
Picture of Mulavarman Inscription in Jakarata Museum
Written by London swaminathan
Date: 10 JUNE 2018
Time uploaded in London – 18-59 (British Summer Time)
Post No. 5096
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)
இந்தோநேஷியா என்பது உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு. அந்த நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ (BORNEO) தீவு உலகில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. அதில் அடர்ந்த மழை வனக்காடுகள் (RAIN FORESTS) உள்ளன. அந்த காட்டுக்குள் இது வரை மனிதர்கள் காலடியே பட்டதில்லை—இது கன்னி கழியாத காடுகள் (VIRGIN FORESTS) என்று உள்ளே நுழைந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சில சம்ஸ்ருதக் கல்வெட்டுகள்!
இதெல்லாம் நடந்து நூறு ஆண்டுகள் ஆயிருக்கும்; ஆயினும் இக் கல்வெட்டுகளின் பெருமையை இப்பொழுதுதான் உலகம் உணரத் துவங்கியுள்ளது.
1950-ஆம் ஆண்டுகளில் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் நடத்திய சொற்பொழிவுகளில் இது பற்றிய அபூர்வ விஷயங்களைத் தொட்டுக் காட்டினார். ஆயினும் முழு விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் நடத்தியது வரலாற்றுச் சொற்பொழிவு அல்ல. அது சமயச் சொற்பொழிவு.
அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது ஏழு யூப ஸ்தம்பங்களாகும். மன்னர்கள் யாக யக்ஞங்கள் செய்கையில் பிராஹ்மணர்கள் இப்படி யூப ஸ்தம்பங்களை நட்டு அதில் மன்னன் பெருமை, அவர் அளித்த தான தருமங்களைச் சொல்லுவது மரபு.
யூப நெடுந்தூண், வேள்வித்தூண் எனபன சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகிறது. முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் அஸ்வமேதம் முதலிய யாகங்களைச் செய்தான்; கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டங்கள் செய்து யாகம் செய்தான். சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜ சூய யாகம் செய்தான். சேர மன்னன் ஒருவன் பார்ப்பனீயப் புலவரின் வேண்டுகோளுக்கிணங்க பத்து வேள்விகள் இயற்றி பத்தாவது முறையில் பார்ப்பனப் புலவரையும் பார்ப்பனியையும் அப்படியே உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பி மாயமாய் மறைய வைத்தான் . இவை எல்லாம் புறநானூற்றிலும் பதிற்றுப் பத்திலும் உள. திருவள்ளுவரும் திருக்குறளில் யாக யக்ஞங்களைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆக தமிழர்கள் மிகப் பழைய புறநானூற்றுப் பாடலில் யூபம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துவதால் தமிழர்களுக்கு இதெல்லாம் அத்துபடி.

Dasatatha’s Letter to Egyptian King Amenotep (Sramana Deva) in Cuneiform script
அது மட்டுமல்ல காளிதாசனும் பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்தும் போது அவன் யாகம் செய்து குளித்த ஆடையுடன் எப்போதும் இருப்பவன் என்று பெருமையாகக் கூறுகிறான். அத்தோடு அகஸ்தியர் பெயரையும் சொல்கிறான். ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் செய்த யாகங்கள் உலகப் பிரசித்தம்.
இந்தோநேஷியாவின் காட்டுக்குள் கிடைத்த மன்னன் 1700 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தை ஒட்டி- வாழ்ந்தவன். பாண்டவர் போலவே ‘வர்மன்’ பட்டத்தை உடையவன் ஒருவே ளை தமிழனாக இருக்கலாம் என்பதற்காகத்தான் மேற்சொன்ன பீடிகை போட்டேன்.
மூலவர்மன் கல்வெட்டு அழகான ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவைதான் இந்தோநேஷியாவில் கிடைத்த பழைய கல்வெட்டுகள். முதல் இரண்டு கல்வெட்டுகளில் மூலவர்மன், அவனது தந்தை அஸ்வவர்மன், அவனது தந்தை குண்டுங்கா (குண துங்கன் என்பது மருவியது போலும்!) ஆகியோர் சிறப்பு பட்டங்களோடு குறிப்பிடப்படுகின்றனர். பின்னர் யாகத்தில் பிராஹ்மணர்களுக்கு அவன் அளித்த தான தருமங்கள் சொல்லப்படுகின்றன; யாகத்தின் போது பிரதான யஜமானன் (யாக புருஷன்) இந்தத் தூணை நிறுவியதாகவும் உள்ளது.
