கம்பன் கவி மந்திரம் (Post No.4457)

Date: 4 DECEMBER 2017

 

Time uploaded in London- 5-51 am

 

WRITTEN BY S NAGARAJAN

 

Post No. 4457

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 9)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239; 5-10-17- 4272; 12-10-17 -4293; 13-10-17-4296; 14-10-17-4299; 30-10-17- 4349 ; 7-11-17 – 4373 ; 21-11-17 – 4418 ஆகிய கட்டுரைகளின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

மழைத்தாரை போலப் பொழியும் காவிய அமுதால் கம்பன் கவி மந்திரம் அமைத்தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

 

பாடல் 58

வில்லெடுக்கும் மீளிகை விரல்தெரிந்த வாளி போற்

சொல்லெடுக்கும் வன்மையி லவைதொடுக்குஞ் சூழ்ச்சியில்

எல்லெடுக்கும் கம்பன்முன் னெதிரடுத்த பாவலர்

புல்லெடுக்கும் போர்மறவர் போலொதுங்கிப் போவரே

 

பாடல் 59

சொல்லினுட் டுவன்றலாம் பொருட்டொரும் தெருட்டலோ

கல்லினுட் டுறுமணுக் கலைத்தெடுத்த லாகுமோ

புல்லுட னுயிர்த்திறன் பொறித்திறன் புலத்திறன்

எல்லைமாய வொன்றினொன் றெழுந்தவா றெழுதவால்

 

பாடல் 60

கடல்மடைதி றந்தகாட்சித் தாயினுங்கம் பன்கவி

அடலடைந்தொ ளிர்சொல்வ னத்துமட்டி னன்றுகாண்

உடலடைந்தி யக்குயிர்போ லொண்பொருளூ டோடியாற்

றிடையடைந்தொ ழுக்குபோலி சையுமுன் னிழுக்குமால்

 

பாடல் 61

நாடிநாடிப் பாவல்லோர் நயந்தசெஞ்சொல் மாமணி

மூடிமூடி வைத்தசெப்பும் முற்றுமுட்டல் செய்வதோ?

தேடித்தேடிச் சென்றுமன்னார் சேர்கிலா மணித்திரள்

கோடிகோடி யாக்குவிக்கும் கம்பனாழி கூலமே

 

பாடல் 62

ஐயின் வாரிக்கொண்டவா ரமுதளாவு சீர்பதம்

கையின் வாரித் தூவினர்மற் றைக்கவிஞர்; கம்பனோ

மெய்யின் வாரிக் கொண்டசொல் விரைமுகந்து போகமே

வையமாரு மாறுவட்டி வட்டியாகக் கொட்டினான்

 

வேறு

பாடல் 63

பொருள்தேடிடப் புகுவார்மிடிப் புரையாடிடல் முறையோ

தெருளாய்ந்துறத் திரிவார்செறி மருள்மாய்ந்திடல் திறனோ

அருனாடிய உளத்தார்கவி யருட்பாவினை மிகத்தாம்

சுருள்குடுசூத் திரமாமெனத் தொகுத்தாரிருள் மிகுத்தார்

 

பாடல் 64

முன்னார்வினை விளைவோகலை முடிப்பார்தவ முடிவோ

மின்னார்தமிழ் மிளிர்மேனியின் மெலிவோ பிணிநலிவோ

பின்னாளுறை வார்கொண்டதோர் பித்தோ கவிமுத்தேன்

சின்னாபின மாக்கிட்டுருச் சிதைத்தார்திருப் புதைத்தார்

 

பாடல் 65

அறியார்செயுந் தீங்கோசிறி தறிந்துமறி யாராய்

வெறியார்புரி வினைமுன்னரே வெளிறாமெனல் மெய்யே

குறியாதுமுன் னார்பாட்டுறை குறைப்பெய்தனர் பின்னார்

செறியாதன செருகாங்கவி யுளவோவுளச் செருக்கால்

 

பாடல் 66

குருடனெறி காட்டக்குறி யிடங்கூடிடல் செலுமோ?

