சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1 (Post No.3286)

palanquin1

Written by S. NAGARAJAN

Date: 25 October 2016

Time uploaded in London: 5-51 AM

Post No.3286

Pictures are taken from various sources; thanks. Pictures are representational; may not have direct connection to the article below.

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருக்குறள்  பெருமை

 

சிவிகையில் அமர்ந்த சீரிய குறள்! -1

 

                      ச.நாகராஜன்  

 pallaku-2

நல்லனவற்றைச் சிவிகையில் வைத்து ஊர்வலமாக எடுத்துக் கொண்டு சென்று போற்றுவது நமது பழைய மரபு. அந்த வகையில் ஒவ்வொரு குறளுமே சிவிகைக் குறள் தான்! என்றாலும் சிவிகையைத் தன்னுள்ளே கொண்டுள்ள இந்தக் குறள் அறத்தின் மாண்பை சிறப்பாக எடுத்துக் கூறுவதால் இது அறக் குறள் ஆகிறது. அறம் வெல்லும். பாவம் தோற்கும். இது பாரதம் வாழ் அனைவரும் ஏற்றுக் கொண்ட அறக் கொள்கை.

குறளுக்கு வருவோம்.

 

 

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                                 பொறுத்தானோ டூர்ந்தா னிடை    (குறள் 37)

 

அறத்தின் பயன் இது போன்றது என்பதை காட்சி அளவையால் உணர்க.. பல்லக்கைச் சுமப்பவனோடு அதில் ஏறிச் செல்பவனின் காட்சி அளவையால் அது அறியப்படும்.

 

பரிமேலழகரின் இந்தத் தெளிவுரை காலம் காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்துள்ளது.

 

(ஏப்ரல் 1968இல் வெளி வந்துள்ள திருக்குறள் உரைக் களஞ்சியம் நூலில்) வித்துவான் ஆர் கன்னியப்ப நாயக்கர் பரிமேலழகர் வழியே சென்று, இன்னும் தெளிவாக “அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா.சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னுளே உணரப்படும்.” என்று விளக்கம் தருகிறார்.

 

ஆனால் நாத்திகவாதிகளுக்கு இந்தக் குறளை வழக்கம் போலத் திரித்தால் தானே மனம் ஆறுதல் அடையும்! சமுதாயத்தைத் திசை திருப்ப முடியும்.

 

ஆகவே சென்ற நூற்றாண்டின் பிற்பாதியில் புதிய உரைகள் தோன்றலாயின.

 

பல்லக்கில் ஏறி பவனி வருபவனையும் அதைச் சுமந்து செல்பவனையும் பார்த்து அறத்தின் இயல்பு இது என்று விளம்ப வேண்டாம். பல்லக்கில் ஏறியவர் நல்வினை செய்தவர், அதைத் தூக்குபவர் தீவினை இயற்றியோர் என்று கூற வேண்டாம். இதைப் பார்த்து அறத்தின் இயல்பு இது என்று கூறுதல் வேண்டாம்.

 

இதுவே புதிய உரை.

pallaku4

ஆயிரக் கணக்கான சொற்களை இடம் பார்த்து ஆழ்ந்த பொருளுடன் தரும் வள்ளுவர் இப்படி ஒரு எடுத்துக்காட்டைக் காட்டி இதைப் பார்த்து அறத்தை எடை போடாதே என்று சொல்வாரா?

 

சரி, ஒரு குறளைத் தனியே பார்த்து இப்படிப் பொருள் சொல்லும் பகுத்தறிவுவாதிகள் குறளில் வரும் இரு வினை (குறள்

5),நல்வினை (குறள் 335), தீ வினை (குறள் 201,209,210, 319) போன்றவற்றிற்கு எப்படிப் பொருள் கொள்வார்கள்?

“தீவினை செய்தால் பிற்பகல் தாமே எப்படி வரும்? தீவினை ஏதாவது ஏஜன்ஸி ஒன்று வைத்திருக்கிறதா? பகுத்தறிவுக்கும் தர்க்கத்திற்கும் ஒத்ததாக இல்லையே!” என்றல்லவா பகுத்தறிவுச் செல்வங்கள் கூற வேண்டி வரும். அப்போது திருவள்ளுவரை அவர்கள் என்ன செய்வது? ஓரங்கட்டுவதா?

ஆகவே பகுத்தறிவு என்ற பெயரில் எவ்வளவு பசப்பினாலும் திருக்குறள் அவர்களின் ஏமாற்று  மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அனைத்துக் குறள்களையும் ஒருசேரப் படித்தவுடன் இயைபு நன்கு புரியும்.

