Article written by London swaminathan
Date: 9 June 2016
Post No. 2881
Time uploaded in London :– 8-28 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com
நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன.விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-
கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)
கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.
இதே விஷயம் சம்ஸ்கிருதத்திலும் அழகாக உள்ளது:-
சகடம் பஞ்சஹஸ்தேஷு தசஹஸ்தேஷு வாஜினம்
கஜம் ஹஸ்த சஹஸ்ரேண துஷ்டம் தூரேண வர்ஜயேத்
வண்டிகள் (சகடம்) நின்றால் அதற்கு அருகில் நிற்காதீர்கள். அது திடீரென நகரக்கூடும். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைகள் (வாஜினம்) இருந்தால் முனால் பாய்ந்து கடிக்கவும் செய்யும்; பின் காலால் உதையவும் செய்யும்; ஆகையால் பத்து முழம் தள்ளி நில்லுங்கள். யானைக்கு (கஜம்) ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். துஷ்டர்களைக் கண்டாலோ வெகு தொலைவில் போய் விடுங்கள்.
அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்
குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீதே – வாக்குண்டாம், அவ்வையார்.
கெட்டவர்களைப் பார்ப்பது தீது; அவர் சொல் கேட்பதும் தீது; அவர்களுடன் சேருவது தீது (இதெல்லாம் முன்னர் சொன்ன விஷயங்களே. அவரைப் பற்றிப் பேசுவதும் தீதே. அதாவது பேஸ் புக்கிலும், ஈ மெயிலிலும், திண்ணைப் பேச்சிலும், நண்பர்களின் அரட்டைக் கச்சேரியிலும் அவர்களைப் பற்றிப் பேசாதே. ஏன்?
1.நேரம் வீண், 2.எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. யார் உங்களுக்கு குழி பறிப்பார்கள் என்பதும் தெரியாது என்று எச்சரிக்கிறார் அவ்வையார்.
இறுதியாக மேலும் ஒரு சம்ஸ்கிருதப் பாடல்:–
துர்ஜன: பரிஹர்தவ்யோ வித்யா அலங்க்ருதோ அபி சன்
மணினா பூஷித ஸர்ப: கிம் அசௌ ந பயங்கர:
படித்தவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தால், அவர்களை விட்டுவிடவேண்டும். நாகரத்தின மணி வைத்திருந்தாலும் பாம்பு என்பது பயங்கரமானது இல்லையா!
படித்தும் கெட்டவர்கள் = மாணிக்கம் தரித்த விஷப் பாம்பு
அழகான உவமை!
வாழ்க தமிழ்; வளர்க சம்ஸ்கிருதம்.
–சுபம்–
You must be logged in to post a comment.