இந்துக்கள் பாம்புகளை கும்பிடுவது ஏன்? விஞ்ஞான விளக்கம் (Post No.5293)

Written by London swaminathan

Date: 6 August 2018

 

Time uploaded in London – 9-51 AM  (British Summer Time)

 

Post No. 5293

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

இந்த ஆண்டு (2018) ஆகஸ்ட் 15ம் தேதி நாக பஞ்சமி வருகிறது. நாடு முழுதும் இந்துக்கள் பாம்புகளைக் கும்பிடுவார்கள்.

நாக பஞ்சமி என்றால் என்ன?

எப்போது?

ஏன் பாம்புகளை வழிபட வேண்டும்?

இது பற்றிய இரண்டு கதைகள் என்ன?

கொஞ்சம் ஆராய்சி செய்வோமா?

 

சில பகுதிகளில் நாக பஞ்சமியை ஒரு மாதம் வரை கொண்டாடுகிறார்கள். ஆடி மாத பஞ்சமியிலிருந்து ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி வரை கொண்டாடுகிறார்கள்.

 

நாக பஞ்சமி தினத்தன்று என்ன செய்வார்கள்?

பாம்புகளை வழிபடுவார்கள்;

 

பாம்புப் புற்றுகளில் பால் வார்ப்பார்கள்

 

பாம்பு, பறவைகளின் படங்களை சுவர்களிலும் கோலங்களிலும் வரைவார்கள்.

 

பருப்பு, கோதுமைகளை அரைத்து அதில் புல்லை முக்கி பாம்பு போல செய்வார்கள். அத்தோடு இனிப்புகளைப் பாம்புப் புற்றுகளில் இடுவார்கள்.

 

மானஸா தேவி என்னும் நாக தேவதையை வழிபடுவார்கள்

 

நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வழக்கம் இருக்கிறது

 

இது பற்றி இரண்டு கதைகள் உண்டு

ஒரு பிராஹ்மணப் பையனை பாம்பு கடித்து விட்டது. அவனைக் காப்பாற்ற அவனது இரண்டு சஹோதரிகளும் மானஸாதேவியை வழிபட்டனர். அந்தப் பையனுக்கு மீண்டும் உயிர் வந்தது. அவனும் சஹோதரிகளுக்கு விருந்து வைத்தான் ஆகையால் இது சஹோதர-சஹோதரி விருந்து நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.

 

இரண்டாவது சம்பவம்

 

சந்த் என்ற வணிகனுக்கு மானஸா தேவி மேல் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. அவனது ஒவ்வொரு குழந்தையும் பாம்பு கடித்து இறந்தபோதும் அவன் வழிபட மறுத்தான். மீண்டும் ஒரு மகன் பிறந்தான்.

அந்த மகனுக்கு கல்யாண நாள் நிச்சயிக்கப்பட்டது. அந்த தினத்தில் மானஸா தேவி அந்த வணிகனுக்குப் பாடம் கற்பிக்க அந்த மணமகனைக் கடித்தாள்; அதாவது பாம்பு கடித்து அந்த மணமகன் இறந்தான்.

 

ஆனால் புது மணப்பெண், அந்த சடலத்தை எரிக்க வேண்டாம் என்று சொல்லி விரதம் இருந்தாள். அவளும் உடல் இளைத்து எலும்புக்கூடாகும் தருணத்தில் மானஸா தேவி மனம் இறங்கி அருள் பாலித்தாள். பிண மகன் மீண்டும் மணமகன் ஆனான். வணிகன் பெயர் சந்த். மணமகனை மீட்ட கற்புக்கரஸியின் பெயர் வெஹுலா.

 

இப்படி நாடு முழுதும் பாம்புக்கடி மரணங்களும் அவர்கள் மீண்டு வந்த அற்புதங்களும் உண்டு. நாயன்மார் ஆழ்வார் கதைகளிலும் பாம்புக் கதைகள் இருக்கின்றன. இவற்றைத் தனியே எழுதியுள்ளேன்.

 

நாக பஞ்சமி மூலம் இந்துக்கள் எப்படி இயற்கையைப் பாதுகாக்கிறார்கள், போற்றுகிறார்கள் என்று இப்பொழுது வெளிநாட்டினரும் புகழத் துவங்கி விட்டார்கள்; அறிவியல் ரீதியில் பார்த்தால் பெரும்பாலான பாம்புகள் விஷமற்றவை. மக்களின் பயமும் பீதியும் வெளியாட்களின் பிரச்சனையும் தான் சிக்கலை உருவாக்குகிறது. மேலும் பாம்புகள் மனிதனின் எதிரிகள் அல்ல;  தானாக வந்து எவரையும் தாக்குவதில்லை. அதைத் தாக்கும்போதோ மிதிக்கும்போதோ அவை தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகின்றன. குழந்தைகளும் பாம்புகளும் விளையாடும் படங்களைப் பார்க்கிறோம்; ஏனெனில் அவை நண்பனுக்கு நண்பன்; எதிரிக்கு எதிரி.

