Article Written by S NAGARAJAN
Date: 4 November 2015
Post No:2298
Time uploaded in London :– 8-35 AM
(Thanks for the pictures)
பாரதி இயல்
ச.நாகராஜன்
கண்ணன் என் கவி
பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.
இன்னொரு மிக முக்கியமான விஷயம் பாரதியார் எப்படி மிகப் பெரும் கவியாக அங்கீகரிக்கப்பட்டார், அதற்கு பாரதி ஆர்வலர்கள் ஆரம்ப காலத்தில் எப்படி மகத்தான முயற்சிகளை எடுத்தனர் என்பதைச் சுட்டிக் காட்டும் மிக முக்கியமான நூலும் இது தான்.
சுமார் 195 பக்கங்கள் உள்ள இந்த நூல் முதலில் 1937இல் வெளிவந்தது. நல்ல வேளையாக 2007இல் இது மீளவும் பதிப்பிக்கப்பட்டது.
நூலின் பின்னணி குறித்து 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள நூல் விவரிக்கிறது:
வ.ரா.வின் கடிதம்
அதில் சில பகுதிகள்:
“1935 டிசம்பர் மாதம். சென்னையில் மணிக்கொடிக் காரியாலயத்தில் தங்கி இருந்த சமயம். இரவில் ராமையா, கி.ரா. புதுமைப்பித்தன், ஆர்யா, சிட்டி ஆகியோரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். சிட்டி ஒரு கடிதத்தை எடுத்துப் படித்தார். வ.ரா.வின் கடிதம்.இலங்கையிலிருந்து எழுதி இருந்தார். “வீரகேசரி” ஆசிரியராக அப்போது அங்கே இருந்தார். பத்திரிகையில் ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி)யும் தானும் எழுதிக் கொண்ட பகிரங்க கடிதப் போக்குவரத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார்.
1936 இல் தினமணி பத்திரிகை, ‘பாரதி மலர்’ என்று ஒரு அநுபந்தம் வெளியிட்டிருந்தது. அதில் முதல் கட்டுரை ‘நெல்லை நேசன்’ என்ற புனை பெயரால் பி.ஶ்ரீ. ஆசார்யா எழுதிய ‘வீர முரசு’ என்பது. அதில் கண்டிருந்த இரண்டு விஷயங்கள் பற்றித் தான் விவகாரம். ஒன்று, பாரதியை தேசபக்திக் கவி என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம், அல்லவா? என்பது. இரண்டாவது பாரதி ஒரு நல்ல கவி. மகா கவி அல்லர் என்பது.
கல்கியின் விமரிசனம்
நெல்லை நேசனின் கட்டுரையைப் படித்த ஒருவர் ஆனந்த விகடனுக்குக் கடிதம் எழுத, அதில் ஆசிரியர் குறிப்பாக கல்கி தன் பங்கிற்கு இப்படி எழுதி இருந்தார்:
“ஷேக்ஸ்பியரையும் ஷெல்லியையும் தாகூரையும் காட்டிலும் பாரதியார் உயர்ந்தவர். அவர்களது கவிதைகள் எல்லாம் சேர்ந்து பாரதியாரின் ஒரு வரிக்கு ஈடாகாது” என்று யாராவது வெளியிட்டிருந்தால் (இப்படி எழுதியவர் வ.ரா. அவரைக் கல்கி தாக்கும் வகையில் இப்படி எழுதி இருந்தார்.) அவருக்கு இலக்கியம், கவிதை ஆகியவற்றைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது வெளிப்படை. அவர் நிரக்ஷரகுக்ஷி (எழுத்து வாசனை இல்லாதவர்) என்று சந்தேகிப்பதற்கு இடம் உண்டு. அவர் ஷெல்லியையும் தாகூரையும் படித்திருப்பார் என்பது நம்பத்தக்கதல்ல. ஒரு வேளை படித்திருந்தாலும் ஒரு வரி கூட அர்த்தமாகாமலே படித்திருக்க வேண்டும். அவர் பாரதியின் கவிதையைப் படித்து ரசித்தார் என்பதும் சந்தேகத்துக்கு இடமாகும். தேசாபிமானமும் பாஷாபிமானமும் பகுத்தறிவை மறைத்து விட இடம் கொடுக்காது. பாரதியை ஷெல்லியுடன் ஒப்பிடலாம். ஆனால் ஷேக்ஸ்பியருடனும் தாகூருடனும் ஒப்பிடுதல் கூட சரியல்ல. வால்மீகி, திருவள்வக்ளுவர், காளிதாசர், கம்பர், ஷேக்ஸ்பியர், தாகூர் ஆகியவர்கள் நீண்ட காலத்துக்கு ஒரு முறையே தோன்றி உலகத்துக்கே பொதுவாய் விளங்கும் கவிகள். ஷெல்லி, பாரதி போன்றவர்கள் அந்தந்த தேசத்திற்கே சிறப்பாக உரியவர்கள். இலக்கிய ஆராய்ச்சியும் கவிதை உணர்வும் சொற்ப அளவில் உள்ளவர்களுக்குக் கூட இவ்விஷயத்தில் சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லை.”
