in the ocean’s depths

Were it not so, how can you burn lovers like me,

When mere ashes is all that is left of you?” –Sakuntala of Kalidasa III-3

4.பதிற்றுபத்து 62 (கபிலர் பாடிய எழாம்பத்து)

ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு

ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரும்

மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்

துப்புத்துற போகிய கொற்ற வேந்தே

5.பதிற்றுபத்து 72 (அரிசில் கிழார் பாடிய எட்டாம்பத்து)

பொங்குபிசிர் நுடக்கிய சஞ்சுடர் நிகழ்வின்

மடங்கல் தீயின் அனையை

சினங்கெழு குரிசில்.

Picture shows Fire Tornado in Hawaii, USA.

 

6.கடல் கோள் பற்றி: கலித்தொகை 105 (நல்லுருத்திரன்)

மலிதிரை ஊர்ந்து தன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று, மேவார் நாடு இடம்படப்

புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை.

*****************************************