Research paper No 1955
Written by London swaminathan
Date: 26 June 2015
Uploaded in London at காலை 8-47
“வேதோகில தர்ம மூலம்” – வேதங்களே தருமத்தின் ஆணிவேர்—மனு ஸ்மிருதி 2-6
ரிக் வேதம் உலகிலேயே பழமையான நூல். இதன் எதிரிகளும் இப்போது இதன் காலத்தை கி.மு 1700 என்று ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர். இது ஒரு சமய நூல். ஆயினும் சமயம் சாராத பல்வேறு தகவல்கள் ஆங்காங்கே பொதிந்து கிடக்கின்றன. ஸ்ரீகாந்த் தலகரி போன்ற அறிஞர்கள் காய்தல் உவத்தல் இன்றி இதை ஆராய்ந்ததில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.
ஊழல் எதிர்ப்புப் போராட்டம், ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது. பாணீக்கள் என்போர் லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது இந்திரனின் தூதராகச் சென்ற நாய் சரமா அதை ஏற்க மறுத்துவிட்டது. பாணீக்கள் என்போர் பீனீஷியர் என்னும் இனத்தினருடன் தொடர்புடையோர் என்றும் உலகில் அவர்கள்தான் அகர வரிசை எழுத்தையும், காசு/பணம் என்னும் கரன்ஸி விஷயத்தையும் உலகிற்குக் கற்பித்தவர்கள் என்றும் முன்னொரு கட்டுரையில் கண்டோம்.
பாணீ என்னும் சொல்லில் இருந்து வணிக சமபந்தமான சொற்கள் அனைத்தும் வந்தன:
பாணீ = வணிக= பணம்= ஆபணம்/மார்க்கெட்= பனியா=வணிகர்.
((சிந்து சமவெளியில் இருக்கும் எழுத்துக்கள் அகர வரிசை எழுத்துக்கள் அல்ல. ஆனால் பிராமி என்னும் லிபி பிற்காலத்தில் அகர வரிசை எழுத்துக்களாக உருவானது. அதிலிருந்து தமிழ் எழுத்துக்களும் தென் கிழக்காசிய நாடுகளில் உள்ள எழுத்துக்களும் உருவாயின. பிராமி லிபி, பீனிஷிய எழுத்திலிருந்து உருவானதாக அறிஞர்கள் பகர்வர்)) நிற்க.
ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் (10-108) ஒரு பாடலில் சரமா கதை வருகிறது. சரமா என்பது உண்மையில் நாயா அல்லது இயற்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு இதை உருவகப்படுத்தி னார்களா என்று பல விளக்கங்கள் உண்டு. எது எப்படியாகிலும் ஒரு விஷயத்தை உவமையாகவோ, உருவமாகவோ பயன்படுத்தவும் அப்படி ஒன்று (நாய்) இருந்தால்தான் முடியும்.
இந்த சம்பவத்தில் வரும் பசுக்கள் சூரிய ஒளியைக் குறிக்கும் என்றும், பாணிக்கள் அதைத் திருடியது சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கும் என்றும், சரமா என்னும் நாய், சூரிய உதயத்தைக் குறிக்கும் என்றும் ஒரு விளக்கம் உண்டு.
நேற்றைய கட்டுரையில் சரமா, சரமேயஸ் பற்றிச் சொல்லிவிட்டதால் நேரடியாக லஞ்ச ஊழலைப் பார்ப்போம்:
சரமாவின் கூற்று:
ஓ, பாணீக்களே! இந்திரனின் தூதனாக இங்கு வந்தேன்; உங்களிடம் உள்ள பெரும் செல்வத்தைக் கேட்கவந்தேன்
ஓடும் ரசா நதியையும் கடக்கத் தயங்கவில்லை
பாணீக்களின் கூற்று:
அது யார் இந்திரன்? அவன் தூது அனுப்பியது என்னே! இவ்வளவு தூரம் கடந்து வந்தனையே! உங்கள் இந்திரனே வரட்டும். அவனை மாடு மேய்க்கும் வேலையில் அமர்த்துவோம்.
