
WRITTEN BY S NAGARAJAN
Post No. 8817
Date uploaded in London – – –16 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
கரந்துறைத் திருப்புகழ் பாடல்கள் மூன்றில் முதலாவது பாடலான ‘கருப்பு விலில்’ என்பது பற்றி கட்டுரை எண் 8277இல் (வெளியான தேதி 3-7-2020) பார்த்தோம். இப்போது நாம் பார்க்கப் போவது இரண்டாவது பாடலான ‘ககனமு’ எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை!
ஒரு திருப்புகழில் இரு திருப்புகழ் பாடல்கள்! – 2
ச.நாகராஜன்
ஒரு திருப்புகழில் இன்னொரு திருப்புகழ் பாடல் இருப்பதானது கரந்துறை திருப்புகழ் பாடல் எனப்படுகிறது. இப்படி அமைந்துள்ள பாடல்கள் மொத்தம் மூன்று.
முதலாவது பாடல் ‘கருப்பு விலில்’ எனத் துவங்கும். இது பழநியில் பாடப்பட்ட திருப்புகழ் பாடலாகும்.
இரண்டாவது பாடல் ‘ககனமு’ எனத் துவங்கும்.இது வள்ளிமலையில் பாடப்பட்ட திருப்புகழ் பாடலாகும்.
மூன்றாவது பாடல் ‘தத்தித் தத்தி’ எனத் துவங்கும். இது காஞ்சிபுரத்தில் பாடப்பட்ட திருப்புகழ் பாடலாகும்.
இங்கு ‘ககனமு’ எனத் துவங்கும் பாடலைப் பார்ப்போம்.
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
கள்ளப் புலாற்கி …… ருமிவீடு
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
கள்வைத்த தோற்பை …… சுமவாதே
யுகஇறு திகளிலு மிறுதியி லொருபொருள்
உள்ளக்க ணோக்கு …… மறிவூறி
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க …… அருள்வாயே
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
வெள்ளைப்பி ராட்டி …… இறைகாணா
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
வெள்ளத்தை யேற்ற …… பதிவாழ்வே
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
வள்ளிக்கு லாத்தி கிரிவாழும்
வனசரர் மரபினின் வருமொரு மரகத
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே
இதன் பொருள் : ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும், கெட்டுப்போன மாமிச நாற்றமும்,கிருமிகள் உள்ளதுமான வீடு,
நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த
மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி,
யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை,
எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக,
ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற,
வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய
உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.
வெள்ளை நிறத்தவளான சரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும்,
ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது
கஸ்தூரியின் வாசம் வீசும்,
நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும் ஆயிரம்
முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே,
மகிழ மரமும், அரும்புகள் விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள
தினைப்புனம் உடைய வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும்
வேடர் மரபில் தோன்றி வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள
வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே.
(மேற்கண்ட தமிழ் பதவுரையைத் தருபவர் : ஸ்ரீ கோபால சுந்தரம் அவர்கள்)

இந்தப் பாடலில் வரும் கடைசி அடியை மட்டும் ஒன்று சேர்த்துத் தொகுத்தால் அது ஒரு தனி திருப்புகழ் பாடலாக மலர்கிறது!
கள்ளப் புலாற்கி ருமிவீடு – கள் வைத்த தோற்பை சுமவாதே
உள்ளக் கணோக்கு மறிவூறி – உள்ளத்தை நோக்க அருள்வாயே
வெள்ளைப் பிராட்டி யிறை காணா – வெள்ளத்தை யேற்ற பதி வாழ்வே
வள்ளிக் குலாத்தி கிரி வாழும் – வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!
இந்த கரந்துறை திருப்புகழின் பொருள் இது:
மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி, எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக, உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக.
வெள்ளை நிறத்தவளான சரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும், கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே, வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும் வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே.
திருப்புகழுக்குள் ஒரு திருப்புகழ்!
அடுத்து இப்படி அமைந்துள்ள இன்னும் ஒரு திருப்புகழை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
tags – திருப்புகழ்,இரு பாடல்கள்
category – Tamil devotional literature

***
You must be logged in to post a comment.