ராஜாஜி ரமணரை தரிசித்ததுண்டா?

Image

வாசகரின் சந்தேகத்திற்கு விளக்கம்! 

ச.நாகராஜன்

நமது வாசகர்களில் ஒருவரான கார்த்திக் சீனிவாசன் ரமணரைச் சந்தித்த பாக்கியவான்கள் என்ற எனது கட்டுரையைப் படித்து விட்டு கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்:

 

 

நீங்கள் ரமணரைச் சந்தித்தவர்களின் பட்டியலில் ராஜாஜி அவர்களின் பெயரையும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனக்குத் தெரிந்த வரையில் ராஜாஜி ஒருபோதும் மஹரிஷியைச் சந்தித்ததில்லை. மஹாத்மா மஹரிஷியைச் சந்திக்கவிருந்த திட்டத்தையே கூட அவர் மாற்றியவர். அதற்காகக் கடுமையாக விமரிசனத்திற்குள்ளானார். இந்த மூவரையும் நான் கொண்டாடுபவன் என்றாலும் கூட இந்த வரலாறு தான் எனக்குத் தெரியும். ராஜாஜி எப்போதேனும் மஹரிஷியைச் சந்தித்திருந்தால் அது பற்றிய குறிப்பைத் தாருங்கள்.

 

 

ஸ்ரீ ரமணாஸ்ரமம் வெளியீடான ‘சத்குரு ஸ்ரீ ரமண மஹரிஷி சரிதமும் உபதேசமும்’ எட்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் பாகத்தில் ‘நான் எவ்வாறு பகவானிடம் வந்தேன்” என்ற பகுதியில் மூன்றாவது அத்தியாயமாக ராஜகோபாலாச்சாரி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தை ராஜாஜி அவர்களின் வார்த்தைகளில் (பக்கம் 149-150) அப்படியே தருகிறேன்:

 

 

1936ஆம் வருடம் ஜனவரி மாதம் ஆஸ்ரமத்திற்குச் சென்றேன். அங்கு இருந்த பக்தர்களுடன் சில மேனாட்டவரும் ஹாலில் இருந்தனர். அங்கிருந்த தெய்வீக சூழ்நிலையும், ஹாலில் நிலவிய ஆழ்ந்த அமைதியும் என்னை மிகவும் கவர்ந்தது.சோபாவில் உட்கார்ந்த பகவான் எங்கும் அன்பையும் எளிமையையும் பொழிந்தார். நான் விசிஷ்டாத்வைதத்தைச் சேர்ந்தவன்.எனவே அந்த தத்துவத்தில் பரிச்சயம் கொண்டவன்.பகவானுடைய உபதேசத்தினால் கவரப்பட்ட நான் எவ்வாறு விசிஷ்டாத்வைதத்தையும் அத்வைதத்தையும் ஒன்றுபடுத்துவது என்று கேட்டேன். சிறிது நேரங்கழித்து பகவான் “எப்படி இருந்தாலும் உன்னுடைய கர்மாவை அனுபவிக்க வேண்டும். அப்படியிருந்தால் நீ காப்பாற்றப்படுவாய்” என்றார். பகவானின் இந்த உபதேசத்தை மீண்டும் பலமுறை எண்ணிப் பார்த்து, அதனால் பலன் அடைந்திருக்கிறேன்.

 

 Image

     ராஜாஜி மஹரிஷியை தரிசித்ததும், அவருடைய அன்பையும் எளிமையையும் கண்டு மகிழ்ந்ததும் அவருடைய உபதேசத்தால் அவர் கவரப்பட்டார் என்பதும் மஹரிஷியின் அருளுரையை அவர் எண்ணி பலன் அடைந்ததும் அவர் வார்த்தைகளிலேயே மேலே படித்த பிறகு இனி சந்தேகம் யாருக்கும் எழாது.

 

 

.     திருவண்ணாமலைக்கு காந்திஜி வந்தபோது அவர் மஹரிஷியை தரிசிக்கும் வாய்ப்பை உருவாக்கவில்லை என்பது பற்றிப் பார்ப்போம். காந்திஜி தனது பயண நிகழ்ச்சிகளில் எவ்வளவு கண்டிப்பானவர் என்பதை அவரது வாழ்வையும் வாக்கையும் விளக்கும் நூறு தொகுதிகளைப் படித்தோர் நன்கு உணர முடியும். ஜம்னாலால் பஜாஜுடன் வந்த ராஜேந்திரபிரசாத், மஹாதேவ தேசாய் ஆகியோரை ரமணாஸ்ரமத்திற்கு அனுப்பியவரே மஹாத்மா தான். அவர் நினைத்திருந்தால், அவரது பயண நேரம் அனுமதித்திருந்தால் நிச்சயம் அவர் ரமணாஸ்ரமம் சென்றிருக்கக் கூடும். ஆகவே முழு பொறுப்பாளராக ராஜாஜியை இதில் விமரிசிப்பது தவறோ?

