

Post No. 8528
Date uploaded in London – – –18 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
அன்னா கரீனா – 4
ச.நாகராஜன்
2 (முகவுரையின் தொடர்ச்சி)
1870-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி டால்ஸ்டாயின் மனைவி தன்னுடைய சகோதரிக்கு ஒரு கடிதம் எழுதினாள். அந்தக் கடிதம் இங்கே நோக்கத் தக்கது :
“உயர்ந்த இடத்தில் பிறந்து, உயர்ந்த இடத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் மெய்ந்நெறியிலிருந்து தவறி விடுகிறாள். அப்பெண்ணின் குற்றத்தைச் சித்தரிக்காது, அவளுடைய பரிதாபகரமான நிலையைச் சித்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உதயமாயிருக்கிறது” என்று என் கணவர் எனக்குச் சொன்னார். “
ஆனால் 1875-ஆம் வருஷத்திலிருந்து நாவல் சிறிது சிறிதாக வெளி வந்தது. 1877-ஆம் வருஷந்தான் நாவல் முழுவதும் வெளியாயிற்று. எத்தனை வருஷங்களாகக் கதை மனத்தில் ஊறி வந்திருக்கிறது பாருங்கள். முதற்கதை அமைப்பை இரண்டு மாதங்களில் முடித்து விட்டார். ஆனால் புத்தகம் வெளியேற மூன்று வருஷங்கள் கழிந்து விட்டன. கதையை அடித்துத் திருத்தி மறுபடியும் அடித்துத் திருத்தித்தான், மனத்தில் கொண்ட கருத்து உரு அடைகிறவரையில் மாறுதல்களைச் செய்து கொண்டே போனார்.
ஒரு கலைஞனுடைய மனச்சாட்சியைச் சீக்கிரம் திருப்தி செய்து விட முடியாது. அது, ‘ஆம், அது சரியே’ என்று ஆமோதிக்கிற வரையில் அரும்பாடு பட வேண்டும். அத்தகைய சாட்சியைப் புறக்கணித்தால் உள்ளத்தில் அமைதி ஏற்படாது. அன்னா கரீனா சீக்கிரம் வெளி வராததற்கு மற்றொரு காரணமும் உண்டு. ருஷ்ய நாட்டில் பஞ்சம் வந்து விடுகிறது. தம் மக்களின் புற வறுமையையும், அக வறுமையையும் அகற்ற டால்ஸ்டாய் பாடுபட ஆரம்பித்தார். அப்பொழுது அன்னா கரீனாவின் கதைப் போக்குத் தடைப்பட்டு விடுகிறது. அந்நிலையில் டால்ஸ்டாய் எழுதுகிறார்: “உயிரோடு வாழ்கின்ற என் மக்களை விட்டுக் கற்பனை உலகத்தின் கதாபாத்திரங்களின் சுக துக்கங்களை நாடேன்.”

அத்தனை இடையூறுகளுக்கிடையே கதை வெளியாகின்றது. அன்னா கரீனாவை வாசித்து உவகைநறவை மாந்தி மெய்ம்மறந்து டாஸ்டாவ்ஸ்கி (Dostoevsky) பேசுகின்றார் :
“டால்ஸ்டாய் சாதாரண மனுஷ்யரல்லர். அவர் ஒரு தெய்வக் கலைத்தச்சன்.” என்று தெருவெல்லாம் சொல்லிக் கொண்டே போகின்றார். “இந்நாவலைப் போல முன்பு கிடையாது; யார் டால்ஸ்டாயை வெல்ல முடியும்? ஐரோப்பாக் கண்டத்தில் எந்த ஆசிரியர் இவரை அணுக முடியும்?” என்று புகழ்கின்றார்.
அன்னா கரீனா பல விதங்களில் மிகச் சிறப்புடையதாயிருக்கிறது. காதற் கதை எழுதுவது சாதாரணக் காரியமன்று. அழகு பெறப் பாத்திரங்களை அமைப்பது சுலபமன்று. வேறு ஆசிரியர் அன்னாவைச் சித்தரிப்பாராகில், அருவருப்புத்தான் எழுந்திருக்கும். இங்கே பிழை செய்த அன்னாவைக் கண்டு இரங்குகின்றோம். சூத்திரக் கயிறுகளில் ஆடுகின்ற பொம்மைப் பாத்திரங்களல்ல, டால்ஸ்டாயின் பாத்திரங்கள். வாழ்க்கையில் காணப்படுகிற ஆசாபாசங்கள் நிரம்பிய மக்களை அப்படியே இங்கே காண்கிறோம். அவைகளோடு அழுகிறோம்; புலம்புகிறோம்; சிரிக்கிறோம். நிதம் பழகுகின்ற மனிதர்களே பாத்திரங்களாகக் காட்சி அளிக்கின்றனர். ஏதோ புத்தகம் படிக்கிற உணர்ச்சி வரவில்லை. அந்நாடகத்தில் நாமும் சேர்ந்து நடிக்கின்றோம்.
