பசு வதை செய்யாதே! (Post No.4017)

Written by S NAGARAJAN

 

Date: 20 June 2017

 

Time uploaded in London:-  5-17  am

 

 

Post No.4017

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

 

by ச.நாகராஜன்

 

 

அஹிம்ஸா பரமோ தர்ம: என்பது ஹிந்து மதத்தின் உயிரான கொள்கைகளில் ஒன்று.

எந்த மிருகத்தையும் கொல்லாதே என்பது அற நூல்கள் நமக்குத் தரும் அறிவுரை.

 

 

கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் தொழும் என்பது வள்ளுவர் வாக்கு.

பசு, பிராம்மணன் – கோ, ப்ராஹ்மண் – ஹிந்து மதம் மிகச் சிறப்பாகக் கூறும் பிறவிகள்.

 

 

இதன் காரணம் பசுவும் பிராம்மணனும் தன் நலம் இன்றி பிறர் நலத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டதே தான்!

கோ ஹத்யா – பசுக் கொலை பாவம் என்கிறது வேதம்.

கோ அஹத்யா – பசுவைக் கொல்லாதே என்று வேதம் நூறு தடவைகளுக்கு மேல் கூறுகிறது.

 

பசுவையும் விருந்தினர்களையும் அது இணைத்துப் பல முறைகள் கூறுகிறது.

 

அதிதி தேவோ பவ: – விருந்தினர்கள் தேவர்களே என்று கூறும் வேதம் பய பாயஸம் வா என்று கூறுகிறது.அவர்களை அருமையான பாயஸத்துடன் உபசரி – என்று பால் கலந்த இனிப்பைத் தரச் சொல்கிறது. பசுவின் பால் விருந்தினர்களுக்குத் தர உகந்த அற்புதமான வரவேற்புப் பொருளாம்!

 

சம்ஸ்கிருதம் கற்காதே என்ற தற்கொலைக் கொள்கையால் அறிவுச் செல்வம் நம நாட்டில் வறள ஆரம்பித்தது.அரைகுறை படிப்பாளிகளும் கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டையே அடகு வைத்து கிறிஸ்தவமாக மாற்ற வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட் ஆங்கிலேய “மெக்காலே அறிவாளிகளும் வேதம் உட்பட்ட பல நூல்களுக்குத் தங்கள் கோணல் பார்வையாலும் அரைகுறை அறிவாலும் வியாக்யானம் அல்லது விரிவுரை தர முற்பட்டனர்.

 

அதனால் வந்தது கோளாறு பெரிது!

 

பசு மாமிசத்தை வேத காலத்தில் சாப்பிட்டனர் என்று உள்நோக்கத்தோடு எடுத ஆரம்பித்தனர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு விஷயத்தை இங்கு பார்க்கலாம்:

மூன்று அல்லது நான்கு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்து விட்டால் அவர்களை அரிசியை சாதமாக சமைத்து அத்துடன் கொஞ்சம் உக்ஷ அல்லது ருஷவத்தையும் தருமாறு அற நூல்கள் பகர்கின்றன.

 

 

உக்ஷ என்பது சோமலதா. ருஷவ என்பது ஒரு வகை மூலிகைச் செடி.ஊட்டச் சத்து நிறைந்த இவற்றைத் தந்து அவர்களை உபசரி என்பது அறிவுரை.

இந்தச் செடிகள் எருதின் கொம்பு போல பெரிதாக இருக்கும். ரிஷவம் என்பதற்கு இன்னொரு அர்த்தம் ஏழு இசை ஸ்வரங்களில் ஒன்றாகும். இது எருதின் சப்தத்தை ஒத்து இருக்கும்.

 

ஆனால் அரைகுறை சம்ஸ்கிருத அறிவாளிகளும் பாரத நாட்டைக் கெடுப்பதில் குறியாக இருந்த ஆங்கிலேய அதி மேதாவிகளும் இதை எருதின் மாமிசம் என்று எழுதி விட்டனர்; சந்தோஷப்பட்டனர்.

