சித்திரக் கவி: சுழிகுளம் – 1

suzi kulam 1

தமிழ் என்னும் விந்தை! -22

சித்திரக் கவி: சுழிகுளம் – 1

 

கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1542; தேதி 3 January, 2015.

 

சித்திர கவிகளில் சுழி குளம் இன்னொரு வகையாகும்.சுழி குளம் எவ்வெட்டெழுத்துக் கொண்ட நான்கு அடிச் செய்யுளாய், மேலிருந்து கீழேயும், கீழிருந்து மேலேறியும் புறம் சென்றும் முடியும்படி படிக்கத் தக்க வகையில் பாடப்படுவதாகும்.

இதற்கு எடுத்துக்காட்டாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-

“கவிமுதி யார்பாவே                                                

விலையரு மாநற்பா                                           

முயல்வ துறுநர்                                                    

திருவழிந்து மாயா”

 

இந்தச் செய்யுளின் பொருள்:-

கவி முதியார் பாவே – செய்யுள் இயற்றுவதில் முதிர்ச்சி அடைந்தவர் பாடல்களே                                        விலை அருமை மா நன்மை பா – விலை மதித்தற்கு அரிய பெருமை வாய்ந்த நல்ல பாடல்களாகும்;   முயல்வது உறுநர் – முயற்சி செய்வதில் நன்கு பொருந்தினவர் தம்

திரு அழிந்து மாயா – செல்வம் சிதைந்து தொலையா

இதை சித்திரத்தில் அமைத்தால் வருவதை கீழே காணலாம்.

picture is given at the top.

அடுத்து இன்னொரு பாடல்:

“மதந விராகா வாமா                                                

 தநத சகாவே நீவா                                                

 நததந தாதா வேகா                                                  

 விசந விரோதா காரா”

 

 

இந்தச் செய்யுளின் பொருள்:-                                      மதந விராகா – மன்மதன் மீது விருப்பம் இல்லாதவனே!            வாமா – ஒளியை உடையவனே!                                    தநத சகாவே – குபேரனுக்குத் தோழனே!                                நத் அதந தாதா – மேகத்தினு அதிகமான கொடையாளியே!          விசந விரோதா காரா – துக்கத்தைச் செய்யும் விரோதமான விஷமாகிய உணவினை உடையவனே!  (இதன் இன்னொரு பொருள்- விசனத்திற்கு விரோதமான அதாவது விசனத்தைப் போக்கும் ஸ்வரூபத்தை உடையவனே!)                                                     நீ வா கா – நீ பிரத்தியக்ஷமாகத் தரிசனம் தந்து எம்மைக் காப்பாற்றுவாயாக!

இந்தச் செய்யுள் அமைந்த சித்திரத்தைக் கீழே காணலாம்:

suzikulam 2

கிடைமட்டமாக செய்யுளின் நான்கு அடிகளும் வருவதை முதலில் காணலாம். பின்னர் எட்டு செங்குத்தான வரிசைகளில் மேலிருந்து கீழாக முதல் வரிசையிலும் அடுத்து கீழிருந்து மேலாக எட்டாம் வரிசையிலும் இப்படி மாறி மாறி 2,7,3,6,4,5 ஆகிய வரிசைகளில் செய்யுள் அமைவதைக் கண்டு இன்புறலாம்.

இன்னும் சில சுழி குள வகைப் பாடல்களை மேலே காண்போம்

  • தொடரும்

தமிழ் விந்தை-20: மாலைமாற்று – 1

malaimatru

தமிழ் என்னும் விந்தை! -20

மாலைமாற்று – 1

கட்டுரையை எழுதியவர் :– S.Nagarajan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1532; தேதி 31 டிசம்பர், 2014.

By ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் காவ்யாதர்சம் மிகச் சிறந்த நூலாகக் கொண்டாடப்படுகிறது. இதை இயற்றியவர் பெரும் புகழ் பெற்ற தண்டி. இதே பெயரைக் கொண்ட தமிழ்க் கவிஞரான தண்டியும் தண்டியலங்காரம் என்னும் அழகிய இலக்கண நூல் ஒன்றை யாத்துள்ளார்.

