நக்ஷத்திர ரகசியம்! (Post No.12,236)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,236

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நக்ஷத்திர ரகசியம்!

ச.நாகராஜன்

அர்ஜுனனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

இந்திர லோகத்திலிருந்து.

இந்திரனிடமிருந்து!

இந்திரபுத்திரனான அர்ஜுனனை இந்திரன் பார்க்க விரும்பினான்.

ஆகவே தனது ரதத்தையும் அனுப்பினான் – அர்ஜுனனை அதில் அழைத்து வரச் சொல்லி!

ரதம் வந்தது.

ரதத்தை ஓட்டி வந்த ரத சாரதியான மாதலி அர்ஜுனனைப் பார்த்து,  “உன்னை இந்திரன் பார்க்க விரும்புகிறான். நீ இந்திரனுக்குப் பிரியமான இந்தத் தேரில் சீக்கிரம் ஏறு” என்றான்.

குந்திபுத்திரனான அர்ஜுனனை தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் பார்க்கட்டும் என்று உனது தந்தையான இந்திரன் கூறினான் என்றான் மாதலி.

இந்திரனின் ரதம்!

எப்படிப்பட்டது அது?

ஒளியுள்ளது. ஆகாயத்தை இருளற்றதாகச் செய்ய வல்லது.

மேக ஓசைக்கு ஒப்பான ஒலிகளால் திக்குகளை நிரப்பிக் கொண்டு மேகங்களைப் பிளப்பது போல அது வந்து சேர்ந்தது.

வாயு வேகம் கொண்ட பொன்னிறமான பதினாயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டது அந்த இந்திர ரதம்.

அதில் கத்திகள், பயங்கர சக்திகள், கொடிய தோற்றம் கொண்ட கதைகள், பிராஸங்கள், மின்னல்கள் அசனிகள், காற்றினால் வெடிப்பவை, நாகங்கள் உள்ளிட்ட ஏராளமானவை இருந்தன.

அர்ஜுனன் மாதலியைப் பார்த்துக் கூறினான்:” நூற்றுக் கணக்கான அச்வமேத யாகங்களைச் செய்தவர்களாலும், தேவர்களாலும் அசுரர்களாலும் ஏற முடியாத இந்த ரதத்தில் நீ முதலில் ஏறு. நானும் புண்ணியம் செய்தவன் நல்ல கதியில் ஏறுவது போலப் பின்னால் ஏறுகிறேன்” என்றான்.

பின்னர் தான் இருந்த மந்தர மலையிடம் முறையாக விடை பெற்றான் அர்ஜுனன்.

ரதம் கிளம்பியது.

தர்மானுஷ்டத்தைச் சிறந்த முறையில் செய்யும் மனிதர்களாலும் கூடப் பார்க்க முடியாத வான மார்க்கத்தை அது அடைந்தது; பறந்தது.

அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான விமானங்களை அர்ஜுனன் பார்த்தான்.

அங்கு சூரியனோ, சந்திரனோ அல்லது அக்னியோ பிரகாசிப்பதில்லை.

புண்ணியத்தால் அடைந்த தமது காந்தியினாலேயே அந்த இடத்தில் அனைத்தும் பிரகாசிக்கின்றன!

ஒளியுள்ள அவைகள் மிகப் பெரியவையாக இருந்தாலும் கூட வெகு தூரத்திற்கு அப்பால் இருப்பதால் சிறிய நக்ஷத்திர ரூபங்களாக  பூமியிலிருந்து பார்ப்பதற்குக் காணப்படுகின்றன.

அவற்றை அர்ஜுனன் அந்த இடத்தில் மிக ஒளி பொருந்தியவையாகவும் தம் வடிவம் உள்ளவையாகவும் தம்மிடங்களில் தமது காந்தியால் பிரகாசிக்கின்றவையாகவும் பார்த்தான்.

அங்கே ராஜ ரிஷிகளும், சித்தர்களும், யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களும் தவத்தால் ஜெயிக்கப்பட்ட சுவர்க்கத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

சூரியன் போல ஜொலிக்கும் ஆயிரக் கணக்கான கந்தர்வர்கள், குஹ்யகர்கள், ரிஷிகள், அப்ஸரஸ்கள் ஆகியோரின் கூட்டங்களை அவன் பார்த்தான்.

தாமாகவே ஜொலிக்கின்ற லோகங்களை அவன் பார்த்து ஆச்சரியமுற்றான்.

அர்ஜுனனின் வியப்பைப் பார்த்த மாதலி, “ ஓ! பார்த்தா! தம் தம் இடங்களில் இருக்கின்ற இவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! இவைகளைத் தான் பூமியிலிருந்து நீ நக்ஷத்திரங்களாகப் பார்க்கிறாய்” என்றான்.

யாரெல்லாம் நக்ஷத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி மாதலியிருந்து அறிந்து கொண்டு நேரிலும் பார்த்து வியந்தான் அர்ஜுனன்.

பின்னர் ஐராவத்தைப் பார்த்தான். பின்னர் சித்தமார்க்கத்தை அடைந்தான்.

அங்கிருந்து அரசர்களின் லோகங்களையும் தாண்டி ஸ்வர்க்கலோகத்தில் போய்க்கொண்டே இருந்தான்.

கடைசியில் இந்திரனுடைய பட்டணமான அமராவதியைக் கண்டான்.

மஹாபாரதத்தில் வன பர்வத்தில் நாற்பத்தி இரண்டாவது அத்தியாயமாக அமைகிறது இந்த நக்ஷத்திரப் பயணம்!

அர்ஜுனனுடன் பயணம் செய்து நக்ஷத்திர ரகசியத்தை நம்மால் அறிய முடிகிறது.

அடுத்த முறை நக்ஷத்திரங்களைப் பார்க்கும் போது எத்துணை ஆயிரம் புண்யசாலிகளை வானத்தில் பார்க்க முடிகிறது என்று வியக்கலாம்; அவர்களை வணங்கலாம்; புண்ணியமும் பெறலாம்!

***

Leave a comment

Leave a comment