மூன்றாவது கல்வெட்டில் எல்லோரும், மூலவர்மனின் தான தருமங்களைக் கேளுங்கள்– அவன் நிலங்கள், பசுமாடுகள், அற்புத மரம் (கற்பக வ்ருக்ஷம் அல்லது சோம லதை) பிராஹ்மணர்களுக்குத் தானம் செய்தான். இவ்வாறு பலவகை அறச் செயல்களைப் புரிந்ததற்காக இந்த யூபத் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன என்று பொறிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள ஜாவா தீவில் இதே போல 1700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு பிராஹ்மணர்களுக்கு 1000 பசுக்கள் தானம் அளித்ததாக எழுதப்பட்டுள்ளது.
இதை வேறு இரண்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்; கன்யாகுமரியில் உள்ள வீர ராஜேந்திரன் என்ற சோழர் கல்வெட்டு அவனது முன்னோன் ஒருவன் 40,000 பிராஹ்மணர்களை அழைத்து வந்து காவிரிக் கரையில் குடி அமர்த்தினான் என்கிறது. காவிரிக் கரையில் பிராஹ்மணர்கள் இல்லாத குறையைப் போக்க ஆர்யாவர்த்தத்தில் இருந்து 40,000 பிராஹ்மணர்களை அழை த்து வந்தான் என்று கோபிநாத ராவ் புத்தகத்தில் (1926) விளம்புகிறார்.
வியட்நாமில் கிடைத்த பழைய கல்வெட்டு ஸ்ரீ மாறன் என்பதாகும். இது 1800 ஆண்டுகளுக்கு முந்தையது. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி எழுதினேன். திருமாறன் என்ற பாண்டியன் பெயரை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதுகையில் ஸ்ரீமாறன் ஆகும்.
ஆக வியட்நாம் முதல் இந்தோநேஷியாவரை ஆயிரம் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் உள்ளன. ஒரு வரிக் கல்வெட்டிலிருந்து மிக மிக நீண்ட பாடல்கள் வரையுள்ள கல்வெட்டுகள் இவை.
இது தவிர சிலப்பதிகாரத்திலும் நமக்குச் சான்று உளது. எல்லோர் முன்னிலையிலும் இமயம் வென்ற செங்குட்டுவனை மாடல மறையோன் என்ற பிராஹ்மணன் குறை சொல்லுகிறான். “மன்னனே! போதும் போதும் நீ பெற்ற போர் வெற்றிகள்; போகும் வழிக்குப் புண்ணியம் தேடு; யாக யக்ஞங்களைச் செய்” என்கிறான். இப்படிக் கடிந்து கொண்ட பிராஹ்மணனை தண்டிக்காமல் எடைக்கு எடை தங்கம் கொடுத்து உடனே யாக யக்ஞங்கள் செய்ய உத்தவிட்டதாக இளங்கோ இயம்புவார்.
துருக்கி நாடு முதல் இந்தோநேஷியாவரை இப்படி ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் இருப்பதும் கோவலன் ஒரு பார்ப்பனப் பெண்ணின் ஸம்ஸ்க்ருத ஓலையைப் படித்ததாக சிலப்பதிகாரம் செப்புவதும் ஸம்ஸ்க்ருதத்தின் உலக வீச்சைக் காட்டுகிறது. அலெக்ஸாண்டர் போல மக்களைக் கொன்று குவித்து கிரேக்க மொழிக் கல்வெட்டுகளை நிறுவ வைத்ததைவிட அமைதியான கலாச்சார, வணிக வீச்சின் மூலம் உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைப் பரவச் செய்தது மற்றொரு உலக அதிசயம் ஆகும். அது மட்டுமல்லாமல் கிரேக்க மொழியில் ஹோமர், முதல் கிரேக்க நூலை எழுதுவதற்கு முன்னரே — அதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே– துருக்கியில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களும் குதிரை நூலும் இருப்பது உலக மஹா அதிசயம் ஆகும்.
–சுபம்–

