 

பெரிய ராக்ஷஸர்கள் – ஆங்கிலேய ராக்ஷஸர்கள் கூட சில எருதுகளைக் கொன்ற மாமிசத்தைச் சாப்பிட முடியுமா? சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். அந்த அளவு முட்டாள்களா, அதிதிகளை உபசரிக்கும் வழிகளைக் கூறும் அறவோர்?!

எதை வேண்டுமானாலும் எழுதலாம் – அதுவே பத்திரிகை சுதந்திரம் என்று மார் தட்டும் மதியீனர்களை சுதந்திரத்தின் பேரால் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?!

 

 

மேலை நாடுகளிலும் – இந்த அரைகுறை அறிவாளிகள் கூற்றுப்படி நமது நாட்டிலும் கூட பசு வதை செய்யப்படும் போது வெளிப்படும் மீதேன் வாயு நூறு சதவிகிதம் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்பாட்டை விட  அதிகம் என்பதாவது இவர்களுக்குத் தெரிகிறதா?

 

செலக்டிவ் அம்னீஷியா எனப்படும் வேண்டுமென்றே மறப்பது இவர்களுக்குக் கை வந்த கலை.

 

சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு என்று பல இடங்களில் அரசியலுக்காக ஆதாயம் தேடி கிளர்ச்சியில் ஈடுபடும் கம்யூனிஸ தோழர்களும், ஹிந்து மத செகுலர் விரோதிகளும் வேண்டுமென்றே இந்த சுற்றுப்புறச் சூழல் கேட்டை மனதில் கொள்ள மாட்டார்கள் – பசுவதை செய்யாதே என்ற சட்டத்தை அமுல் படுத்து என்று அரசும் ஹிந்து மத அறவோரும் சொல்லும் போது!

 

 

பசுவதையால் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டையும் பிரபலமான பொருளாதார மேதைகள் – செகுலரிஸ்டுகள் – மறந்து விடுகின்றனர் என்பது வேதனையான விஷயம்.

நன்கு சீர்தூக்கிப் பார்த்து நியாயமான முறையில் ஆய்வை நடத்தும் எவரும் பசுவை வதைக்காதே என்று சொல்வதோடு இந்த விஷமிகளின் தவறான கொள்கையையும் வெளிப்படுத்த முனைய வேண்டும்.

 

தாமதமாக இருந்தாலும் கூட பசு வதை நிறுத்தபட்டே ஆக வேண்டும். நிறுத்தப்படும்.

 

தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சில காலம் தான் கவ்வ முடியும்.

 

மறுபடி தர்மமே வெல்லும்!

****

 

நண்பர்கள் பற்றி காளிதாசனும் வள்ளுவனும் (Post No.3941)

Written by London Swaminathan

 

Date: 25 May 2017

 

Time uploaded in London: 18-06

 

Post No. 3941

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

நட்புறவு பற்றிப் பேசுவது வள்ளுவனுக்கு மிகவும் பிடித்த விஷயம்.  சுமார் 70, 80 குறள்களில் நல்லவர் தொடர்பு, பெரியோர் நட்பு, தீயோர் நட்பு என்று பல தலைப்புகளில் பொழிந்து தள்ளிவிட்டார். இதற்கு இணையான அளவுக்கு நட்புறவு பற்றி பஞ்ச தந்திரக் கதைகளில் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் உள்ளன. காளிதாசன் ஒரு சில உவமைகளை நட்புறவுக்கு ஒதுக்கினாலும் அவை எல்லாம் அருமையான உவமைக ளாக உள்ளன. வள்ளுவனையும் காளிதாசனையும் ஒப்பிடுவது சாலப் பொருந்தும்.

