தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்- மஹான் தியாகராஜரின் பாடல்களிலிருந்து)

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்று எங்கள் சுப்ரமணிய பாரதி சொன்னது உங்கள் கீர்த்தனைகளைக் கேட்டுத்தானோ!  13 வயதில் நீவீர் பாடிய முதல் பாட்டு என்ன?

நமோ நமோ  ராகவாய

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரே, 96 கோடி தடவை  ராம நாமம் ஜபித்தீர், எழுதினீர்.  “ஓ ராம, நீ நாமமு ஏமி ருசிரா ,ஸ்ரீ ராம, நீ நாமமு எந்த ருசிரா”

என்று பத்ராசலம் ராமதாசர் பாடினார். நீங்கள் ராமனை எப்படிப் பாடினீர்கள்?

மேலு மேலு ராம நாம சுகமு ஈதரலோ

நிண்டு தாஹமு கொன்ன மனுஜுலகு நீருத்ராஹின சுகம் புகண்டே

சண்ட தாரித்ர மனுஜுலகு தன பாந்தமு அப்பின——–

( பொருள்: ராம, இந்தப் பூமியில் உன் நாமமே சுகம் தரும். தாகத்தால் தவிக்கும் மனிதனுக்கு தண்ணீர் கிடைத்ததைவிட, ஏழைக்குப் பணம் கிடைத்ததைவிட, வெப்பம் தாங்காதவனுக்கு குளிர்ந்த குளம் கிடைத்ததைவிட, பயத்தால் நடுங்குபவனுக்கு துணிவு கிடைத்ததைவிட, தீராப் பசியுடையவனுக்கு பாயசத்துடன் அறுசுவை விருந்து கிடைத்ததைவிட———– ராமா, உன் நாமமே சுகம் தரும்)

அருமையான பாட்டு. ஆழமான பொருட்சுவை. உங்களைத் திருடர்கள் தாக்கி வழிமறித்த போது ராம லெட்சுமணனே வந்து காப்பாற்றினார்கள். என்ன பாட்டு பாடியவுடன் அவர்கள் வந்தார்கள்?

முந்து வெனுக இரு பக்கல தோடை முரகர ஹர ராரா (தர்பார் ராகத்தில்)

(பொருள்: முர, கரகளை வதம் செய்தோனே, எனக்கு இருபக்கத்திலும் துணையாக வாரும் ஐயா—-)

ஒரு முறை ஒரு கிழ தம்பதியர் வந்து உம் கையில் காசையும் கொடுத்துவிட்டு ராமனும் சீதையுமாய் மறைந்தார்களே.என்ன பாடினீர்?

பவனுத நா ஹ்ருதயமுன (மோகன ராகத்தில்)

திருவாரூரில் அவதரித்த த்யாகப்ரம்மமே, உமது தந்தை ராமப்ரம்மத்தின் ராமாயண கதாகாலச்சேபத்தை கேட்டுத்தான் ராம பக்தி ஏற்பட்டிருக்க வேண்டும்.உமது குரு ராமக்ருஷ்ணானந்தா நாரத மந்திரம் உபதேசித்தார். ராமன் மட்டுமின்றி சிவன் முதலியோர் மீதும் கிருதிகள் பாடினீரா?

சிவ சிவ சிவ யனராதா,  பவ பய பாதலனண சுகோராதா (பந்துவராளி ராகம்) பொருள்: சிவ சிவ சிவ என்று சொல்லக் கூடாதா? உங்கள் பிறவி என்னும் துயரைப் போகக்கூடதா?)

உமது சங்கீத குரு வேங்கடரமணய்யா உமது கிருதிகளை வியந்து அவருடைய பதக்கங்களையே எடுத்து உம் மீது சூட்ட அதை பெருந்தன்மையுடன் அவரது மகள் கல்யாணத்தில் கொடுத்தீர்கள்.

சரபோஜி மன்னன் அழைத்தபோது போக மறுத்து “பணம் சுகம் தருமா, ராமா உன் முன்னிலையில் இருப்பது சுகமா” என்று பாடினீரே, அந்தப் பாட்டைக் கொஞ்சம்………

நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவ சுகமா (கல்யாணி ராகம்)

இதனால் உங்கள் தமையனார் கோபத்தில் நீர் பூஜித்த விக்ரகங்களை ஆற்றில் போட்டார். அதையும் கண்டுபிடித்தீர். 2000க்கும் அதிகமான கிருதிகளை எழுதினீர், 200க்கும் அதிகமான ராகங்களைப் பயன் படுத்தினீர்கள். எங்களுக்குக் கிடைத்ததோ 700 கிருதிகள்தான்.உங்கள் தமையன் செய்த அநியாயங்களை ராமனிடம் முறையிட்டீராமே!

அநியாயமு சேயகுரா ராம நன்னன்யுனிகா……..

(ராமா, எனக்கு அநீதி இழைக்காதே, என்னை வேற்று மனிதனாகப் பார்க்காதே………..என் அண்ணன் தரும் தொல்லைகள் தாங்கவில்லை.)

உங்களுக்குக் கோபம் அதிகமாமே. ஒருமுறை உங்கள் மனைவி இதைச் சுட்டிக் காட்டியவுடன் கோபத்தின் தீமையை உணர்ந்து ஒரு பாடல்…….

சாந்தமுலேக சவுக்கியமுலேது —–(சாந்த குணம் இல்லாவிடில் சௌக்கியமும் இல்லை)

நாதத்தின் தோற்றம், சப்தஸ்நரங்களின் பிறப்பு, ராகங்களின் குணம் பற்றியே 15 கிருதிகள் எழுதினீர். அவைகளில்  சில……

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

நாபி, ஹ்ருத், கண்ட, ரசன நாச ஆதுலயந்து

சோபில்லு ஸப்தஸ்வர ஸுந்தரலு பஜிம்பவே

(பொருள்: ஏழு ஸ்வரங்கள் எனப்படும் சுந்தரர்களை வழிபடுவாய். கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றில் திகழும் சுந்தரர்களை வழிபடுவாய். ருக் சாம முதலிய வேதங்களிலும் காயத்ரி மந்திரத்திலும்,வானோர், அந்தணர் உள்ளங்களிலும், தியாகராஜனின் கீர்த்தனைகளிலும் நடமாடும் சப்தஸ்வரங்களை வழிபடு).

வெறும் வாய்ப்பாட்டு மட்டும் இறைவனிடம் அழைத்துச் செல்லுமா?

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

ப்ருங்கி, நடேச, சமீரஜ, கடஜ, மதங்க நாரத ஆதுலு உபாசிஞ்சே

சங்கீத ஞானமு பக்தி வினா சன்மார்கமு கலதே

(பொருள்: பக்தி இல்லாமல் பாடும் இசை, சன்மார்க்கத்துக்கு இட்டுச் செல்லாது. ப்ருங்கி முனிவர், நடேசன், வாயு மைந்தன், அகத்தியன், மதங்கர், நாரதர் முதலியோரால் உபாசிக்கப்பட்ட இசை ஞானம் (அவர்களைப் போல பக்தியுடன் பயிலப்பட வேண்டும்) பக்தி இலாவிடில் நல் வழிக்கு கொண்டுசெல்லாது.)

18 வயதில் பார்வதியையும் அவர் 5 ஆண்டுகளில் இறக்கவே அவர் தங்கை கமலாம்பாவையும் கல்யாணம் செய்தீர். ஒரு மகளை ஈன்றெடுத்தீர். நீங்கள் மூன்று நாடகங்கள் எழுதினீர்கள், அவை யாவை?

பிரஹலாத பக்தி விஜயம், நவ்க சரித்திரம், சீதாராம விஜயம்

புத்தூரில் கோவில் கிணற்றில் ஒருநல்ல மனிதர் தவறி விழுந்து இறந்தபோது என்ன பாட்டு பாடி அவரை உயிர்ப்பித்தீர்கள்?