 

150 ஆண்டுகளுக்கு முன் வெளியான வெள்ளைக்காரர் புஸ்தகங்களில் சில படங்கள் இருக்கும்;

 

காளி கோவிலில் குழந்தைகளைப் பலி கொடுக்கும் படம்

பெண்களை, கணவனின் சிதையில் தூக்கி எறியும் படம்

மரங்களையும் பாம்புகளையும் பெண்கள் வழிபடும் படம்

 

இப்பொழுதும் இவைகள் பழைய புஸ்தகங்களிலும் பத்திரிக்கைகளிலும் உள. நான் அடிக்கடி லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரியிலும் லண்டன் யுனிவெர்ஸிட்டி லைப்ரரியிலும் பார்த்துப் பார்த்துச் சிரிப்பேன்;

 

இவை எல்லாம் உண்மையில் நடந்திருந்தால் இன்று இந்துக்களே உலகில் இருந்திருக்க மாட்டார்கள். கோடியில் ஒன்று நடந்தது உண்மைதான். இன்று மேலை நாடுகளில் இதைவிடக் கூடுதல் கொடுமைகள் நடப்பதை லண்டனில் பத்திரிக்கைகளில் தினமும் படிக்கிறோம்.

 

ஏனைய விஷயங்களை புறத்தே ஒதுக்கி வைத்து விட்டு பாம்பு வழிபாடு பற்றி மட்டும் பார்ப்போம்.

 

உலகில்  அறிவியல் அடிப்படையில் அமைந்த மதம் இந்து மதம்; எல்லாப் பண்டிகைகளுக்கும் அறிவியல் விளக்கம் உண்டு.

இந்தியா ஒரு விவசாய நாடு. மக்களின் மிகப்பெரிய தொழில் விவசாயம்.

உழுதுண்டூ வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

உழவர்களே  தன்னுரிமையோடு வாழ்வார்கள்; மற்றெல்லோரும் பிறர் முன்னால் கைகட்டி, வாய் புதைத்து வாழ்பவர்கள்; இயல்பாகவே உழவர் பின்னால் செல்பவர்கள்.

 

விவசாய உற்பத்தி குறைந்தால் பஞ்சம் வெடிக்கும்; அராஜகம் பிறக்கும் ஆகையால் விவசாய உற்பத்தியைப் பாதுகாப்பது அவசியம்.

எலிகள் மூலம் ஏற்படும் சேதம் மிக மிக அதிகம். அதோடு பூச்சிகளும் சேதம் விளைவிக்கும். இவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைப்பது பாம்புகளே (Vital link in the food production chain) .

 

ஆதிகாலத்தில் வீட்டுக்குள் பாம்புகளைக் கண்டாலும் கூட அவைகளைக் கொல்ல மாட்டார்கள். பானைக்குள் அல்லது பெ ட் டிக்குள் பிடித்து வயற்காட்டில் விட்டு விடுவார்கள் அல்லது பாம்புப் பிடாரனை அழைத்து அவன் கையில் அந்தப் பணியை ஒப்படைப்பர்.

வயல் வெளிக்குள் நடந்து செல்வோரும் இரவில் ஒத்தையடிப் பாதையில் வருவோரும் கைகளைத் தட்டிக்கொண்டே வருவர் பாம்புகள் விலகி ஓடி விடும்! (பாம்புகளுக்கு காதுகள் உண்டா? அவைகளால் கேட்க முடியுமா என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கிவிட்டேன்; அதன் விஞ்ஞான விளக்கத்தை கட்செவி (கண்ணே செவி/காது) என்னும் ஆய்வுக் கட்டுரையில் காண்க)

ஆக எலிகளைக் கொல்ல பாம்புகள் உரிய அளவில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் அறிந்த உண்மை.

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது பழமொழி; ஆனால் நல்லோர் அவையில் புகுந்த பாம்புகளையும் அவர்கள் கொல்ல மாட்டார்கள் என்று ஸம்ஸ்க்ருத, தமிழ்ப் பாடல்கள் சொல்லும். ஆக பாம்புகளின் மீதுள்ள பயத்தை எப்படிப் போக்குவது?

குறிப்பாக பெண்களும் சிறுவர்களும் பயப்படுவர். ஆண்டு தோறும் பண்டிகை நடத்தி நாக பஞ்சமி கொண்டாடுவதன் மூலமும் வெள்ளிக் கிழமைதோறும் புற்றிலுள்ள பாம்புகளுக்குப் பால் வார்ப்பதன் மூலமும், நாக பஞ்சமி தினத்தன்று பாம்பு படங்களைக் கோலம் வரைபடம் ஆகியவற்றில் வரைவதன் மூலமும், கோவில் தோறும் நாகர் சிலைகளை வைப்பதன் மூலமும் மக்களை உளவியல் ரீதியில் (psychologically prepared)  இந்துக்கள் தயார்படுத்த்தினர்.

பாம்புகளைக் கட்டித் தழுவுங்கள்; கொஞ்சிக் குலவுங்கள் என்று நான் சொல்ல வரவில்லை; அதை அவஸியமின்றி அடித்துக் கொன்று அழிக்காதீர்கள்; அவைகளையும் இயற்கை எனும் சங்கிலியில் ஒரு வளையம் என்பதை உணருங்கள்.

 

பாம்புகளை அழித்தால் வயல் வெளியில் எலிகள் பெருகும்; எலிகள் பெருகினால் உணவு உற்பத்தி குறையும்.

 

வாழ்க நாக பஞ்சமி; வளர்க நாகங்கள் (புற்றுக்குள் மட்டும்)!!!

–subham–