சோதிட தபால்தலைகள் வாங்க போட்டாபோட்டி!!

கட்டுரை எழுதியவர்: எஸ். நாகராஜன்

சீனாவில் ஜோதிட தபால்தலைகள்

அதிகாலை 4 மணியிலிருந்தே மக்கள் கூட்டம் அஞ்சல் அலுவலகங்கள் வாசலில் தபால்தலை வாங்க கூடியது என்றால் நம்பக் கூடிய விஷயமா, என்ன? அதுவும் கம்யூனிஸ சீனாவில் ஜோதிட ஆண்டுகள் குறிக்கும் மிருகங்களின் தபால்தலைகளை வாங்க போட்டா போட்டி என்றால் மூக்கின் மீது விரலை வைக்கும் விஷயமாக அல்லவா இருக்கிறது. என்றாலும் இது உண்மை தான்.

சீனா சாந்திரமான அறுபது ஆண்டுகளைப் பின்பற்றி வரும் தேசம். ஒவ்வொரு ஆண்டிற்கும் ஒரு மிருகம் உண்டு. நீங்கள் முயலா, குரங்கா,நாயா. எருதா என்று கேட்டால் கோபப் படக் கூடாது! அதற்கு நீங்கள் முயல் ஆண்டில் பிறந்தவரா அல்லது குரங்கு ஆண்டில் பிறந்தவரா என்று அர்த்தம்? இல்லை நான் நாய் அல்லது எருது என்று பதில் கிடைத்தால் அந்த ஆண்டில் அவர் பிறந்தவர் என்று பொருள்.

சின்னஞ்சிறுவர்கள் கூட   முயல் தபால்தலை வாங்க அங்கே பெருங்கூட்டமாகத் திரண்டது தான் அதிசயம். சீனர்களின் அறுபது ஆண்டு சுழற்சி  இரு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, மரம், தீ, மண், உலோகம். நீர் ஆகிய பஞ்ச பூதங்களின் அடிப்படையிலானது; அடுத்தது 12 ராசிகளுக்கான மிருகங்களைக் கொண்டுள்ளது. எலி, எருது, புலி,முயல், ட்ராகன்,பாம்பு, குதிரை.ஆடு.குரங்கு. சேவல்,. நாய் மற்றும் பன்றி ஆகிய 12 மிருகங்களே அவை. சீனரின் மூதாதையர்கள் மனிதர்களின் விதி ஜோதிட ராசிக்குரிய மிருகத்தினால் நிர்ணயிக்கப்படுகிறது என்று நம்பியதால் இன்றளவும் இந்த ஆண்டுகளுக்குரிய மிருகங்களின் மீது மக்கள் பெருமளவு மதிப்புக் கொண்டுள்ளனர். முயல் தபால் தலை வெளியிடப்பட்ட போது வரலாறு காணாத அளவில் மக்கள் அதை வாங்கி மகிழ்ந்தனர்.

இஸ்ரேலில் ஜோதிட தபால் தலைகள்

எங்கள் நாடு ஜோதிடத்தை நம்பாத நாடு என்று சொல்வதற்கு அநேகமாக எந்த நாட்டிற்குமே இன்று அருகதை இல்லை என்று சொல்லி விடலாம். எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஜோதிடம் காட்டும் 12 ராசிகளின் தபால் தலைகளையும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகின்றன.இஸ்ரேல் 1961-62ல் வெளியிட்ட ராசிகளுக்குரிய தபால்தலைகளுக்கு இன்றளவும் பெரும் கிராக்கி உள்ளது.

இந்தியாவில் ஜோதிட தபால் தலைகள்

அடிமைத் தனத்திலேயே ஊறிப் போன இந்தியர்கள் நமது பழம் பெரும் பார்ம்பரிய ஜோதிடக் கலையை மதிப்பதற்குச் சற்று தயங்குபவர்கள். அதிலும் விஞ்ஞானிகள் என்றாலோ அவர்கள் ஜோதிடத்தை இகழ்வதை தங்களின் அந்தஸ்துக்கான ஒரு அடையாளமாகக்  கொண்டுள்ளனர். ஆனாலும் கூட சென்ற ஆண்டு இந்தியா 12 ராசிகளுக்கான தபால்தலைகளை வெளியிட்ட போது அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஏனெனில் மக்கள் பாரம்பரிய ஜோதிடக் கலையின் பக்கம் திரும்பி வருவதற்கு இதுவும் ஒரு சான்று. அவரவர்க்குரிய ராசியின் தபால்தலைகளை ஏராளமாக வாங்கி உபயோகித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா, கனடாவின் தபால் தலைகள்

உலகின் பல நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு இப்போது ஜோதிட சம்பந்தமான தபால்தலைகளை வெளியிட்டு வருகின்றன. இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது ஜோதிட ஆர்வம் உலகெங்கும் பெருகிக் கொண்டே போகிறது.இந்த ஆர்வலர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வது அரசாங்கங்களின் கடமையாக ஆகிறது. பண்பாட்டைப் பல நாடுகளுக்கும் பரவச் செய்ய ஜோதிடத்தை ஒரு முக்கிய வழியாக பல நாடுகளும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. இரண்டாவது இப்படித் தபால்தலைகளை வெளியிடுவதன் மூலம் ஏராளமான வருவாய் அரசுக்குக் கிடைக்கிறது.வெளிநாட்டுச் செலாவணியும் கூடக் கிடைக்கிறது.

ஆஸ்திரேலியா 2007ல் 12 தபால்தலைகளை முதலில் வெளியிட்டது. இதற்குக் கிடைத்த பெரும் ஆதரவைத் தொடர்ந்து அடுத்து வந்த ஆண்டுகளில் 24 தபால்தலைகளை வெளியிட்டது.

கனடா இந்த ஆண்டு ஏப்ரல்,மே,ஜூன் மாதங்களில் மூன்று தபால்தலைகளை வெளியிட்டது. மிதுன இரட்டையரை அதற்கு உரிய மே மாதத்தில் கனடா வெளியிட்டு தனது ஜோதிட ஆர்வத்தை நிரூபித்துக் கொண்டது.

ஒவ்வொரு தபால் தலையின் வடிவமைப்பும், வண்ண அமைப்பும் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் வண்ணம் உள்ளதால் இப்போது ஜோதிட தபால்தலைகளைச் சேர்ப்பது ஒரு பெரும் பொழுது போக்காக ஆகி விட்டது.

இந்தியா வெளியிட்டுள்ள ஜோதிட தபால்தலைகளை வாங்க உங்கள் அருகில் உள்ள தபால்தலை சேகரிப்பு அஞ்சல் மையத்தை அணுகலாம்.கிடைத்தால் உங்கள் ஜாதகப்படி  ஜோதிட தபால்தலைகளைச் சேகரிக்கும் ராசி உங்களுடையது என்பதை உறுதிப் படுத்துக் கொள்ளலாம்.

                             *********************