ஆயினும் சரமா நல்ல நேரத்தில் வந்திருக்கிறாய். நாங்கள் உனக்கு பசு மாடுகள் தருகிறோம்; திரும்பிச் செல்லாதே. எங்களுடைய சகோதரியாக்கிக் கொள்கிறோம்.
சரமாவின் கூற்று:
உங்களை எச்சரிக்கிறேன்; ரிஷிகளுக்கும் இந்திரனுக்கும் இது எல்லாம் தெரியும். நான் போகிறேன்
இந்தத் துதி நீண்ட ஒரு துதி. சம்பாஷணை/ வாக்குவாதம் அடிப்படையில் அமைந்தது.
மேற்கூறிய துதியிலிருந்து நாம் அறிவதென்ன?
நீ கட்சி மாறினால் உனக்கு பதவியும் (சகோதரி), கையூட்டும் (பசு மாடுகள்) கொடுப்போம் என்று பாணீக்கள் கூறினர்.
இந்திரனின் தூதனான சரமா கையூட்டை ஏற்க மறுத்து இந்திரனிடம் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டது.
இதே கதை, பிற்கால இலக்கியங்களான ஜைமினீய பிராமணம், பிருஹத் தேவதா ஆகியவற்றிலும் சிற்சில மாற்றங்களுடன் காணப்படுகிறது:
பாணீக்கள் திருடிய பசுக்கள் , ஒரு குகையில் ஒளித்து வைக்கப்பட்டதென்றும் அவைகளை இந்திரன் மீட்டான் என்றும் அறிகிறோம்.
மஹாபாரதத்திலும், சங்க இலக்கியப் பாடல்களிலும் வரும் ஆநிரை கவர்தல்/ மீட்டலின் “மூலம்”, ரிக்வேதத்தில் உள்ளது. தமிழர்கள் இதை அப்படியே 2000 ஆண்டுகளுக்கு முன் பின்பற்றியதை சங்க இலக்கியப் பாடல்களில் காண்கிறோம். ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையினருக்குச் செமை அடி கொடுக்கிறது இது.
இரண்டாவதாக, துப்பறியும் நாயை வைத்து குகையில் ஒளித்துவைத்திருந்த பொருள்களைக் கண்டுபிடிக்கும் வழக்கத்தையும் இந்துக்களே உலகிற்குக் கற்பித்தனர். எல்லா போலீஸ், ராணுவப் பிரிவுகளும் ரிக் வேத ரிஷிகளுக்குக் கடன்பட்டவர்கள்.
மூன்றவதாக, நாய் நன்றியுள்ள பிராணி. அதை மனிதன் வளர்க்கத் துவங்கியது ரிக்வேத அரசர் (இந்திரன்) காலத்திலேயே துவங்கிவிட்டது. இதை மஹாபாரதத்தில் தருமன் – நாய் கதையிலும் (ஸ்வர்க ஆரோஹன பர்வம்) காண்கிறோம்.
நாலாவதாக, பாணீக்கள் என்னும் தீயோர்தான் லஞ்ச ஊழலைப் பரப்பினர். அதை சரமா நிராகரித்து ஊழல் ஒழிப்பு போராட்டத்தை 3700 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவிட்டது.
