கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)

கம்பவர்மன் கல்வெட்டில் பாவ புண்ணியம் பற்றிய சுவையான செய்தி (Post No.4098)


Written by London Swaminathan


Date: 20 July 2017


Time uploaded in London- 13-50


Post No. 4098


Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கம்பவர்மன் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பல்லவ மன்னன். கி.பி.900 வாக்கில் ஆட்சி செய்தவன். அவனது பல கல்வெட்டுகள், நடுகல் கல்வெட்டுகளாகும். உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நடுகல் நட்டு அதற்கு ஊர் மக்களும் அந்தப் பக்கம் போய்வரும் யாத்ரீகர்களும் வழிபாடு செய்வதை சங்க இலக்கிய நூல்கள் செப்புகின்றன.

 

போர்க்காலங்களில் தாமாக முன்வந்து களபலி கொடுக்கும் வழக்கம் மஹாபாரத காலம் முதல் இருந்து வருகிறது. இதை நவகண்டம் பற்றிய எனது கட்டுரையில் காண்க. அப்படிப்பட்ட நவகண்டம் ஒன்று நடந்த பின்னர் நட்ட கம்பவர்மன் நடுகல்லில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன:-

 

  1. இந்த நாடு கங்கை தோன்றும் கங்கோத்ரி இருக்கும் இமயம் முதல் குமரி வரை ஒன்று!

2.போருக்கு முன், ஒருவன் உயிர்ப்பலி கொடுத்து நாட்டைக் காக்க மக்களுக்கு வீரம் ஊட்டும் வழக்கம் மகாபராத காலம் முதல் — அஸ்தினாபுரம் முதல் — குமரி வரை – இருந்துள்ளது!

 

  1. கல்வெட்டுகளுக்கு தீங்கிழைப்போருக்கு பாவம் வரும்; அவைகளைக் காப்போருக்கு புண்ணியம் கிடைக்கும்.

 

கம்பவர்மனின் திருவாமூர்க் கல்வெட்டு

ஸ்ரீ கம்ப பருமற்கு

யாண்டு இருபதாவது

பட்டை பொத்தனுக்கு ஒக்கொண்ட நாகன் ஒக்க

தித்தன் பட்டைபொத்தன் மேதவம் புரிந்ததென்று

படாரிக்கு நவகண்டங் குடுத்து

குன்றகத்தலை அறுத்துப் பிடலிகை மேல்

வைத்தானுக்கு

திருவான்மூர் ஊரார் வைத்த பரிசாவது

எமூர்ப் பறைகொட்டக்

கல்மேடு செய்தராவிக்குக் குடுப்பாரானார்

பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்

குடுத்தார்கள்

இது அன்றென்றார்

கங்கையிடைக் குமரி இடை எழுநூற்றுக் காதமும்

செய்தான் செய்த பாவத்துப் படுவார்

அன்றென்றார் அன்றாள் கோவுக்கு

காற்ப்பொன் றண்டப்படுவார்

 

உதவிய நூல்; கல்வெட்டு ஓர் அறிமுகம், தமிழ்நாடு தொல்பொருள்துறை ஆய்வுத்துறை வெளியீடு, 1976

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் பாவ புண்ணியங்களுக்குப் பயந்ததால்தான் நமக்குப் பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இன்றோ கோவில் சிலைகளையே திருடி விடுகின்றனர்.

 

மேலும் கங்கையையும் குமரியையும் குறிப்பிட்டதன் காரணம் இவ்விரண்டும் புனித நீர்த்துறைகளாகும். இதன் பொருள் என்ன வென்றால் சாதாரண இடத்தில் பாவம் செய்வதைவிட புனித இடத்தில் பாவம் செய்வது பல மடங்கு கொடியது என்பது தமிழரின் நம்பிக்கை.

 

கல்வெட்டின் பொருள்:-

பல்லவ மன்னன் கம்ப வர்மனின் 20-ஆவது ஆட்சி ஆண்டில் இது பொறிக்கப்பட்டது. பட்டை பொத்தன் என்பவனின் வெற்றிக்காக ஒக்கொண்டநாகன் ஒக்கதித்தன் என்பவன் தன்னுடைய தலையை அறுத்து பிடாரியின் பீடத்தில் வைத்தான். அவனுக்கு திருவான்மூர் மக்கள் பறைகொட்டி , கல் நட்டு சிறப்பு செய்தார்கள். நிலமும் கொடையாக அளிக்கப்பட்டது.

 

இக்கொடைக்கு ஊறு செய்வோர் கங்கைக்கரை முதல் குமரி வரையுள்ள மக்கள் செய்த அனைத்து பாவங்களையும் பெறுவார்கள். மேலும் மன்னனுக்கு கால் பொன் அபராதமும் கட்ட வேண்டும்.

