Written by London Swaminathan
Date: 20 JANUARY 2018
Time uploaded in London 7-27 am
Post No. 4639
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)
சாணக்கியன் அதி மேதாவி; பொருளாதார நிபுணன்; ராஜ தந்திரி; ஏழைப் பிராஹ்மணன்; கொஞ்சம் அவலட்சணமான, அழகில்லாத பிராஹ்மணன். நீதி நூலில் வல்லவன்; ஆயினும் அவன் தனக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களையும் பிரஸ்தாபிப்பது வேடிக்கையாக உளது.
அவன் சொல்லுவதைப் படியுங்கள்:
கலௌ தச ஸஹஸ்ரேஷு ஹரிஸ்த்யஜதி மேதினீம்
ததர்த்தே ஜாஹ்னவீதோயம் ததர்த்தே க்ராமதேவதா.
சாணக்கிய நீதி, அத்தியாயம்11, ஸ்லோகம் 4
பொருள்
“கலியுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஹரி, பூமியில் இருந்து புறப்பட்டு விடுவார். அதில் பாதி காலத்துக்குள் கங்கை நீர் போய்விடும். அதில் பாதியில் கிராம தேவதை போய் விடுவாள்”.
இது, வியாக்கியானம் செய்ய கொஞ்சம் கடினமான ஸ்லோகம்.
நம்முடைய பஞ்சாங்கக் கணக்குப்படி கலியுகத்தின் ஆண்டு 5000-ஐ எப்போதோ தாண்டிவிட்டது. கிருஷ்ணரும் அதற்கு முன்னரே வேடனின் வில்லடி பட்டு இறந்து விட்டார்.
மேலும் கங்கை நதி இன்னும் பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. கிராம தேவதை வழிபாடும் உளது.
ஒரு வேளை சாணக்கியன், மனிதனின் ஆண்டு என்பதல்லாமல் தேவர்களின் ஆண்டு பற்றிச் சொல்லி இருந்தால், அதற்குப் பல காலம் இருக்கிறது. ‘ஹரி’ என்பதை இறைவனின் வழிபாடு மறையும் காலமென்று எடுத்தாலும் இன்னும் ஹரி வழிபாடும்/இறை வழிபாடும் இருக்கிறது. ஆகவே பொருள் சொல்லக் கடினமான ஸ்லோகம் இது. கங்கையின் புனிதமும், தூய்மையும் வேண்டுமானால் கெட்டுவிட்டது என்று சொல்லலாம்.
பிராமணர்கள் பற்றி சாணக்கியன்
இன்னும் ஒரு சுவையான செய்தி பிராஹ்மணர் பற்றியதாகும். பிராஹ்மணர் பற்றி லக்ஷ்மியின் வாய்மொழி மூலம் சில கருத்துக்களை முன்வைக்கிறார்.
இதோ ஸ்லோகத்தின் பொருள்
விஷ்ணுவிடம் லக்ஷ்மி செப்பியது யாது எனின்,
“என் பிராண நாதா; நான் பிராஹ்மணர்கள் மீது வெறுப்பு கொண்டு, அவர்கள் வீட்டுக்குப் போகாமல் எப்போதும் தவிர்த்து வருகிறேன்.ஏன் தெரியுமா? ஒரு கோபக்கார பிராஹ்மணன் என் தந்தையையே குடித்துவிட்டான் (அகஸ்த்ய மஹரிஷி கடல் குடித்த கதை) இன்னொரு மஹரிஷி என் புருஷனை காலால் உதைத்தார்.(பிருகு முனிவர் விஷ்ணுவைக் காலால்
உதைத்த கதை). மேலும் பிராமணர்கள் சிறு வயதிலிருந்தே
வாய்க்குள் ஸரஸ்வதியை வைத்துப் போற்றுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக என் வீட்டைக் கலைத்து சிவ பூஜை செய்கின்றனர் (லக்ஷ்மியின் வீடு தாமரை)
சாணக்கிய நீதி, அத்தியாயம் 15 ஸ்லோகம் 16
இது நிந்தா ஸ்துதி வகையினது. அதாவது இகழ்வது போல இறக்கி பின்னர் புகழ்வது ஆகும்.
இதில் பல விஷயங்களை அவர் தெரிவிக்க விரும்புகிறார்:
1.பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது. அதாவது லக்ஷ்மி இருக்கும் இடத்தில் ஸரஸ்வதி இருக்க மாட்டாள். பிராஹ்மணர்களும் கல்வியில் வல்ல புலவர்களும் வறுமையில் வாடியதை நாம் அறிவோம். நமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த உலக மஹா கவி பாரதியார் வறுமையில் உழன்றதை நாம் அறிவோம் ஆகையால் சாணக்கியன் சொன்னது புகழுரையே. மேலும் பிராஹ்மணர்கள் தாமரை மலரைக் கொண்டு சிவ பூஜை செய்வதையும் இது விதந்தோதுகிறது.
டேய், கிருஷ்ணா! நீ அதிர்ஷ்டக்காரண்டா?
இன்னொரு ஸ்லோகத்திலும் நிந்தா ஸ்துதியைக் காண்கிறோம்.
“ஒரு சிறு குன்றை கையில் உயர்த்திப் பிடித்தாய். இதனால் உன் பெயர் கோ வர்த்தனன் என்றாயிற்று. இதனால் மேல் உலகிலும் பூமியிலும் உன் புகழுரையை பாடுகின்றனர். நான் என் மார்பின் மீது சாய்த்து வைத்து உன்னைக் கொஞ்சுகிறேன். என்னை யாராவது புகழ்ந்தார்களா? எல்லா உலகங்களையும் தாங்கி நிற்கும் கேசவா! நீயே சொல். இனி நான் என்ன சொல்ல இருக்கிறது சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!
சாணக்கிய நீதி, அத்தியாயம் 15, ஸ்லோகம் 16.
xxxx SUBHAM xxx