 

 

      என்றாலும் கூட மஹரிஷியின் அணுக்க பக்தரான ஸ்ரீ ஏ.தேவராஜ முதலியார் தனது டே பை டே வித் பகவான் (Day by Day with Bhagavan) என்ற நூலில் அன்றாட நிகழ்வுகளை நடந்தது நடந்தபடி அப்படியே குறித்து வைத்துள்ளார். அதில் 27-1-1946 அன்று காலையில் நடந்தவற்றை அவர் எழுதியுள்ளார். அன்று காந்திஜியைச் சந்திக்க மதராஸ் சென்றிருந்த கிருஷ்ணஸ்வாமியிடம் பகவான் நடந்தவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். இதில் முக்கிய பகுதி வருமாறு:

 

 

    கிருஷ்ணஸ்வாமி பகவானிடம் சொன்னார்:”நமது நண்பர்களில் சிலர் மஹாத்மாவுக்கு ஆஸ்ரமத்திற்கு விஜயம் செய்யுமாறு யோசனை கூற வேண்டுமென்று விரும்பினர்.ஆனால் அவர்கள் ஓ.பி.ராமசாமி ரெட்டியாரைக் கலந்து பேசிய போது அவர் இங்கே எங்களில் யாரும் மஹாத்மாவை அணுக முடியாது. ராஜாஜி மட்டுமே செல்வாக்கு படைத்தவர்” என்று சொன்னார்.. இதைக் கேட்ட பகவான் “அவாயெல்லாம் இங்கேயெல்லாம் வரவிடமாட்டா” என்றார்.

(ஆங்கில டயரியில் இந்தச் சொற்கள் மட்டும் தமிழிலும் தரப்பட்டிருக்கிறது!)

 

 

ஒரு வாரத்திற்கு முன்னால் பகவான், “மஹாத்மா முன்னொரு முறை (ஆஸ்ரமத்திலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் உள்ள) இங்குள்ள மாட்டு சந்தை நடக்கும் இடத்திற்கு வந்தார். அவரது பணியை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னாலேயே முடித்தார்.நிதியளிப்பைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

 

 

   கிருஷ்ணஸ்வாமி, மஹாத்மா அடிக்கடி பகவானைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேல் அபார மரியாதை வைத்திருப்பதாகவும் சொன்னார் என்ற இன்னொரு செய்தியையும் சொன்னார். அதற்கு பகவான்,”ஆமாம், ஆமாம். அது அப்படித்தான்! எப்போதெல்லாம் யாராவது மன அமைதி இல்லை என்று அவரிடம் சொல்கிறார்களோ அவர்களை எல்லாம் அவர் பாக் செய்து, ”ரமணாஸ்ரமத்திற்குப் போ, அங்கு சிறிது காலம் இருந்து விட்டு வா” என்று சொல்லி இங்கே அனுப்பி விடுவார்” என்றார்.

ஆகவே தேவராஜ முதலியாரின் நாட்குறிப்பு நடந்ததைத் தெளிவாக விளக்குகிறது. மஹாத்மா காந்திஜியும் மஹரிஷியும் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள் அதற்கு ராஜாஜி முனைப்பாக ஏதேனும் செய்திருக்கலாம் என்ற ஆதங்கப் பட்டிருப்பது நிஜமே.

 

 

இனி மஹாத்மா மறைவுச் செய்தியைக் கேட்டவுடன் மஹரிஷி  கண்களில் நீர் கசிந்ததையும் அன்று ஆஸ்ரமத்தில் பக்தர்கள் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை தொடர்ந்து இசைத்ததையும்  ஆஸ்ரம ஏடுகள் மூலமாக அறிகிறோம்.

 

மஹாத்மாவைப் பற்றியும் மஹரிஷியைப் பற்றியும் ஏராளமான சுவாரசியமான செய்திகள் இருந்தாலும் முத்தாய்ப்பாக ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே தருகிறேன்.

 

மஹாத்மா மறைவுக்குப்பின்னர் நடந்தது இது:-

நேற்று ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா மஹாத்மாவின் போட்டோவைக் காண்பித்து, “காந்திஜியும் மஹாத்மாவும் சந்திக்காமல் போனது பரிதாபமே” என்றார்.