நா ஜீவாதார நாநோமு பலமா

ராஜீவ லோசன ராஜராஜ சிரோமணி

நாஜீபு ப்ரகாசமா, நா நாசிகா பரிமளா

நா ஜப வர்ண ரூபமா, நாது பூஜாஸீமமா (பிலஹரி ராகம்)

(பொருள்: என் ஜீவனுக்கு ஆதாரமே, என் நோன்புகளின் பலனே, தாமரைக் கண்ணனே, ராஜ ராஜனே, என் கண்களின் ஒளியும் நீயே, மூக்கில் நறுமணமும் நீயே, என் ஜபங்களின் வடிவும் நீயே, என் பூஜை மலரும் நீயே)

திருவையாயாற்றில் சமாதி அடையும் முதல் நாளன்று பிரம்மாநந்தாவிடம்  சந்யாசம் பெற்றீர். இறுதி நாள் நெருங்கிவிட்டதை அதற்கு சில நாட்களுக்கு  முன் கனவில் கண்டு பாடிவிட்டீரே, அது என்ன பாட்டு?

கிரிபை நெல (சகானா ராகம்)

திருவையாற்றிலுள்ள உங்கள் சமாதியில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆராதனையில் பாடப்படும் (ஐந்து) பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் எவை?

நாட்டை ராகத்தில்- ஜகதாநந்த காரக

ஆரபி ராகத்தில் – சாதிஞ்செனே, ஓ மனசா

கௌளை ராகத்தில் – துடு குகல நன்னே தொர

வராளி ராகத்தில் – கன கன ருசிரா

ஸ்ரீ ராகத்தில் –எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கு வந்தனமுலு

கர்நாடக சங்கீத பிதாமஹர் புரந்தர தாசர் தனது பாடல்களில் புரந்தர விட்டல என்றும் சியாமா சாஸ்திரிகள் சியாம கிருஷ்ண என்றும் முத்து சுவாமி தீட்சிதர் குரு குஹ என்றும் முத்திரை வைத்து பாட்டு எட்டுக் கட்டினர். உங்கள் முத்திரை என்னவோ?

பவமான சுதுடுபட்டு, பாதார விந்தமுலகு

நீ நாம ரூபமுலகு நித்ய ஜய மங்களம்

ப்ர்ஹ்லாத நரதாதி பத்லு பொகடி ஸண்டு

ராஜீவ நயன தியாகராஜாதி வினுதனமன

(தியாகராஜரின் சுந்தரத் தெலுங்கு வாழ்க, எங்கும் மங்களம் பொங்குக)

விண்வெளி ராக்கெட்டும் விசேஷ பிரார்த்தனையும்

 

 

ஆதி சங்கரர் “கனக தாரா ஸ்தோத்திரம்” செய்தால் ஏழை வீட்டில் தங்க மழை பெய்கிறது. முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷனி ராகத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால் வறண்ட பூமியில் மழை பெய்கிறது. ஞான சம்பந்தர் பதிகம் பாடினால் இறந்துபோன பெண் அஸ்திக் கலச சாம்பல் எலும்பிலிருந்து எழுந்து வருகிறாள். நாமும் அதே ஸ்தோத்திரம் , பதிகம் பாடினால் ஏன் நமது பிரார்த்தனைகள் நிறைவேறுவதில்லை?

இதோ, கீழே இதற்கான விடை உள்ளது.

கிரகண நாட்களில் பிரார்த்தனை செய்தால் ஏன் பலன் பன் மடங்கு அதிகரிக்கிறது? சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பிள்ளையார் சதுர்த்தி, துர்காஷ்டமி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய நாட்களில் பூஜை செய்தால் ஏன் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று நமது மத நூல்களும் ஆச்சார்யர்களும் கூறுகிறார்கள்?

இதோ கீழே இதற்கான விடை உள்ளது.

இந்திய விண்கலம் சந்திரனுக்குச் சென்றதை எல்லோரும் அறிவர். அமெரிக்க ரஷிய விண்கலங்கள் செவ்வாய், சனி கிரகங்களுக்கு அவ்வப்போது ஏவப் படுகின்றன. பல விண்கலங்களும் பாதியில் கோளாறு ஆகி விழுகின்றன. ஏன் சில போயின, சில வெடித்து விழுந்தன? தவறான நேரம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம்.

 

ஒவ்வொரு விண்கலம் ஏவப்படும் முன்பாக பல ஆண்டுகள் திட்டமிடுவார்கள். என்ன என்ன ஏற்பாடுகள் தேவை தெரியுமா?

ஒரு ஏவுதளம் வேண்டும். இது கடலுக்கருகில் அல்லது மனித நடமாட்டம் இல்லாத பாலவனத்தின் பக்கத்தில் இருக்க வேண்டும். அதுவும் நில நடுக் கோட்டுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். இதற்குப் பின் எந்த கிரகத்துக்கு அனுப்புகிறோமோ அதன் பாதை, வேகத்தைக் கவனித்து, அது பூமிக்கு அருகில் வரும் போது ஏவ வேண்டும். விண்வெளியில் அதிக எரிபொருள் செலவில்லாமல் பயணம் தொடர ஒவ்வொரு கிரகத்தின் ஈர்ப்பு உந்து விசையைப் (Gravitational slingshot) பயன்படுத்த உரிய தருணத்தில் அனுப்ப வேண்டும். இது தவறினால் சில நேரம் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும்.

இனி ராக்கெட்டையும் விண்கலத்தையும் பார்ப்போம். ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையத் தாடவேண்டுமானால் ஒரு வினாடிக்கு குறைந்தது 11.2 கிலோமீட்டர் அல்லது எட்டு மைல் வேகத்தில் அந்த ராக்கெட் போக வேண்டும். அப்போதுதான் பூமியின் ஈர்ப்பு விசையை (Escape velocity ) மீறமுடியும். துல்லியமான கம்ப்யூட்டர் கணக்குகளில் ஒரு இம்மி பிசகானாலும் ராக்கெட்டோ விண்கலமோ அதன் இலக்கிலிருந்து பல கோடி மைல்கள் தள்ளிப் போய்விடும் .அல்லது புறப்பட்டவுடனே விழுந்துவிடும். பெரிய விண்கலம் ஆக இருந்தால் கூடுதல் எரிபொருளும் பெரிய ராக்கெட்டும் தேவைப்படும். கால நிலை முதலியவற்றைக் கணக்கில் கொண்டு (Launch window ) ஒரு கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.

செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட பெரும்பாலான விண்கலங்கள் தோல்வியில் முடிந்தன. பல தோல்விகளுக்கு என்ன காரணம் என்று இன்னும் ஆராய்ந்து வருகிறார்கள்.

இப்போது இதையே விசேஷ பிரார்த்தனையுடன் ஒப்பிடுங்கள். எப்படி ஈர்ப்பு விசையைத் தாண்ட வினாடிக்கு எட்டு மைல் வேகம் தேவையோ அப்படி நம்முடைய அகங்காரம், மமகாரம், தீய எண்ணங்கள், கோபம் தாபம் ஆகிவற்றைத் (Gravity) தாண்ட தீவிர பிரார்த்தனை வேண்டும்.

எப்படி சில நாட்களில் ஏவினால் கிரகங்களின் உந்துவிசை பயன்படுகிறதோ(Gravitational slingshot)  அப்படி விசேஷ நாட்களில் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனைக்கு உந்து விசை கிடைக்கும். அப்போது நூறு முறை நாம ஜபம் செய்தாலும் அது பல்லாயிரம் மடங்காகும்.

எப்படி குறிப்பிட்ட நாட்களில் (Launch window ) ஏவினால்தான் ராக்கெட்டுகள் எளிதாக இலக்கை அடையுமோ அப்படி பண்டிகை அல்லது கிரகண காலங்களீல் செய்தால் எளிதில் நினைத்ததை அடையலாம்.