புருடன்வெலாப் போரையொரு  பூவைவெலப் புகுமோ?
அருடன்வரத் தாலாங்கவி யறிவானரு ளிலையேல்

மருடன்வயத் தாராய்தொடர் வழிவிட்டுழல் வாரே

 

பாடல் 67

எல்லார்விரி வெயிலைச்சில ரிருளோவென மருளாப்

புல்லார்சிறு விளக்காலொளி புகட்டப்புகுந் தனரே

முல்லைமுருக்கவிழ்மாமணம் முடையென்றிவ ரடையாம்

வில்லைவெறி யளவாவெறி யளவாமிகுத் துரைத்தார்

 

பாடல் 68

அழகுக்கழ கணிதலருஞ் செயல்யாவினு மரிய

பழுதும்பழக் கனிவைப்படுங் கனியாக்கலும் பழுதே;

மழைத்தாரைபோற் கம்பன்பொழி வான்காவிய வமுதைக்

குழைத்தாரென லன்றிச்சுவை குவித்தாரென லாமோ?

 

பாடல் 69

தெய்வமணம் நாறியுயிர் திளைக்குங்கவித் தெறியற்

செய்வான்வரு மலரோசிறு தரைசிந்தின வலவே;

மெய்வானுறைதரு நின்றவன் மிளிர்மாலர் பொறுக்கிப்

பெய்வாந்தனிப் பிணையலிதைப் பிறிதார்கமழ் பிணிப்பார்

 

பாடல் 70

மின்னற்பிழம் பாலுமெரி வெயிலோன்கதி ராலும்

பொன்னினொளி யாலுஞ்சுவர் போக்கிமணிக் குவைக்காழ்

தன்னிற்புரை தபுத்தேசவி தனதந்துயர் கம்பன்

கன்னிக்கூர் காலம்பொலி கவிமந்திர மமைத்தான்

 

பாடல் 71

கவிமாளிகை புனைவாரிவண் கடந்தேகவின் கிடந்த

சவியோவியச் சமைப்பால்விழி யிமைப்பற்றுயிர்ப் பெடுப்பர்

புவியுள்ளுற யொருவனிதிற் புரைகாணிய விரைவான்

அவிகொள்வன வமுதிற்சுவை யறுபாகமாய் வானே

 

வேறு

பாடல் 72

சொல்கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல்கண்டார் எல்லே கண்டார்; இனிமை யோடிகலுஞ் சந்த

மல்கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல்கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?

 

பாடல் 73

மொழிவளம் மொழிகு வேனோ? மொழிகதைத் தருண முன்னிப்

பொழிவளம் புகலு கேனோ? பொருள்வளம் புடைத்து விம்மிக்

கழிவளங் கழறு கேனோ? காவியக் கழனி யோங்கிச்

செழிவளஞ் சிரித்து முத்தந் தெரித்தொளி சிதறும் பாவில்

 

வேறு

பாடல் 74

பொன்கொண் டிழைத்தமணி யைக்கொடு பொதிந்த

மின்கொண் டமைத்தவெயி லைக்கொடு சமைத்த

என்கொண் டியற்றியவெ னத்தெரிகி லாத

மன்கொண் டமாமதிம ருட்கேவி மாடம்

***

கம்பனின் சொற்களாலேயே கம்பனைப் புகழும் வித்தையைக் கொண்டவர் கவிஞர் சிவராஜ பிள்ளை. கம்பன் கையாண்ட அதே சந்தத்தை அவர் கையாளும் போது சுவை இன்னும் கூடுகிறது.

கம்பன் முன் மற்ற கவிஞர்கள் போர்க்களத்தில் புல் எடுக்கும் மறவர் போல ஒதுங்கி ஒடுங்கி ஓடி விடுவர்.