கல்கியின் மேற்படி குறிப்புக்கு வ.ரா. சுதேசமித்திரன் பத்திரிகையில் விரிவாக எதிர் பதில் எழுதினார்.
இப்படிப்பட்ட சூடான கவிதா விமரிசனப் போட்டியைத் தொடர்ந்து பாரதியாரின் இடத்தை உலக மகாகவிகளுள் நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியமும் காலத்தின் கட்டாயமும் ஏற்பட்டது.
அதன் விளைவாக எழுந்ததே இந்த கண்ணன் என் கவி என்ற நூல்.
பாரதியாரின் உலக பரிமாணம்
ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர் ஆகியோரின் கவிதைகளை எடுத்து அலசி ஆராய்ந்து பாரதியாரின் கவிதைகளையும் ஒப்பிட்டு இந்த நூல் எழுந்தது.
பல்வேறு ஒப்பீடுகளில் நூல் குறிப்பிடும் ஒரு ஒப்பீடு இது:
“ஷெல்லி, பைரன் முதலியவர்களைப் போல ஜெர்மனியில் கதேக்குப் பிறகு தோன்றிய ஹென்ரிக் ஹைன் என்ற சிறந்த சுதந்திரக் கவிஞர் தமது அபாரமான கவிதா திறமையைக் காட்டி தம் நாட்டாருக்குச் சில ஆழ்ந்த கருத்துக்களை எடுத்துரைப்பதற்கு உபயோகித்தார். சமீப காலத்தில் ஹைன் திறமைக்கு இணையான கவிஞன் ஜெர்மனியில் தோன்றியதில்லை. ஜெர்மானிய இலக்கியத்தில் மிகவும் எளிதான செய்யுள் முறையையே ஹைன் பெரும்பாலும் உபயோகித்தார். இந்த முறையை மிகவும் லகுவாய் கையாண்டு இதன் மூலம் மகத்தான உணர்ச்சிகளை வெளியிட்டார். பாரதியார் பழைய யாப்பு முறைகளைப் புறக்கணித்து தைரியமாய் எளிதான புது முறையில் பிரம்மாண்டமான கருத்துக்களை அமைத்தது இங்கே குறிப்பிடத்தகுந்தது. பாரதி சொந்த இடத்தை விட்டு பிரெஞ்சு நிலமாகிய புதுவையில் வசிக்க நேரிட்டது, ஹைன் பல வருஷங்களுக்கு முன்னால் தன்னுடைய சுதந்திர மனப்பான்மையின் பயனாகத் தன் சொந்த நாடாகிய ஜெர்மனியை விட்டு பிரெஞ்சு ஸ்தலமாகிய பாரிஸ் நகரத்தில் வசித்ததும் சிலருக்கு பிரமாத வியப்பாகத் தோன்றாது. ஆனால், கவிதைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளையும் கலை உணர்ச்சிகளையும் வெளியிட்டது, இருவருக்கும் பெரிய கவிகளின் லட்சணமாக அமைந்திருந்தது.”
இந்த நூல் கண்ணம்மா பாடல்களை அலசி ஆராய்கிறது; பாரதியை நிகரற்ற உலக மகாகவிகள் வரிசையில் சேர்க்கிறது.
இப்போது எண்ணிப் பார்த்து வியப்படைகிறோம். பண்டிதர்களில் ஒரு சாராரும், படித்தவர்களின் ஒரு சாராரும், பத்திரிகைத் துறையினரில் ஒரு சாராரும், அரசியல் துறையில் ஒரு சாராரும் பாரதியாரை மூடி வைக்கப் பார்த்ததையும் அவரை அதிலிருந்து தக்க சான்றுகளைக் காட்டி பாரதி ஆர்வலர்கள் அவரை உலக மகாகவியாக மீட்டதையும் வரலாறு சொல்கிறது.
கு.ப.ரா. சிட்டி, வ.ரா போன்ற எண்ணற்றோர் இந்த பாரதி யாகத்தில் தம்மை ஆகுதியாக அர்ப்பணித்துக் கொண்டதால் அல்லவா உலக மகா கவியாக பாரதி ஒளிர்ந்தான். இந்த ஆரம்பகால பாரதி பக்தர்களுக்கு நம் சிரம் தாழ்த்திய அஞ்சலியைச் செய்து இந்த நூலை பல முறை படித்து மகிழலாம்!
**********