திருநெல்வேலியிலிருந்து வெளியாகும் ஹெல்த்கேர் மாத பத்திரிகையில்
நவம்பர் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
சின்ன சின்ன டிப்ஸ்! பெரிய பலன்கள்!
ச.நாகராஜன்
உடல் ஆரோக்கியம் மேம்படுவதற்காக வாழ்க்கை முழுவதிலும்
அதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமே யாருக்கும் இல்லை. நினைத்தால்
ஒரு நிமிடத்திலேயே உங்களின் ஆரோக்கிய மேம்பாட்டு முயற்சியைத் தொடங்கலாம்.
சில எளிய குறிப்புகள் இதோ: படிக்க வேண்டியது, தொடங்க
வேண்டியது அவ்வளவு தான்!
காலையில் பல் துலக்க பிரஷையும் பேஸ்டையும் எடுத்து
விட்ட நிலையில்,ஒரு முப்பது விநாடிகள் பேஸ்ட் இல்லாத பிரஷினால் பற்களைத் துலக்குங்கள்.
ஈறிலிருந்து ரத்தம் வருவதை இந்த எளிய முறை 50 சதவிகிதம் தவிர்ப்பதோடு பற்காரையையும்
60 சதவிகிதம் நீக்குகிறது. உலர்ந்த மிருதுவான பிரஷினால் பற்களின் உட்பக்கத்தை மேலும்
கீழுமாகத் தேயுங்கள்.வெளிப்புறத்தையும் துலக்குங்கள். பின்னர் வழக்கம் போல பேஸ்டுடன்
பல் துலக்குங்கள்.
கூர்மையான செவிப்புலனைப் பெற அன்றாடப் பயிற்சி
சற்று அவசியம். இசை கேட்பதைப் பழக்கமாகக் கொள்வதோடு அதிரும்படியான ஒலியின்றி காதில்
விழும்படியான ஒலி அளவைக் கொண்டு இசையை அனுபவிக்க வேண்டும். அதாவது இசை கேட்கும் போதே
சாதாரணமாகப் பேசவும் முடிய வேண்டும். இந்த அன்றாடப் பயிற்சி ஒலியினை நன்கு உள்வாங்கி கிரகிக்க வைக்கும் என்கிறார்
அமெரிக்க அகாடமி ஆடியாலஜியின் முன்னாள் தலைவரான கெயில் வொய்ட்லா,பி.ஹெச்.டி (Gail Whitelaw, PhD)
சற்று சோர்வாக இருக்கும் நிலையில் உடனே காப்பியை
நாட வேண்டாம். சோடாவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அருந்துகள். இது சக்தியைத் தரும்.
மதிய வேளை உணவு முக்கியம். என்ன சாப்பிடுகிறோம் என்பதைத் தெரிந்து, உணர்ந்து சாப்பிடுங்கள்.இது நாளடைவில் உங்களுக்கு உணவைப் பற்றிய நல்ல பழக்கத்தை ஏற்படுத்தும். எதையோ கொறித்து விட்டுப் போகிறவர்களுக்கு உணவைப் பற்றிய விழிப்புணர்வே ஏற்படாது.
ANTS
-ஐக் கொல்லுங்கள். ANTS என்றால் எறும்புகள் இல்லை. Automatic Negative Thoughts – சுயமாக வருகின்ற எதிர்மறை எண்ணங்கள் என்று அர்த்தம். அது உங்கள்
மனதில் எழும் போது அதைத் துடைத்து விடுங்கள். அதைத் தற்காலிகமாக மறந்து விடுங்கள்.பின்னால்
உங்கள் எதிர்மறை எண்ணங்களை மதிப்பிட்டுப் பாருங்கள். எங்கிருந்து எதனால் அவை வருகின்றன
என்பதைக் கண்டுபிடித்து அவற்றைத் தவிர்க்க ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கை நுட்பமானது.கணவனோ மனைவியோ யாராக இருந்தாலும்
சரி பரஸ்பரம் பாராட்டிக் கொள்ளுங்கள். சீரற்ற மணவாழ்வு 35 சதவிகிதம் நோயை உருவாக்குவதோடு
வாழ்நாளை நான்கு ஆண்டுகள் குறைக்கும் என்கிறது ஒரு ஆய்வு. ஆகவே தம்பதிகள் ஒருவரை ஒருவர்
அன்புடன் அவ்வப்பொழுது பாராட்டிக் கொள்வது அவசியம்.
“இதற்கு ஒரு நிமிடம் தான் ஆகும். ஆனால் ஏற்படும்
நல்ல விளைவோ அளவிடமுடியாதது” என்கிறார் ஆளுமைக்கான இணையதளத்தை நடத்தும் PsychDNA.com நிறுவனர் மரியோ அலோன்ஸோ (Mario
Alonso, PhD)
கறிகாய்களை நறுக்கும் போது மெலிதாக நறுக்குங்கள்.
இப்படி நறுக்கப்பட்டவற்றை உண்ணும் போது நிறைய சாப்பிட்டது போன்ற திருப்தி ஏற்படும்.
