
King Bhoja In Bhopal, Madhya Pradesh
Post No 1939; Date: 18 June 2015
Written by London swaminathan
Uploaded from London at 8-57
தேரையர், ஜீவகன் ஆகிய இரண்டு பெரிய வைத்தியர்கள் செய்த சாதனைகளை நம்மில் பலரும் அறிவோம். தேரையர் என்பவர் தலையில் இருக்கும் தேரைகளையும் (தவளை அல்ல; ஒரு வகை நோய்) எடுப்பார் என்றும் ஒரு பாத்திரத்தில் மலஜல விமோசனம் செய்து அதில் ஒரு துளி எண்ணையை விட்டு நோய் கண்டுபிடிக்கும் புதிய வழிமுறைகளை தேரையர் கற்பித்தார் என்றும் நூல்கள் பகரும்.ஜீவகன் என்பான் மஹா பெரிய வைத்தியன் என்றும் அவனுடைய ஆபரேஷன் பீஸ் (கட்டணம்) மிக அதிகம் என்றும் புத்த மத பாலி மொழி நூல்கள் செப்பும்.
ஜீவகன் செய்த கண் ஆபரேஷன், பொற்கைப் பாண்டியனுக்கு செயற்கைக் கை பொருத்தும் ஆபரேஷன், கண்ணப்ப நாயனாரும், மஹா விஷ்ணுவும் சிவபெருமானுக்கு கண் கொடுத்து முதல் முதல் “ஆர்கன் டொனேஷனை”த் துவக்கி வைத்த பெருமை இவைகள் எல்லாம் தனித் தனி கட்டுரையில் முன்னே கூறினேன்.
இன்று சிந்து சமவெளியில் 4300 ஆண்டுகளுக்கு முன் நடத்திய ஆபரேஷன் (ஆறுவைச் சிகிச்சை) குறித்தும் போஜ மன்னனுக்கு நடந்த ஆபரேஷன் குறித்தும் பார்ப்போம்.
போஜன் என்ற பெயரில் வேத காலம் முதல் பல மன்னர்கள் இருந்தனர். வேத கால போஜன் பற்றி ஐதரேய பிராமணம் விளம்பும். காளிதாசன் கால போஜன் பற்றி சுபாஷித ரத்ன பாண்டாகாரம் செப்பும். நாம் காணப்போகும் போஜன் பற்றி போஜப் பிரபந்தம் என்னும் நூல் விதந்து ஓதும். இவன் 1000 ஆண்டுகளுக்கு பரமார வம்ச மன்னனாக மத்தியப் பிரதேச நகரமான தாரா நகரில் இருந்து ஆட்சி புரிந்தவன். இவனுக்கு தெரீயாத “சப்ஜெக்ட்” உலகில் எதுவுமே இல்லை. இவன் பெயரில் 84 “டெக்னிக்கல்” புத்தகங்கள் உள்ளன. இவனுடைய சம்ஸ்கிருத இலக்கணக் கல்வெட்டு மசூதிக்குள் கண்டு பிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் 1932-ல் மைலாப்பூர் உபந்யாசத்தில் சொன்னதை முன்னரே கொடுத்துவிட்டேன்.
போஜ மன்னனுக்கு பெரிய தலை வலி. நிரந்தர தலை இடி. தாரா நகர வைத்தியர்கள் எவராலும் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது மன்னனின் இடைவிடாத் துயர் கேட்டு உஜ்ஜைனி நகரிலிருந்து இரண்டு பிராமண சர்ஜன்கள் (அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்) வந்து மன்னன் தலை இடியைப் போக்குவதாகக் கூறினர். ஆனால் கபாலத்தைத் திறந்து செய்யும் மேஜர் ஆபரேஷன் இது என்றும் எச்சரித்தனர்.
ஆபரேஷன் செய்கையில் நோயாளியை மயக்க நிலையில் வைக்க இப்போதெல்லாம் குளோரோபர்ம் என்னும் வாயுவைப் பயன்படுத்துகிறோம். சர்ஜன் அருகிலேயே அனஸ்தெடிஸ்ட் (மயக்க மருந்து வல்லுநர்) நின்று கொண்டு குளோரோபர்ம் லெவலை (அளவை) ஏற்றி இறக்கி ஆளின் மயக்கத்தை அதிகரிக்கவோ தெளிவிக்கவோ செய்வார்.