நுட்பமான பல விஷயங்களை இந்நூலில் காண முடிகிறது. இதை இயற்றிய தண்டி கம்பனின் மகனான அம்பிகாபதியின் புதல்வர் எனக் கருதப்படுகிறார். இவரது காலம் 12ஆம் நூற்றாண்டு. வடமொழியும் தென்மொழியும் நன்கு கற்ற தண்டி தனது அலங்கார நூலில் சுமார் 35 அணிகளின் இலக்கணத்தைச் சிறப்பாகத் தருகிறார். அத்துடன் சுமார் இருபது சித்திர கவிகளையும் சித்தரிக்கிறார்., அதில் கோமூத்திரி, கூடசதுக்கம்,சருப்பதோபத்திரம் ஆகியவற்றை விளக்கும் செய்யுள்களையும் காணலாம்.

ஏற்கனவே இத்தொடரில் பரிதிமால்கலைஞரின் விளக்கமாக நாம் பார்த்துள்ள கோமூத்திரி, கூடசதுக்கம்,சருப்பதோபத்திரம் ஆகியவற்றின் உதாரணச் செய்யுள்கள் தண்டியலங்காரத்தில் மேற்கோள் காட்டப்பட்டவையே!

 

சருப்பதோபத்திரம் (அத்தியாயம் 12-இல் தரப்பட்டுள்ள “மாவா நீதா தாநீ வாமா’ என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)

 

கூடசதுக்கம் (அத்தியாயம் 16இல் தரப்பட்டுள்ள புகைத்தகைச் சொற்படைக் கைக்கத என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)

 

 

கோமூத்திரி (அத்தியாயம் 18இல் தரப்பட்ட பருவ மாகவி தோகன மாலையே என ஆரம்பிக்கும் உதாரணச் செய்யுள்)

ஆகிய இவை தண்டியலங்காரம் தரும் செய்யுள்கள்.

மாலைமாற்று

ஒரு செய்யுளை கடைசி முதலாகக் கொண்டு படித்தாலும் அதே செய்யுள் வந்தால் அதுவே மாலைமாற்று எனப்படும்.

தண்டியலங்காரம் தரும் மூன்று உதாரணச் செய்யுள்கள் வருமாறு:-

“நீ வாத மாதவா தாமோக ராகமோ                                        தாவாத மாதவா நீ”

 

இதன் பொருள்: நீ வாத மாதவா – நீங்காத பெரும் தவம் உடையோனே!    தா மோக ராகமோ  தாவாது – வலிய மயக்க வேட்கையோ நீங்காது      அம் மாது அவா நீ – (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கி அருள்வாயாக! (அவள் விருப்பத்தை நிறைவேற்றுவாயாக)

“வாயாயா நீகாவா யாதாமா தாமாதா                           யாவாகா நீயாயா வா

                         

வாயா யா – எமக்கு வாயாதன (கிடையாதவை) யாவை?

நீ காவாய் – நீ எம்மைக் காத்து அருள் புரிவாய்!

யாதாம்  – (இன்றேல்) யாதாகும்?

மாது ஆம் மா தா – இம்மாது பெரும் வருத்தம் உறுவள்

யா ஆகா – (நீ விரும்பினால்) எவை முடியாதன?

ஆயா நீ வா – யான் கூறியவற்றை நன்கு ஆராய்ந்து நீ வருக

தலைவியின் ஆற்றாமையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்தியது.

“பூவாளை நாறுநீ பூமேக லோகமே                                      பூ நீறு நாளைவா பூ”

 

பூவாளை நாறும் நீ – இயல்பாய் பூப்பு இல்லாதவளை மணந்து புலால் நாற்றம் வீசும் நீ

பூ லோகம் மேகமே – பூவையும் பொன்னையும் மழையாகச் சொரியும் மேகமோ!

