ரிக் வேதத்திலிருந்து வந்தது “பணம்”!

dac86-baal012b18002bbce252c2blouvre2bmuseum252c2bparis

குழந்தைகளைப் பலி வாங்கும் பால் (வேதத்தில் வால என்னும்    அசுரன்)

Written by London swaminathan

Research Article No.1891

Date: 26 May 2015; London Time 14-59

ரிக் வேதத்தில் நிறைய ரகசியங்கள் உள்ளன. அதில் சில பாணி, பண(ம்) என்ற சொற்களாகும். இந்தியா முழுவதும்  பணம் (காசு) என்ற சொல் தமிழ் உள்பட எல்லா மொழிகளிலும் புழக்கத்தில் உள்ளது. இதே போல ஆங்கிலத்தில் மணி என்ற சொல் இந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறது. இவை எல்லாம் ரிக் வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்படும் “பாணி” என்ற இனத்திலிருந்து வந்த சொற்களாகும்.

பாணிக்கள், “பீனிஷியர்கள்” என்று அழைக்கப்படுவர். அவர்கள் கி.மு.2000 முதல் கார்த்தேஜ் (இப்பொழுது ஆப்பிரிக்காவில் உள்ள டுனீஷியா) மற்றும் மத்திய தரைக் கடல் நாடுகளான லெபனான், சிரியா போன்ற இடங்களில் காலனி வைத்து ஆதிக்கம் செலுத்தினர். இவர்கள்தான் உலகத்திற்கு அகரவரிசை எழுத்துக்களைக் கற்பித்தவர்கள் என்றும், பணம் என்பதைச் சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் அதற்கு முன் பண்ட மாற்று முறையே உலகெங்கிலும் இருந்தது என்றும் என்சைக்ளோபீடியாக்கள் (கலைக் களஞ்சியங்கள்) சொல்லும்.

பீனிஷியர்களின் ஆல்பபெட்/அகரவரிசைதான் பிராமி என்னும் இந்திய எழுத்து முறைக்கு மூலம். நம் மூலமாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துக்கும் எழுத்து முறை ஏற்றுமதியானது என்று ஆராய்ச்சியாளர்கள் பகர்வர்.

ரிக் வேத பாணிகளுக்கும், வட ஆப்பிரிக்க பீனிஷியர்களுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று கதைத்த வெளிநாட்டு அறிஞர்கள், பின்னர் அதைப் பூசி மெழுகி மழுப்பிவிட்டனர். எது எதெல்லாம் தாங்கள் கூறும் ஆரிய-திராவிட இனவெறிக்  கொள்கைகளுக்கு முரண்படுகிறதோ அதை எல்லாம் சத்தம் போடாமல் அமுக்கிவிடுவது அவர்கள் வழக்கம்.

உண்மையில் பாணீக்கள் பற்றி ரிக்வேதம், அதர்வ வேதம் சொல்லும் பல கருத்துக்கள், அவர்கள் பீனிஷியர்களே என்று காட்டுகின்றன. பாணி என்பது வணிக (வியாபாரிகள்) என்று மாறி இன்று இந்தியாவில் எல்லா மொழிகளிலும் உள்ளது.வணிக என்பதும் ரிக் வேதத்தில் வருகிறது.

ப=வ=ம ஆகிய மூன்று எழுத்துக்களும் ஒன்றுக்கொன்று இடம் மாறும் என்பது மொழி இயல் அறிஞர்களுக்குத் தெரியும். இது பற்றி ஒரு பட்டியலையே எனது மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கொடுத்து இருக்கிறேன். நாம் வங்கம் என்று சொன்னால் அந்தப் பகுதி மக்கள் பெங்கால் என்பர். மற்ற சில சொற்கள்—மானம் = வானம், முழித்தான்=விழித்தான்.

85777-map2bof2bphoenicia

வட  ஆப்பிரிக்க கார்த்தேஜ் (டுனீசியா), மத்திய தரைக் கடல் நாடுகள்

ஆக இதே விதியை பாணி, வணிக ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்:-

பாணி=வாணிக=வணிஜ்= பண= மணி(ஆங்கிலச் சொல்)

இவர்கள் பற்றி உலகின் பழைய நூலான ரிக் வேதம் என்ன சொல்கிறது?

1.பாணீக்கள் பணக்காரர்கள், கஞ்சர்கள்

2.அவர்கள் திருடர்கள்; கொள்ளைக்காரர்கள். வேத கால இந்துக்களின் பசுக்களைத் திருடிச் சென்றனர்.