 

காளிதாசனுடைய புகழ்பெற்ற ஏழு நூல்களில் ஒன்று ருது சம்ஹாரம். இதில் ஆறு பருவங்களில் என்ன என்ன நிகழ்கிறது என்று வருணிக்கிறான். வேதத்தில் ஆறு பருவங்கள்

இருப்பதையும் அதை சங்கத் தமிழ் நூல்கள் அப்படியே கூறுவதையும் முன்னொரு ஆராய்ச்சிக் கட்டுரையில் தந்துள்ளேன். கோடைப் பருவத்தில் என்ன நடக்கிறது என்பதை ருது சம்ஹாரம் நூலில் வருணிக்கும் காளிதாசன் பின்வருமாறு சொல்லுவான்:

 

உடலைத் தகிக்க வைக்கும் கடும் கோடைச் சூட்டில், காட்டு  யானைகளும்,  காட்டு எருமைகளும், சிங்கங்களும், அவற்றின் இயற்கையான பகைமையை விட்டுவிட்டு தீப்பற்றி எரியும் புல்வெளிகளில் இருந்து வெளியே ஓடிவந்து நண்பர்கள் போல ஒரு கூட்டமாக நிற்கின்றனவாம்.

 

எங்கே? சலசலத்து ஓடும் ஆற்றின் கரைகளில்! (ருது சம்ஹாரம் 1-27)

 

முனிவர்கள் வசிக்கும் இடங்களிலும் நியாயமான அரசு நடத்தும் மன்னர்களின் நாட்டிலும் “புலிப்போத்தும் புல்வாயும் (மான்) ஒருதுறையில் நீருண்ணும்” என்பதை நாம் கம்பன், காளிதாசனில் படித்தோம். இங்கோ காட்டூத்தீ, கோடை வெப்பம் என்னும் பகைவனுக்கு எதிராக காட்டு விலங்குகள் கூட்டணி அமைத்த காட்சியைக் காண்கிறோம்.

இது உண்மையும் கூட! டெலிவிஷன்களில் வரும் இயற்கை பற்றிய டாகுமெண்டரிகளைப் பார்த்தவர்களுக்கு இது இன்னும் நன்றாக விளங்கும். காட்டுத் தீ, பெரிய வெள்ளம், வறண்ட கோடை ஆகிய காலங்களில் காட்டு விலங்குகள் ஒன்றை ஒன்று தாக்குவதை நிறுத்திவிட்டு அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதையே பாராட்டுகின்றன.

 

தீய நண்பனை உதறிவிட்டு எப்படி ஓட வேண்டும் என்று காளிதாசன் சொல்கிறான்:

பாம்பு கடித்த விரலை — விஷம் பாய்ந்த விரலை — எப்படி வெட்டித் தூக்கிப் போடுகிறோமோ அப்படி தீய நண்பர்களைத் தூக்கி எறியுங்கள் .ஆனால் ஒரு நல்லவன், நமக்கு நண்பனாக இல்லாவிடிலும் அவனை மருந்து போல ஏற்கவேண்டும். எப்படிக் கசப்பான மருந்து ஒரு நோயாளிக்குப் பிடிக்காவிடிலும் கொடுக்கிறோமோ அப்படி நல்லவன் ஒருவன் நம்மைப் பாராமுகமாக இருந்தாலும் அவனை வலிய ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது காளிதாசனின் புத்திமதி (ரகு வம்சம் 1-28)

 

இதை வள்ளுவன் சொல்லுவதோடு ஒப்பிடுவோம்:-

தீயவனாக இருந்தால், நண்பனை பாம்பு கடித்த விஷ விரலை வெட்டி எறிவது போல எறி என்றான் காளிதாசன். நல்ல நண்பனாக இருந்தால் எல்லோருக்கும் முன்னிலையில் ஆடை நழுவி விழுந்தால் கண் இமைக்கும் நேரத்தில் நம் கைகள் எப்படி ஆடையைப் பிடித்து நிறுத்தி நம் மானத்தைக் காப்பாற்றுகிறதோ அப்படி காப்பாற்றுபவனே – ஆபத்து வரும் நேரத்தில் – அப்படிக் காப்பற்றுபவனே நண்பன் என்பான் வள்ளுவன்.

 

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே

இடுக்கண்  களைவதாம் நட்பு (குறள் 788)

 

இரண்டு உவமைகளிலும் உள்ள விரைவு – வேகம்– நம்மை வியக்க வைக்கிறது. விரலை வெட்டி எறிவதையும் விஷம் பரவும் முன்னே செய்ய வேண்டும். நழுவிய ஆடையை மானம் போவதற்குள் பிடிக்க வேண்டும்!