எப்படி குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுகிறோமோ அப்படி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை செய்தால் பிரார்த்தனையின் முழுப் பலனும் கிடைக்கும்.

எப்படி பெரிய ராக்கெட்டுக்கு நிறைய எரிபொருள் தேவைப் படுகிறதோ அப்படி நம்முடைய பெரிய வேண்டுகோளுக்கு நிறைய பிரார்த்தனை தேவைப்படும். ஆனால் சில நாட்களில் கிரகங்கள் (செவ்வாய், சனி) அருகில் இருந்தால் அதன் ஈர்ப்புவிசை (Gravitational slingshot) பயன்படுவது போல நமக்கு குறைந்த பிரார்த்தனைக்கு நிறைந்த பலன் கிடைக்கும்.

ஆதி சங்கரர், சம்பந்தர் போன்றோருக்கு இந்த கணக்குகள் எல்லாம் ஞானக் கண்களால் தெரியும். ஆதலால் அவர்கள் நினைத்ததை முடிக்கிறார்கள். அவர்கள் கூறியது போல நாமும் பண்டிகை நாட்களில் ஒரே எண்ணத்தோடு ராக்கெட் போல குறி இலக்கு நிர்ணயித்தோமானால் எளிதில் பலன்கள் கிட்டும். நம்முடைய பிரார்த்தனைக்கும் ஒரு “லாஞ்ச் விண்டோ” தேவை.

 

சாக்ரடீஸுடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை- பதில்கள் பிளாட்டோ நூல்களிலிருந்து)

சாக்ரடீஸ், நீரோ தத்துவ ஞானி, உமது மனைவியோ அடங்காப் பிடாரி. ஒரு முறை நீர் உரையாற்றும்போது அவள், உம்மீது வசை மாரி பொழிந்து ஒரு வாளி தண்ணீரையும் கொட்டினாளே, அப்போது என்ன சொன்னீர்?

இதுவரை இடி இடி இடித்தது. இப்போது மழை பெய்கிறது.

 

அட, பொறுமையின் இலக்கணமே ! கிரேக்க நாடு பெற்றெடுத்த தவப் புதல்வா! அப்படியானால் நங்கள் எல்லாம் கல்யாணமே கட்டக் கூடாதோ?

வாய்ப்பு கிடைத்தால் விடாதீர்கள். கல்யாணம் செய்துகொள்ளுங்கள். நல்ல மனைவி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். மோசமான மனைவி கிடைத்தால் தத்துவ ஞானி ஆகிவிடுவீர்கள்.

இப்போது புரிகிறது, நீங்கள் எப்படி தத்துவ வித்தகர் ஆனீர்கள் என்று. எங்கள் உபநிடத்தில் கூறியதை நீரும் கூறினீரா?

உன்னையே நீ அறிவாய்

நல்ல வாசகம், சாக்ரடீஸ், நீவீர் வறுமையில் வாழ்ந்தீர், ஆனால் ஞானச் செல்வத்துக்குக் குறைவில்லை. இளஞர்களில் உள்ளத்தைக் கொள்ளை கொண்டீர். இதுதான் உம் மீதுள்ள பெரும்பழி.

நான் யாருக்கும் எதையும் சொல்லித்தர முடியாது. சிந்தனை செய்யத் தூண்டுவதே என் பணி. உன்னை நீ அறிய சிந்தி, நன்றாகச் சிந்தித்துப் பார்.

 

தெய்வவாக்கில் உமக்கு நம்பிக்கை அதிகம். டெல்பியில் குறி சொல்லும் தெய்வத்திடம் மிகப் பெரிய அறிவாளி யார் என்று கேட்டதற்கு உம்முடைய பெயரை அது கூறியது.அப்போது என்ன தோன்றியது?

என்னை விடச் சிறந்த அறிவாளி யாரையாவது நான் தேடிக் கண்டுபிடிப்பேன். உடனே தெய்வத்திடம் போய் ஏன் என்னைச் சொன்னாய் என்று கேட்பேன்

 

அஞ்சாத சிங்கம்,ஆனால் ஒரு ஞானி, எங்கள் ஊர் ஜனக மகாரஜா போல,

அறிவாளி யாரையாவது கண்டுபிடித்தீர்களா?

(பல அரசியல்வாதிகளையும் தத்துவ அறிஞர்களையும் பார்த்தபின்)

அவர்களை விட நான் சிறந்தவனே, தெய்வம் சொன்னது பொய்யன்று.

 

உமக்கு எப்படி இவ்வளவு துணிவு பிறந்தது?

நல்ல செயலைத் துவங்கும்போது அது நேர்மையானதா என்றுதான் பார்ப்பேன். உயிருக்கு ஆபத்து விளையுமா என்று சிந்திப்பது கோழைத் தனம்.

 

உமது புகழ்பெற்ற பொன்மொழி எங்கள் சரஸ்வதி தேவி “கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு” என்பதைப் பிரதிபலிக்கிறதே:

எனக்கு ஒன்று தெரியும் ,அது என்னவென்றால் எனக்கு ஒன்றும் தெரியாது

I know one thing, that I know nothing.

 

ஆஹா, புரிகிறது. எங்கள் வள்ளுவரும் “ அறிதோறு, அறியாமை கண்டற்றால்” என்றுதான் சொல்வார்.படிக்கப் படிக்கத்தான், அடடா, இவ்வளவு நாள் கிணற்றுத் தவளையாக இருந்தோமே என்று நினைக்கிறோம்

கிரேக்க மக்கள் தொழுதுவந்த தெய்வங்களை நீர் புறக்கனிக்கச் சொன்னதாக உம் மீது பழி சுமத்தப் பட்டுள்ளது, இளைஞர்களை ஒழுக்கத்திலிருந்து தவறச் செய்தீர்களாமே?

புதிய தெய்வங்களை உண்டாக்கியதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். மற்றொரு புறம் நான் நாத்தீகம் பேசியதாகச் சொல்கிறீர்கள். இது முரணாக இல்லையா? வெறுப்பும் பொறாமையும் தான் உங்கள் குற்றச் சாட்டுகளுக்குக் காரணம்.

 

எழுபது வயது, மூன்று பிள்ளைகளுக்கு தந்தை. நீதி மன்றத்தில் மூன்று சொற்பொழிவுகள் செய்தீர்கள்.முதல் சொற்பொழிவில் என்ன சொன்னீர்கள்?

வீண் கர்வத்தாலும், அறியாமையாலும் கஷ்டப்படும் மக்களைத் திருத்துவதே ஆண்டவன் எனக்கு இட்டிருக்கும் பணி. அறம் தவறாது நீதி நிலை நாட்டப்படவேண்டும். இதுவே என் விருப்பம். என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்பேன்.

 

உமக்கு மரண தண்டனை விதித்த நீதி மன்றத்தில் 501 பேர் இருந்தனர்.ஒரு கவிஞனும் தோல் வியாபாரியும் உமக்கு எதிராக நின்றனர். இவர்களில் 220 பேர் உமக்கு ஆதவளித்தபோது இரண்டாவது உரையில் என்ன சொன்னீர்?

உங்கள் தீர்ப்பு எனக்கு வியப்பளிக்கவில்லை. முன்கூட்டியே குற்றவாளி என்று முடிவுகட்டி விட்டீர்கள். ஆனால் இத்தனை குறைந்த வாக்குகள் தான் எனக்கு மரண தண்டனை அளித்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

 

நான் குற்றமற்றவன் என்று என் மனச் சாட்சி சொல்லுகிறது எனக்கு நீங்கள் பசியும் பிணியும் ஏற்படாதவாறு மானியம் தந்திருக்க வேண்டும். ஆனால் நான் சிறையில் அடிமாடு போல வாழ விரும்பவில்லை நான் வேறு நாட்டுக்கு சென்று வசிக்கவும் விரும்பவில்லை. நான் ஒரு ஏழை, அல்லது அபராதத் தொகை கொடுத்திருப்பேன். எனக்கு பொருளை இழப்பதில் ஒரு கஷ்டமும் இல்லை.