முன்னவர் செய்த வினையின் விளைவோ என்னவோ! கவிதையின் உரு சின்னாபின்னமாகப் போகும் நிலை! குருடன் வழி காட்டப் போகுமிடம் செல்ல முடியுமா? பெரிய போர் வீரனான புருஷன் வெல்ல முடியாத போரை அவனது மனைவி வெல்ல முடியுமா? கவிஞனின் உளத்தை அறிந்தோரின் அருள் பெறாவிட்டால் அவன் கவிதையின் பொருளை உணர முடியாது.

கம்பனது பாடல்களை ரஸிக்கப் போனவர்கள் சொல் இன்பப் பிரியர்களாக இருப்பின் சொல் இன்பத்திலேயே திளைத்து நிற்பார்கள். அதில் விளங்கும் பொருளின் ஒளி கண்டவர்கள் அதிலேயே லயித்திருப்பர். இப்படிப்பட்ட அபூர்வ கவிஞரின் மொத்த நூலை யார் தான் முடியக் கண்டார்? ஒருவரும் இல்லை!

காலம் வென்ற ஒரு கவி மந்திரம் அல்லவா கம்பன் அமைத்து விட்டான்!

 

மொழிவளத்தைப் புகழ்வதா! கதைத் தருணம் நினைத்துப் பொழிகின்ற தன்மையைப் புகழ்வதா? பொருள் வளத்தைப் புகழ்வதா?

 

என்று இப்படி உளத்திலிருந்து எழும் சொற்களால் கம்பனின் அருமையை விதந்து கூறுகிறார் கவிஞர் சிவராஜ பிள்ளை.

இதுவரை 90 பாடல்களில் 74 பாடல்களைப் பார்த்து விட்டோம். அடுத்த கட்டுரையில் எஞ்சியுள்ள பாடல்களைப் பார்ப்போம்.                                                                                        அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடியும்.

 

*********** SUBHAM ******************

 

 

 

வர்ஜிலையும், ஹோமரையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! -1 (Post No.4293)

Written by S.NAGARAJAN

 

 

Date:12 October 2017

 

Time uploaded in London- 67-16 am

 

 

Post No. 4293

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

கம்பன் கவி இன்பம்

 

வர்ஜிலையும், ஹோமரையும், மில்டனையும் வம்பிக்கிழுக்க வேண்டாமே! -1

.நாகராஜன்

1

கட்டுரை எண்4272 – பிரசுரமான தேதி :5-10-2017

கம்ப ரஸிகர் திரு கே.என். சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணி மாலை என்ற நூலின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் இறுதியில் வரும் பாடல் இது>

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

 

கட்டுரையைப் படித்த அன்பர் திரு ஆர்.நஞ்சப்பா அவர்கள் தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அவர் நல்ல ஒரு அறிஞர். பல நூல்களைக் கற்றறிந்தவர். யார் மனதும் நோகாதபடி தன் கருத்துக்களைப் பதிவு செய்யும் வல்லமை படைத்தவர்.. அதில் சில பகுதிகளைக் கீழே பார்க்கலாம்.

 

 

கவிஞர் சிவராஜபிள்ளையின் கம்பர்-வால்மீகி பக்தியும் பற்றும் போற்றுதற்குரியன. ஆனால், அதற்காக வர்ஜிலையும், ஹோமரையும் மில்டனையும் வம்புக்கிழுக்கவேண்டாமே !
ஒவ்வொரு சமுதாயத்திலும் உயர்ந்த தெய்வீகக் கவிகள் இருந்திருக்கிறார்கள். உயர்ந்த விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். பண்பாட்டு மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்திருக்கிறார்கள். அவரவர்கள் பண்பாட்டிற்கும் மொழி நடைக்கும் ஏற்றவகையில் பாடியிருக்கிறார்கள். வெவ்வேறு மரபுகளைச் சார்ந்த, மொழிகளில் உள்ள உயர்ந்த காவியங்களை ஒப்பிடுவது சரியாகுமா என்பது சந்தேகத்துக்கிடமானது. ஆனால் சில உயர்ந்த, ஆன்மீகக் கருத்துக்கள் மனித குலம் முழுமைக்கும் பொதுவாக இருக்கின்றன. இவற்றை சிறந்த கவிகள் சிறப்பித்தே இருக்கிறார்கள். Great minds think alike.