பால்சாக் ((Balsac), ஜோலா (Zola) ஆகியவர்களைப் போன்ற ஆசிரியர்கள் நுணுக்கமாய் வர்ணித்துக் கொண்டே போவார்கள். நூறு பக்கங்களானாலும் பாத்திரங்களின் உரு ஏற்படுகிறதில்லை. ஆனால் டால்ஸ்டாய் இரண்டு மூன்று கீறல்களினால் பாத்திரங்களை எழுப்பி விடுகிறார்.
அன்னாவின் அழகிய தோள்கள், அடர்ந்த அவள் தலைமயிர், வனப்பு வாய்ந்த அவள் ஒளி வீசும் வதனம், பாதி மூடின கண்கள் – எல்லாம் நம் முன் நின்று விடுகின்றன. ரெயில் அடியில் அவள் மற்ற அவயவங்கள் நசுங்கிக் கிடக்கின்றன. அவள் முகம் மாறவில்லை. புத்தகத்தைப் படித்து மூடினால், அவள் வதனம் நம் கண் முன் சுடர் விட்டு உலாவும். அலிகிஸ்கரினின் அயர்வு காட்டும் முகத்தில் தோன்றும் முறுவல், உயரத் தூக்கிய புருவங்கள், விரிதல் கண்ட இடைவெளிகள், டாலியின் நீர் தோய்ந்த கண்கள், லெவின் குடியானவத் தோற்றம் முதலியவைகளை நாம் மறக்க முடியாது.
டால்ஸ்டாய் பாத்திரங்கலைத் தாமே வர்ணிக்கிறதில்லை. பாத்திரங்களே நடமாடுகின்றன, பேசுகின்றன, சிரிக்கின்றன, அழுகின்றன. இம்முறையை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் வால்மீகி அனுஷ்டித்து விட்டார். இது மட்டுமா? – வால்மீகி பகவானின் அகலிகையின் சரித்திரத்தின் விரிவைத் தான் டால்ஸ்டாயின் “புத்துயிரி”ல் (Resurrection) காண்கிறோம். பிழை இழைத்த பெண்ணிற்கு உய்விடம் உண்டா, இல்லையா என்ற கேள்விக்கு வால்மீகி பகவான் ஆணித்தரமான பதில் அளித்திருக்கிறார்.
பாத்திரங்களைக் காகித அட்டை போல ஒட்ட வைத்து அமைக்கவில்லை, அவைகளே டால்ஸ்டாயின் அகக் கண்முன் ஓடுகின்றன.
பாத்திரங்களைப் படைப்பதில் வேறெவரும் டால்ஸ்டாய்க்கு இணை இல்லை என்றே சொல்லி விடலாம். காதல், அதன் சிதைவு – இவைகளைச் சித்தரிப்பது சுலபமான காரியமன்று என்று முன்பு குறிப்பிட்டேன். சார்லஸ் மார்கன் (Charles Morgan) இக் காதற் கீதத்தைத் தன் கற்பனை யாழில் அழகுற மீட்டியிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அன்னா கரீனாவில் காணப்படும் ஒரு சித்திரம் சார்லஸ் மார்கனில் அழியாதபடி அமைந்திருக்கும் ஒரு சோகக் காட்சியை நினைவூட்டுகின்றது.
அன்னா இறக்கும் தறுவாயிலிருக்கிறாள். சுர வேகத்தில் பேசுகிறாள். அவள் படுக்கைக்கு அருகில் அவள் கணவன் கரினின், அவள் ஆசை நாயகன் விரான்ஸ்கி இவ்விருவரும் நிற்கின்றனர். விரான்ஸ்கி தன் முகத்தை மூடிக் கொண்டிருக்கிறான்.
“உங்கள் முகத்தைத் திறந்து காட்டுங்கள். அவரை நோக்குங்கள். அவர் ஓர் உத்தமமான மனிதர். முகத்தைத் திறப்பீராக” என்று என்று கோபத்தில் மீண்டும் மீண்டும் சொல்லுகிறாள். “அலிக்சிஸ், அவர் முகத்தைத் திறந்து காட்டுவீராக. நான் அவர் முகத்தைக் காண விரும்புகிறேன்.”