 

 

பகவான் ரமணர் : சில காலத்திற்கு முன்னர் அவர் திருவண்ணாமலை வந்திருந்தார்.மலையைச் சுற்றி உள்ள சாலையில் ஆசிரமத்திற்கு அப்பால் அவரது கூட்டம் ஏற்பாடாகி இருந்தது.இங்கிருந்தோர் அவர் திரும்பும் போது ஆஸ்ரமத்திற்கு வருவார் என்று நினைத்தனர்.ஆனால் கூட்டத்தின் நெருக்கடியினால் அவரால் அது முடியாமல் போனது. அவர் ஸ்டேஷனுக்கு நேராகச் சென்று விட்டார்.பின்னால் இதற்காக அவர் மிகவும் வருத்தப்பட்டதாகத் தெரிகிறது. சங்கர்லால் பேங்கரும் ஜம்னாலால் பஜாஜும் இங்கு வந்து ஸ்கந்தாஸ்ரமத்தைப் பார்த்தனர். அவர்கள் மஹாத்மாவை இங்கு வந்து சில நாட்கள் தங்குமாறு தூண்ட விரும்பினர்.ஆனால் அது நடக்கவில்லை. சபர்மதியிலோ அல்லது வார்தாவிலோ யாராவது மனச்சோர்வால் பாதிக்கப்பட்டால் மஹாத்மா அவர்களை நோக்கி,”ரமணாஸ்ரமத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு  மாதம் தங்கி இருந்துவிட்டுப் பின் வாருங்கள்” என்பார். ராமசாமி ரெட்டியார் முதல் மந்திரி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு மஹாத்மாவை பார்க்கச் சென்ற போது மஹாத்மா அவரை எவ்வளவு காலமாக ரமணாஸ்ரமத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதாகத் தெரிகிறது. அவர் முப்பது வருட காலமாகப் போய்க் கொண்டிருப்பதாக பதில் சொன்ன போது மஹாத்மா, “அப்படியா! நான் மூன்று முறை முயற்சி செய்தேன். ஆனால் இதுவரை அங்கே போக முடியவில்லை” என்றார். அவரால் என்ன செய்ய முடியும்? ஒரு கணம் கூட அவரைத் தனியே இருக்கவிடாத போது அவரால் எப்படி வர முடியும்?

 

பகவான் இன்றைய பேப்பரில் வெளியாகி இருந்த, ”மஹாத்மா அந்த துயர சம்பவத்திற்கு முதல் நாள் தனது மரணத்தைப் பற்றி ஒரு கனவை முன்கூட்டியே கண்டார்.ஆகவே வெகு சீக்கிரமாக அவரது பேப்பர்களைப் பார்த்து முடித்தார். அதுவே அவர் பிரார்த்தனைக்கு தாமதமாக வரக் காரணம் ஆனது” என்ற செய்தியைப் படித்தார். 

பிறகு கூறினார்:” ஆம்! ஞானோதயம் பெற்றோருக்கு அந்த அளவு கூட என்ன நடக்கப் போகிறது என்பது முன்கூட்டியே தெரியாதா என்ன? அவர்கள் அறிவார்கள். ஆனால் மற்றவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள்” என்றார்.

 

 

ஆதாரம் : ரமணாஸ்ரம வெளியீடுகள்

 

ஆனால் இதற்கெல்லாம் தெளிவாக பதிலை ரமணரே கூறியிருக்கிறார்.

“எந்த ஒரு மஹாசக்தி இங்கே இருக்கிறதோ, அதுவே அவரையும் வழி நடத்துகிறது” என்று மஹாத்மாவைப் பற்றி அவர் கூறியுள்ளார். அந்த மஹாசக்தி திருவுள்ளப்படியே எல்லாம் நடக்கிறது. அவரவர் பணியை அவரவர்க்கு ஒதுக்கிட்டுத் தந்த அந்த மஹாசக்தி இவர்களின் சந்திப்பு தேவை என்றால் அதை நடத்தி முடித்திருக்காதா, என்ன?அல்லது அந்த மஹாசக்தியே இந்த இருவருக்குள்ளும் இருந்து அவர்கள் ஒரே சக்தியாக  இயங்கிய போது, அதை அவர்களும் நன்கு உணர்ந்திருந்த போது அவர்கள் சந்திக்க வேண்டும் என்ற தேவை தான் ஏது?!

********************