 

மேலை நாட்டு வள்ளுவா, நீயோ வள்ளுவனுக்கும் கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தாய்,மூன்றாம் சொற்பொழிவு பற்றி…….

ஏதன்ஸ் நகர மக்களே! நீங்கள் எனக்கு மரண தண்டனை விதித்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஒரு லாபமும் கிடைக்கப் போவதில்லை. நான் வயதானவன். இந்தத் தண்டனை இல்லாவிட்டாலும் குறுகிய காலத்துக்குள் நான் இறக்கத்தான் போகிறேன் போர்ககளத்தில் ஒரு வீரன் எப்படி நடந்துகொள்வானோ அப்படியே நீதிமன்றத்திலும் நடக்கவேண்டும். மனிதனுக்கு மரணம் ஆபத்தல்ல. அதர்மமே ஆபத்து தர்ம வழியில் நடப்பவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பமில்லை.

 

எனக்கு ஆதரவாக செயல்பட்டவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நான் எப்படி செல்வர்களையும் பிறரையும் கேள்விகள் கேட்டு துளைத்தேனோ அப்படியே நீங்களும் செய்ய வேண்டும்.அவர்கள் போக்கில் விட்டு விடாதீர்கள். காலம் அதிகரித்து விட்டது. இன்னும் கொஞ்ச காலம் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். நானோ இப்போதே உங்களை விட்டுப் போகிறேன். விடை கொடுங்கள்.

 

(விஷம் கொடுத்து கொல்வதற்கு முன் சிறைச் சாலையில் நடந்தது: நம் ஊரில் கோவில் திருவிழாவுக்கு கொடி ஏற்றிய பிறகு முக்கிய காரியங்களை நிறுத்திவைப்பது போல, ஏதன்ஸ் நகர மக்கள் அருகிலுள்ள தீவின் விழாவுக்கான கப்பல் புறப்பட்டுவிட்டால் அது திரும்பும் வரை எதையும் செய்ய மாட்டார்கள். இதனால் சாக்ரடீஸின் மரண தண்டனை சிறிது தடைப்பட்டது)

நண்பர் :கெட்ட செய்தி கொண்டுவந்திருக்கிறேன்

சாக்ரடீஸ்: கப்பல் வந்து விட்டதா?

நண்பர்: நாளை வரப்போகிறது. நாளை உமது ஆயுள் முடியும்

சாக்ரடீஸ்: நண்பரே நான் தூங்குவதால் என்னை எழுப்பாமல் காத்திருந்தீர். அப்பொழுது நான் ஒரு கனவு கண்டேன்.மங்கை ஒருத்தி மங்கல உடை தரித்து என் முன் தோன்றினாள். இன்றைக்கு மூன்றாம் நாள் நீர் அழகிய சொர்க்கத்திற்கு வந்து விடுவீர் என்றாள்.

 

விஷம் அருந்தும் முன் நீர் என்ன சொன்னீர்?

உடல் நமக்கு இறைவன் தந்த சிறைச் சாலை; இதிலிருந்து நாமாகத் தப்பிவிடக்கூடாது. ஆண்டவனே நம்மை விடுதலை செய்யவேண்டும் என்று ஞானிகள் கூறுகிறார்கள்.

 

விஷ பானம் உடலில் வேலை செய்யத் துவங்கியவுடன் நீர் கடைசியாகச் நண்பரிடம் சொன்ன வார்த்தைகள்…….?

நான் ஒரு கோவிலுக்கு பலிக் கடன் செய்ய வேண்டும். அதை எனக்காக நீர் செலுத்திவிடும்.

 

(சாக்ரடீஸ் எந்த புத்தகமும் எழுதவில்லை. அவரது சீடர்கள் ,குறிப்பாக பிளாட்டோ எழுதிய நூலிலிருந்தும் சாக்ரடீஸை கிண்டல் செய்து அரிஸ்டபனீஸ் எழுதிய நாடகத்திலிருந்தும் பல விஷயங்களை அறிகிறோம்.)

மஹா சிவராத்ரி மகிமை

 

மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் 13 அல்லது 14 ஆம் இரவில் சிவராத்ரி அனுஷ்டிக்கப்படுகிறது. சிலர் இதை பங்குனி மாதம் என்றும் கணக்கிடுவர்.

விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி எப்படி முக்கியமோ அப்படி சிவ பக்தர்களுக்கு சிவராத்திரி மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி கிடந்து உபவாசம் அனுசரித்து மறுநாள்தான் சாப்பிடுவர். உலகு எங்கிலும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுதும் பூஜை பாராயணம், அபிஷேகம் ஆகியன நடைபெறும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் அன்று சிவனைத் தரிசிக்க லட்சக் கணக்கான மக்கள் கூடுவர்.

பசுபதி நாதர் கோவில் கொண்டுள்ள நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இது பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உண்மையில் சிவராத்ரி நேபாள நாட்டின் தேசியத் திருவிழாவாகும். அன்று சிவனை அந்த நாட்டின் ராஜாவாக கருதி ராஜ மரியாதைகள் செய்வர். காசி எனப்படும் வாரணாசியிலோ மக்கள் கூடம் அலை மோதும்.

சிவராத்திரி தோன்றிய கதை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. ஒருவன் அறிந்தோ அறியாமலோ சிவலிங்கத்துக்குப் பூஜை செய்தாலும் அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதே அந்த செய்தி. சிவ ராத்திரி கதை மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது கூறப்படுகிறது.

சித்ரபானு என்ற மன்னன் உபவாசம் இருந்தபோது அஷ்டவக்ரர் அங்கே வருகிறார். மன்னன் உபவாசம் இருப்பதன் காரணத்தை வினவியபோது அம் மன்னன் தனக்கு பூர்வ ஜன்மத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாகக் கூறுகிறான். முன் ஜன்மத்தில் தான் ஒரு வேடன் என்றும் காட்டில் வேட்டையாடிய போது நேரம் ஆகிவிட்டதால் இரவுப் பொழுதை ஒரு மரத்தின் மீது கழித்ததாகவும் அதன் கீழே வந்து தங்கிய மானைக் கொன்று வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இலையாகப் பறித்து மானுக்குப் போட்டதாகவும் கூறுகிறான்.

காலையில் மானுடன் வீட்டுக்குச் சென்றபோது யாரோ ஒருவர் உணவு கேட்டு வந்ததால் அதைக் கொடுத்துவிட்டதாகவும் சிறிது காலத்துக்குப் பின் இறந்துவிட்டபோது சிவ தூதர்கள் இருவர் வந்து ராஜ உபசாரம் செய்து அழைத்துக் கொண்டு போனபோதுதான் முழு விஷயமும் தெரிய வந்ததாகவும் மன்னன் கூறுகிறான். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட மரம் சிவனுக்கு மிகவும் உகந்த வில்வ மரம் என்றும் மானுக்குப் போட்ட வில்வ இலைகள் அருகில் இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்ததால் எல்லா புண்யமும் வந்து சேர்ந்ததாகவும் மன்னன் கூறுகிறான்.

இந்தக் கதை நமக்குப் புகட்டுவது என்ன?

  1. சிவனுக்குப் பூஜை செய்கிறோம் என்று தெரியாமல் வில்வத்தைப் போட்டாலும் கூட முழு புண்ணியமும் கிட்டும்..
  2. வேடனாக இருந்து செய்த பாபங்கள் கூட மன்னிக்கப் படும்.
  3. அறியாமல் செய்த புஜையானாலும் அடுத்த ஜன்மத்தில் மன்னர் பதவி கிட்டும்

இந்தப் புனித நன்னாளில் நாம் என்ன செய்யலாம்?