ஐந்தாவதாக, ஒரு அரசன் தூதரை நியமித்து முதலில் சமாதானம் பேச வேண்டும் என்னும் நாகரீக நடைமுறையை உலகிற்குக் கற்பித்ததும் இந்துக்களே. இதை ராமாயண அனுமன் தூதிலும் மஹாபாரத கிருஷ்ணன் தூதிலும் காண்கிறோம். இதை ரிக் வேதம் சொல்கிறதென்றால் வேத கால நாகரீகம் எவ்வளவு பண்பட்ட, முன்னேறிய நாகரீகம் என்பதை அறிய முடிகிறது. வேத காலத்தில் சபா (அவை), சமிதி (கமிட்டி) என்னும் ஜனநாயக அமைப்புகள் இருந்ததையும் மன்னருக்கு அவை அறிவுரை சொன்னதையும் முன்னொரு கட்டுரையில் தந்தேன். உலகிற்கு வரம்புக்குட்பட்ட முடியாட்சி, பார்லிமெண்டரி ஜனநாயகம் என்பதைக் கற்பித்ததும் ரிக் வேதமே. அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சமுதாயம் பாரத மண்ணில் வசித்தால்தான் இது சாத்தியமாகும். ஏனெனில் உலகில் வேறு எங்கும் இவ்வளவு முதிர்ச்சியைக் காண இயலவில்லை.
ஆறாவதாக,
பிராணிகளையும், பறவைகளையும் தூது அனுப்பும் பாடல்கள் சங்க இலக்கியத்திலும் பிற்கால தமிழ் இலக்கியத்திலும் உண்டு. வேதத்தில் ஆரம்பித்த நாய் விடு தூது, நள தமயந்தி காலத்தில் அன்னம் விடு தூதாக வளர்ந்து, காளிதாசன் காலத்தில் மேகம் விடு தூதாக (மேகதூதம்) மலர்ந்து, தமிழில் கிளி விடுதூது, குயில் வீடு தூது என்பன போலப் பல்கிப் பெருகின.
நாய்கள் நன்றியுள்ள பிராணிகள். மனிதனைவிட 3000 மடங்கு மோப்ப சக்தியுடையவை. இதை ரிக்வேத ரிஷிகள் அறிந்து அதன் பெயரில் ஒரு பாடல், துதி “இயற்றியிருப்பது” உலகில் வேறெங்கும் இல்லாத புதுமை!
வேதங்களை 450–க்கும் மேலான ரிஷிகள் “யாத்ததாக” வெளிநாட்டினர் செப்புவர். ஆனால் நம்மவர், அவை வானில் ஒலி ரூபத்தில் எப்போதும் உள்ளவை என்றும் 450+ ரிஷிகள் அதை ரேடியோ போலக் கேட்டு நமக்குச் சொன்னார்கள் என்றும் நம்புவர். ஆகவே அவை மனிதனால் இயற்றப்பட்டவை அல்ல.
ப்ருஹத் தேவதா, ஜைமினீய பிராமணம்
ஜைமினீய பிராமணத்தில் முதலில் சுபர்ணன் என்னும் கருடன் தூது போனதாகவும் அது லஞ்சம் வாங்கியதாகவும் அதற்குப் பின்னரே சரமா அனுப்பப்பட்டதாகவும் இருக்கிறது. லஞ்சம் வாங்கிய சுபர்ணனை இந்திரன் கண்டிக்கிறான்.சரமா, நன்றியோடு பணி புரிகிறது
பிருஹத் தேவதாவில் சரமா, லஞ்சம் வாங்கியதாக கதையில் ஒரு ‘ட்விஸ்ட்’ ( திடீர் மாற்றம்) இருக்கிறது. இந்திரன் அதைக் கண்டித்து ஒரு அடி கொடுத்தவுடன் “பாலை” அப்படியே கக்கி விடுகிறது. பின்னர் சரமா, பாணீக்களிடம் போகிறது.
வேதகால ரிஷிக்கள் சங்கேத மொழியிலேயே பாடுவர். ஆகையால் “பால்” என்பர்.
சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் வரும் ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது:
தண்ணீரில் வாழும் மீன்கள் எப்படி நீரைக் குடிப்பது உண்மையோ, அப்படி அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் உண்மை.
தமிழில் ஒரு பழமொழி உண்டு:
தேனை வழித்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?
ஆனால் ரிக்வேதம் முதல் சாணக்கியன் வரை எல்லோரும் லஞ்சத்தைக் கண்டித்துள்ளனர்.
You must be logged in to post a comment.