பூ நீறு நாளை வா – பூவும் திருநீறும் தரித்து நாளைய தினம் வருவாய்

பூ – இவள் இப்பொழுது பூப்பினளாய் இருக்கின்றாள்

பூ மேகம் , லோக மேகம் என்று தனித் தனியாகக் கூட்டுக. பூவைச் சொரியும் மேகன் ‘புட்கலாவருத்தம்’ என்றும் பொன்னைச் சொரியும் மேகம் ‘சங்காரித்தம்’ என்றும் கூறப்படும்.

மணத்தல் – கலத்தல்

பூப்புனைதல் புலால் நாற்றம் நீங்குதற்கும், திருநீறு புனைதல் குற்றம் நீங்கிப் பரிசுத்தம் அடைவதற்குமாம்.

பரத்தையர் சேரி சென்று மீண்ட தலைவனுக்கு பாங்கி வாயிலாக மறுத்து உரைத்ததாம் இந்தச் செய்யுள்.

பரிதிமால்கலைஞர் தண்டியலங்காரம் தரும் மூன்று செய்யுள்களுக்கும் இப்படி விளக்கம் அளித்துள்ளார்.

மாலைமாற்றைச் சித்திரமாகப் பார்த்தால் வரும் மாலை இது:-

Contact swami_48@yahoo.com

***********************

தமிழ் என்னும் விந்தை!

love-poems-do-they-still-exist-14

சதுரங்க பந்தம் -1
ச.நாகராஜன்
Post No 1223; Dated 9th August 2014.

சதுரங்க துரக கதி பந்தம்
உலகில் உள்ள சில மொழிகளில் மட்டுமே சித்திர கவிகளை அமைக்க முடியும். தமிழில் அற்புதமான சித்திர கவிகள் ஏராளம் உண்டு. இவற்றில் ஒன்று சதுரங்க பந்தம். இந்த சதுரங்க பந்தங்களிலும் பல்வேறு வகைகள் உண்டு. அவற்றில் ஒன்று சதுரங்க துரக கதி பந்தம். சதுரங்க விளையாட்டில் ஒரு குதிரை எப்படித் தாவி தாவி கட்டம் விட்டுக் கட்டம் மாறுமோ அது போல அந்தந்த கட்டங்களில் சொற்கள் வருமாறு அமைக்க வேண்டும். அதே சமயம் கவிதையின் இலக்கணமும் மீறக் கூடாது; நல்ல பொருளும் அமைந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மிகவும் கஷ்டமான விதிகளுக்கு உட்பட்டு கவிதை இயற்றுவது மிகவும் கடினம். பெரும் தமிழ்ப் புலவரான வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இப்படிப்பட்ட பந்தங்கள் இயற்றுவதில் வல்லவர். தமிழ் மீதுள்ள பற்றின் காரணமாக சூரியநாராயண சாஸ்திரியார் என்ற பெயரை பரிதிமால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டவர் இவர்.
சித்திர கவி விளக்கம் என்ற அரிய தமிழ் நூலைப் படைத்து அதில் 22 வகை சித்திர கவிகளை விளக்கியுள்ளார். அதில் இந்த பந்தமும் ஒன்று.

சதுரங்க துரக கதி பந்தப் பாடல் இது தான்:-

தேரினெந் நெஞ்ச நீ திரித லென்கொலோ

நாரொடும் வியன்றமி ணயந்து தூவிய

காரெனும் பரிதிமால் கணங்கொள் பூவரா

ரீரடி யேழைசூட் டியையப் போற்றுவாம்

இந்தப் பாடலில் உள்ள எழுத்துக்களைக் குதிரை பாயும் போக்கில் அமைக்க ஆரம்பித்தால் அது கீழ்க்கண்ட விதமாக சதுரங்கத்தின் 64 கட்டங்களில் அமையும்.

bandham chathur

சதுரங்க விளையாட்டில் குதிரை எப்படிப் பாயும் என்பதை அறியாதவர்கள் கீழ்க்கண்ட கட்டங்களில் வரிசையாகப் பாடலின் எழுத்துக்கள் அமைவதைக் கண்டு மகிழலாம்:-

