

Post No. 15,388
Date uploaded in Sydney, Australia – 3 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அரிய செய்திகள்- 9
அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 9
அறமும் நிறமும் அயிலும் மயிலும் … தர்மமும், செந்நிறமும்,
வேலும், மயிலும்,
அழகும் உடைய பெருமாளே. … அழகும் உடைய பெருமாளே.
***
நோய்கள், டாக்டர்கள் பற்றி
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
டயாபடீஸ் நோய் வரக்கூடாது
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் … தலைவலி, வசிய
மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,
விழிவலி வறட்சூலை காயாசு வாசம் … கண்வலி, வறள் என்ற
வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,
வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே …
நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்
விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,
காசு பறிக்கும் டாக்டர்கள்
தலமிசை யதற்கான பேரோடு கூறி … பூமியில் அந்த நோய்கள்
நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,
யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் … இது
நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர்,
சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே …
சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல்,
****
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் … ஊக்கக்குறைவு
இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள
மலர்களை,
வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் … விதவிதமாகப்
பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து
உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் …
உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு
பாதங்களையும்
உளமது தரித்தே வினாவோடு பாடியருள் … மனத்தினில்
தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்
வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ … உன்னை
வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ
உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் …
பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.
*****
மஹா கோர ராவணன்
அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை … அலைகடலை
அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய
மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை … மணிமுடிகளை
அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை
அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு
மருகோனே … தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே,
****
அறுகினை முடித்தோனை யாதார மானவனை … அறுகம்புல்லை
சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் … மழு, மான்
இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்
வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,
சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,
****
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்
படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற
இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய
வித்தகனே, வேலாயுதனே,
உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட
பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்
தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க
ஆசை கொண்ட மணவாளனே,
பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்
பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய
திருப்புகழில் பூகோள பாடம்
காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,
****
பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி
பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.
நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).
உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).
இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு ; அது இறுதியில் காவிரியில் கலக்கிறது.
பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.
மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது
****
கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்
கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.
***
பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை
நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய
தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,
வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,
இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,
ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான
தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி
போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)
இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி
நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்
கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,
பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான
சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,
கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும்
சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,
போற்றி
தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான
போர்வீரனே, போற்றி, போற்றி,
கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,
தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான
ஒளியே, போற்றி, போற்றி,
தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்புரிபவனே, போற்றி, போற்றி,
தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப்
பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,
அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.
சோழநாட்டின் பெருமை
ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார
நீதியும் … தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,
ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணை, குருவின்
திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),
ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழு உலகங்களில்
உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்
சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்
நாயக … சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்
ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,
வயலூரா … வயலூருக்குத் தலைவா,
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த
திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை
சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய்,
அவருடன் முன்பொருநாள்,
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த,
விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)
ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய
(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்
சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து
வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு
ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு
கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.
* இது ‘திருக்கற்குடி‘ அல்லது ‘உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.
** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோது, சுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ‘ஆதி உலா‘ என்ற பாடலைப் பாட, கயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.
***
பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !
நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி
கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்
தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய
நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்
கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு,
நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …
(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து,
கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்
உடையோராய் … கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய்,
முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து
இருக்குமோ எனில் … அவர்களது முகமானது, ஒரு செய்யுளும்
வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,
முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்
அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்
வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து
போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.
முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்
செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி
போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.
To be continued……………………………
Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும், பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-, டாக்டர்கள், நோய்கள், காவேரி, சோழநாடு, போலிப் புலவர்கள்





.jpg)

