பெரிய நகரங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவன் கோவில்களில் இரவில் நான்கு ஜாமங்களிலும் பூஜை அபிஷேகம் நடக்கும். அதை தரிசிக்கலாம். பூ,தேங்காய் பழம் கொண்டுபோய்க் கொடுக்கலாம்.

மறு நாள் அலுவலகம் இல்லாவிட்டால் இரவு முழுதும் விழித்திருந்து ருத்ர பாராயணம் செய்யலாம். அது முடியாதவர்கள் ஓம் திரயம்பகம் எனத் துவங்கும் ம்ருஞ்ஜய மந்திரத்தை இயன்றவரை ஜபிக்கலாம். அதுவும் முடியாதவர்கள் மஹா மந்திரமான ஒம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தை ஜெபிக்கலாம்.

பட்டினி கிடக்க முடிந்தவர்கள் ஒரு நேரமாவது சிவனை நினைந்து உபவாசம் இருக்கலாம்.

வட இந்திய காய்கறிக் கடைகளில் (குறிப்பாக லண்டனில் வெம்பிளியில்) இலவசமாக வில்வ பத்திரம் கிடைக்கும். அதை சிவன் மீது அர்ச்சிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால், நாள் முழுதும் “சிவனே” என்று கிடந்தால் போதும். 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

ஓம் நம சிவாய.

*****************************

 

அப்பருடன் 60 வினாடி பேட்டி

 

 

(கேள்விகள்-சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்-அப்பர் தேவாரத்திலிருந்து)

 

வாகீசரே, கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற வரியுடன் பதிகம் பாடியவுடம் உமது தீராத சூலை நோய் திர்ந்தது. உமது  பணிதான்  என்ன?

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்

தன் கடன் அடியேனையும் தாங்குதல்

என்கடன் பணி செய்து கிடப்பதே

 ‘கொலவெறி’ யானையை உங்கள் மீது பல்லவ மன்னன் ஏவிவிட்டானே, எப்படி சமாளித்தீர்கள்?

சுண்ணவெண் சந்தனச்சாந்தும் சுடர் திங்கட் சூளாமணியும்

…………………………………………….

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை

 

இதைப் பாடியவுடம் மத யானை உங்களை வலம் வந்து வணங்கியதை உலகமே அறியும். மனிதகுலத்துக்கு ஒரு அறைகூவல் விடுத்தீர்களோ?

மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்

கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே

புனிதன்  பொற்கழல் ஈசன் எனும் கனி

இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே

 

பெற்றோர்கள் மருள்நீக்கியார் என்றும், சம்பந்தர் அப்பரே என்றும், சிவ பெருமான் நாவுக்கரசு என்றும் அழைத்தனர். கடும் விதியையும் தூக்கி எறியலாம் என்று பாடினீரா?

தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்கு கன்னன்

பண்டை உலகம் படைத்தான் தானும் பாரை அளந்தான் பல்லாண்டிசைப்ப

திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ் சில பாடச் செங்கன் விடை ஒன்றூர்வான்

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வினையைக் கழற்றலாமே.

 

சமணர்களின் சொற்கேட்டு மகேந்திர பல்லவ மன்னன் உம்மை சுண்ணாம்புக் காளவாயில் போட்டபோது என்ன பாடினீர்?

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிளவேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே

 

அற்புதம் பல செய்த பெரியாரே, இதைப் பாடியவுடன் அந்த வெப்பம் எல்லாம் தணிந்து வெளியே வந்தீர். கல்லைக் கட்டி உம்மைக் கடலில் போட்டானே, அப்பொழுது என்ன செய்தீர்கள்?

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை ஆவது நமச்சிவாயவே

 

திரு அங்க மாலைப் பாடலில் எல்லா உடல் உறுப்புகளையும் சொல்லி பாடல் செய்தீர். மற்றொரு பதிகத்தில் பழமொழி ஒவ்வொன்றையும் வைத்து பாடல் செய்தீர்.ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களை வைத்து பாடல் செய்தீர்.நால்வரில் உம் பாட்டில்தான் அதிக தமிழ் மணம் வீசுகிறது.

 

மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளோடும் பாடிப்

போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதன் மடப் பிடியோடும் களிறு வருவன கண்டேன்

கண்டேன் அவர் திருப் பாதம் கண்டறியாதன கண்டேன்

 

கங்கைகொண்ட சோழபுர வெளிப் பிரகார புற நடராஜர் சிலை, உம் பாட்டில் உள்ளது போலவே சிரிக்கிறாரே!

குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமிண் சிரிப்பும்

பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்

இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

 

மனமே படகு, அறிவே துடுப்பு, கோபமே சரக்கு, நமது செருக்கே பாறை என்று உருவகப்படுத்தி பாடினீர்களே, அது என்ன பாட்டு?

மனம் என்னும் தோணி பற்றி மதி என்னும் கோலை ஊன்றி

சினம் என்னும் சரக்கை ஏற்றிச் செறி கடல் ஓடும்போது

மதனெனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணா

துனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று சம்பந்தர் சொன்னார்.

துன்பமில்லாமல் வாழ முடியுமா?

 

துன்பமின்றித் துயரின்றி என்றும் நீர்

இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்

என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு

அன்பனாயிடும் ஆனைக்கால் அண்ணலே

“நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை”

 

“ஞாலம் நின் புகழே மிக வேண்டும்” என்று சிவனைப் பாடிய நீங்கள் யார் யாரை வணங்குவீர்கள்?

சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து

தரணியொடு வான் ஆளத் தருவரேனும்

மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்

மாதேவர்க் ஏகாந்தர் அல்லாராகில்

அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்

ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்

அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

 

“தோன்றாத் துணைவன்” என்றும் “நினைப்பவர் மனம் கோயிலாகக்கொண்டவன்” என்றும் “ஞானப் பெரும் கடலுக்கு ஓர் நாவாய்” என்றும் சிவனை அற்புதமாக வருணித்த வள்ளலே, கோவில் கோவிலாகச் சென்று செடி கொடிகளை அகற்றி உளவாரப் பணி செய்த உத்தமரே, சிறுவயது விளையாட்டிலும், இளம் வயது காதலிலும் கழிகிறது என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தத்தில் பாடியதை——-

 

பாலனாய்க் கழிந்த நாளும் பனி மலர்க் கோதை மார்தம்

மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து

கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்

சேலுலாம் பழன வேலித் திருக்கொண்ட்டீச் சுரத்துளானே

 

புனித நீராடலால் மட்டும் பலன் இல்லையா??

கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என்

கொங்கு குமரித் துறை ஆடில் என்

ஓங்கு மாகடல் ஓத நீராடில் என்

எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே

 

நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை நீவீர் பாடியதன் மூலம் மாணிக்கவாசகர் உங்கள் மூவருக்கும் முன் வாழ்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொன்னீர்கள். “சங்கரா செய போற்றி” என்ற வரிகள் மூலம் ஆதி சங்கரரும் உங்களுக்கு முந்தியவர் என்பதைக் கூறிவிட்டீர்கள். கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே  காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் என்பதால் நீவீர் ஜீவன் முக்தர் என்பதையும் எங்களுக்குக் காட்டிவிட்டீர்கள். உங்களைப் பல கோடி முறை வணங்கி வழிபடுகிறோம்.

(மேலும் இருபது பெரியார்களுடன் 60 வினாடிப் பேட்டிகள் உள்ளன. படித்து இன்புறுக)

*************************

 

நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அருணகிரிநாதரும்

Statue of Al Biruni

அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.

 

அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.

 

நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.

 

வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும்  சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.

 

இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.

 

ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.

 

நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்

பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட

சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,

ஆதல் நின்னகத்து அடக்கிச்

சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.

