
பிள்ளையாருக்கு யாரும் பெண்
கொடுக்காதது ஏன்? (Post No.7673)
Written by S Nagarajan
Post No.7673
Date uploaded in London – 10 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a
non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
விநாயகருக்கு யாரும் ஏன் பெண்
கொடுக்க முன்வரவில்லை?
கேள்வி நியாயமானது தான்; ஆனால்
விடை தான் தெரியவில்லை.
அனைத்தும் அறிந்த தமிழ்ப் புலவர்களிடம்
சென்றால் ஒரு வேளை விடை கிடைக்கலாமோ?
அந்தகக்கவி வீரராகவ முதலியார்
தனது பாடல் ஒன்றில் விடையைச் சொல்லி விடுகிறார்.
பாடல் இதோ:
வீரஞ் சொரிகின்ற பிள்ளா யுனக்குப்பெண்
வேண்டுமென்றால்
ஆருங் கொடாருங் களப்பன் கபாலி
யம்மான்றிருடன்
ஊருஞ் செங்காடு நின்முகம் யானை
யுனக்கிளையோன்
பேருங் கடம்பனுன் றாய்நீலி நிற்கும்
பெருவயிறே
பாடலின் பொருள் :-
வீரம் சொரிகின்ற பிள்ளாய்
– வீரத்தன்மையைப் பொழிகின்ற பிள்ளையாரே
உனக்குப் பெண் வேண்டும் என்றால்
– நீ திருமணம் செய்து கொள்ளத் தகுதியான ஒரு பெண் வேண்டும் என்றால்
ஆரும் கொடார் – ஒருவர் கூட முன்
வந்து தர மாட்டார்கள்.
காரணம் என்னவெனில்
உங்களப்பன் கபாலி – உங்களது
அப்பனாகிய சிவபிரான் கபாலி அதாவது கபாலத்தை ஏந்தியவன்
அம்மான் திருடன் – அம்மானாகிற
கிருஷ்ணன் (வெண்ணெய் திருடும்) திருடன்
ஊரும் செங்காடு – சொந்த ஊரோ
செங்காடு
நின்றன் முகம் யானை – உனது முகமோ
யானை முகம்
உனக்கு இளையோன் பேரும் கடம்பன்
– உனக்கு தம்பியாக இருக்கும் முருகன் பெயரும் கடம்பன் (கடப்ப மாலையை அணிந்தவன்)
உன் தாய் நீலி – உனது தாயோ நீலி
நிற்கும் பெருவயிறு – உனக்கும்
பெருவயிறு (மகோதரமோ)
ஆக இப்படி இருக்க உனக்கு யார்
தான் பெண் கொடுப்பார்கள்?
விநாயகர் மீது நிந்தாஸ்துதியாக
இப்படிப் பாடியிருக்கிறார் பெரும் புலவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார்.
இவரது பாடல்கள் அருமையானவை.
சிதம்பரம் என்ற வள்ளலை நோக்கி
அவருக்கு ஒரு தாய் நமஸ்காரம் செய்து வேண்டுவதை புலவர் சொல்லும் பாங்கு இது:
துறை : நற்றாயிரங்கல்
பங்கஜமேன் மேவியசௌ பாக்யசுப
மானளித்த
அங்கஜவேள் வெங்காணையா லாவிநொந்த
– எங்களிட
மாரஞ்சி தம்பரவு மாதினையாள்
கோடி நமஸ்
காரஞ் சிதம்பரயோ கா
பாடலின் பொருள் :-
சிதம்பர யோகா – சிதம்பரம் என்ற
பெயரைக் கொண்ட வள்ளலே
பங்கஜம் மேல் மேவிய – தாமரை
மலர் மேல் வீற்றிருக்கும்
சௌபாக்ய சுபமான் அளித்த – சௌபாக்கியங்களையும்
சுபங்களையும் தருகின்ற திருமகள் பெற்ற
அங்கஜவேள் – மன்மதனது
வெங்கணையால் – கொடிய அம்புகளால்
ஆவி நொந்த – மனம் வருந்திய
எங்களிடம் – எங்களிடத்திலுள்ள
மாரஞ்சிதம் – மிகவும் மனோரஞ்சிதத்திற்கு
ஏதுவாய்
பரவும் – புகழப்படுகின்ற
மாதினை – பெண்ணை
ஆள் – ஆண்டருள வேண்டும்
கோடி நமஸ்காரம் – உனக்கு கோடி
நமஸ்காரம்.
