சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் (ஏப்ரல் 2014- விஜய வருஷம்)

appar

சிந்தனைச் சிற்பிகள் காலண்டர் (ஏப்ரல் 2014- விஜய வருஷம்)
Post No.908 Date: 15-03-2014

இந்த மாதப் பொன் மொழிகள், அப்பர் அருளிய தேவாரத்திலிருந்து எடுத்த 30 முக்கியப் பாடல்களைக் கொண்டது.

தயாரித்தவர்: லண்டன் சுவாமிநாதன் (C)

ஏப்ரல் மாத முக்கிய நாட்கள்: தேதி 4 வசந்த பஞ்சமி, 8 ஸ்ரீ ராமநவமி, 13 மஹாவீர் ஜயந்தி/ பங்குனி உத்திரம், 14 தமிழ் வருடப் பிறப்பு/ பைசாகி, 18 புனித வெள்ளி, 20 ஈஸ்டர் ஞாயிறு
சுப முகூர்த்த நாட்கள்:- 20, 24, 27; ஏகாதசி:- 11 & 25; அமாவாசை 28
பௌர்ணமி 15

ஏப்ரல் 1 செவ்வாய்க் கிழமை
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றூணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே (4—104)

ஏப்ரல் 2 புதன்கிழமை
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டமில்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே (4—105)

ஏப்ரல் 3 வியாழக்கிழமை
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே (4—111)

ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள் வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே (5-884)

ஏப்ரல் 5 சனிக்கிழமை
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே
வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இவ்வையகத்தே
தொழுவார்க்கு இரங்கி இருந்தருள்செய் பாதிரிப்புலியூர்ச்
செழுநீர் புனல் கங்கை எஞ்சடை மேல்வைத்த தீவண்ணனே (4—920)

ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமை
கருவுற்ற நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்றே என் உள்ளமும் நானும் கிடந்து அலந்தெய்த்து ஒழிந்தேன்
திரு ஒற்றியூரா திரு ஆலவாயா, திரு ஆரூரா
ஒரு பற்றிலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே (4—961)

ஏப்ரல் 7 திங்கட்கிழமை
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினள்
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனைத் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே (5-19-1)

ஏப்ரல் 8 செவ்வாய்க் கிழமை
சாத்திரம் பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிந்திரேல்
மாத்திரைக்குள் அருளுமாற் பேறரே (5-60-2)

ஏப்ரல் 9 புதன்கிழமை
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித் துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீர் ஆடிலென்
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

ஏப்ரல் 10 வியாழக்கிழமை
அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனை தேனைப் பாலைத்
திகழொளியை தேவர்கள் தம் கோனை (6–1)

ஏப்ரல் 11 வெள்ளிக்கிழமை
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே (4-783)

ஏப்ரல் 12 சனிக்கிழமை
கூவல் ஆமை குரைகடல் ஆமையைக்
கூவலொடு ஒக்குமோ கடல் என்றார் போல
பாவ காரிகள் பார்ப்பரிது என்பரால்
தேவதேவன் சிவன் பெரும் தன்மையே (5-1010)

ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை
நாமார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை (6-961)

ஏப்ரல் 14 திங்கட்கிழமை
சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து
தரணியொடு வான் ஆளத் தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம் அல்லோம்
மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்
அங்கம் எல்லாம் குறைந்து அழுகு தொழு நோயராய்
ஆ உரித்துத் தின்னும் புலையரேனும்
கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே (6-938)

ஏப்ரல் 15 செவ்வாய்க் கிழமை
முன்னன் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப் பட்டாள் நங்கை தலைவன் தாளே (4-258)

ஏப்ரல் 16 புதன்கிழமை
விரிவிலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து
எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றதாகும்
பரிவினால் பெரியார் ஏத்தும் பெருவெளூர் பற்றினானை
மருவி நான் வாழ்த்தி உய்யும் வகையது நினைக்கின்றேனே (4-586)

ஏப்ரல் 17 வியாழக்கிழமை
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நாநவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே (5-885)

ஏப்ரல் 18 வெள்ளிக்கிழமை
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கென்றும்
விருப்பவன் காண் பொருப்புவலிச் சிலைக்கையோன் காண்
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற் கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண் -(6—756)

ஏப்ரல் 19 சனிக்கிழமை
நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே (4-33 )

ஏப்ரல் 20 ஞாயிற்றுக்கிழமை
மனம் எனும் தோணி பற்றி மதியெனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஓடும்போது
மனன் எனும் பாறை தாக்கி மறியும் போது அறியவொண்ணாது
உனையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே (4–333)

ஏப்ரல் 21 திங்கட்கிழமை
மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடகின்றபோது
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன் (4—21)

ஏப்ரல் 22 செவ்வாய்க் கிழமை
இரப்பவர்க்கு ஈயவைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட்கெல்லாம் கடு நரகங்கள் வைத்தார்
பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே (4—383)

ஏப்ரல் 23 புதன்கிழமை
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
பேரானை புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே(6-548)

ஏப்ரல் 24 வியாழக்கிழமை
உறுகயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி
மறுகயிறு ஊசல் போல வந்துலவு நெஞ்சம்
பெறுகயிறு ஊசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத்து
அறுகயிறு ஊசல் ஆனேன் அதிகை வீரட்டனாரே

ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில் அவன்றனையான்
பவன் எனும் நாமம் பிடித்துத்திரிந்து பன்னாள் அழைத்தால்
இவன் எனைப் பன்னாள் அழைபொழியான் என்று எதிர்ப்படுமே (4—1058)

ஏப்ரல் 26 சனிக்கிழமை
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றே அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறை அம்மானே (4—1)

ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை
ஓணப் பிரானும் ஒளிர் மாமலர்மிசை உத்தமனும்
காணப் பராவியும் காண்கின்றிலர் கரநாலைந்து உடைத்து
தோணப் பிரானை வலி தொலைத் தோன்றெல்லை நீர்ப்புகலூர்க்
கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே (4—1012)

ஏப்ரல் 28 திங்கட்கிழமை
ஈன்றாளும் ஆய் எனக்கு எந்தையும் ஆய் உடன் தோன்றினவராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்
தோன்றாத் துணைய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே (4—913)

ஏப்ரல் 29 செவ்வாய்க் கிழமை
தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக் கண்டுகொண்டேன் (4-82-93)

ஏப்ரல் 30 புதன்கிழமை

ஆரியம் தமிழோடு இசையானவன் (5-176)
சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலன் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன் (4—6)

Contact swami_48@yahoo.com S Swaminathan ©