Written by London Swaminathan
Research Article No.1765; Dated 1April 2015.
Uploaded at London time 8-50 (GMT 7-50)
கரக்கோயில், இளங்கோயில், கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக் கோயில், திருக்கோயில்
தமிழ்நாட்டில் 30,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. ஆயினும் மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், தஞ்சைப் பெரிய கோயில், திருவண்ணாமலைக் கோவில் கோபுரங்கள் எல்லாம் சுமார் 1000 ஆண்டு பழமையுடையவைதாம். அதற்கு முன் தமிழ் நாட்டில் கோவில்கள் இருந்தனவா? அவை எப்படி இருந்தன?
பிள்ளையார்பட்டி, மஹாபலிபுரம், திருப்பறங்குன்றம், நரசிங்கம் முதலிய ஊர்களில் மலைகளில் பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்களும் ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு ஏற்பட்டவையே. அப்படியானால் அதற்கு முன் என்ன மாதிரி கோயில்கள் இருந்தன?
சிலப்பதிகாரம், புறநானூறு, பரிபாடல் முதலிய நூல்களில் என்ன என்ன கோவில்கள் இருந்தன என்று கடவுளரின் பெயர்கள் எல்லாம் உள்ளன. ஆயினும் கோவில்களின் தோற்றத்தை நாம் அறியோம். அப்பர் என்ற திருநாவுக்கரசர் தமிழிலும், வராஹமிகிரர் சம்ஸ்கிருதத்திலும் அரிய தகவல்களைக் கூறுகின்றனர். அப்பர் பாடிய தேவாரத்தில் கரக்கோயில், இளங்கோயில்,கொகுடிக் கோயில், மணிக்கோயில், ஞாழற்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் என்று பலவகையான கோயில்களைக் குறிப்பிடுகிறார்.
இந்தத் தகவலை 1968 ஆம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ்நாட்டு மலரில் எழுதிய தொல் பொருட்துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி தமிழில் கோயில் என்பதற்கு பழங்காலத்திலேயே பல சொற்கள் இருந்ததையும் பட்டியலிட்டுள்ளார்.
டாக்டர் இரா.நாகசாமி இன்னும் ஒரு அரிய பாட்டினையும் பிங்கலந்தை நிகண்டிலிருந்து 1968 ஆம் ஆண்டுக் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளார்:–
கல்லும் உலோகமும் செங்கலும் மரமும்
மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்
கந்த சருக்கரையும் மெழுகும் என்றயிவை
பத்தே சிற்பத் தொழிலுக்கு உறுப்பாகும் – பிங்கலந்தை 29
அதாவது தெய்வத் திரு உருவங்கள் செய்ய இந்த பத்து பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. கோவில்கள் மரம் செங்கற்களால் கட்டப்பட்டன. அவை எல்லாம் பருவமழை, வெயில் போன்ற காலநிலையாலும், முஸ்லீம் படை எடுப்புகளாலும் அழிந்து போயின. இன்றும் கூட கேரளம் முதலிய மாநிலங்களில் மரக் கோயில்கள் இருப்பதைக் காணலாம்.
அப்பர் தேவாரம் ஆறாம் திருமுறை (6-71)
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும்
கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில்,
கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்,
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும்
இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில்,
திருக்கோயில் – சிவன் உறையும் கோயில் சூழ்ந்து,
தாழ்ந்து, இரைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே.
அப்பர் குறிப்பிடும் பலவகைக் கோவில்கள் என்ன என்று கூட நமக்குத் தெரியாது. அவர் காலத்தில் சிவபெருமானுக்கு 78 பெரிய கோயில்களும் மற்ற பல வகைக் கோயில்களும் இருந்தது தெரிகிறது. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் 300-க்கும் மேலான புனிதத் தலங்களின் பெயர்களைச் சொல்லுகின்றனர். அப்பர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டில். அவருக்கு 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத சம்ஸ்கிருத என்சைக்ளோபீடியாவில் 20 வகைக் கோவில்களைக் குறிப்பிடுகிறார். வெறுமனே பெயர்களை மட்டும் சொல்லாமல் அவற்றின் நீள, அகலம், கருவறையின் (கர்ப்பக் கிருஹம்) அளவு ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.