 

சிவராஜபிள்ளையவர்கள் வர்ஜில், ஹோமர், மில்டன் நூல்களை அந்தந்த மொழிமூலத்திலேயே பயின்றாரா என்பது தெரியாது! அப்படிப் பயிலாமல் ஒப்பிடுவது எப்படிச் சரியாகும்?………….

ஹோமர் பார்வையற்றவர். அவர் அகக்காட்சியில் கண்டு எழுதினார். இது ஒரு தெய்வீக உந்துதலால் நடந்தது. [ இதை மேலை நாட்டினரை விட நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்! ] மில்டன் ” Paradise Lost ” காவியம் எழுதியபோது பார்வை இழந்திருந்தார் ! ஆனால் ஓர் உயர்ந்த காவியம் படைக்கவேண்டும் என்ற உந்துதலால் , கங்கணம் கட்டிக்கொண்டபடி, எழுதினார் ! இதுவும் தெய்வீக அருளால் நடந்ததே! அவரவர் மரபுக்குத் தக்கபடி எழுதினார்கள். ஹோமரும் வர்ஜிலும் தேசீயக்கவிகளாக போற்றப்படுகிறார்கள்., மில்டன் அத்தகைய இடத்தைப் பெறாவிட்டாலும் உயர்ந்த கவிஞராக மதிக்கப்படுபவர்.,

நமக்கு வால்மீகியும் கம்பரும் இரு கண்கள். அதற்காக பிற மொழி கவிஞர்களை என் குறைத்து மதிப்பிடவேண்டும்? It looks uncharitable.

இதே கட்டுரைக்கு அன்பர் டி.எஸ்,கே. ரகு அவர்கள் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். அதில் சில பகுதிகளைக் கீழே பார்க்கலாம்.

tskraghu

 

I have enjoyed and been enlightened by your posts, thank you.

While I don’t see you doing it much, but I do come across in blogs and fb posts that leads me to perceive this: we tamils seem to labour under an enormous inferiority complex that we feel compelled to shout at every turn how we are ‘better,, ‘superior’, ‘cultured’ than others. Isn’t it possible to enjoy the treasure available to us peaceably without putting others down or drawing odious comparisons? Isn’t time we look at it more maturely and let the beauty speak for itself instead of thirsting for endorsements?

இந்த இரு அன்பர்களும் பொதுவாகக் குறிப்பிடும் கருத்து மற்ற கவிஞர்களைத் தாழ்த்தித் தான் வால்மீகியையும் கம்பனையும் உயர்த்த வேண்டுமா?

 

பதில் : வேண்டாம்.

 

ஆனால் திரு சிவராஜ பிள்ளை வாழ்ந்த காலம் சென்ற நூற்றாண்டு. அநத பழைய நாட்களில் பலரும் ஆங்கிலத்தில் எதை எழுதினாலும் புகழ்வதோடு உடனடியாக ‘டமிளில் என்ன இருக்கிறது’ என்று ஏளனம் செய்வது வழக்கம்.

அதையொட்டி மனதில் எழுந்த எண்ணத்தின் விளைவாக இப்படி எழுதி இருக்கலாம்.

 

 

2

இதே கால கட்டத்தில் வாழ்ந்தவர் மஹரிஷி அரவிந்தர். ஆங்கில பேராசிரியராக ஆரம்ப காலத்தில் பணியாற்றியவர். லத்தீன், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் உட்பட்ட பல மொழிகளை அறிந்தவர்.

அதே போல வ.வே.சு. ஐயர் கம்ப ராமாயணம். வால்மீகி ராமாயணம், மில்டனின் பெருங் காப்பியங்கள், வர்ஜில், ஹோமரின் காவியங்களை நன்கு படித்தவர். அலசி ஆராய்ந்தவர்.

அவர்களது கருத்துக்களை மிக மிகச் சுருக்கமாக தர விழைகிறேன்.