ஜப்பானில் நேஷனல் ஃபுட் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் நடத்திய ஒரு சோதனையில் பங்கேற்றவர்கள்
ஒரே அளவுள்ள கறிகாயில், மெலிதாக நறுக்கப்பட்டவை 27 சதவிகிதம் பெரிதாகத் தோன்றுவதாகக்
கூறினர். நிறைய சாப்பிடுவது போல உணர்வது உங்களை அதிகமாகத் திருப்திப்படுத்தும்.
கசப்பான மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம்
இருக்கும்போது அதை சாப்பிட சில விநாடிகள் இருக்கும் முன்னர் ஐஸ் கியூப்களை நாக்கில்
வைத்துக் கொள்ளுங்கள். சுவை நாளங்கள் தற்காலிகமாக மரத்துப் போகும் நிலையில் கசப்பு
மருந்து கசப்பாகவே இருக்காது!
ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச்சாறை அருந்துவதற்குப்
பதிலாக முழு ஆரஞ்சை உரித்துச் சாப்பிடுங்கள். இண்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஒபிஸிடி இதழில்
வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வு முழுப் பழத்தைச்
சாப்பிடுவதால் 20 சதவிகிதம் கலோரி அளவு குறைவாகச் சாப்பிட ஏதுவாகிறது என்கிறது.
பழத்தைச் சுவைத்து மென்று சாப்பிடுவதால் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. அது குடலுக்கு மிக நல்லது. குறைத்துச் சாப்பிட்டாலும் நிறைந்த திருப்தியை அது அளிக்கிறது.
உங்கள் தலைகாணியை இரண்டாக மடியுங்கள். பின்னர்
கையை எடுத்து விடுங்கள். தலைகாணி விரிந்து பழைய நிலைக்கு வரும். அது அப்படியே மடிந்த
நிலையில் இருந்தால் உதவாத அதை தூக்கி எறியுங்கள். அது நீங்கள் தூங்கும் போது உங்கள்
கழுத்தைத் தாங்கும் சரியான தலைகாணி இல்லை.
கார் ஓட்டும் போது ஏற்படும் முதுகுவலியைத் தவிர்க்க
உங்கள் ரியர் வியூ மிர்ரரை சற்று மேலே தூக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னால் வரும் கார்களைப் பார்க்க வளைந்து குனிந்து உட்காருவதை
இது தவிர்க்கும். இப்படி குனிந்து வளைந்து அமர்வதால் தான் முதுகு வலியே ஏற்படுகிறது.
டீ அருந்தும் போது சிறிது எலுமிச்சை சாறை க்ரீன்
டீயில் சேருங்கள். ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்தை இந்த அமிலம் அதிகப்படுத்தும் என்கிறது ஒரு
ஆய்வு. இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ள ஃபுட்
கெமிஸ்ட்ரி என்ற இதழ், க்ரீன் டீ மட்டுமல்ல எந்த டீ ஆனாலும் சரி, எலுமிச்சை சாறு சேர்த்து
அருந்துவது நல்லது தான் என்று அறிவுறுத்துகிறது!
வாழ்க்கைக்கு மிக முக்கியமான வைடமின் எது தெரியுமா
வைடமின் G தான்! ஒரு டோஸ் கிராடிட்யூட் GRATITUDE – அது தான்
நன்றியை உரியவர்களுக்குத் தெரிவிப்பது – தினமும் உங்களுக்கு உங்கள் அணுகுமுறையில் தேவை.
ஒருவருக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்கும் போது
அதிக சந்தோஷம் ஏற்படுகிறது என்பதை 90 சதவிகிதம் பேர் ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
75 சதவிகிதம் பேர் தங்கள் மனச்சோர்வையும் மன அழுத்தத்தையும் அது குறைத்துள்ளது என்பதைத்
தெரிவித்துள்ளனர்.
ஜிம் சென்று உடல்பயிற்சி செய்யாதவர் என்றால்
குறைந்த பட்சம் அன்றாடம் பத்து நிமிடம் நடைப் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்.
ஒரு நாளைக்குச் சில முறையாவது மெதுவாக காற்றை
உள்ளிழுத்து சுவாசியுங்கள். அது உங்களை மிக அமைதியான நிலைக்கு இட்டுச் செல்லும். ரத்த
அழுத்தத்தையும் சீராக ஆக்கும்.
ஒரு நாளைக்குச் சில முறையேனும் கைகளை நன்றாக
சோப் போட்டு சுத்தமாக கழுவுங்கள். உங்கள் இதயத்தை இது பாதுகாக்கும்.ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஃப்ளூ, நிமோனியா மற்றும் பல தொற்று வியாதிகள் உங்களை அண்டாது.
வால்நட், பாதாம் பருப்பு மற்றும் பருப்பு வகைகள்
உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உங்களிடம் உள்ள நல்லது அனைத்தையும் எண்ணிப் பார்த்து
அதற்கு மகிழ்வதோடு இறைவனுக்கு நன்றியையும் செலுத்துங்கள். பிரார்த்தனை மன நலத்தை மேம்படுத்தும்.
தொடர்ந்திருக்கும் கவலைகளை நீக்கும். உடல் நலத்தைச்
சீராக்கும். நீண்ட ஆயுளைத் தரும். மனச்சோர்வு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை நீக்கும்.