துயரினாலும் நாணத்தினாலும் விகாரமடைந்த விரான்ஸ்கியின் முகத்தின் மீதுள்ள கைகளை அகற்றுகின்றான் அலிக்சிஸ்.
“தங்கள் கையை நீட்டி அவரை மன்னிப்பீராக” என்று தன் கணவனை வேண்டுகின்றாள். அலிக்சிஸ் கண்களிலிருந்து நீர் சொரியத் தன்னுடையை கையை நீட்டுகின்றான்.
இச் சோகமான காட்சி, தீய உள்ளத்திலும் பெருந்தன்மை சுடர் இருக்கின்றது என்ற உண்மைய உலகங் கேட்க முரசடிக்கின்றது. கன அந்தகாரத்திலும் ஆத்ம தீபத்தின் ஒளி மழுங்கிப் போகிறதில்லை. இத்தகைய உயர்ந்த சித்திரத்தை மார்கனின் ‘ஊற்றில்’ (Morgan’s Fountain) நோக்குகின்றோம்.

உண்மை ஒளி நிறைந்த இந் நாவல் இன்னொரு முறையிலும் பெருமை வாய்ந்திருக்கிறது. இதை அன்போடு படிப்போமானால் டால்ஸ்டாயின் சுய சரிதத்தை இதில் கண்டு விடலாம். அன்னா கரீனாவை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே தன் நாட்டின் தொண்டில் டால்ஸ்டாய் ஈடுபட்டிருந்தார் என்று முன்பு சொன்னேன். அன்னாவில் வருகின்ற லெவின் டால்ஸ்டாய் தான். பள்ளிக்கூடம் வைத்தல், ஆஸ்பத்திரி அமைத்தல், கழனிகளில் குடியானவர்களோடு தானும் ஒரு குடியானவனாகப் பாடுபடுதல் முதலிய செய்திகளை அன்னா கரீனாவில் பார்க்கின்றோம். ‘போரும் அமைதியும்’ (War and Peace) என்ற பெருங் காப்பியத்தில் – பியரி (Pierre) , ஆண்டிரு (Andrew) என்ற கதா பாத்திரங்களைக் காண்கின்றோம். இவர்கள் ஓர் ஆற்றங்கரை மீது அமர்ந்து ஆத்ம விசாரங்கள் செய்கின்றனர். பியரிக்கு அளவற்ற சொத்துண்டு. சிற்றின்பவயத்தனாய்க் காலத்தைக் கழித்தவன்; ஆனால் ஏழைகளின் துயர் துடைக்கப் பாடுபட முயல்கின்றான். ஆனால் சிற்றின்ப வாசனை மறுபடியும் இழுக்கின்றது. இப்படிப் பொல்லாத மனம் இழுக்கின்றதே என்று உள்ளம் நைகின்றான். இத்தகைய போராட்டத்தை டால்ஸ்டாயின் மனத்திலே பார்க்கின்றோம். சொத்தெல்லாம் திடீரென்று விடுகிற மனப்பண்பு டால்ஸ்டாயிக்கு மட்டும் அன்று. அந்நாட்டினருக்கே உண்டு என்று சிலர் கருதுகின்றார்கள். நம் நாட்டிலும் அதே மனப்பண்பு தான். கிப்லிங் (Kipling) புரான் பஹத் என்ற பாத்திர மூலங் காட்டியிருக்கிறார். ருஷ்ய நாட்டிற்கே அது பொருந்துமாயினும், பியரி டால்ஸ்டாய் தான் என்ற விஷயத்தில் யாதொரு சந்தேகமில்லை. தடுமாற்றம், நம்பிக்கை இன்மை, நவீனப் படிப்பினால் எழுந்த தற்பெருமை – அகம்பாவம், குலப்பெருமை – இவைகளை ஆண்டிருவில் பார்க்கின்றோம். இது டால்ஸ்டாயின் மற்றோர் அம்சம். இவ்விரு பாத்திரங்களும் டால்ஸ்டாயின் மனத்தகத்தே போராடுகின்ற ஒலிகள் தாம். லெவின் – பியரி – ஆண்டிரு – இந்தப் பாத்திரங்கள் டால்ஸ்டாயின் சிதறின உருவங்கள் தாம்.
உண்மையான பாத்திரங்களின் சிருஷ்டி, வாழ்க்கையின் காட்சிகள், உலகத்திலேயே தலை சிறந்த ஆசிரியரின் மனப்பண்பு – இவைகளைக் காட்டுகின்ற அன்னா கரீனாவின் முடிவில் டால்ஸ்டாயின் அமைதியின்மையைப் பார்க்கின்றோம்.