 

இன்னொரு குறளில் தீய நன்பர்களைத் திருடர்களுக்கும் விலைமாதர்களுக்கும் ஒப்பிடுவான் வள்ளுவன்:-

உறுவது சீர்தூக்கும் நட்பும்  பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர் (குறள் 813)

 

தமக்கு என்ன கிடைக்கும் என்று நட்பினை அளந்து பார்ப்பவனும், பொருட்பெண்டிரும் (விலைமாதர்), திருடர்களும் சமம்!

 

இரண்டு கவிஞர்களும் தரும் உவமைகளில் உள்ள வேகமும் அழுத்தமும் நன்கு ரசித்து, ருசித்து, அசைபோட்டுப் படிக்க வேண்டிய விஷயம்!

–subham–

நோயைக் காட்டி தப்பிய மன்னர்கள்! (Post No.3892)

Written by London Swaminathan

 

Date: 9 May 2017

 

Time uploaded in London: 19-57

 

Post No. 3892

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எதிரிகளைச் சமாளிக்க சாம, தான, பேத ,தண்டம் என்ற பல வழிகளைக் கையாளலாம் என்று அரசியல் நூல்கள் பகர்கின்றன. இது தவிர ஒரு வழி உண்டு. எதிரி நியாயமற்ற முறைகளைக் கையாண்டால் நாமும் ஏமாற்றிச் சமாளிக்கலாம். நோய் என்பதைக் காட்டி தப்பிய மன்னர்களும் உண்டு.

 

காஷ்மீரின் வரலாற்றை எழுதிய கல்ஹணர் என்பவர் ஜெயபீடன் (கி.பி.750) என்ற மன்னன் தப்பிய வரலாற்றைச் சொல்கிறார். கல்ஹணர் எழுதிய நூலின் பெயர் ராஜ தரங்கிணி

 

 

கஷ்மீரில் லூடா (LUTA) என்ற விநோத வியாதி உண்டு. இது வந்தால் உடம்பில் கொப்புளம் வந்து ஆள் மரணம் அடைவது உறுதி.

 

ஒருவகை விஷ சிலந்திப் பூச்சி உடம்பில் ஊர்ந்து சென்றால் இந்த வியாதி வரும் என்றும், இது தொற்று வியாதி என்பதால் யாரும் பக்கத்தில் நெருங்க மாட்டார்கள் என்றும் மக்கள் நம்பினர். லூடா என்றால் சிலந்தி என்று அர்த்தம். தமிழில் சிலந்தி நோய் என்று ஒன்று உண்டு. அது வேறு. இந்த லூடாவின் வருணனையைக் கேட்டால் பிளேக் என்னும் கொள்ளை நோய்தான் நினைவுக்கு வரும்.

 

ஒரு முறை ஜெயபீடன் எதிரிகள் கையில் சிக்கினான். அவர்கள் இவனைக் காவலில் வைத்தனர். அந்தக் காலத்தில் காஷ்மீரில் லூடா நோய் பரவி பெரும் பீதி ஏற்பட்டது. ஜெயபீடன் ஒரு தந்திரம் செய்தான். உடம்பில் தற்காலிக கொப்புளம் ஏற்பட எருக்கம் செடியின் பாலை தோல் மீது பூசிக்கொண் டான். கொப்புளம் வந்தால் அதைச் சமாளிக்க மாற்று மருந்துகளையும் வரவழைத்து தயாராக வைத்துக்கொண்டான். கொப்புளம் வந்தவுடன் உளவாளிகள் மூலம் எதிரி  அரசனுக்கு தகவல் போனது. அவன் உடனே பயந்து கொண்டு ஜெயபீடனை விடுவித்தான். ஜெயபீடன் தன்னுடைய நாட்டிற்குப் போய் பெரும்படையுடன் வந்து எதிரியை வென்றான்.

