சைதன்ய மஹா ப்ரபு (Post No.9819-B)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9819-B

Date uploaded in London – 6 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து திங்கள் தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 5-7-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

முகலாய ஆட்சியாளரால் பாரத தேசம் குறிப்பாக வங்காளம் இருளில் மூழ்கி இறைபக்தி ஒடுக்கப்பட்டிருந்த சமயம் ஸ்ரீ கிருஷ்ணரது நாமத்தைப் பரப்ப அவதரித்தார் ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு! 1486ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி, பல்குனி பௌர்ணமியில் அவர் வங்காளத்தில் நவத்வீபத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ஜகந்நாதர் ஒரு ஏழை பிராமணர். தாயார் சசி தேவி ஹிந்துப் பெண்மணிக்கு ஒரு இலக்கணமாகத் திகழ்ந்தவர். அவரது தாயாரின் தந்தை ஒரு சிறந்த ஜோதிடர்.

குழந்தையாக இருந்த போதே அவர் ஒரு பெரிய மகான் என்பதற்கான நிகழ்ச்சி நடைபெற ஆரம்பித்தது. எப்போதும் அந்தக் குழந்தை அழுது கொண்டே இருக்கும். எத்தனை பேர் வந்து என்ன சமாதானம் செய்தாலும் குழந்தை சைதன்யா அழுவதை நிறுத்தாது. ஆனால் ‘ஹரி போல் என்று சொன்னாலோ உடனே அழுகையை நிறுத்தி விடும். இதைப் பார்ப்பதற்காகவே அண்டை அயலார் அங்கு வந்து குழந்தையை அழவிட்டு ஹரி போல் சொல்வது வழக்கம். ஆகவே யார் யாரைப் பார்த்தாலும் ‘ஹரி போல் சொல்வது வழக்கமானது. நிமாயி என்ற பெயரால் அவர் எல்லோருக்கும் அறிமுகமானார்.

சிறு பையனாக அவர் இருந்த போது ஒரு அதிதி அவர் வீட்டிற்கு வந்தார்.தனது உணவைத் தானே சமைத்து முடித்து அதை கிருஷ்ணருக்கு நைவேத்யம் செய்வது அவர் பழக்கம். அப்படிச் செய்ய முயன்ற போது சைதன்யர் அதை எடுத்து உண்டு விட்டார். திகைத்துப் போன சைதன்யரின் தந்தை ஜகந்நாதர் இன்னொரு முறை அந்த அதிதியைச் சமைக்குமாறு வேண்ட அவரும் அப்படியே சமைத்தார். இந்த முறையும் சிறுவன் சைதன்யன் அதை உண்டு விட்டான். மூன்றாம் முறை அந்த அந்தணர் சமைத்தார். அப்போது இரவு நேரம் என்பதால் அனைவரும் உறங்கச் சென்றனர். அப்போது சைதன்யர் அந்த அதிதி பிராமணருக்கு கிருஷ்ணராகக் காட்சி அளித்தார். பெரிதும் வியப்படைந்த அவர் தனது நிவேதனத்தை கிருஷ்ணரே அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதாக மகிழ்ந்தார்.

அவருக்கு எட்டு வயதானவுடன் அவரை அருகில் கங்கா நகர் கிராமத்தில்  இருந்த பண்டிதர் கங்காதாஸிடம் அனுப்பினர். இரண்டே வருடங்களில் சம்ஸ்கிருத இலக்கணம், நியாய சாஸ்திரம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேறினார் சைதன்யர். உரிய வயதில் நாடியாவைச் சேர்ந்த வல்லப ஆசாரியர் என்பவரது மகளான லக்ஷ்மி தேவியை அவர் மணந்தார். சிறந்த மேதை என்று இப்போது அவரது புகழ் வங்காளம் முழுவதும் பரவி விட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக லக்ஷ்மி தேவி 1504ஆம் ஆண்டில் சைதன்ய பிரபுவின் 18ஆம் வயதிலேயே மறைந்தார்.

தனது 24ஆம் வயதில் அவர் துறவறம் மேற்கொண்டார். கயா க்ஷேத்திரத்திற்குச் சென்ற சைதன்யர் மாதவேந்திர புரி கோஸ்வாமியின் சீடரான ஈஸ்வர் புரி என்ற வைணவ மகானிடமிருந்து தீக்ஷை பெற்றுக் கொண்டார். பின்னர் நாடெங்கும் யாத்திரையை மேற்கொண்டார். வங்காளத்திலிருந்து கன்யாகுமரி வரை அவர் பாதம் படாத இடம் இல்லை. அவருக்கு பிரதானமாக ஆறு சிஷ்யர்கள் அவர் கொள்கையைப் பரப்ப உருவாயினர். அவர்களில் இருவர் அவருக்கு வயதில் இளையோர். மற்ற நால்வரும் அவரை விட வயதில் மூத்தவர்கள்.