1, 11, 28, 34, 17, 2, 19, 4
21, 15, 5, 20, 10, 25, 35, 29
39, 56, 62, 52, 42, 57, 51, 41
58, 43, 49, 59, 53, 38, 32, 47,
64, 54, 37, 31, 48, 63, 46, 61
44, 50, 60, 45, 55, 40, 30, 36
26, 9, 3, 13, 23, 8, 14, 24
7, 22, 16, 6, 12, 27, 33, 18

மிகவும் கஷ்டமான இந்தப் பாடல் அமைப்பில் பரிதிமால் கலைஞர் இன்னும் இரண்டு அரிய விஷயங்களை அமைத்துள்ளார். கட்டங்களின் வலது கோடியிலிருந்து குறுக்காக இடது கோடி வரை உள்ள எட்டு கட்டங்களில் (மஞ்சள் வண்ணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது) தனது பெயரான சூரிய நாராயணன் என்பதை அமைத்துள்ளார். அத்தோடு பாடலில் தனது தமிழாக்கப் பெயரான ‘பரிதிமால்’ என்பதை மூன்றாம் வரியில் அமைத்துள்ளார்!
பாடலின் பொருளை அவரே தனது சித்திர கவி விளக்கம் என்ற நூலில் கொடுத்துள்ளார். 1939ஆம் ஆண்டு இந்த நூல் வெளியானது.

BasicShapepoetry

அவர் விளக்கும் பொருளைப் பார்ப்போம்:-
தேரின் – ஆராயுமிடத்து
எம் நெஞ்சம் – எம் நெஞ்சமே!
நீ திரிதல் என் கொலோ – நீ கண்ட இடங்கள்தோறும் சென்று திரிதல் யாது கருதியோ?
நாரொடும் – அன்போடு
வியன் தமிழ் நயந்து தூவிய – (மாணாக்கர்க்கு) பெருமை வாய்ந்த தமிழினை விரும்பிச் சொரியும் (போதிக்கும்)
கார் எனும் பரிதி மால் – மேகத்தினை ஒத்த சூரியநாராயணப் பெயர் கொண்ட ஆசிரியனது
கணம் கொள் பூவர் ஆர் இரண்டு அடி – கூட்டமாகப் பொருந்திய உபய பாதங்களும்
ஏழை சூட்டு இயைய போற்றுவாம் – எளியேமாகிய எமது உச்சியிற் பொருந்துமாறு அவற்றை வணங்குவோம்

“பலவேறு நற்பயன்களையும் அளிக்கும் செந்தமிழ் மழையினை மாணாக்கர்க்குச் சொரிந்த கைம்மாறு கருதாத மேகம் போன்ற சூரியநாராயண வள்ளலினது பாத பதுமங்களை உச்சியிற் கொண்டு (நமஸ்கரித்து) வணங்குவதே காரியமாதலில், நெஞ்சமே! நீ பல விஷயங்களிலும் போய்ப் பயனின்றித் திரிவதை விட்டு எம்மோடு கூட வணங்க வருவாய்” என்று நெஞ்சை விளித்துக் கூறியதாம் இச்செய்யுள்.
என் கொல் ஓ! – கொல், ஓ இரண்டும் அசை. தமிழ் நயந்து என்பது தமிணயந்து என்று ஆனது. வீரசோழியம் சந்திப்படலத்து “ஐம்மூன்றதாம்” என்ற கட்டளைக் கலித்துறையில், “மெய்ம்மாண்ப தாநவ்வரின் முன்னழிந்து பினிக்கணவ்வாம்” என்ற விதியால் அமைந்தது. அன்றி மரூஉ மொழியுமாம். பூவர் – மொழி இறுதிப் போலி

இப்படி விளக்கவுரையையும் அவரே தந்துள்ளார்.
அத்தோடு வல்லி பரிணய நாடகத்தில் இது ஆசிரிய வணக்கச் செய்யுள் என்ற குறிப்பையும் தருகிறார்.

அற்புதமான கவிதையைப் படைத்த தமிழ்ப் புலவரைப் போற்றுவோம்; சதுரங்க பந்தம் கண்டு வியப்போம்!

***********