WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,632
Date uploaded in London – 19 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (53) மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்தது!
ச. நாகராஜன்
‘மால்யவான் முதலியவர்களுடைய உற்பத்தி ‘ என்ற உத்தரகாண்டத்தின் ஐந்தாவது ஸர்க்கத்தில் மால்யவான், சுமாலி, மாலி ஆகியோருக்கு பிரம்மா வரம் அளித்த செய்தியைக் காண்கிறோம்.
விசுவாவஸு என்ற ராக்ஷஸனின் இரண்டாவது புதல்வியான தேவவதீ என்பவளை ஸுகேசன் என்ற ராக்ஷஸன் மணந்தான்.
அந்த தம்பதியர்க்கு மால்யவந்தன், சுமாலி, மாலி ஆகிய குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் திரேதாக்கினிகளான கார்ஹபத்தியம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி போல தேஜோவான்களாக மிளிர்ந்தார்கள்.
தங்கள் தந்தை பரமேஸ்வரரை தியானித்து புரிந்த தவத்தால் வரபாக்கியம் பெற்றதை அறிந்த அவர்கள், அவரைப் போலவே தாங்களும் தவம் செய்ய மன உறுதி கொண்டு மேருமலைக்கு வந்தனர். கடுமையான தவத்தைப் புரிந்தனர்.
இதனால் பிரம்மதேவர் அவர்கள் முன் தோன்றி, “வரமளிக்கிறவனாகத் தோன்றி இருக்கின்றேன்” என்று கூறினார்.
பிரம்மாவிடம் சுகேசனது புதல்வர்களான மால்யவான், சுமாலி, மாலி ஆகியோர் தங்களுக்கு வேண்டிய வரத்தைக் கேட்க பிரம்மா அதைத் தந்தருளினார்.
அதை விளக்கும் ஸ்லோகங்கள் இவை:
ப்ரஹ்மாணம் வரதம் ஞாத்வா சேந்த்ரைர்தேவகணைர்வ்ருதம்| ஊசு: ப்ராஞ்ஜல்ய: சர்வே வேபமானா இவ த்ருமா: ||
தபஸாராதிதோ தேவ யதி நோ திஷஸே வரம் | அஞேயா: ஷத்ரு ஹந்தாரஸ்ததைவ சிரஜீவின: ||
ப்ரபவிஷ்ணவோ பவாமேதி பரஸ்பரமனுவ்ரதா: ||
ஏவம் பவிஷ்யதீத்யுக்த்வா சுகேசதனயான்விபு: | ஸ யயௌ ப்ரஹ்மலோகாய ப்ரஹ்மா ப்ராஹ்மணவத்ஸல: ||
உத்தரகாண்டம் , ஐந்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 12,13,14
சேந்த்ரைர்: – இந்திரன் உட்பட்ட தேவ கணௌ – தேவ கணங்களோடு தபஸா – தவத்தால் ஆராதித: – திருப்தி அடைந்தவராய் ந: – எங்களுக்கு வரம் – வரத்தை திஷஸே – அளிக்கப்போகிறீர் யதி – என்றால் அஞேயா – எவராலும் வெல்வதற்கு அரியவர்களாகவும் ததா – அப்படியே சத்ருஹந்தார: – எதிரிகளை வெல்ல வல்லவர்களாகவும் பரஸ்பரம் – ஒருவருக்கொருவர் அநுவ்ரதா: – அன்பு மாறாதவர்களாகவும் ப்ரபவிக்ரம: – மிகுந்த பராக்ரமம் உடையவர்களாகவும் சிரஞ்சீவின: ஏவ – சிரஞ்சீவிகளாகவும் பவாம: – விளங்கவேண்டும் இதி – என்று ஊசு: – வேண்டிக் கொண்டார்கள் ப்ராஹ்மண வத்ஸல: – பிரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவர்களிடத்தில் வாத்ஸல்யம் உடையவரும் விபு: – சாசுவதருமான ச: – அந்த ப்ரஹ்மா – பிரம்மா சுகேசதன்யாத் – சுகேசனது புதல்வர்களுக்கு ஏவம் பவிஷ்யாமி – அப்படியே ஆகட்டும் இதி – என்று பதில் கூறி ப்ரஹ்மலோகாய – பிரம்மலோகத்திற்கு யயௌ – சென்று சேர்ந்தார்
இப்படி பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றவர்கள் பயமே இல்லாமல் தேவர்களையும் அசுரர்களையும் மிகுந்த உபத்திரவத்திற்குள்ளாக்கினர்.
பிரம்மாவிடமிருந்து கேட்டுப் பெற்ற வரமாக இந்த நிகழ்வு வால்மீகியால் சித்தரிக்கப்படுகிறது.
இந்த வரலாற்றை அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.
**