Picture of Janma Bhumi (Motherland)
Post No. 841 Dated15-02-14
சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 27
Compiled by S Nagarajan
சில விஷயங்களை எளிதில் நினைவு கொள்ள கவிஞர்கள் கையாளும் உத்தியே தனி! எண்ணிக்கையால் சிலவற்றைச் சேர்த்துத் தருவார்கள். சந்தத்தால் அதாவது ஒலியால் சிலவற்றைச் சேர்த்துத் தருவார்கள். சில சமயம் ஒரு எழுத்தைத் தேர்ந்தெடுத்து அதில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைச் சேர்த்துத் தருவார்கள்.
படிக்கவும் இனிமை; நினைவில் வைத்துக் கொள்வதற்கும் சுலபம். பிறரிடம் எடுத்துக் கூறவோ அதி சுலபம். பாராட்டையும் பெறலாம். கல்வி கேள்விகளில் இதனால் மேன்மையும் பெறலாம்.
இந்த வகையில் கிடைப்பதற்கு அருமையான ஐந்தைச் சேர்த்துத் தர விரும்பிய கவிஞர் அவை அனைத்துமே ‘ஜ’வில் ஆரம்பிப்பதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு அற்புதமான கவிதை ஒன்றைத் தருகிறார்.
1) ஜனனி – ஒருவனைப் பெற்றெடுத்த தாய்
2) ஜன்ம பூமி – ஒருவன் பிறந்த தாய் நாடு
3) ஜாஹ்னவி – கங்கையின் மறுபெயர் ஜாஹ்னவி
4) ஜனார்தனன் – ஜனார்தனன் அதாவது விஷ்ணு
5) ஜனகன் – ஒருவனது தந்தை
இந்த ஐந்துமே கிடைப்பதற்கு அரிய விஷயங்கள் என்கிறார் கவிஞர்.
தாயும், தந்தையும், விஷ்ணு பக்தியும், கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியமும், பாரத தேசத்தில் பிறக்கும் பாக்கியமும் கிடைப்பது அரிதிலும் அரிது!
பாடலைப் பார்ப்போம்:-
ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஜாஹ்னவி ச ஜனார்தன: I
ஜனக: பஞ்சமஸ்சைவ ஜகாரா: பஞ்ச துர்லபா: II
ஜனனீ – பெற்றெடுத்த தாய்
ஜன்மபூமி – தாய் நாடு
ஜாஹ்னவி – கங்கை
ஜனார்தன: -ஜனார்தனன் (மீது பக்தியும் அவன் அருளும்)
ஜனக: – தந்தையும்
பஞ்சமஸ்சைவ – ஆகிய ஐந்து
ஜகாரா: – ‘ஜ-காரங்களும்
பஞ்ச துர்லபா: – துர்லபமாக அமையும் ஐந்து (விஷயங்கள்) ஆகும்.I
இது சுபாஷித ரத்னாகர பாண்டாகாரம் என்னும் சுபாஷித நூலில் தொகுக்கப் பெற்ற அருமையான கவிதையாகும்.
இதே போல ‘வ’ காரத்தில் ஆரம்பிக்கும் ஐந்து வார்த்தைகள் மனிதனுக்கு மதிப்பைத் தருவதாக அமைவதைப் பார்த்த கவிஞர் அதை அப்படியே அழகுறத் தொகுத்து அளிக்கிறார்:-
1) வஸ்த்ரம் – ஆடை (ஆள் பாதி,ஆடை பாதி அல்லவா!)
2) வபு: – வபு என்றால் வடிவம்
3) வாக் – பேச்சு
4) வித்யா – கல்வி அறிவு
5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு
இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன.
வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I
வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II
வஸ்த்ரேண – ஆடையும்
வபுஷா – வடிவமும்
வாசா – வாக்கும்
வித்யா – அறிவும்
வினயேன ச- பணிவும் ஆகிய
வகாரை: பஞ்சாபி: – வ’-காரத்தில் ஆரம்பிக்கும் இந்த ஐந்தும்
ஹீன: நரோ -இல்லாத மனிதன்
நாயாதி கௌரவம் –கௌரவம் பெற மாட்டான்
எளிதில் நினைவு கொள்வதோடு இவற்றை முயன்று அடையப் பார்ப்பதே நமது முதல் வேலையாக அமைய வேண்டும் இல்லையா!
Contact swami_48@yahoo.com
***************
You must be logged in to post a comment.