ஒரு அத்தியாயம் முழுதும் கோவில் பற்றி எழுதிவிட்டு மிகவும் அடக்கத்துடன் கார்கர் என்பவர் விரிவாக எழுதிய விஷயத்தை தாம் சுருக்கமாகச் சொல்லியதாகக் கூறுகிறார். இதிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பலவகை வடிவங்களில், உயரங்களில் கோபுரங்களை எழுப்பும் மாபெரும் எஞ்சினீயர்கள் இமயம் முதல் குமரி வரை இருந்தது தெரிகிறது.
வராகமிகிரர் எழுதிய பலவிஷயங்களில் ஒரு சில குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:-
“நிறைய தண்ணீர் பாயும் குளங்களுடனும் அழகான நந்தவனங்களுடனும் கோவில்களைக் கட்ட வேண்டும்.
ஒருவருக்கு புகழும் புண்ணியமும் கிட்ட வேண்டுமானால் கோயில் கட்ட வேண்டும்.
யாகம் செய்வோர், கிணறு வெட்டுவோர் ஆகியோருக்குக் கிடைக்கும் புகழ் கோவில் கட்டுவோருக்குக் கிடைக்கும்.
ஆற்றங்கரை,கடற்கரை, காடு, மலை, வனாந்தரம் ஆகிய இயற்கைச் சூழலில் கோவில் அமைவது மிகவும் விசேஷம்.
கோவில்கள் இருபது வகைப்படும். அவையாவன:–
மேரு, மந்தரா, கைலாச, விமானச் சந்த, நந்தன, சமுத்க, பத்ம, கருட, நந்திவர்த்தன, குஹராஜ, குஞ்சர, வ்ருஷ, ஹம்ச, சர்வதோபத்கர, கட, சிம்ஹ, வ்ருத்த, சதுஸ்கோண, ஷோடசரி, அஷ்டசரி.
மேரு என்னும் வகைக் கோவில் 12 நிலைக் கோபுரமும் அறுகோண வடிவமும் உடையவை. அகலம் 32 முழம், உயரம் 64 முழம்”.
இதுபோல 20 வகைக் கோவில்களுக்கும் நீள, அகல, உயரங்களைச் சொல்லிவிட்டு கர்ப்பக் கிரஹ அளவுகளையும் கொடுக்கிறார். பல்வகை கட்டிடக் கலை சொற்களையும் உபயோகிக்கிறார். இல்லாத ஒரு விஷயத்தை அவர் கற்பனை செய்து எழுதமுடியாது. இதை எல்லாம் கொண்டு பார்க்கையில் எந்த அளவுக்கு நமது கட்டிடக் கலைத்திறன் 1500 ஆண்டுஅளுக்கு முன் இருந்தது என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.
இதுவரை தமிழ்- சம்ஸ்கிருத மொழிகளில் கிடைக்கும் தகவல்களை யாரும் ஒப்பிட்டு ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. பாண்டியர்களில் மிகவும் பழையவனான பல்யாக சாலை முது குடுமிப் பெருவழுதி கோவிலை வலம் வரும் போதும், பிராமணர்கள் ஆசி வழங்கும் போதும் மட்டுமே அவன் குடையும் தலையும் தாழ்ந்து வணங்கும் என்று புலவர் பெருமக்கள் பாடியுள்ளனர் (புறம்-6). சிலப்பதிகாரத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். எவரேனும் இரு மொழி இலக்கியங்களில் வரும் கோவில்கள ஒப்பிட்டு ஆராய்வது பலன் தரும்.
வாழ்க அப்பர், வராஹமிஹிரர்!! வளர்க கோவில் கலை!!
You must be logged in to post a comment.