அத்துடன் பேராசிரியர் மதுரையைச் சேர்ந்த திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கம்பனும் மில்டனும் நூலின் சில முக்கிய கருத்துக்க்ளையும் இங்கு தர விழைகிறேன்.

 

3

டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணனின் கம்பனும் மில்ட்டனும் – ஒரு புதிய பார்வை என்ற நூல் 1978 நவம்பரில் முதல் பதிப்பைக் கண்டது.407 பக்கங்களைக் கொண்ட விரிவான புத்தகம்.

இதில் ஒரு வார்த்தை கூட இவரை உயர்த்தியோ அவரைத் தாழ்த்தியோ இல்லை.

மில்ட்டன் மற்றும் கம்பனின் காவியப் போக்கு, சுவை, உத்தி உள்ளிட்டவற்றை விளக்குகிறார் நூலாசிரியர்.

ஹோமர் இயற்றிய இலியத் ஆடிசி என்னும் கிரேக்க காவியங்களும் வான்மீகி இயற்றிய இராமாயணமும் வியாச பாரதமும் இயற்கைக் (கேள்விக்) காவிய இனத்துக்கு எடுத்துக் காட்டுகளாகும். (பக்கம் 19)

கொள்கையளவில் கருதினால் கம்பனும் மில்ட்டனும் த்த்தம் காவியத்தை மூன்றில் ஒரு வகையில் அமைக்கலாம்.

 

  1. இருபாகக் கதையை ஒரே ஒரு நிகழ்ச்சியாக ஐக்கியப்படுத்தி அதனைக் காலமுறையில் நடத்துவது.
  2. அவ்வாறு ஒன்றிய நிகழ்ச்சியை இடையில் தொடங்கி முந்திய செயலைப் பின்னோக்கு உரையாக அமைப்பது.
  3. கதையின் பிற்பகுதியிலிருந்து நிகழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு முற்பகுதியை ஏதாவது ஒரு வகையில் தொடர்புடைய கிளைக் கதையாக அமைப்பது.

கம்பன் முதல் முறையையும் மில்ட்டன் மூன்றாம் முறையையும் பின்பற்றுவர். (பக்கம் 71)

 

துறக்க நீக்கம் போலவே தமிழ் இராமாயணமும் கதையின் இடையிலும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் ஆரம்பமாகிறது. விண்ணகப்போரை மிலட்டன் ஒதுக்கியதைப் போலவே, கம்பனும் இராவணன் அருந்தவம் செய்து வரம்பிலா ஆற்றல் பெற்றதையும் அதைக் கொண்டு எல்லா உலகங்களையும் வென்று கொடுங்கோலோச்சியதையும் எடுத்துச் சொல்லாது விடவேண்டியிருக்கிறது. (பக்கம் 76)

 

கம்பனுக்கு முதனூலாக வான்மீகமும் முன்மாதிரியாக சிலப்பதிகாரமும் பயன்பட்டன. ஆனால் மில்ட்டனுக்கு இன்னும் வளமான காவிய மரபு கை கொடுத்தது.

எளிய நிகழ்ச்சியையும் விசாலமான வீச்சையும் சாத்ரியமாக இணைப்பதில் மில்ட்டனுக்கு முன் மாதிரியாக அமைந்தது இலியத். (பக்கம் 85)

 

 

ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கலைஞனின் மனோபாவனையில் இலட்சியக் கோசலம் உயிர்த்தெழுந்ததென்றால் பதினேழாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிஞனின் ஒளிக் காட்சியில் ஆதாமும் ஏவாளும் ஈடன் சோலையில் நடத்திய வாழ்வு துவங்கியது. கம்பன் காவியத்தில் கோசலம் பெறு சிறப்பிடத்தை மில்ட்டன் காவியத்தில் ஈடன் பெறும். (பக்கம் 121)

 

 

உயிரினங்களுக்குப் பெயரிட்டவன் ஆதாமாக, மலர்களுக்குப் பெயர் சூட்டியவள் ஏவாளே; நாள்தோறும் காலையும் மாலையும் பூக்களைப் பேணும் பணியும் புரிந்தாள் அவள் (XI: 273-77)

 

கம்பனும் மறுப்புவமைகளை ஆளத் தயங்கான். எடுத்துக் காட்டாக, அயோத்தி மாளிகையின் மிகுந்த வெண்மை, நிலவு பொழியும் சந்திரனையும் கரிது எனச் சொல்லும்படி இருந்தது என்பான். (பக்கம் 142)

Kamban image from wikipedia

இப்படி பக்கத்திற்குப் பக்கம் மில்ட்டனையும் கம்பனையும் அரவணைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.

