கொங்குமண்டல சதகம் பாடல் எண் 24

WRITTEN BY S NAGARAJAN
Post No.7500
Date uploaded in London – 27 January 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
ச.நாகராஜன்

கொங்குமண்டலத்தில் ஆறைநாட்டில் கருடக்கோட்டூர் என்று ஒரு ஊர். அதில் இருந்த சிவலிங்கத்திற்கு மொக்கணீசுரர் என்று திருநாமம் ஏற்பட்டது. ஏன்?
சுவையான சிவநேசர் ஒருவரின் வரலாறு இதை விளக்குகிறது.
வணிக குல சிவநேசர் ஒருவர் சிவ தரிசனம் செய்த பின்னர் மட்டுமே உணவருந்தும் பழக்கத்தைக் கொண்டவர்.
ஒரு நாள் அவர் பயணம் மேற்கொண்டு ஆறை நாட்டில் உள்ள கருட கோட்டூர் வந்தார். tamilandvedas.com, swamiindology.blogspot.com
கருட கோட்டூர் என்பது அவிநாசியிலிருந்து சத்தியமங்கலம் போகும் பாதையில் ஐந்தாவது மைலில் உள்ள சேவூரிலிருந்து வடமேற்கே செல்லும் கொடி வழியில் சுமார் மூன்று மைல் தூரத்தில் உள்ளது. இன்று இங்குள்ள ஆலயம் அழிந்துபட்டு இருக்கிறது. ஊரும் அழிந்து விட்டது. ஆனால் கோட்டூர் பள்ளம் என்று ஊரின் பெயர் மாத்திரம் சொல்லப்படுகிறது. இங்கு செட்டியார் நீராடிய ஓடையை தாழையூற்று என்று சொல்கின்றனர். இந்த ஆல்யத்தில் இருந்த உற்சவமூர்த்திகள் சுமார் முன்னூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் சேவூர் வாலீசப்பெருமாள் கோவிலில் சேர்க்கப்பட்டன.
கருடக்கோட்டூர் வந்த சிவநேசர் நீராடி ஆடையைத் தோய்த்து விட்டு கரையேறி உடன் வந்த மைத்துனனை நோக்கி, “ சிவதரிசனம் செய்ய வேண்டும். நீ முன் சொல்லிய சிவாலயம் எங்கே இருக்கிறது” என்று கேட்டார். இவரைக் கேலி செய்ய நினைத்த மைத்துனன் முன்னமேயே குதிரைக்குக் கொள் கட்டும் பையில் மணலை நிரப்பி சிவலிங்கம் போல ஆக்கி கட்டுமாலை ஒன்றையும் சாத்தி வைத்திருந்தான். tamilandvedas.com, swamiindology.blogspot.com
“ஐயா! இதோ இருக்கிறார், சிவபெருமான், தரிசித்து வாரும்” என்றான் அவன். வணிகர் மிக்க மகிழ்ச்சியுற்று அந்த சிவலிங்கத்தைத் தரிசித்து அது சுயம்பு மூர்த்தி என எண்ணி தோத்திரம் செய்தார். பின்னர் உணவருந்தத் தொடங்கினார்.

இப்போது அவரது மைத்துனன் அவரை நோக்கி, “அத்தான்! இன்று சிவதரிசனம் இன்றி சாப்பிடுகிறீரே, இது சரியா?” என்று கேட்டான்.
“இதோ, இப்போது தானே வணங்கி வந்தேன்” என்றார் வணிகர்.
“இல்லையே! அது சிவலிங்கமே இல்லையே!” என்றான் மைத்துனன்.
பல பேருடன் சேர்ந்து கை கொட்டி நகைத்த அவன், தான் செய்து வைத்திருந்த கொள்ளுப் பை சிவலிங்கத்தைத் தூக்கினான். அது அசையவில்லை.
மண்ணைப் பறிக்கப் பறிக்க அதன் அடியைக் காணமுடியவில்லை. சுயம்பு மூர்த்தியாக பாதாளம் வரை ஊன்றி நின்றது.
இதைப் பார்த்த மைத்துனனும் ஏனையோரும் ஆச்சரியப்பட்டனர். tamilandvedas.com, swamiindology.blogspot.com
“ஆஹா! பக்திமான் பாவித்தபடியே சிவலிங்கம் விளங்குவார்” என்று அனைவரும் வியந்து கூறி சிவநேசரைக் கொண்டாடி லிங்கத்தை வணங்கினர்.
சிவநேசர் கண்ணீர் மல்க சிவனைத் துதித்து உள்ளமுருகினார்.
இதனால் மொக்கணீசுரர் என்ற திருநாமம் அந்த சிவலிங்கத்திற்கு ஏற்பட்டது.
இன்றைய கால கட்டத்திலும், ஆலயம் அழிந்து பட்டாலும் கூட, அந்த ஊரைச் சுற்றியுள்ள மக்கள் இந்த வரலாற்றைப் பெருமை படப் பேசி வருகின்றனர்.
இந்த வரலாறைக் கொங்கு மண்டல சதகம் தனது 24ஆம் பாடலில் விளக்குகிறது இப்படி:-
ஏத்து சிவபத்தி யானொரு செட்டிமு னீசுரனைத்
தோய்த்து முழுகித் தொழவெழ வாங்கொரு சூழ்ச்சிகற்றோன்
பூத்த வனக்குடக் கோட்டூரில் மொக்கணி யைப்புதைக்க
வாய்த்த சிவலிங்க மானது வுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள்:- tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிவதரிசன வழிபாடு செய்யும் ஒரு வணிகர் குடக்கோட்டூருக்கு வந்து , ஆடை தோய்த்து, ஸ்நானம் செய்து, நியமம் முடித்து வரும் போது சூழ்ச்சி கொண்ட ஒருவன் , குதிரைக்குக் கொள் கட்டும் பையை மணலில் நட்டு வைத்து (பூமாலை பொட்டு வைத்து அலங்கரித்து), ‘இதோ, சிவலிங்கம்’ என்றான். சிவநேசர் வணங்கினார். அது சிவலிங்கப் பெருமான் ஆயிற்று. அந்தக் குடக்கோட்டூரும் கொங்குமண்டலத்தில் இருக்கும் ஊரேயாகும்.
இந்த வரலாற்றை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கீர்த்தித் திருவகவலில் குறிப்பிடுகிறார் tamilandvedas.com, swamiindology.blogspot.com

இப்படி:-
“மொக்கணி யருளிய முழுத்தழன் மேனி
சொக்க தாகக் காட்டிய தொன்மையும்”
வேம்பத்தூரார் திருவிளையாடல் இந்த வரலாற்றை பின்வருமாறு குறிப்பிடுகிறது:
“பழுதில்கண் டுயின்றோ மில்லை பருப்புநெய் கரும்புக் கட்டி
எழிறரு மட்டிக் திட்டே மிதலிய புல்லு மிட்டேங்
கழுவிய பயறுங் கொள்ளுங் கடலையுந் துவரை யோடு
முழுவதுஞ் சிறக்க விட்டே மொக்கனி முட்டக் கட்டி”
சிவபிரான் பக்தர்களுக்கு எப்படியெல்லாம் அருள் பாலித்துத் தன் திருவிளையாடலைச் செய்கிறார் என்பதற்கு இந்த வரலாறும் ஒரு சிறந்த உதாரணமாகிறது. tamilandvedas.com, swamiindology.blogspot.com
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
***































