‘அன்னா கரீனாவில் முடிவிலே பாலைவனத்தில் எழும் துக்க ஓலந்தான் கேட்கின்றது’ என்கிறார் ஒரு விமர்சனக்காரர். இந்த ஓலம் டால்ஸ்டாயின் ஆத்ம ஓலத்திற்குப் (‘Confession’) பீடிகையாயிருக்குமோ என்று தோன்றுகிறது. அன்னா கரினா நடு நாயகமாயிருக்கின்றது. இதற்குப் பிறகு டால்ஸ்டாயின் இலக்கிய உணர்ச்சி தேய்ந்து கொண்டே வருகிறது.
ஆத்ம விசாரமும் சோதனைகளும் எழுகின்றன; இந்நிலையில் கற்பனை ஊற்றுக்கள் வறண்டு போகத்தான் போகும்.
இப்படிப் பலவிதத்திலும் சிறப்பு வாய்ந்த அன்னா கரீனாவை நினைவூட்டுகின்றது ஒரு தமிழ் நாட்டு நாவல் என்று மெய்ம்மறந்து அபிமான நறவுண்டு கூறுகின்ற விமர்சனக்காரருடைய வெறும் புகழ்ச்சி உரை இனி நம் தமிழ் உலகத்தில் நடமாடாது. இத்தமிழ் மொழிபெயர்ப்பு தடுக்குமென்று கருதுகிறேன். நம் இலக்கிய நந்தவனத்தில் அன்னாவைப் போல ஒரு நாவல் மலர ஓராயிர வருஷமாகும்; அது தான் ஏற்படுமா? அதுவும் சந்தேகந்தான்!
‘போரும் அமைதியும்’ (War andPeace), ‘அன்னா கரீனினா’ (Anna Karenina) இவ்விரு நாவல்களும் வானளாவி நிற்கின்ற இமயமலை போலக் காட்சியளிக்கின்றன. இவைகளுக்கு முன் மற்ற நாவல்கள் எறும்புப் புற்றுகள் தாம்; புற்றீசல் போல நிதம் கிளம்புகின்ற நாவல்கள், வெய்யோன் விரிசோதி போலப் பாய்கின்ற அத் தெய்வத் தச்சனின் கற்பனைச் சுடர் வெள்ளத்தில் இருக்கிற இடந் தெரியாமல் அழிந்து விடும் என்பதில் சந்தேகமில்லை. இது புகழ்ச்சி உரையன்று; உண்மையே.
திருவல்லிக்கேணி
21-3-1947 ரா. ஸ்ரீ . தேசிகன்

3
அற்புதமான இந்த முகவுரையைப் படித்தோருக்கு அன்னா கரீனா நாவலின் பெருமை புரியும்.
வால்மீகியின் பாத்திரப் படைப்பையும் டால்ஸ்டாயின் பாத்திரப் படைப்பையும் ஒப்பீடு செய்தல், டால்ஸ்டாயின் சிதறிய வடிவங்களே அவர் படைத்த லெவின் – பியரி – ஆண்டிரு என்பன போன்ற அருமையான கருத்துக்களை இந்தத் திறனாய்வு முகவுரையில் காண்கிறோம்.
இது போலொரு நாவல் தமிழகத்தில் தொன்ற ஓராயிரம் வருஷமாகும் என்கிறார் திரு ரா. ஸ்ரீ . தேசிகன்.
தமிழ் மொழிபெயர்ப்பை வரவேற்கும் அவர் அதன் பயனாகத் தான் கருதுவதையும் அப்பட்டமாகக் கூறுகிறார் இப்படி :
“இப்படிப் பலவிதத்திலும் சிறப்பு வாய்ந்த அன்னா கரீனாவை நினைவூட்டுகின்றது ஒரு தமிழ் நாட்டு நாவல் என்று மெய்ம்மறந்து அபிமான நறவுண்டு கூறுகின்ற விமர்சனக்காரருடைய வெறும் புகழ்ச்சி உரை இனி நம் தமிழ் உலகத்தில் நடமாடாது. இத்தமிழ் மொழிபெயர்ப்பு தடுக்குமென்று கருதுகிறேன்.”
அன்னா கரீனாவின் தமிழ் மொழிபெயர்ப்பை தமிழ் உலகம் நன்கு வரவேற்றது.
வாழ்க டால்ஸ்டாய்; வாழ்க திரு வெ.சந்தானம்!
** அன்னா கரீனா தொடர் நிறைவுறுகிறது