சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
- திருமந்திரம்: குருடன் குருடனுக்கு வழி காட்டினாற் போல!
Compiled by S Nagarajan
Post No: 1596: Dated 23 January 2015
by
ச.நாகராஜன்
நியாயங்கள் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்கள்:
दग्धदहन न्यायः
Dagdha dahana nyayah
தக்த தஹன நியாயம்
தக்த – எரிபட்டதை; தஹன – எரிப்பது
எரித்ததை எரிப்பது என்னும் இந்த நியாயம் தீயில் எரிபட்டுப் போன ஒரு பொருளை தீ மீண்டும் எரிக்காது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. முடியாத ஒரு காரியத்தையோ அல்லது பயனற்ற ஒரு காரியத்தையோ வீணாக ஒருவன் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படுகிறது.
अन्धपरम्परान्यायः
andha parampara nyayah
அந்த பரம்பர நியாயம்
அந்த(கன்) – குருடன்
குருடனைக் குருடன் பின்பற்றும் இந்த நியாயம் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ஒன்று. குருட்டுத்தனமாக, அறிவற்று, சுய சிந்தனையற்று ஒருவனைப் பின்பற்றும்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
ஒரு குருடனை வழிகாட்டியாகக் கொண்டு ஒருவன் சென்றால் அவன் விழுவதோடு அடுத்தவனையும் கிணற்றில் தள்ளி விடுவான்.
நல்ல குருவினைப் பின்பற்றாமல் தீய ஒருவனைக் குருவாகப் பாவித்து ஒருவன் பின்பற்றுவது குருடனைக் குருடன் பின்பற்றியது போல ஆகும் என்பது அற நூல்கள் பலவற்றிலும் குறிப்பிடப்படுகிறது.
எடுத்துக்காட்டாக திருமுலரின் திருமந்திரத்தில் வரும் இந்தப் பாடலைக் கூறலாம்:
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே —- (திருமந்திரம் பாடல் எண் 1680)
‘Blind leading the blind’ என்ற இதே கருத்து கதோபநிஷத்திலும் காணப்படுகிறது.
பைபிளிலும் இந்தக் கருத்தை மாத்யூ 15:13-14 மற்றும் ல்யூக் 6:39-40லும் காணலாம். புத்தமத த் தின் முக்கிய நூலான சாங்கி சூத்திரத்திலும் இது கையாளப்படுகிறது. அருளாளர்கள் எழுதிய பாஷ்யங்களிலும் இந்த நியாயம் எடுத்துச் சொல்லப்படுகிறது.
உலகளாவிய விதத்தில் பேசப்படும் இந்த நியாயம் மிகச் சில சொற்களில் அரிய கருத்தை விளக்கும் ஒன்றாகும்.
अश्मलोष्टन्यायः
ashma loshta Nyayah
அஷ்ம லோஷ்ட நியாயம்
அஷ்ம- கல்; லோஷ்ட – மண்ணாங்கட்டி,
கல்லும் மண்ணாங்கட்டியும் என்னும் நியாயம் இது. மண்ணாங்கட்டி ஒன்று பஞ்சை விடக் கெட்டியானது தான்; ஆனால் அதைக் கல்லுடன் ஒப்பிட்டால் அது மிகவும் மிருதுவானது தானே! உடைத்து உதிரக் கூடிய ஒன்று அது! அது போலவே ஒரு மனிதன் அவனது கீழ் வேலை பார்ப்போரை ஒப்பிட்டால் மிகவும் முக்கியமானவன் தான்! ஆனால் அதே சமயம் அவனை விட மேல் நிலையில் உள்ளோரை ஒப்பிடுகையில் அவன் சிறிய நிலையில் உள்ளவன் தான்! ஒரு விஷயத்தை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் எதை எத்துடன் ஒப்பிடுகிறோம் என்பதில் ஏற்படும் முக்கியத்துவத்தை இந்த நியாயம் விளக்குகிறது.
अहि-निर्ल्वयनीन्यायः
ahi nir-lvayani nyayah
அஹி நிர்-ல்வயனி நியாயம்
பாம்பு தன் சட்டையை உரித்து விடுவது பற்றிய நியாயம் இது.
எப்படி ஒரு பாம்பானது தன் சட்டையை உரித்து விட்டவுடன், அதை இனிமேல் தன் உடலில் ஒரு பகுதியாக்க் கருதுவதில்லையோ அதே போல ஒருவன் உண்மையான வித்யாவை ( மெய் கல்வி) அடைந்தவுடன் – தன்னை ஆன்மா என்று அறிந்தவுடன் -உடலை இனியும் தனதாக எண்ண மாட்டான்.
உயர்ந்த ஆன்மீகக் கருத்தைச் சொல்லும் நியாயம் இது.
अहिकुंडलन्यायः
ahi kundala nyayah
அஹி குண்டல நியாயம்
பாம்பு சுருண்டு படுத்திருக்கும்போது அதன் சுருள்களைச் சொல்லும் நியாயம் இது.
எப்படி சுருண்டு படுப்பது பாம்பின் இயற்கையோ (அதன் சுருள்கள் அதன் இயற்கையோ) அதே போல கெட்டவன் ஒருவனின் வழிகளும் அவனுடன் இயற்கையாக இருக்கும் ஒன்றே! இயல்பாகத் தீயவரிடம் அமைந்திருக்கும் கெட்ட செயல்களையும் தீய எண்ணங்களையும் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
இப்படி எத்தனை எத்தனை நியாயங்கள்! ஒவ்வொன்றையும் படிக்கவும் கேட்கவும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவும் சுவையான ஒன்றாக அமைகிறது இல்லையா!
contact swami_48@yahoo.com
***************
You must be logged in to post a comment.