3.பேராசைக்காரர்கள்; செல்வத்தைக் குவிப்பவர்கள்

4.அவர்கள் வேதமுறைப்படி யாக யக்ஞங்கள் செய்ய மாட்டார்கள்; கடவுளைக் கும்பிட மாட்டார்கள்; ஐயர்களுக்கு தட்சிணை கொடுக்க மாட்டார்கள்.

5.அவர்கள் தஸ்யூக்கள்; தாசர்கள்

6.அவர்கள் க்ராதின் (இதற்கு எந்த அறிஞருக்கும் இது வரையும் பொருள் தெரியவில்லை).

7.இவர்கள் வட மொழி அல்லாத கொடுமையான ஒரு மொழி (ம்ருத்ரவாச) பேசினர். ஆனால் எப்பொழுதுமே வேற்று மொழி பேசுவோரை மற்ற மொழியினர் இப்படி மட்டம் தட்டுவது தெரிந்ததே. கிரேக்கர்கள், மற்ற நாட்டினரை காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றும் தமிழர்களைத் தெலுங்கர்கள் அரவா என்றும் பைபிளைப் பின்பற்றாதவர்கள் பேகன் என்றும் குரானைப் பின்பற்றாதாரை காபிர் என்றும் அவரவர் அழைப்பதும் தெரிந்ததே.

  1. அவர்களை வேதங்கள் சில இடங்களில் புராண கதா பாத்திரங்கள் போல வருணிக்கின்றன. அவர்களிடம் தூது செல்ல இந்திரன், சரமா என்ற பெண் நாயை அனுப்பியதாக பல இடங்களில் வேதம் சொல்லும். இந்த சரமா என்பது ,பாரசீகம் வழியாக கிரேக்க நாடு வரை சென்றுவிட்டது. பாரசீக கிரேக்க மொழிகளில் எஸ் என்பது கிடையாது ஆகவே அவர்கள் சரம என்பதை ஹர்ம என்று எழுதினர். இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி நடந்திருப்பதால் தனிக் கட்டுரையில் தருவேன். சிந்து நதி என்பதை இந்து என்று மாற்றியவர்களும் அவர்களே!!

ef545-leviticus-20-molech

குழந்தைகளைத் தீயில் வீசுவோர்!!

பாணீக்கள் பற்றி ரிக்வேதத்தில் காணப்படாத முக்கிய விஷயம் அவர்கள் குழந்தைகளைத் தீயில் பலி கொடுப்பவர்கள் என்பதாகும். பீனிஷியர்கள் வணங்கி வந்த இரண்டு தெய்வங்கள் பால் மற்றும் மாலிக் (மெலக்) என்பன ஆகும். இவ்விருவர் சிலைகள் முன்னாலும் எப்பொழுதும் தீ எரிந்து கொண்டே இருக்கும். ஜெரூசலத்தில் எரியும் தீயில் இப்படிப் பிள்ளைகளைப் பலி கொடுத்தது பைபிளில் இரண்டு மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

பாணீக்களின் குழந்தைப் பலி பற்றி ரிவேதத்தில் இல்லாவிட்டாலும் வால என்னும் அசுரனை இந்திரன் கொன்றது பற்றிய பாடல் வேதத்தில் வருகிறது வால என்பதே பால் என்னும் தெய்வத்தின் பெயர் என்று கொள்ள மொழியியல் வழிகாட்டுகிறது.

இப்பொழுது பஹ்ரைன், டுனீஷியா, மத்திய தரைக் கடல் நாடுகளில் பல்லாயிரக் கணக்கான புதைகுழிக்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. அவை அத்தனையிலும் ஈமப் பானையில் குழந்தைகளின் கருகிய சாம்பலும், மிருகங்களின் சாம்பலும் கிடைத்துவருகின்றன. ஒரு வேளை இவர்களை வேத கால இந்துக்கள் வெறுத்து தஸ்யூ, தாசர் என்று திட்டியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். “மிலேச்ச” என்னும் சொல்லும் இவர்கள் வழிப்பட்ட மாலிக், மொலக், மிளக் என்னும் குழந்தைகளைப் பலி கேட்ட தெய்வத்தின் பெயரில் இருந்து வந்திருக்கும் என்பது நான் கண்ட முடிவு.

பாணீக்களின் மன்னர் பெயர் “ப்ருபு” என்று ரிக் வேதத்தில் இருக்கிறது. பீனிஷியர்களின் முக்கிய நகரான பிப்லோஸ் என்பது இதிலிருந்து வந்ததே.  “ர, ல” ஆகிய இரண்டு எழுத்துக்களும் இடம் மாறுவது பற்றி பாணினி கூட சூத்திரம் எழுதி இருக்கிறார்.