ஆசார்ய அத்வைதர் (1435-1550), பக்த ஹரிதாஸ் (1450-1530), நித்யானந்தா (1478-1545), ராய் ராமானந்தா (1450-1563), ரூப கோஸ்வாமி (1490-1563), சனாதன் கோஸ்வாமி (1488-1558) ஆகியோரே அந்த ஆறு சிஷ்யர்கள்.

வைஷ்ணவ தர்மத்தைப் பரப்பும் சிறந்த மஹானாக அவர் விளங்கினார். பெயரைச் சுட்டிக் காட்டும் விதமாக அவர் தேசத்திற்கு சேதனாவை – பிரக்ஞையை – உணர்வை ஊட்டினார். கிருஷ்ணஸ்து பகவான் ஸ்வயம் என்ற கிருஷ்ண பிரக்ஞையை உலகெங்கும் ஊட்ட ஆரம்பித்தார். கிருஷ்ண நாமமே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஒரே தீர்வு என்பது அவரது முடிந்த முடிபு.

அவரது தத்துவம் அசிந்த்யபேதாபேத்வாத்  என்று அழைக்கப்பட்டது. கடவுளும் மனிதனும் வேறாக இருந்த போதிலும், எப்பொழுதும் இருப்பது உணர்தற்கு அப்பாற்பட்ட ஒன்றே தான் என்பது இதன் சுருக்கமான அர்த்தமாகும். தெய்வீக லீலையாக இன்றளவும் நாடே கொண்டாடும் ராதா-கிருஷ்ண லீலையை பிரதானமாகக் கொண்டது அவரது கொள்கை. ராதை ப்ரக்ருதியின் உச்ச வடிவமான பெண். கிருஷ்ணர் ஒரே புருஷர். அதாவது அந்தமிலா ஆனந்தம் கொண்டவர் என்பது இதன் பொருள். பரமாத்மா என்னும் புருஷனை விட்டுப் பிரிந்த பெண் சக்தியான ராதை பரமாத்மாவைச் சேர விழைவதே வைணவ தத்துவமாகும். இதற்கு சுலபமான எளிதான வழி ஹரி நாமம் தான்!

புரியில் அவர் இருந்த போது சார்வபௌம பட்டாசார்யா என்ற பேரறிஞர் அவருடன் வாதுக்கு வந்தார். ஆனால் ஒவ்வொரு கருத்தாக அவர் சொல்லச் சொல்ல சைதன்யர் தனது பக்கக் கருத்தை விளக்கினார். இப்படி ஆச்சரியகரமாக சைதன்யர் விளக்கும் விதத்தைக் கண்ட பட்டாசார்யார், “இவர் கிருஷ்ணரே தான். எனது கல்வியில் பெருமையும் அகந்தையும் நான் கொண்டிருந்ததால் இவர் யார் என்று புரிந்து கொள்ளத் தவறி விட்டேன். அடடா, தவறு செய்து விட்டேனே என்று எண்ணி வருந்தினார். இப்படி அவர் வருத்தப்பட்ட போது இறைவன் கருணை மிகக் கொண்டார். நான்கு கரங்களுடனான தனது விஷ்ணு ரூபத்தை பட்டாசாரியாருக்குக் காட்டினார். பின்னர் தனது இரு கரங்களுடனான கிருஷ்ணாவதார காட்சியைத் தந்தார்.

இது போல பல முறைகள் சைதன்யர் கிருஷ்ணராகப் பலருக்கும் காட்சி அளித்ததாக வரலாறு கூறுகிறது.

சைதன்யர் ஜார்கண்ட் காடுகளின் வழியே செல்லும் போது அவர் நாம சங்கீர்த்தனை செய்தவாறே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு புலி அவர் செல்லும் பாதையில் படுத்திருந்தது. அதை தனது பாதத்தால் சைதன்யர் தொடவே அது எழுந்து நின்று ஹரே கிருஷ்ணா என்று நாமத்தை ஒலித்தது. சைதன்யர் தன் கையை அசைக்கவே அனைத்து மிருகங்களும் நாம சங்கீர்த்தனத்தை ஏற்று மகிழ்ச்சியுடன் ஆடின. கொடிய வன மிருகங்கள் மற்ற சாதுவான மிருகங்களைத் தழுவிக் கொண்டு ஆடியதைக் கண்ட அவர் நாம சங்கீர்த்தனத்தின் சக்தி இது என்று மகிழ்ந்தார்.