 

இது ராஜ தரங்கிணியின் நாலாவது தரங்கத்தில் உள்ள செய்தி. மற்றொரு இடத்தில் க்ஷேமகுப்தன் என்பவன், லூடா நோயால் இறக்கவே அவன் மகன் அபிமன்யுவைச் சிறு வயதிலேயே சிம்மாசனத்தில் அமர வைத்தனர் என்ற செய்தியையும் தருகிறான்.

அஷ்டாங்க ஹிருதய என்ற நூலில் இந்நோய் பற்றியும் சிகிச்சை முறைபற்றியும் உள்ளதாம்.

தமிழ்நாட்டிலும் வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் இப்படி நடந்ததுண்டு. அம்மை நோய் என்றால் பிரிட்டிஷ் காரர்களுக்கு பயம். அந்த

இடத்தை நெருங்கவே மாட்டார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள் எங்காவது ஒளிந்து கொண்டால், அவர்களைக் காப்பாற்ற, ஊர்க்காரர்கள் வீட்டு வாசல்களில் வேப்பிலையைக் கட்டித் தொங்கவிடுவராம். அம்மை நோய் பரவாமல் இருக்க இப்படிச் செய்வது வழக்கம். மேலும் இப்படி வேப்பிலை தொங்கும் வீடுகளில் நெருங்கிய உறவினர் தவிர யாரும் போகவும் மாட்டார்கள்.

 

பிரிட்டிஷாரை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டபோது அவனை வெள்ளைக்காரர்கள் தூக்கிலிட்டனர். அப்பொழுது பாஞ்சாலக் குறிச்சி கோட்டையிலிருந்து தப்பிய ஊமைத்துரை முதலிய தலைவர்களும் இப்படி வேப்பிலை தந்திரம் செய்ததாகச் சொல்லுவர்.

 

ராணுவத்திலும் அலுவலகங்களிலும் இப்பொழுதும் யாருக்கோ உடம்பு சரியில்லை என்று சொல்லி லீவு  போட்டு வீட்டில் வேறு வேலை செய்வதில்லையா?அதுபோலத்தான் இதுவும்!

 

–Subahm–

சங்கத் தமிழில் தங்கமும் உரைகல்லும்! (Post No.3889)

Written by London Swaminathan

 

Date: 8 May 2017

 

Time uploaded in London: 20-19

 

Post No. 3889

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

உரைகல் பற்றிய உவமைகளைக் காளிதாசனும் சங்கத் தமிழ்ப் புலவர்களும் பயன்படுத்தியுள்ளனர். உலகில் வேறு எந்தக் கலாசாரத்திலும் பார்க்கமுடியாத உவமைகள் இவை.

இதிலிருந்து இரண்டு விஷயங்கள் புலப்படும்:

  1. உலகிலேயே பணக்கார நாடு இந்தியாதான். மக்கள் எல்லோருடைய கைகளிலும் தங்கம் இருந்ததால் புலவர்கள் தங்கத்தின் மாற்றைப் பார்க்கும் உரைகல் உவமையைப் பயன்படுத்தியுள்ளனர்.

 

  1. உலகப் புகழ் பெற்ற அறிஞன், கவிஞன் காளிதாசன் கி.மு .இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்ததாகப் பல அறிஞர்கள் 700 ஆண்டு வீச்சில் அவரது காலத்தை நிர்ணயித்தனர். உலகில் வேறு எந்தக் கவிஞகுக்கும் இல்லாத சிறப்பு இது!

 

 

ஆனால் நானோ 20, 30 கட்டுரைகள் மூலமாக காளிதாசன் சங்க காலத்துக்கும் முன்னால் வசித்தவன் என்றும் இதற்கு 200-க்கும் மேலான காளிதாசன் உவமைகள், சங்கத் தமிழரின் பதினென் மேல்கணக்கு நூல்களில் காணக்கிடக்கின்றன என்றும் காட்டிவருகிறேன். அவ்வகையில் உரைகல் உவமையும் சேரும். காளிதாசன் சொன்னதை தமிழ்ப் புலவர்களும் பயன் படுத்தியுள்ளனர். ஒரு சில எடுத்துக் காட்டுகளைக் காண்போம்.