 

சரி ஒரு பக்கம் சற்றே தெளிவாக இல்லாத் மயங்க வைக்கும் பரிமேலழகர் உரை! (காட்சி அளவையான் என்று அவர் முடித்து விடுகிறார்), இன்னொரு பக்கம் கார் எஜமானரையும் அதை ஓட்டுபவரையும் பார்த்து அறத்தின் பயன் இது என்று சொல்லாதே என்று சொல்லும் நாத்திகச் செல்வங்கள்…

 

எப்படி இந்தக் குறளின் பொருளைத் தெளிவாக விளங்கிக் கொள்வது?

 

இங்கு தான் நமக்குக் கைகொடுத்து உதவுகிறார் கவிராஜ பண்டித செகவீரபாண்டியனார்.

 

மதுரையில் வாழ்ந்த முதுபெரும் புலவர். தமிழை ஆய்ந்து கற்று உணர்ந்தவர். இவ்ரது திருக்குறட் குமரேச வெண்பா திருக்குறளை நன்கு விளக்குவதோடு அதற்கு எடுத்துக்காட்டாக முதல் இரு அடிகளில் ஒரு வர்லாறையும் முன் வைக்கும்.

அதில் அவர் இப்படிக் கூறுகிறார்:

 

 

உற்ற மணிச்சிவிகை யூர்ந்தாரேன் மூர்த்தியார்      கொற்றவனேன் தாழ்ந்தான் குமரேசா – பற்றும்           அறத்தா றிதுவென வேண்டா சிவிகை                      பொறுத்தானோ டூர்ந்தா னிடை

 

குமரேசா! அறம் புரிந்த மூர்த்தி நாயனார் சிவிகையூர்ந்து சென்றார். அதனைத் துறந்து நின்ற அரசன் ஏன் தாழ்ந்தான்? எனின், அறத்து ஆறு இது என வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை ஓர்ந்து உணர்ந்து கொள்ளலாம்.

 

செகவீரபாண்டியனாரின் உரையில் சில முக்கியக் குறிப்புகளை மட்டும் கீழே காணலாம்:

palanquin_psf

பல்லக்கில் அமர்ந்திருப்பவனும் அதனைச் சுமந்து செல்ப்வனும் ஆகிய இந்த இருவரிடையே புண்ணிய பாவங்களின் பலனை முறையே தெளிவாகத் தெரிந்து கொள்ளுக என்பதாம்.

சிவிகையை ஊர்ந்து செல்பவன் அறம் செய்தவன்; அதனைச் சுமந்து போகின்றவன் பாவம் செய்தவன் என்பதை யூகமா உணர்ந்து கொள்கின்றோம். ஒத்த பிறப்பினையுடைய மக்களுள் ஒருவன் சுகமாய் உயர்ந்திருப்பதையும், மற்று ஒருவன் இளிவாய்த் தாழ்ந்து நிற்பதையும் உலகில் பல இடங்களில் காண்கின்றோம். இதற்குக் காரணம் என்ன? முன்னவன் ஏதோ நல்ல புண்ணியம் செய்துள்ளான்; பின்னவன் அவ்வாறு செய்யாமல் அயர்ந்து நின்றுள்ளான் என இன்னவாறு  அனுமானமாய் நாம் துணிந்து  கொள்கின்றோம். நேரே  கண்ட காட்சியிலிருந்து யூகமாகக் கருதிக் கொள்வது உறுதியான விவேகமாய் வந்தது. அனுமானம், ஆகமம், அருந்தாபத்தி முதலிய பிரமாணங்கள் எல்லாம் காட்சியளவைக்கு இன்மா மாட்சி புரிகின்றன.

 

உலகெலாம் காக்கும் ஒருவ்ன் ஒருவன்                    உலகெலாம் காலால் உழன்றும் – விலையுண்டாங்கு          ஆராது நல்கூரும் என்றால் அறம்பாவம்                 பாராதது என்னோஇப் பார்   (பாரதம்)

 

ஒருவன் தலைமையான அரசனாய் உலகம் முழுவதும் ஆளுகிறான்; ஒருவன் விலை அடிமையாய் உண்ண உணவும் இன்றி வருந்துகிறான். இந்த உயர்வு தாழ்வுகளை நேரே பார்த்திருந்தும் புண்ணிய பாவங்களின் பல்ன்களை உணர்ந்து கொள்ளாமல் விழி கண் குருடராய் மக்கள் இழிந்து உழலுகின்றார்களே! என்று பெருந்தேவனார் இங்ஙனம் பரிந்து இரங்கியிருக்கிறார்.

 

– அடுத்த பகுதியுடன் கட்டுரை முடியும்