Article No. 2039
Written by London swaminathan
Swami_48@yahoo.com
Date : 3 August 2015
Time uploaded in London : -15-45
தமிழில் சிற்றிலக்கியத்தில் 96 பிரபந்த வகைப் பாடல்கள் உள்ளன. அவைகளில் ஒன்று அந்தாதி. அந்தாதியில் பல வகை அந்தாதிகள் உண்டு. அவை:
ஒலியந்தாதி
பதிற்றந்தாதி
நூற்றந்தாதி
கலியந்தாதி
கலித்துறை அந்தாதி
வெண்பா அந்தாதி
யமக அந்தாதி
சிலேடை அந்தாதி
திரிபு அந்தாதி
நீரோட்டக யமக அந்தாதி
யமகம் என்றால் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வரும்; ஆனால் அதற்கு வெவ்வேறு பொருள் இருக்கும். அந்தாதி என்றால் முதல் பாடலில் அந்தத்தில் (இறுதியில்) வரும் சொல் அடுத்த பாடலில் ஆதியில் (துவக்கத்தில்) வரும். இவையெல்லாமே சம்ஸ்கிருதச் சொற்கள். “ஆதி அந்தமில்லாத”, “வேதாந்தம்” (வேதத்தின் அந்தம்/இறுதி = உபநிஷத் கூறும் தத்துவம்) ஆகிய சொற்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
ஆக அந்தாதி என்றால் தெரிந்து விட்டது. யமகம் என்றால் புரிந்துவிட்டது. நீரோட்ட யமக அந்தாதி என்பதில் நீரோட்டம் என்றால் என்ன. இதுவும் சம்ஸ்கிருதச் சொல்லே! நிர்+உஷ்ட என்றால் உதடு ஒட்டாத என்று பொருள். உஷ்ட என்ற வடமொழிச் சொல்லும் உதடு என்ற தமிழ் சொல்லும் ஒரே மூலம் உடையவை. (தமிழ் திராவிட மொழியும் இல்லை, சம்ஸ்கிருதம் ஆரிய மொழியும் இல்லை. இரண்டும் சிவன் உடுக்கை ஒலியின் இரு புரத்திலிருந்து வந்த இரு பாரதீய மொழிகள் என்று எனது ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நிரூபித்துள்ளேன்)
ஒட்டகத்துக்கு உஷ்ட்ரம் என்ற சம்ஸ்கிருதப் பெயரும் ஒட்டகம் என்ற தமிழ்ப் பெயரும் அதன் தடித்த உதடுகளால் வந்த பெயரே! சிறப்பான கை உடைய மிருகம் யானை, சிறப்பான மயிர் உடைய மிருகம் சிங்கம் (கேச+அரி); அதே போல சிறப்பான உதடு உடைய மிருகம் ஒட்டகமும் கழுதையும். இதனால் வடமேற்கு இந்திய எழுத்துக்கு கரோஷ்டி என்று பெயர் (கழுதை உதட்டு எழுத்து). அசோகர், காஞ்சீபுரம் வரை பிராமி எழுத்தில் எழுதிவிட்டு, வடமேற்கு இந்தியாவில் மட்டும் கழுதை உதடு போல தடிப்பாக இருக்கும் கரோஷ்டியில் எழுதிவைத்தார்.
ஆக நிர்+உஷ்ட =உதடு ஒட்டாத என்ற சம்ஸ்கிருதச் சொற்கள் நீரோட்டம் எனத் தமிழ்படுத்தப்பட்டது. இவ்வாறு உதடு ஒட்டாத சொற்களை வைத்துப் பாடுவது கடினம், அதில் யமகம் வைத்துப் பாடுவது அதைவிடக் கடினம்; அதில் அந்தாதி அமைப்பது அதைவிடக் கடினம். இது போன்ற சாதனைகளைத் தமிழ்ப்புலவர்கள் அந்தக் காலத்தில் செய்துள்ளனர்.
இலண்டனிலுள்ள பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை யாத்த திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி இத்துடன் பதிப்பிக்கப்படுகிறது.1892 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மியூசியத்தில் சேர்க்கப்பட்டதால் அதற்கு முன் எழுதப்பட்டது புலப்படும்.