புரி ரத யாத்திரை விமரிசையாக நடைபெறும் பெரிய விழாவாகும். ஒரு முறை ஏதோ காரணத்தால் நகரவில்லை. உடனே மன்னன் வீரர்களை அழைத்து ரதத்தை இழுக்கச் சொன்னான். ரதம் நகரவில்லை. வலிமை வாய்ந்த யானைகள் வரவழைக்கப்பட்டன. அவற்றாலும் ரதத்தை இழுக்க முடியவில்லை. அப்போது சைதன்ய மஹா பிரபு ரதம் அருகே வந்தார். ரதத்தின் பின்னால் சென்று தன் தலையால் ரதத்தைத் தொட்டார். அவ்வளவு தான், ரதம் நகரத் தொடங்கியது. கையில் கயிறுகளுடன் ரதத்தை இழுத்துக் கொண்டிருந்தோர் தங்கள் கையில் கயிறுகள் இழுக்கப்படாமல் அப்படியே இருப்பதையும் ஆனால் ரதம் நகர்ந்து செல்வதையும் பார்த்து வியந்தனர்.

சைதன்யரின் வாழ்க்கையை விரிவாக ஏராளமானோர் எழுதியுள்ளனர். அந்த நூல்களில் எல்லாம் இது போன்ற ஏராளமான வியத்தகும் சம்பவங்கள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

சைதன்ய சரிதாம்ருதா என்ற நூலை ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் என்பவர் படைத்துள்ளார். அதில் அவர் ஒரு மரம் பற்றிய வர்ணனையைக் குறிப்பிடுகிறார். ஒரு மிகப் பெரிய மரமானது சிறிய விதை ஒன்றினாலேயே உருவாகிறது. அது பெரிதாகி மனித குலத்திற்குப் பெரும் பயனைத் தருகிறது.

 தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவிஆள் பெரும் படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே  என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு பாடல். அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை நமக்குத் தரும் செய்தி இது.

இந்தக் கருத்தை மனதில் வைத்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் ஒரு வைஷ்ணவ மரத்தின் தோற்றத்தை விளக்குகிறார். மாதவேந்திர       புரி கோஸ்வாமி என்பவர் வைஷ்ணவத்தின் விதையை விதைத்தார். அந்த மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தார் அவரது சிஷ்யரான ஈஸ்வர்புரி ப்ரபுவானவர். அவரது சிஷ்யரான சைதன்ய மஹா ப்ரபு அதை முழுப் பரிணாமம் உள்ள மிகப் பெரும் மரமாக ஆக்கி உலகமே பயனடையச் செய்தார். ஆக அன்பே பிரதானமான வைஷ்ணவத்தை ஒரு அழகிய வழியில் வடிவமைப்புச் செய்தவர் ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபுவே என்பது தெளிவாகிறது. கௌடியா வைணவம் என்ற அவரது கொள்கை பரவலாக இன்று அறியப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணதாஸ் கவிராஜர் ஏராளமான வியத்தகும் சம்பவங்களையும் செய்திகளையும் தருகிறார். பெரும் கொள்ளைக்காரர்கள் சைதன்யரைச் சந்தித்த மாத்திரத்தில் மாறியதையும், சைதன்யரின் நாம சங்கீர்த்தனத்தால் அரசர்கள் வைணவத்தைத் தழுவியதையும் அவர் வரலாறு தெரிவிக்கிறது. இன்னொரு முக்கிய சம்பவத்தைப் பார்ப்போம். ஒருமுறை சைதன்யரின் பாதுகாப்பிற்காக அவருடன் இரு படைவீரர்களும் இரு வங்காளத்தைச் சேர்ந்த பிராமணர்களும் கூட வந்தனர். வழியில் ஒரு மரத்தடியில் சைதன்யர் இளைப்பாற் அமர்ந்தார். அப்போது அருகில் ஒரு இடையன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து எழுந்த புல்லாங்குழல் இசையைக் கேட்ட சைதன்யர் ஆனந்தம் மேலிட பக்திப் பரவசமானார், அப்படியே மயங்கி விட்டார்; அவர் வாயிலிருந்து நுரை கக்கியது.