 

காளிதாசன் பகர்வது:-

 

செல்வத்துக்கு அதிதேவதையான லெட்சுமி ஓரிடத்திலும் நிலையாக இருக்க மாட்டாள்; ஆனால் மன்னன் அதிதிக்கு அருள்புரியும் நோக்கத்தோடு அவன் எப்போதும் அவனிடம் இருந்தாள் எப்படி இருந்தாள் என்றால்  உரைகல்லின் மீது காணப்பாடும் தங்க ரேகை போல நிலையாக இருந்தாள் (ரகுவம்சம் 17-46)

 

प्रसादाभिमुखे तस्मिंश्चपलापि स्वभावतः।
निकषे हेमरेखेव श्रीरासीदनपायिनी॥ १७-४६

prasādābhimukhe tasmiṁścapalāpi svabhāvataḥ |
nikaṣe hemarekheva śrīrāsīdanapāyinī|| 17-46

 

 

மேகதூத காவியத்தில் காளிதாசன் புகல்வான்:

மேகமே! உஜ்ஜைனி நகர ராஜவீதிகள் வழியாக, காதலர் வீட்டுக்குச் செல்லும் காதலிகளுக்கு உன் மின்னல் வெளிச்சத்தால் வழிகாட்டு. உன் மின்னலானது உரைகல்லில் படிந்திருக்கும்  தங்க ரேகை போல மெல்லியதாக இருக்கட்டும் (மேக.36)

 

இதே போல விக்ரம ஊர்வசீய நாடகத்திலும் உரைகல் உவமை வருகிறது

 

சங்கத் தமிழ் புலவர்கள்

 

சங்கத் தமிழ் புலவர்கள் செப்பியதைக் காண்போம்:

நற்றிணையில் (25) பேரிசாத்தனார்:-

செவ்வரி இதழ் சேண்நாறு பிடவின்

நறுந்தாது ஆடிய தும்பி, பசுங்கேழ்ப்

பொன் உரை கல்லின், நல்நிறம் பெறூஉம்

வளமலை நாடன்

 

பொருள்:

நீண்ட தூரம் கமழும் பிடவப் பூவின் நறுந்தாதை நுகர்ந்த வண்டு, அந்த மகரந்தத் தூள் படிந்ததால் பொன் உரை கல் போலத்  தோன்றும் வளம் உடைய நாட்டவனே…………………………………….

 

 

நற்றிணை (3) பாடலில் இளம்கீரனார் மொழிவது:-

கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து

கல்லாச் சிறா அர் நெல்லி வட்டு ஆடும்

 

பொருள்:

பொன்னை உரைக்கும் கல்லைப் போல வட்டமான அரங்கு அமைத்து, தம் தொழிலைக் கல்லாத சிறுவர்கள் நெல்லிக்காயை விளையாட்டுக் கருவியாகக் கொண்டு ஆடுவர்.

 

கச்சிப்பேட்டு நன்னாகையார் குறுந்தொகையில் (192) உரைப்பது:

மின்னின் தூவி இருங்குயில், பொன்னின்

உரைதிகழ் கட்டளை கடுப்ப, மாச்சினை

நறுந்தாது கொழுதும் பொழுதும்

 

பொருள்:

மின்னுகின்ற இறகுகளை உடைய இனிய கரிய குயில் மாந்தோட்டப் பூவிலுள்ள நறும் தாதைப் பூசி, பொன்னை உரைத்த உரைகல் போல விளங்கும்.

 

பரணர் பாடிய அகநானூற்றுப் பாடல் (178):

வண்பிணி அவிழ்ந்த வெண்கூதாளத்து

அலங்குகுலை அலரி தீண்டித்தாது உகப்

பொன்னுரை கட்டளை கடுப்ப…………..

 

பொருள்:

வெண் நாரைகள் இருப்பது போலத் தோன்றும் வெள்ளிய கூதளன் செடியின் அசையும் கொத்தில் உள்ள மலரில் பொருந்தியது; அப்போது அம்மலரின் பொடி மேலே உதிர்தலால் பொன் உரைக்கும் கட்டளைக்கல்            லைப் போல அழகுற தோன்றியது.