மேலும் விக்கிபீடியாவில் பீனிஷியர் காலனி என்ற பட்டியலில் பல சம்ஸ்கிருதப் பெயர்கள் உள்ளன ( சுந்தர, சூர்ய, சோபன,தாரா முதலியன)

பாணீக்கள் வேற்று மொழி பேசினாலும் எல்லா வணிகர்களையும் போல அவர்களுக்கு வேறு (சம்ஸ்கிருதம் போன்ற)  மொழிகளும் தெரிந்திருக்க நியாயம் உண்டு. பிப்ளோஸ் என்ற நகரம் 7000 ஆண்டு பழமையுடைத்து! வேத மந்திரங்கள் பல காலத்துக்குச் சொந்தமானவை. எல்லா மந்திரங்களும் உருப்பெற குறைந்தது 500 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். சங்கத் தமிழ் இலக்கியத்தில் 450+ புலவர்கள் பெயர்கள் இருப்பது போலவே ரிக் வேதத்திலும் 450+ புலவர் பெயர்கள் உள. சங்கப் பாடல்கள் உருவாக குறைந்தது 300 ஆண்டுகள் ஆயின. ஆக பாணீக்கள் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தின் பெரும்பாலான மண்டலங்களில் வருவதால் இவர்களுடன் நீண்ட நெடுங்காலத்தில் சுமுக உறவு நிலவிய காலமும் இருந்திருக்கலாம்.

eb915-byblos

லெபனான் (சம்ஸ்கிருதத்தில் லவண/ வெள்ளை)

இவர்கள் பற்றி “வேத கால ஹரப்பா மக்கள்” என்ற நூலை எழுதிய ஆராய்ச்சியளர் பகவான் சிங் வேறு ஒரு தகவலையும் தருகிறார். சில வேத மந்திரங்கள், “பாறைகளுக்கு அடியே பாணீக்கள் மறைத்து வைத்த செல்வம்” பற்றிப் பாடுகின்றன. அவைகளைப் பெற இந்திரன் சரமாவை தூது அனுப்பிய செய்தியும் வருகிறது. பாறைக்கு அடியில் மறைத்த செல்வம் என்பது சுரங்கக் கனிவளம் என்றும் இவர்கள் உலகமெங்கும் லபிஸ் லசூலி என்ற கற்களை ஏற்றுமதி செய்தனர் என்றும் எழுதுகிறார். லாபிஸ் லசூலி பற்றிய எனது முந்தைய தனியான ஆராய்ச்சிக் கட்டுரையில் நிறைய விசயங்களைத் தந்திருக்கிறேன்.

பிற்காலத்தில் கிரேக்கர்கள் எழுதிய வரலாற்றுக் குறிப்புகளில் ரோமானிய ராஜாக்களுக்கும், கிறிஸ்தவ பாதிரிமார்களுக்கும் தேவைப்பட்ட பிங்க் (இளம் சிவப்பு) சாயத்தை கடலில் கிடைக்கும் ஒரு வகைக் கிழிஞ்சல் பூச்சியில் இருந்து எடுத்து இவர்கள் ஏற்றுமதி செய்ததையும் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சாய ஏற்றுமதி இவர்கள் கையில் இருந்ததால் இவர்கள் மிகவும் பணக்காரர் ஆனார்கள்.

பாணீக்கள் என்போர் திசை மாறிப்போன, வழி தவறிய இந்துக்களே (விராத்யர்) என்று ஆர்ய தரங்கிணி என்ற நூலில் ஏ.கல்யாணராமன் எழுதுகிறார்.

கிரேக்க மொழியில் முதல் முதல் நூலை எழுதிய ஹோமரும் முதல் நூலான இலியட்டில் இவர்களைப் புகழ்ந்துவிட்டு, ஆடிஸி என்னும் அடுத்த நூலில் பீனிஷியர்களை அயோக்கியத் திருடர்கள் என்று திட்டுகிறார். ரிக்வேதக் கருத்துக்களை அப்படியே எதிரொலிக்கிறார்!

மேற்கூறிய எல்லாத் தகவல்களையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இவர்கள் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த கிராதகர்கள் என்பது தெரிகிறது. வேதத்தில் இவர்கள் பற்றி இதுவரை பொருள் விளங்காமல் உள்ள “கிராதின்” என்பதற்குக் கிராதகர் என்று பொருள் கொண்டாலும் தவறில்லை!

(வேதங்களில் இவர்கள் பற்றிய குறிப்புகள் எங்கேயுள்ளன என்ற விவரங்களை நேற்று வெளியான எனது ஆங்கிலக் கட்டுரையில் கொடுத்திருக்கிறேன்.)