சதுரங்க பந்தம் – 9

தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் – 9

Research paper written By ச.நாகராஜன்
Research article No.1445; Dated 29th November 2014.

சுவடிகளாக அச்சேறாமல் உள்ள தமிழ் நூல்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன தஞ்சை சரஸ்வதி மஹாலில் ஆரம்பித்து உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் தனியார் தொகுப்புகளிலும் உள்ள சுவடிகள் என்று அரங்கேறப் போகின்றன என்பது யாருக்கும் தெரியாது. பழைய காலத்தில் சில சுவடிகளை புத்தகங்களாக அச்சிட்டுள்ளனர். ஆனால் அந்தப் புத்தகங்களும் இன்று கிடைக்காமல் போய் விட்டன. வாய்வழியாக ஆசான் – மாணாக்கன் என்ற குருகுல அமைப்பு மூலம் வழி வழியாக வந்த பல ரகசியங்கள் அந்த குரு குல முறை கெட்டு அழிந்தவுடன் ரகசியங்களாகவே மாறி விட்டன.

புத்தகங்களில் அச்சிடப்பட்டு உள்ள பல விஷயங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. உதாரணத்திற்கு சதுரங்க பந்த விஷயமாக ஒரு எடுத்துக் காட்டை இங்கே காண்போம்.
நினைவில் வாழும் தமிழறிஞர் ச.பவானந்தம் பிள்ளை பதிப்பித்த யாப்பருங்கல விருத்தியுரையில் சித்திரக் கவிமாலை என்ற தலைப்பில் 29 வரிகளில் உள்ள பாடலில் ( மாலை மாற்றே சக்கரஞ் சுழிகுள என்று ஆரம்பித்து அந்தமில் கேள்வி யாசிரியன்னே என முடிகிறது. இடமின்மை கருதி இங்கு முழுப் பாடலையும் தர முடியவில்லை)

இதில் 19வது வரியாக ‘பாடுதுன் மரபுந் தாரணைப் பகுதியும்’ என வருகிறது.
தாரணை என்பதற்கு விளக்கவுரையாகத் தரப்படுவதைக் கீழே காண்போம்:
“தாரணைப் பகுதியும்’ என்பது:- தாரணை விகற்பங்களும் என்றவாறு. தாரணை விகற்பங்களாவன : நாமதாரணையும், அக்கரதாரணையும், செய்யுடாரணையும், சதுரங்கத்தாரணையும், சித்திரத்தாரணையும், வயிரத்தாரணையும், வாயுத்தாரணையும், நிறைவு குறைவாகிய வெண்பொருட்டாரணையும், வச்சிரத்தாரணையும் முதலாயினவற்றை உருவக்கரசங்கேதங்களால் இடம்படவறிந்து தரித்து, அனுலோமமாகவும், பிரதிலோமமாகவும், பிறவாறாகவுஞ் சொல்லுவது. அவையெல்லாம் தாரணை நூலுட் கண்டு கொள்க.

இந்த விளக்கத்தில் தாரணை நூல் என்று ஒரு நூல் இருப்பதை அறிய முடிகிறது. அதில் சதுரங்க பந்தம் உள்ளிட்ட பலவற்றைப் பற்றி ஏராளமான விளக்கங்கள் இருப்பதையும் அறிய முடிகிறது. தாரணை நூலை தமிழில் யாரேனும் அச்சிட்டிருக்கிறார்களா? தெரியவில்லை.

சதுரங்க பந்தம் பற்றிய இலக்கணமும் தொடர்ந்து இப்படித் தரப்படுகிறது:-
“சதுரங்க அறையில் உருவுகளை உருவக்கர சங்கேதங்களால் திரித்துக் குதிரையடியாகவும், குதிரையும் யானையுமாகப் பாய்ந்து வருவதற்கு இலக்கணம் வருமாறு:-

“கடிகம ழிலைமலர் சீரிதழ்த் தாமரைப்
பனிமலர் வாட்டிய மீமிசை நிகரி
னூபுரமிக வூன்றலின் மேலொளி நெருங்கிய
சேண்விளங் கெழிலடி குறுகுதுத் தூநிறப்
பெருமலர் வேங்கையு மூங்கிலு நுடங்கிப்
பிணியவிழ் வீத்த மாத்த ணறவமும்
சாந்தமு மகிலுங் கிளர்ந்து திங்களிச்
சூரலு முகிரலுங் கெழுமித் தேறிய
நூலவர் பேணும் வெட்சியு முறித்தை
விரைமலர் மகிழு நாகமும் பீடுடைத்
திருவுஞ் சகமலி யாதி கீர்த்தி
யூனமில் கேள்வியிற் றெளிந்து சுரும்பிவர்
நீடிணர்ப் பாசிலை வடுமா மிசைமிக
வுருகெழு மென்கனி நேரே பூசணித்
துகளறு செங்கா யெங்கெனக் கூறி
யீண்டிய காதலிற் றடவிய சிறுநுதற்
பெருமதர் மழைக்கட் செவ்வாய்ப்
புரிகுழ லியக்கியர் பொதிபெறற் பொருட்டே”

இந்த நேரிசை ஆசிரியப் பாடலில் கடிகமழ் என்பதில் ஆரம்பித்து சிறுநுதல் என்ற வார்த்தை முடிய மொத்தம் 64 வார்த்தைகள் உள்ளன.

“வேண்டியதோ ரறை முதலாகவாயினும், வேண்டியதோர் அறை ஈறாகவாயினும் பாய்த்துவது, சிறு நுதல் வரைப் பாய்த்த அறுபத்து நாலு வெங்குதிரை வரும்” என்கிறது விளக்கவுரை.
எந்த அறையில் குதிரையின் பாய்ச்சலை ஆரம்பிப்பது, எப்படி குதிரை வரும் என்பதை நம்மால் அறிய முடியவில்லை. ஏனெனில் விளக்குவதற்கு குருவும் இல்லை; விளக்கம் முழுவதும் அடங்கிய தாரணை நூலும் இல்லை.

இது தான் தமிழின் இன்றைய நிலை! தமிழின் மீது அக்கறை உள்ள நம் போன்றோர் முயன்று இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பாடல் இங்கு தரப்படுகிறது. தமிழ் என்னும் விந்தையின் ஒவ்வொரு துளியையும் அறிந்து சுவைத்து அதை உலகிற்குத் தருவோரே உண்மையான தமிழ்த் தொண்டு புரிபவராவர். தமிழ் நூல்களில் புதைந்து கிடக்கும் கோடானு கோடி ரகசியங்களை கண்டுபிடித்து வெளியிடுவதே தமிழர்கள் முன் இன்று இருக்கும் ஒரே கடமை!
ஆங்கிலத்தில் சதுரங்க அறைகளில் ஆங்கில கவிதைகளின் வார்த்தைகளையோ அல்லது எழுத்துக்களையோ அமைத்துப் புதிர்களை விடுவிப்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து வந்த ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. இல்லஸ்ட்ரேட்ட் லண்டன் நியூஸ் பத்திரிக்கையில் ஹோவர்ட் ஸ்டாண்டன் என்பவர் 1870 முதல் 1874 முடிய வெளியிட்ட சதுரங்க கவிதை புதிர்களில் ஷேக்ஸ்பியர் மற்றும் சர் வால்டர் ஸ்காட் கவிதைகளை அமைத்து புதிர்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்றே ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

*************** (தொடரும்)