 

நாகர்கள் பெயர்கள் சங்க இலக்கியப் புலவர் பட்டியலில் இருபது பேர் வரை உள்ளனர். குபதர் கால கல்வெட்டுகளிலும் பலர் நாகன் என்ற பெயர் உடையவர்கள் ஆவர்.

TAGS: கம்பவர்மன், நவகண்டம்,  கங்கை குமரி, பாவம்

–subham–

சிந்து சமவெளி & எகிப்தில் நரபலி

English Version of this article is posted yesterday: London Swaminathan, swami_48@yahoo.com

உலகில் நரபலி இல்லாத நாகரீகம் இல்லை, நரபலி இல்லாத மத நூல்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரீகத்திலும் எகிப்திலும் ஒரு நரபலிக் காட்சி ஒரே மாதிரி வருணிக்கப்படுவது வியப்பூட்டுகிறது. ராமாயணத்தில் ராம பிரான் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்காக சரயு நதியில் குதிக்கிறார். அவருடன் ஆயிரக் கணக்கான மக்களும் குதிக்கின்றனர். புண்ய ஆத்மாவுடன் போனால் சொர்க்கத்துக்கு நேரடி ‘டிக்கட்’ வாங்கியதற்குச் சமம். இதே போல எகிப்திலும் மன்னர் இறந்தவுடன் அவருடைய நெருங்கிய அதிகாரிகள், சேவகர்கள், ராணிகள் ஆகியோரும் உயிருடன் புதைக்கப்பட்டனர். ஆயினும் இப்படிப் புதைக்கப்பட்ட சடலங்களின் முகத்தில் அமைதியே தவழ்கிறது. ஆகையால் முதலில் போதை மருந்தோ விஷமோ ஏற்றியபின்னரே அவர்கள் புதைக்கப் பட்டார்கள்.

 

வேதத்தில், பைபிளில், யூத மத நூல்களில் உயிர்ப்பலி குறிப்புகள் உள்ளன. பஹ்ரைன் நாட்டில் உலக மஹா இடுகாடு (கல்லறை) இருக்கிறது. அங்குள்ள பல்லாயிரக் கணக்கான சடலங்களில் ஏராளமான குழந்தைகள் சடலங்கள் இருப்பது பலருடைய புருவங்களை வியப்பால் உயர்த்துகிறது. இது மாபெரும் குழந்தை பலியோ என்று!

இப்போதெல்லாம் மாயா நாகரீகம் பற்றி எழுதுவோருக்கு நரபலியைக் குறிப்பிடுவது ஒரு ‘பாஷன்’ ஆகிவிட்டது. அதைவிட மோசமான கொடுமை எல்லாம் மறைக்கப்படுகிறது.

சிந்து சமவெளி முத்திரைகள்

சிந்து சமவெளியில் ஒருமுத்திரையில் ஒரு ஆள் ஒரு தெய்வத்தின் முன்னால் மண்டிபோட்டு உடகார்ந்திருக்கிறார். அவர் பக்கத்தில் பூதாகரமான ஒரு ஆடு நிற்கிறது. அதன் முகம் கிட்டத்தட்ட ஒரு மனித முகம் போல இருக்கிறது. அவருக்குப் பக்கத்தில் ஒரு ஸ்டூல் இருக்கிறது. அதன் மேல் ஒரு மனித தலை இருக்கிறது. அவருடைய தலை மயிர் இரட்டைக் கொண்டையாக முடியப் பட்டிருக்கிறது (டபுள் பன்). இதே போலத்தான் மத்திய கிழக்கு நரபலி சிலைகளிலும் கொண்டை இருக்கும். இது மொஹஞ்சதாரோ முத்திரை.

காளிபங்கன் என்ற இடத்தில் இன்னும் ஒரு முத்திரை கிடைத்தது. அதில் விநோதமான புலி உருவ தெய்வத்துக்கு முன்னால் இரண்டு வீரர்கள் ஈட்டிச் சண்டை போடுகின்றனர். ஒருவர் உடலை மற்றொருவர் ஈட்டி துளைக்கிறது. இதே காட்சி எகிப்தில் ஒரு தந்த சிற்பத்தில் இருக்கிறது அது டஜேர் (Pharoah Djer) என்ற மன்னனுடையது.

சுமேரியாவில் ஜில்காமேஷ் (2700 BC)  காலத்தில் இருந்து கல்லறையில் அதிகாரிகளும் புதைக்கப் பட்டனர்.

 

இந்தியாவில் பழங்காலத்தில் சதி என்னும் உடன் கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. கணவன் இறந்த பின்னர் அவனுடன் மனையும் எரிக்கப்பட்டாள். ஆனால் இதில் கட்டாயம் ஏதும் இல்லை. பாண்டுவின் மனைவி குந்தி, கணவன் இறந்த பின்னரும் பஞ்ச பாண்டவர்களைப் போற்றி வளர்த்தாள். புறநானூற்றில் ஒரு பாடல் வருகிறது. பாண்டிய மன்னன் பூதப் பாண்டியன் இறந்தபின்னர் அவன் மனைவி தீயில் பாய முனைகிறாள். மந்திரிமார்கள் எவ்வளவோ தடுத்தும் அவள் தீயில் பாய்ந்து உயிர் நீத்ததைப் பார்க்கிறோம்.