அப்போது அந்தப் பக்கம் வந்த பதான் இளவரசனான பிஜ்லிகான் என்பவன் இந்தக் காட்சியைக் கண்டு திகைத்தான். சைதன்யருடன் கூட இருந்த நால்வரே அவருக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக நினைத்தான். அவர்களைக் கைதும் செய்தான். ஆனால் அவர்கள், “நாங்கள் சைதன்யரின் சீடர்கள் என்றும், அவரே விழித்தெழுந்து இதைச் சொல்வார் என்றும் பயத்துடன் கூறினர். சிறிது நேரத்தில் உணர்வு பெற்ற சைதன்யர் பிஜ்லிகானிடம் அவர்கள் தனது சீடர்களே என்றும் பக்திப் பரவசத்தால் தான் கீழே விழுந்து மயக்கமுற்றதாகவும் வலிப்பினால் நுரை கக்கியதாகவும் கூற பிஜ்லிகான் அந்த நால்வரையும் விடுவித்தான். பிஜ்லிகானின் கூட வந்த ஒரு பதான், சூபி கொள்கையில் திளைத்தவன். அவன் சைதன்யரிடம் பேச ஆரம்பிக்க அவர் கிருஷ்ணரைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார். இதனால் கவரப் பெற்ற அந்த சூஃபி வைஷ்ணவ கொள்கையை ஏற்றுக் கொண்டு கிருஷ்ண நாமத்தைக் கூற ஆரம்பித்தான். இதனால் சைதன்யர் பெரிதும் மகிழ்ச்சியுற்றார். தனது வேலைக்காரனே இப்படி மாறியதைக் கண்ட பிஜ்லிகான் தானும் மனம் மாறி அவரது காலில் விழுந்தான். இவர்கள் நாடெங்கும் சைதன்யரின் பெருமையையும் கிருஷ்ண நாம மஹிமையையும் பரப்ப ஆரம்பித்தனர். இவர்கள் பதான் வைஷ்ணவர்கள் என்று அழைக்கப்படலாயினர்.

வங்காளத்தை ஆட்சி புரிந்த அலாவுதீன் ஹுஸைன் ஷாவின்- Alauddin Hussein Shah (ruled 1493–1519 -)பொக்கிஷதாரராக விளங்கியவ்ர் சனாதன கோஸ்வாமி. அவரது தந்தை இறக்கவே, அவர் பார்த்து வந்த இந்தப் பதவியை சனாதன் கோஸ்வாமி ஏற்க வேண்டியதாயிற்று. அவர் சைதன்யரை ஒரு முறை தரிசித்தார். அவர் பால் அளவில்லா ஈடுபாடு கொண்டார். அவரை ஹுஸைன் ஷா தர்பாரிலிருந்து விலகி பதவியையும் விடுமாறு சைதன்யர் அறிவுறுத்தவே அவர் உடனடியாக அப்படியே செய்தார். அவருக்கு ரூப சனாதன் கோஸ்வாமி என்ற பெயரை வழங்கினார் சைதன்யர். ரூப கோஸ்வாமி கௌடியா வைஷ்ணவத்தைப் பரப்பியதில் பெரும் பங்கு வகித்தார்.

தனது 31வது வயதிலிருந்து மறையும் வரை பெரும்பாலும் அவர் புரியிலேயே வசித்து வந்தார். இறுதியில் 1533ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி அவர் மறைந்தார். அப்போது அவருக்கு வயது 47 வருடம் 3 மாதம்.  தோதா புரி கோவிலில் நாம சங்கீர்த்தனம் பாடிக் கொண்டிருந்த போதே அவர் திடீரென மறைந்தார்.

 தனது அனைத்து போதனைகளையும் சுருக்கமாக சிக்ஷாஷ்டகம் என்ற எட்டே எட்டு செய்யுள்களால் அவர் உலகிற்கு தந்து அருளினார்.

ந-த⁴நம் ந-ஜநம் ந-ஸுந்த³ரீம்
கவிதாம் வா ஜக³தீ³ஶ காமயே ।
மம ஜந்மநி ஜந்மநி ஈஸ்வரே
ப⁴வதாத்³ ப⁴க்தி: அஹைதுகீ த்வயி ॥ 4 ॥

எனக்குச் செல்வம் வேண்டாம், ஜனம் வேண்டாம், அழகிய பெண்கள் வேண்டாம். உனது மீதான பக்தியே ஜன்ம ஜன்மத்திற்கும் வேண்டும். இதை ஸ்ரீ பக்திவேதாந்த ஸ்வாமி ப்ரபுபாதா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் இப்படி:

O almighty Lord, I have no desire to accumulate wealth, nor do I desire beautiful women, nor do I want any number of followers. I only want Your causeless devotional service birth after birth.

“இறுதியில் கிருஷ்ணரைத் தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாது. அவன் என்ன செய்தாலும் சரி, அவன் என்னை எது வேண்டுமானாலும் செய்யட்டும். ஏனெனில் அவனே நான் வணங்கும் தெய்வம்” என்று சிக்ஷாஷ்டகம் முடிகிறது.

I know no one but Krishna as my Lord, and He shall remain so even if He handles me roughly by His embrace or makes me brokenhearted by not being present before me. He is completely free to do anything and everything, for He is always my worshipful Lord unconditionally.

சிக்ஷாஷ்டகத்தின் மொத்த சாரம் ஒரே வரியில் “கிருஷ்ணனே எல்லாம் என்பதாகும்.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவை வணங்கி சர்வம் ஸ்ரீ கிருஷ்ண மயம் என்று கூறி எனது இந்த உரையை முடிக்கிறேன்.

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே                                      ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

நன்றி வணக்கம்!

***

tags- சைதன்ய, மஹா ப்ரபு,