சிதம்பர பூபதியின் மீது ஒரு
தாய் தன் மகளை ஏற்றருள வேண்டும் என்று இரங்கிப் பாடுவதாக அமைந்துள்ள பாடல் இது.
சொல் விளையாடலிலும் வல்லவர்
அந்தகக் கவி வீரராகவ முதலியார்.
ஒரு பாடல் இது:
பணியாரந் தோசையி லங்கொங்கை தோய்ந்திடப்
பார்ப்பர் பல்லி
பணியாரந் தோசையில் லாச்செந்துவாய்ப்பிறப்
பார்களென்னோ
பணியாரந் தோசைமுன் னோனுக் கிட்டேத்திப்
பழனிச்செவ்வேட்
பணியாரந் தோசைவ ராகாரன் னோர்க்கென்ன
பாவமிதே
என்ன, பணியாரம், தோசை என்று
நான்கு வரிகளிலும் வருகிறதே என்று வியப்போருக்கு பாடலின் பொருள் மிகுந்த திருப்தியைத்
தரும்.
பாடலின் பொருள் :
பணி ஆர் – ஆபரணம் நிறைந்த
தோ – இரண்டாகிய
சையிலம் – மலை போன்ற
கொங்கை – மார்பகங்களை
தோய்ந்திடப் பார்ப்பர் – பொருந்தப்
பார்ப்பர்
பல்லி – பல்லி
பணி – பாம்பு
ஆர் அந்து – நிறைந்த அந்து
(இவைகள் போன்ற)
ஓசை இலா செந்து ஆய் பிறப்பார்கள்
– சத்தமற்ற ஜெந்துக்களாகப் பிறப்பார்கள்
என்னே – இதற்குக் காரணம் யாதோ?
பணியாரம் தோசை – பணியாரம் தோசை
ஆகியவற்றை
முன்னோனுக்கு இட்டு ஏத்தி –
முத்தவரான பிள்ளையாருக்கு படைத்துத் துதித்து
பழநி செவ்வேள் – பழனியில் எழுந்தருளியிருக்கும்
முருகப் பெருமானை
பணியார் – வணங்காதவர்கள்
சைவர் ஆகார் – சைவர்கள் ஆக மாட்டார்கள்
அந்தோ – அட பரிதாபமே
அன்னோருக்கு – அவர்களுக்கு
இது என்ன பாவம் – இது என்ன தீவினைப்
பயனோ?
சுவைத்து ரசிக்க இவர் பாடிய
பாடல்கள் இன்னும் ஏராளம் உள்ளன!
Ganesh from Vietnam/Champa
Tags – பிள்ளையார், விநாயகர், அந்தக க்கவி , வீரராகவ முதலியார் , பெண்
***
S.n. Ganapathi
/ March 10, 2020ஸ்ரீ விநாயக பெருமானுக்கு சித்தி ,புக்தி என இரண்டு மனைவிகள் …பொதுவாக .கடவுளர்கள் நம் போன்ற பூத சரீரம் ??? ஞான தேவ சரீரம் …
meganaumart
/ March 10, 2020How old is the standing Ganesh statue?
I cannot read Tamil script.
Thank you
Kind regards,
Megan
Sent from my iPhone
>
Santhanam Nagarajan
/ March 10, 2020பக்தர்களின் வேண்டுதல்களை சித்திக்க வைப்பவர். வேண்டுவோருக்கு புத்தியை அருள்பவர்.
சித்தி, புத்தி ஆகிய இவற்றைப் பெண்களாகப் பாவித்து சித்தி புத்தி விநாயகர் படைக்கப்பட்டாஎ என்பது ஒரு கொள்கை! நன்றி
Tamil and Vedas
/ March 11, 2020The Standing Ganesa is from My Son in Vietnam. This belongs to 7th or 8th century.