மஹா பரதத்தில் கள பலி

மகாபாரதப் போர் துவங்குவதற்கு முன்னால் அர்ஜுனன்–உலூபி மகன் அறவான் களபலி கொடுக்கிறான். அவனது தலை இன்றும் வட தமிழ் நாட்டில் பல கோவில்களில் வழிபடப்படுகிறது. ராஜஸ்தான், நேபாளம், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அவன் போற்றி வழிபடப் படுகிறான்.

தமிழ் நாட்டில் நவகண்டம்

போருக்கு முன்னால் வீரர்கள் காளியின் சிலைக்கு முன்னால் தலையை அறுத்து நவகண்டம் கொடுப்பது தமிழ் நாட்டிலும் கர்நாடகத்திலும் நடந்தது. மக்களுக்கு தியாக உணர்வையும் தேசபக்த வீர உணர்வையும் ஏற்படுத்த இப்படிக் கள பலி கொடுத்தனர். உடலில் ஒன்பது இடங்களில் கத்தியால் வெட்டி உயிர் கொடுக்கும் நவகண்ட வீரர்களை மக்கள் சிலைவைத்து வழிபட்டனர். தமிழ் நாட்டில் பல பகுதிகளிலும் இப்படிப்பட்ட நவகண்ட சிலைகள் உள்ளன.

தொல்காப்பியம், மணிமேகலை, கலிங்கத்துப் பரணி ஆகிய நூல்களில் இந்தப் பழக்கம் வருணிக்கப்படுகிறது. ராமாயண காலத்தில் இலங்கையில் இந்த வழக்கம் இருந்ததை ராவணன் புதல்வர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகீயோர் பயங்கரமான நிகும்பிளா குகையில் நடத்திய சடங்குகள் காட்டுகின்றன.

இதுதவிர பலவிதமான உயிர்த் தியாகங்கள் இலக்கியத்திலும் வரலாற்றிலும் காணக் கிடக்கின்றன. முஸ்லீம் படையெடுப்பு, வெள்ளைக்காரர் படை எடுப்பு காலத்தில் அவர்களை அச்சுறுத்தவும் மக்களை வீறு கொண்டு எழச்செய்யவும் கோபுரத்திலிருந்து குதித்து உயிர் நீத்தனர். அலாவுதீன் கில்ஜியின் கையில் சிக்கி காமவெறிக்கு ஆளாக விரும்பாத ரஜபுதனப் பேரழகி சித்தூர் ராணி பத்மினி நூற்றுக் கணக்கான அழகிகளுடன் தீப்பாய்ந்தாள்.

 

குருகோவிந்த சிம்மன்

முஸ்லீம் படை எடுப்பாளர்களின் கொடுமையிலிருந்து சீக்கியர்களைக் காப்பாற்ற குருகோவிந்த சிம்மன் ஒரு தந்திரம் செய்தார். காளி தேவி உயிர்ப் பலி கேட்கிறாள் எனக்கு ஐந்து வீரர்கள் தேவை என்று அறிவித்தார். கூட்டத்தில் இருந்து ஒவ்வொரு வீரராக முன்வந்தனர். ஒவ்வொரு வரையும் ‘பலி கொடுத்த’ ரத்தம் சிந்தும் கத்தியைக் காட்டிய பின்னரும் மேலும் மேலும் வீரர்கள் உயிர்ப் பலி தர முனவந்தனர். ஆனால் அவர் வெட்டியது மனிதனை அல்ல. மிருகங்களை வெட்டி அதன் ரத்தத்தையே காட்டினார். உயிர்ப் பலி தர முன்வந்த ஐவரையும் சீக்கிய குருமார்களாக ஆக்கினார். பாரதியார் குருகோவிந்தர் என்ற தலைப்பில் பாடிய அருமையான கவிதை இந்த ‘உயிர்ப் பலி காட்சியை’ வருணிக்கிறது.

 

என்னுடைய பிற கட்டுரைகள்: Read my other posts on Indus and Egypt:

1.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvaku Dynasty

2.Ghosts in Indus Seals and Indian Literature

3.Flags: Indus Valley- Egypt Similarity

4.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu

5.Tiger Goddess of Indus Valley: Aryan or Dravidian?

6.Indra on Elephant Vahana in Indus Valley

7.Vishnu Seal in Indus Valley Civilization

8.Indus Script Deciphered

9.Tamil articles: சிந்து சமவெளியில் பேய் முத்திரை

10.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்

11.கொடிகள்: சிந்து சமவெளி- எகிப்து இடையே அதிசய ஒற்றுமை