அருமையான நூல் இரு கவிஞர்களையும் உயரத்தில் ஏற்றி வைத்துப் பார்த்து மகிழ்கிறது.

 

(என் தந்தையின் நெருங்கிய நண்பர் திரு எஸ்.ராமகிருஷ்ணன். மதுரையில் வடக்குமாசி வீதியில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாவது வீடு அவருடையது. பல வருடங்கள் அடிக்கடி திரு ராமகிருஷ்ணன் எங்கள் வீட்டிற்கு வருவார்; அல்லது நாங்கள் அவர் வீட்டிற்குச் செல்வோம். அந்த இனிய நாட்கள் மறக்க முடியாதவை)

 

அருமையான இந்த நூலைப் படிப்போர் கம்பனையும் மில்ட்டனையும் ஒருசேரப் பாராட்டுவர்.

  • கட்டுரை நீண்டு விட்டதால் வ.வேசு. ஐயர், அரவிந்தர் ஆகியோரின் கருத்துக்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..
  • அடுத்த கட்டுரையுடன் இந்த வம்பு முடியும்.

–SUBHAM–

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன? (POST No.4272)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4272

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Russian stamp for English Poet John Milton

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

பாடல் 11

குமுத வாயிற் குழவி மிழற்றுறும்

அமுத தாரை இனிதென் றசைத்தஅவ்

விபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே

சமனில் நின்று தயங்கத் தகுவது

 

பொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.

குறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்

மிகையாகாது.

Greek Poet Homer on coin

பாடல் 12

அங்கம் சேரும் அவயவ சாலத்துள்

துங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;

திங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்

தங்கச் செய்வ சலச விழியரோ

 

பொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.

 

பாடல் 13

பாஷை மாதர் பலருளும் இன்னிசை

ஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி

வாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்

ஏசில் ராமன் கதைகுறள் என்பவே

 

பொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.

 Poet from Italy -Virgil

பாடல் 14

காவி யன்றக விஞர்பூங் கானரு

காவி யன்றழ காரலர் தூவுமங்

காவி யன்றரு வன்றேஇத் தென்கவி

காவி யமணம் கான்றொளிர் கற்பகம்

 

பொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.

 

பாடல் 15

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

**

மேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.

குறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.

 

உடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.

உலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய  சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை!

 

 

காட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.

மேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.

Homer on Greek Stamp

 

இவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ

 

இப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.

 

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்– கம்பன் கவி இன்பம் (Post No.4088)

Written by S NAGARAJAN

 

Date: 17 July 2017

 

Time uploaded in London:- 5-59 am

 

 

Post No.4088

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 IMAGES OF SRI RAMA FROM FACEBOOK FRIENDS;THANKS.

 

கம்பன் கவி இன்பம்

 

கம்பனை முழுதும் காண முயன்ற கே.என்.சிவராஜ பிள்ளை! என்ற கட்டுரையைத் தொடர்ந்து வரும் கட்டுரை இது.

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; ஞான எல் கண்டார் எல்லே கண்டார்!