அந்தக்காலத்தில் மருதுவர்கள் சம்மோகினி (அதிக மயக்கம்) என்னும் மூலிகைச் சாற்றைக் கொடுத்து மயக்கி அறுவைச் சிகிச்சை செய்வர். இதே போல போஜ மஹாராஜாவுக்கும் நல்ல முறையில் அறுவைச் சிகிச்சை செய்தனர். மயக்கம் தெளிவிக்க சஞ்சிவினி என்னும் மூலிகையைப் பயன்படுத்தினர். சம்ஸ்கிருதத்திலுள்ள வால்மீகி ராமாயணத்தில் லெட்சுமணன் மீது இந்திரஜித் “பயலாஜிகல் வார்பேர்” (விஷவாயு பிரயோகித்து) செய்து மயக்கம் போட வைத்ததையும் உடனே அனுமன் சஞ்சீவினி மூலிகை எது என்று தெரியாமல் அது முளைத்த பாறையையே (மலை) தூக்கி வந்ததையும் நீங்கள் அறிவீர்கள். போஜ ராஜன் ஆபரேஷன் 100 சதவிகித வெற்றிபெற உதவிய சம்மோகினி, சஞ்சீவினி என்ன, எது என்பது இன்று நமக்குத் தெரியாது. இது அரிய வகை மூலிகை. இமய மலைப் பகுதியில் மட்டுமே கிடைத்ததால் அனுமன் அங்கே பறந்து சென்றான் என்பதும் நோக்கற்பாலது. யாராவது சில பகுத்தறிவுத் திராவிடங்கள் இது எல்லாம் கட்டுக்கதை என்று சொன்னால், இந்த விஞ்ஞான முறைக் கற்பனை உதிக்கக்கூட ஓரளவு நாகரீகம் தேவை என்பதை உணர்த்துங்கள். அப்போதும் விளங்கிக் கொள்ளாதவர்கள், “விளங்காதவர்களே”!!!
சர்ஜரி, ஆபரேஷன் என்பதேல்லாம் இந்துக்களுக்குப் புதிதல்ல. சுஸ்ருதர், சரகர் எழுதிய நூல்களில் எல்லாம் 400–க்கும் அதிகமான கருவிகளின் பெயர்கள் உள்ளன. என்றைக்கு பாரதீயன் சம்ஸ்கிருதத்தைப் புறகணித்தானோ அன்று முதல் நம்முடைய விஞ்ஞான சாஸ்திரங்கள் எல்லாம் அழிந்து போயின. இதற்கு 700 வருஷ முஸ்லீம், 300 வருஷ வெள்ளைக்காரன் ஆட்சியே காரணம்.
இங்கே நான் வாழும் லண்டனில், லண்டன் பல்கலைக் கழகத்திலும், பிரிட்டிஷ் லைப்ரரியிலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் பழம்பெரும் சம்ஸ்கிருத நூல்கள் தூசி படிந்து கிடக்கின்றன. நானும் அவ்வபோது போய் தூசி தட்டிவிட்டு அட்டையை மட்டும் புகைப் படம் எடுத்து வருகிறேன். பல்லாயிரக் காணக்கான நூல்கள் உள்ள சம்ஸ்கிருதம் அழியும் அன்று இந்தியா, இந்துமதம் எல்லாம் அழிந்து போகும். புத்தர் செய்த பெரிய தவறு சம்ஸ்கிருதத்தைப் புறக்கணித்ததே என்று விவேகாநந்தர் சொன்னதையும் இதனால், “தோன்றிய நாட்டி”லேயே புத்த மதம் அழிந்ததையும் நினைவுகூறுதல் பொருத்தம்.

The trepanated Harappan male skull H-796/B in the Palaeoanthropology Repository of Anthropological Survey of India, Kolkata in three views: a, the left lateral view showing the trepanated hole; b, the postero-lateral view showing the horizontal linear traumatic fracture on the occipital bone; c, an enlarged view of the trepanated site showing the rim of callous formed due to healing, and d, the trepanated Burzahom female skull showing signs of multiple trepanations. (Image Source: Current Science)
சிந்துவெளியில் மூளைச் சிகிச்சை
ஹரப்பா நகரத்தில் கிடைத்த மண்டை ஓடுகளில் சில கல்கத்தா நகர இந்திய தொல்பொருட்துறைத் துறையின் மானுடவியல் பிரிவில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு மண்டை ஓட்டில் (கபாலத்தில்) மூன்று மில்லிமீட்டர் அகலத்திற்கு ஒரு ஓட்டை இருக்கிறது. இதை ஆராய்ந்த திரு. சாங்க்யாயன் என்பார், அந்தக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட முறையில் இப்படி சர்ஜரி செய்வது வழக்கமாக இருந்தது என்றும் இதுவே பின்னர் ஆயுர்வேத புத்தகங்களில் காணப்படுகிறது என்றும் சொல்கிறார். மேலும் எலும்புகளை ஆராய்ந்தபோது அந்த சிந்து வெளி மனிதன் அதற்குப் பின்னரும் நீண்டகாலம் வாழ்ந்தது தெரிகிறது என்றும் சொல்கிறார். இந்தச் செய்தி 2013–ஆம் ஆண்டில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் பெரிதாக வந்திருந்தது. ஆக சிந்துவெளி நாகரீகத்தின் தொடர்ச்சியே இந்திய நாகரிகம் என்பதும், வெளிநாட்டிலிருந்து வந்தேறு குடியினர் எவரும் வந்து எதையும் செய்யவில்லை என்பதும் வெள்ளிடை மலையென விளங்குகிறது.
எனது முந்தைய ஆங்கிலக் கட்டுரைகள்:—
Jeevaka’s Eye Operation ( Posted on 25-2-2013)
How did a Pandya king get a golden hand? (Posted on Nov 18,2011)