(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)

பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.

 

இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி

 

ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.

 

நெல்லிக்காய் நிற விஷ்ணு

 

அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!! (கரு நெல்லி நிறமுடைய அரியின் மருகன் நீ)

 

“மருமல்லி யார் குழலின்    மடமாதர்

மருளுள்ளி நாயடியன்       அலையாமல்

இருநல்ல வாகும் உனது    அடிபேண

இனவல்ல மான மனது     அருளாயோ

கரு நெல்லி மேனியரி         மருகோனே

கன வள்ளியார் கணவ           முருகேசா

திருவல்லிதாயம் அதில்     உறைவோனே

திகழ் வல்ல மாதவர்கள்    பெருமாளே.

 

நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும்  சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.

***

 

தாயுமானவருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள்:தாயுமானவர் பாடல்களிலிருந்து)

 

நீவீர் தினமும் இறைவனிடம் வேண்டுவது யாதோ?

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றும் அறியோம் பரபரமே

 

அருமையான வரிகள். இதை தினமும் ஒருவர் நினைத்தால் உலகம் முழுதும் அமைதி நிலவுமே. மந்திர தந்திரங்கள் செய்யத் தெரியுமா?

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்

கரடி வெம் புலி வாயையும்

கட்டலாம் ஒரு சிங்கம் முதுகின் மேல் கொள்ளலாம்

கண் செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்

வேதித்து விற்று உண்ணலாம்

வேறு ஒருவர் காணாமல் உலகத்து உலா வரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்

சந்ததமும் இளமையொடு இருக்கலாம் மற்றும் ஒரு

சரீரத்தினும் புகுதலாம்

சலமேல் நடக்கலாம் கனல் மேல் இருக்கலாம்

தன் நிகரில் சித்தி பெறாலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட

தேசோ மயானந்தமே

 

புரிகிறது, புரிகிறது, அஷ்டமா சித்திகள் கிடைத்தாலும் மனதை

அடக்குவதுதான் கடினம். “சும்மா இரு சொல் அற” என்றும் “பேசா அனுபூதி பிறந்ததுவே” என்றும் அருணகிரிநாதர் கூறுகிறாரே?

 

சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே

அல்லும் பகலும் எனக்கு ஆசை பராபரமே

 

மனதை சும்மா இருக்கவைப்பது எவ்வளவு கடினம் என்று அழகாகச்

சொல்லிவிட்டீர்கள். “இறைவன் சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச்

சத கூறு இட்ட கோணிலும் உளன்” என்று கம்பன் கூறுகிறானே?

 

மண்ணும் மறிகடலும்  மற்றுளவும் எல்லாம் உன்

கண்ணில் இருக்கவும் நான் கண்டேன் பராபரமே

 

ஓ! உமக்கும் அர்ஜுனனைப் போல விசுவ ரூப தரிசனம் கிடைத்ததா? புலால் சாப்பிடாதவர்களை “எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்” என்று எங்கள் வான் புகழ் வள்ளுவன் கூறுகிறானே?

 

“கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று

அல்லாதோர் யாரோ அறியேன் பராபரமே”

“கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க

எல்லோர்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே”

 

அட, நீங்களும் வள்ளுவர் கட்சிதானா? கடவுளை நம்பினால் கிரகங்கள்

ஒன்றும் செய்யாது என்று தேவாரம் கூறுகிறதே?

கன்மம் ஏது? கடு நரகு ஏது? மேல்

சென்மம் ஏது? எனைத் தீண்டக் கடவதோ!

 

சுகர், ஜனகர் போன்று தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்க்கை

நடத்தியவர்களை உங்களுக்குப் பிடிக்குமாமே.

“மதுவுண்ட வண்டு எனவும் சனகன் ஆதி

மன்னவர்கள் சுகர் முதலோர் வாழ்ந்தார்”

“ஓதரிய சுகர் போல் ஏன் ஏன் என்ன

ஒருவர் இலையோ எனவும் உரைப்பேன்”

 

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் சொல்லுகிறார். நீங்கள்……

“சைவ சமயமே சமயம் சமயாதீதப் பழம்பொருளைக்

கை வந்திடவே மன்றுல் வெளி காட்டும் இந்தக் கருத்தை விட்டுப்

பொய் வந்துழலும் சமய நெறி புகுத வேண்டா முக்தி தரும்

தெய்வ சபையை காண்பதற்கு சேரவாரும் சகத்தீரே”

“காகம் உறவு கலந்து உண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ

போகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பி பூரணமாய்

ஏக உருவாய்க் கிடக்குதையோ இன்புற்றிட நாம் இனி எடுத்த

தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே!”

 

நீர் எல்லா சமயங்களும் ஒன்று என்று அழகாகப் பாடியிருக்கிறீர்.

இதை எல்லோரும் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.

வேறுபடும் சமயம் எல்லாம் புகுந்து பார்க்கின்

விளங்கு பரம் பொருளே! நின் விளையாட்டல்லால்

மாறுபடும் கருத்து இல்லை; முடிவில் மோன

வாரிதியில் நதித் திரள் போல் வயங்கிற்றம்மா

 

சாக்கிய நாயனார் கல்லால் அடித்தபோதும் அர்சுனன் வில்லால்

அடித்தபோதும் கூட சிவன் அருள் செய்தாராமே?

கல்லால் எறிந்தும் கை வில்லால்

அடித்தும் கனி மதுரச்

சொல்லால் துதித்தும் நற் பச்சிலை

தூவியும் தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர் அன்பற்ற

நான் இனி ஏது செய்வேன்!

கொல்லா விரதியர் நேர் நின்ற

முக்கட் குரு மணியே!

 

நன்றி, தாயமானவரே.அருமையான செய்யுட்கள். “அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது”, “மனம் ஒரு குரங்கு” என்று பல பொன்மொழிகளைப் பாட்டில் வைத்துப் பாடியுள்ளீர்கள்.உமது புகழ் தமிழ் உள்ள வரை வாழும்.

 

பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி

 

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று நீங்கள் வளர்த்த பிள்ளையே எழுதி ஒரு ஊசியை வைத்துவிட்டுச் சென்றதாமே? 

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை

போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்

தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

 

பெரிய பணக்காரரான நீவீர் இப்படி திடீரென்று வீட்டை விட்டுப் போனால் ரோட்டில் எப்படி வாழ முடியும்?

 

உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு

அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே

விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்

வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

 

அப்படியானால் உங்கள் வீடு?

வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த

ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

உமது தமக்கை உமக்கு விஷ அப்பம் கொடுத்தவுடன் அதை எறிந்தவுடன் வீடே எரிந்து போயிற்றாமே?

தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

அட, இந்த சொற்களே வீட்டை எரித்து விட்டதா? ஆதி சங்கரர் போலவே நீரும் அம்மா இறந்தவுடன் 10 பாடல் பாடியே சிதைக்கு தீ மூட்டினீரா?

முன்னை இட்ட தீ முப்புறத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

 

இது ஒரு அற்புதமே!! என்ன என்ன பிழைகளுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்?

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும்   கசிந்து உருகி

நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ் செழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொருத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே.

 

அலை பாயும் மனதைக் கட்டுப் படுத்த ஒரு வழி சொல்லுங்களேன்?

ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு

உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்

நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி

என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

 

சிறுத்தொண்டர், திருநீலகண்ட நாயனார், கண்ணப்பர் போன்று தியாகங்களைச் செய்ய முடியுமா?

வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன

சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து

நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று

ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

 

கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவார் பற்றி உங்கள் கருத்து என்னவோ?

ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்

உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்

விளக்கு இருக்க தீ தேடுவீர்

 

விளக்கு இருக்கும்போது தீயைத் தேடுவார்கள்- அருமையான பழமொழி. அது சரி, அபு என்பவன் தேவதூதனைப் பார்த்து தன் பெயரை மக்களை நேசிப்பவர் பட்டியலில் எழுதச் சொன்னான். உங்கள் வரிகளைப் பார்த்துதான் Abu Ben Adam கவிதை வந்ததோ?

தமர் பெயர் எழுதிய  வரி நெடும் புத்தகத்து

என்னையும் எழுத வேண்டுவன் (கோயில் நான் மணி மாலை)

 

நியமம், நிஷ்டை இவைகள் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி

ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை

நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே

சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

 

சிவவாக்கியர் “நட்ட கால்லைச் சுற்றி நாலு புஷ்பம் போடாதே”

என்கிறாரே. நீங்கள் அவர் சொல்வதை ஆதரிக்கிறீர்களா?

உளியிட்ட கல்லையும் ஒப்பற்ற சாந்தையும் ஊத்தை அறப்

புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்

உங்கள் பாடல்களில் பெண்ணாசையை நிறைய கண்டிக்கிறீர்களே.

ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப்

பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே

குரு மார்க்கம் இல்லா குருடருடன் கூடிக்

கரு மார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே

ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல்

பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

நன்றி. உமது பாடல்கள் எல்லாவற்றையும் படிக்க எனக்கு ஆசை

சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி

(கேள்விகள்: எனது கற்பனை, பதில்கள்: சித்தர் பாடல்களிலிருந்து)

 

சாமி, குருட்டுத் தனமாக ,அர்த்தம் புரியாமல் செய்யும் சடங்குகளைச் சாடுகிறீர்களாமே?

நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி  வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ

 

அம்மாடியோவ், பாட்டில் அனல் பறக்குதே! நீங்கள் எல்லோரும் எட்டு வகை சித்துக்களைச் செய்வீர்களாமே? இதனால் என்ன பயன் ?

யோகசாலை கட்டுவார் உயரவும் எழும்புவார்

வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்

மோகம் கொண்டு மாதரின் மூத்திரப் பை சிக்கிப் பின்

பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே

 

அட, எட்டு சித்தி கிடைத்து அற்புதம் செய்தாலும் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. அப்ப, புண்ய நதிகளில் குளித்தால் என்ன?

எத்திசை எங்கும் எங்குமோடி எண்ணிலாத நதிகளில்

சுற்றியும் தலை முழுக சுத்த ஞானி ஆவரோ?

 

அது சரி, இப்படி எதை எடுத்தாலும் எதிர்த்துப் பேசுவதை எங்கள் ஊர் எதிக் கட்சித் தலைவர்களும் செய்ய முடியும். ஏதேனும்  செய்ய வேண்டியதை சொல்லுங்களேன்.

 

தீர்த்தலிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே

உள்ளில் நின்ற சீவனைத் தெளியுமே

உம்முளே தெளிந்து காண வல்லீரேல்

தான் அதாய்ச் சிறந்ததே சிவாயமே

 

நல்ல யோசனை. சித்தர்கள் எல்லோருக்கும் ஜாதியே கிடையாதா?

சாதியாவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்

பூத வாசல் ஒன்றலோ, பூத ஐந்தும் ஒன்றலோ?

காதில் வாளி , காரை, கம்பி, பாடகம் பொன் ஒன்றலோ?

சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ?

 

யார் போட்டாலும் தங்க நகைகள் மாறாதாக்கும் சித்தர்கள் சாகாமல் இருப்பார்களா?

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா;

விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா;

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே

 

எங்களை மாதிரித்தான் நீங்களும். அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.அது சரியா?

நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு  போல்

ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்

ஏறில் ஆறு ஈசனும்  இயங்கு சக்ரதரனையும்

வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே

 

நீரும் உப்பும் போல இருவரும் ஒருவரே, சரி, கடவுளை நாடுவோர் கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தலாமா?

மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகள்

வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கறார்

மனத்தகத்து அழுக்கறுத்த மவுன ஞான யோகிகள்

முலைத்தடத்து இருக்கினும் பிற்ப்பறுத்திருப்பரே

 

ஆக அவர்கள் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருப்பார்கள். தெய்வத் தமிழில் நிறைய ஆகமங்கள் துதிகள் இருக்கின்றனவே. எதைப் படிப்பது?

“நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்

நூறு கோடி நாள் இருந்தும் ஓதினாலும் அது என்ன பயன்?”

 

“சாம நாலு வேதமும் சகல சாஸ்திரங்களும்

சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்”

 

நீங்கள் 600 பாடல்களில் சொன்ன கருத்துக்கள்: மனதில் கடவுள் இருக்கிறான். சடங்குகளோ கோவிலோ தேவை இல்லை. தூய்மையாக இருந்தால் சாதி பேதம் இன்றி எல்லோரும் இறைவனை அடையலாம். நல்ல கருத்துக்கள் தாம், நன்றி.

 

 

கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

சங்கத் தமிழ் நூல்கள் சங்க கால மன்னர்கள் செய்த பல அபூர்வ யாகங்கள் குறித்து பல அதிசயமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒரு யாகம் முடிந்தவுடன் ஒரு பார்ப்பனரும் அவர் மனைவியும் மாயமாக மறைந்துவிட்டார்கள். இதைப் பாடிய புலவரின் பெயர் பாலைக் கவுதமனார். அவர் வேண்டுகோளின் பேரில் சேர மன்னன் 10 யாகங்களைச் செய்து முடித்தவுடன் இந்த அதிசயம் நடந்தது.(காண்க: செல்வக் கடுங் கோ வாழியாதனைப் பாலைகவுதமனார் பாடிய மூன்றாம் பத்து– பதிற்றுப் பத்து)

வேளிர் என்னும் குறுநில மன்னர்கள் தாங்கள் யாகத் தீயிலிருந்து உதித்ததாகக் கூறுகின்றனர். பஞ்ச பாண்டவர் மனைவியான திரவுபதி இப்படி யாகத்தீயில் உருவானவர். பல ராஜஸ்தானியர்கள் ,குஜராத்திகள், பஞ்சாபியர் ஆகீயோரும் இப்படிக் கூறுவது வியப்பான ஒற்றுமையாகும். கபிலரும் கூட இதே செய்தியைக் கூறுகிறார் (புறம் 201).

கரிகால் சோழன் வேத நெறி தவறாது ஆண்டவன். 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட இவன் சோழ மன்னர்களில் மிகவும் புகழ்பெற்றவன். இவன் பருந்து வடிவ யாக குண்டம் அமைத்து அதில் யூபம் (கம்பம்) நட்டான் என்று புறநானூற்றுப் புலவர் பாடுகிறார்.

தூவியற் கொள்கை துகளறு மகளிரொடு

பருதி உருவிற் பல்படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேத வேள்வி தொழில் முடித்த தூஉம்

புறம் 224 (கருங் குழலாதனார்)

 

கரிகாலனின் எல்லா மனைவியரும் அப்போது உடன் இருந்தனர். மனைவி உடன் இல்லாமல் வேள்வி செய்ய முடியாது. அவர்களை வேள்விக் கிழத்தியர் என்றே தமிழ் நூல்கள் கூறும்.

1008 அல்லது 10008 செங்கற்களை சுத்தி செய்து மந்திரம் கூறி ஒவ்வொரு செங்கல்லாக அடுக்குவர். சமீபத்தில் கேரளத்தில் கழுகு வடிவ யாக குண்டம் அமைத்து பெரிய யாகம் செய்தனர். கலிபோர்னியா பலகலைக் கழக ஆசிரியரகள், அறிவியல் வல்லுனர்கள் புடைசூழ இந்த யாகம் நிறைவேறியது.