ச.நாகராஜன்

 

 

கம்பனை அணு அணுவாக, சொல் சொல்லாகச் சுவைத்து ரசிக்கும் கவிஞர் கே.என்.சிவராஜ பிள்ளை தனது அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:

 

சொல் கண்டார் சொல்லே கண்டார்; சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்; இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்; மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

 

 

சொல்லைக் கண்டவர் கம்பனின் சொல் வண்ணத்தில் மூழ்கி விடுவார்கள். ஒரு சொல்லா, இரண்டு சொல்லா? ஒரு பாடலுக்கு நான்கு வரிகள்; ஒரு வரிக்கு சுமாராக ஆறு சொற்கள் என்று வைத்துக் கொண்டாலும் பத்தாயிரம் பாடலுக்கு சுமார் இரண்டு லட்சத்து நாற்பதினாயிரம் சொற்கள். இவற்றில் பெர்முடேஷன் காம்பினேஷன் போட்டால் நமக்கு வரும் எண்ணிக்கை பல பல கோடிகள். அவ்வளவு விதமாக சொல்லோடு சொல்லினை இணத்து, சொற்றொடர்களை ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு, அர்த்தங்களை அறிந்து, புரிந்து சுவைப்பது என்றால் ஒரு ஜென்மத்தில் நடக்கக் கூடிய காரியமா என்ன.

 

சொல்லைப் பார்க்கப் போய் சொல்லினுள் ஞான எல்லை, (எல் என்றால் ஒளி) – ஞான ஒளியைக் கண்டால் அதிலிருந்து மீள்வது எங்ஙனம்?

 

 

சொல்லினுள் ஜொலிக்கும் ஞான ஒளி கண்டவர் கண்டவரே; அதிலிருந்து அவர் எப்போது எப்படி மீள்வாரோ? யாருக்குத் தெரியும்.

 

சந்த இனிமையைக் கண்டவர்கள் அதிலேயே மாட்டிக் கொள்வார்கள்.

 

இப்படி இருக்கும் போது தமிழின் துறைகளை நன்கு கையாண்ட கம்பனின் கவிதையின் முடிவை முழுதுமாக யார் கண்டார்கள்.

 

 

இவ் வரகவியை “முடியக் கண்டவர்கள் யாரும் இலர்.

கே.என். சிவராஜ பிள்ளையுடன் ஓங்கிய குரலில் நாமும் ஆம், யாரும் முடியக் காண முடியாது என்று கூவுகிறோம்.

தோள் கண்டார் தோளே கண்டார் பாடலில் கம்பன் ராமனின் அழகை முடியக் கண்டவர் யாரும் இல்லை என்று ஒரு ‘போடு போடுகிறான் இல்லையா!

 

 

அதே “போடை அவருக்கே போடுகிறார் சிவராஜ பிள்ளை.

அற்புதமான பாடல் தானே இது?

கம்ப ராமாயணக் கவுத்துவ மணி மாலையில் (கம்பராமாயணக் கௌஸ்துப மணிமாலை) 72வது பாடலாக மலர்கிறது இது.

51வது பாடலில் இதையே வற்புறுத்துகிறார் அவர் இப்படி:

 

 

சொல்வளம் பெரிதென்கோ யான்? சொல்லினுட் டுளும்பு ஞான

நல்வளம் பெரிதென்கோ யான்? நவையறு மணிகள் வீசும்

வில்வளம் பெரிதென்கோ யான்? வியங்கியம் விழுமி தென்கோ?

பல்வளம் செறிந்து பண்ணாம் பரிமள மியன்ற பாவில்!

 

 

சொல்வளமா?

ஞான நல் வளமா?

மணிகள் வீசும் வில் வளமா?

அடடா, அனைத்தும் இணைந்து பல்வளம் செறிந்து காணும் கம்பனின் பண் கொண்ட பாடலை எப்படிப் புகழ்வது?

எங்களுக்கும் தெரியவில்லை.

 

கம்பன் புகழே புகழ்; அவன் பாடலே பாடல் என்று கவிஞர் சிவராஜ பிள்ளையுடன் மகிழ்ச்சியுடன் இணைந்து ஓர் குரலாய்க் கூவுகிறோம் நாம்.

அழகிய இந்த நூலில் வரும் பாடல்கள், கம்ப ராமாயணத்தில் வரும் முக்கியச் செய்யுள்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்பதைக் கம்பனைக் கற்றோர் அறிவர்!

***