தமிழ் மன்னர்கள் வேத நெறியை தங்கள் வாழ்வியல் நெறியாகக் கொண்டனர். காஞ்சி மகா சுவாமிகளும் தனது உரையில் வேதம், யாகம், பிராமணர்கள் ஆகியவற்றுக்கு சங்க காலத்தில் வழங்கும் தமிழ் சொற்களைப் பார்க்கையில் இந்தப் பண்பாடு எவ்வளவு காலத்துக்கு முன் எவ்வளவு ஆழ வேரூன்றியிருக்க வேண்டும் என்கிறார்.

வெளி நாட்டுக் காமாலைக் கண்ணர்கள் பொய்யான ஆரிய திராவிட வாதத்தை அவர்களுடைய மதத்தைப் புகுத்த நம் முன் வைத்ததால் நாம் மதி மயங்கிக் குழம்பிவிட்டோம்.

கல்யாண மந்திரங்களில் சப்தபதி என்னும் ஏழடி நடக்கும் மந்திரம் முக்கியமான மந்திரமாகும். மணப் பெண்ணும் மண மகனும் கையைப் பிடித்துக் கொண்டு தீயை வலம் வருவார்கள். இந்த மந்திரங்களின் அர்த்தம் தமிழ் திரைப் பட காதல் பாடல்களை எல்லாம் மிஞ்சிவிடும். கண்ணகியும் கோவலனும் தீயை வலம் வந்து ஐயர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதை சிலப்பதிகாரம் பத்திரிக்கை நிருபர் தோற்றுப் போகும் அளவுக்கு அழகாக வருணிக்கிறது.

ஏழடிகள் ஒருவருடன் நடந்து சென்றால் பந்தமும் பாசமும் உறுதி பெற்றுவிடும் என்று ரிக்வேதம் சொல்லுகிறது. கரிகாலன் தன்னைப் பார்க்க வந்தவர்களை வழி அனுப்புகையில் வேத நெறிப்படி ஏழு அடிகள் கூடவே நடந்து சென்று வழி அனுப்புவானாம்.

 

பால்புரை புரவி நால்குடன் பூட்டிக்

காலின் ஏழடிப் பின் சென்று கோலின்

தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு

–பொருநர் ஆற்றுப்படை வரிகள் 165-167

 

மதுரைக் காஞ்சி எழுதிய மாங்குடிக் கிழார் இன்னும் ஒரு அதிசிய விஷயத்தைச் சொல்லுகிறார். மற்ற எல்லா நாட்டு மன்னர்களும் சேவல் கூவும் சத்தத்தைக் கேட்டு எழுந்திருப்பான். அனால் மதுரைப் பாண்டிய மன்னனோவெனில் ஐயர்கள் முழங்கும் வேத ஒலியைக் கேட்டு எழுந்திருப்பான் என்று.

சிறுபாண் ஆற்றுப் படை எழுதிய புலவர் இன்னும் ஒரு வியப்பான விஷயத்தைச் சொல்லுகிறார். பிராமணர்கள், பாணர்கள் போன்றோர் நல்லியக்கோடன் அரண்மனையில் 24 மணி நேரமும் அனுமதியின்றி உள்ளே போகலாம் என்கிறார்.

 

பொருனர்க் காயினும் புலவர்க் காயினும்

அருமறை நாவின் அந்தணர்க்காயினும்

அடையா வாயில் (சிறு பாண்—வரிகள் 203-206)

 

பாண்டிய மன்னர்களில் மிகவும் பழைய மன்னர்களில் ஒருவன் முதுகுடுமிப் பெருவழுதி. அவனுக்கு அடைமொழியே பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி என்பதாகும். நாடு முழுதும் யாகத் தூண்கள் இருக்குமாம் (புறம் 6,15). அவன் தலை தாழ்வது இரண்டே முறைதானாம். ஒன்று சிவன் கோவிலில், இரண்டு நாலு வேதம் படித்த அந்தணர் முன்பு (புறம் 6).

அவ்வையாருக்கு ஒரே மகிழ்ச்சி. ஏன் தெரியுமா? உலகில் 1500 ஆண்டுகளுக்குக் குடுமி பிடிச் சண்டை போட்ட ஒரே இனம் தமிழ் இனம் தான். உள் சண்டையினாலேயே அழிந்த ஒரே இனம் என்ற பெருமை உடைத்து. அப்பேற்பட்ட மூன்று தமிழ் மன்னர்களும் ஒரே மேடையில் வீற்றிருந்ததைப் பார்தவுடன் அவ்வைப் பாட்டிப் பூரித்துப் போய்விட்டார். எப்போது தெரியுமா? சோழ மன்னன் பெரு நற் கிள்ளி ராஜசூய யாகம் செய்தபோது –ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களை விட நீங்கள் நிறைய நாட்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடினார் (புறம் 367)

அப்போது பெருநற் கிள்ளியுடன் சேரமான் மாரி வெண்கோவும் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர்.

ஒவ்வொரு மன்னனும் என்ன யாகம் செய்தான் என்பதை தொல்பொருட்துறை அறிஞரும் வரலாற்று நிபுணருமான டாக்டர் நாகசாமி அவர்கள் கல்வெட்டு இலக்கியச் சான்றுகளுடன் யாவரும் கேளிர் என்னும் அவரது நூலில் பட்டியல் இட்டிருக்கிறார். ஒவ்வொரு மன்னரின் கோத்திரம் என்ன என்பதையும் செப்பேட்டுச் சான்றுகளுடன் எழுதி இருக்கிறார். சிம்மவர்மன் என்ற பல்லவ மன்னன் பத்து அஸ்வமேத யாகங்களைச் செய்ததாக சிவன் வாயில் கல்வெட்டு கூறுகிறது.

 

புதிய விஷயம்: அஸ்வமேத பாண்டியன்

குப்தர்கள் அஸ்வமேத யாகம் செய்தவுடன் குதிரைப் படத்துடன் தங்க நாணயங்களை வெளியிட்டார்கள். அப்படி தமிழ் மன்னர்களின் தங்க நாணயம் கிடைக்க வில்லை. ஆனால் ஒரு பாண்டிய மன்னனின் செப்பு நாணயம் குதிரைப் படத்துடன் கிடைத்துள்ளது. இது முதுகுடுமிப் பெருவழுதியாக இருக்கலாம். ஏனெனில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த உலகின் மாபெரும் கவிஞர்களில் ஒருவரான காளிதாசன் அவனது ரகுவம்ச காவியத்தில் பாண்டிய மன்னர்கள் அவப்ருத ஸ்நானத்தால் நனைந்ததாக எழுதி இருக்கிறார். அவரது காலத்தில் வாழ்ந்த முதுகுடுமிப் பெருவழுதியையே இது குறிக்கிறது. யாகம் செய்யும்போது குளிப்பதை அவப்ருத ஸ்நானம் என்று அழைப்பர். காளிதாசனின் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதற்கு சங்கத் தமிழில் 200க்கும் மேலான சான்றுகள் இருக்கின்றன. (இதை எனது காளிதாசனின் காலம் என்ற கட்டுரையில் காண்க).

‘பொய்யா நாவிற் புகழ்’ உடைய கபிலர் தரும் இன்னொரு வியப்பான தகவல் (புறம்122): மலையமான் திருமுடிக்காரியின் நாட்டை யாரும் வெல்லவும் முடியாது, படை எடுக்கவும் முடியாதாம். ஏனேனில் நாடு முழுதையும் அவன் ஏற்கனவே அந்தணர்க்கு தானமாகக் கொடுத்துவிட்டானாம்!

 

கடல் கொளப்படா அது, உடலுநர் ஊக்கார்,

கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;

அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;( புறம் 122—கபிலர்)

 

வேதங்களை ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற நூலில் திரு கே சி இலக்குமிநாராயணன் , ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு தகவல்கள் தந்துள்ளார் என்பதையும் இங்கே குறிப்பது பொருத்தமாக இருக்கும்.

***********************