உருத்திரக்கண்ணனார் (ருத்ராக்ஷன்) பாடிய பெரும்பாணாற்றுப் படையிலும் இப்படி உவமை உண்டு.

 

திருக்குறளில் (505)

 

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்

பொருள்:

அவரவர் செய்யும் செயல்களே அவர்களுடைய பெருமை, சிறுமை என்ற தகுதியைக் காட்டும் உரைகல்லாக இருக்கின்றன

 

–Subham–

 

தமிழர் வாழ்வில் வேங்கை மரம்! புலியா, மரமா? (Post No.3886)

Written by London Swaminathan

 

Date: 7 May 2017

 

Time uploaded in London: 14-17

 

Post No. 3886

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

வேங்கை என்ற தமிழ்ச் சொல்லுக்கு இரு பொருள் உண்டு; புலி என்றும் வேங்கை மரம் என்றும் அர்த்தம்.

 

சங்க இலக்கியத்தில் வேங்கை மரம் பற்றிய பாடல்கள் நிறைய உள்ளன. வேங்கை மரம் பூத்தால் திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் இதற்கு ஒரு காரணம்.

 

இது பற்றிய இரண்டு அதிசய விஷயங்கள்!

 

உலகப் புகழ் பெற்ற கவிஞன்  காளிதாசனும் புலி என்றும் மரம் என்றும் பாடுகிறான். சங்க காலத்துக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்ற கருத்தை வலியுறுத்தி ஏழு ஆண்டுகளாக நிறைய கட்டுரைகள் தந்தேன். இன்று வேங்கை மரம் மேலும் ஒரு சான்றாக வருகிறது!

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் யானையும் புலியும் சண்டை போடுவது, தமிழகக் காடுகளில் தினமும் நடந்த ஒரு நிகழ்ச்சி. வேங்கை மரத்தின் பூக்கள் , பாறைகளில் விழுந்து காட்சி தருகையில் அது புலி போலவேஎ தோன்றும். இதைப் பார்க்கும் யானை, அது உண்மையான புலி என்று எண்ணி அதனுடன் மோதுகிறதாம். இது கபிலர் கண்ட காட்சி(கலித்தொகை 38, 49)

வேங்கை என்ற தமிழ்ச் சொல் வேங்கா ( Benga பேங்கா) என்று நேபாளத்திலும் வழங்கி வருகிறது. தமிழும், சம்ஸ்கிருதமும்தான் உலக மொழிகளுக்கு எல்லாம் மூல மொழிகள் என்றும் உலகின் எல்லா பழைய சொற்களையும் இம்மொழிகளில் தோன்றியதாகக் காட்ட முடியும்  என்றும் நான் எழுதி வருவதற்கு இது மேலும் ஒரு சான்று!

வேங்கை மரம் பற்றிய பாடல்கள் சிலவற்றைக் காண்போம்:-

2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டின் காடுகளில் யானையும் புலியும் சண்டை போடுவது தினமும் நடந்த நிகழ்ச்சிகளாகும்.

 

வேங்கை மரத்தின் மஞ்சள் நிறப் பூக்கள் பாறைகளில் மீது விழுந்து கிடப்பது, புலி உட்கார்ந்து இருப்பது போலத் தோன்றுமாம். இதைக் காணும் யானைகள் அதை உண்மையான புலி என்று எண்ணி மோதுமாம். இது கபிலர் கண்ட காட்சி (கலித்தொகை 38,49)

 

காட்டு ஓரப் பகுதிகளில் இசைக் கலைஞர்கள் பறை கொட்டி இசை பாடியதைக் கேட்ட யானைகள், அதை புலி உறுமல் என்று எண்ணி கோபம் கொண்டனவாம். உடனே அங்கே பூத்துக் கிடந்த வேங்கை மரங்களை புலி என்று கருதி தாக்கி, அதன் ஒரு கிளையை தன் தலைமீது போட்டுக்கொண்டு பிளிறியதாம் அந்த சப்தம் மலைமீது மோதி எதிரொலி செய்தனவாம். இது பரணர் கண்ட காட்சி (பதிற்றுப் பத்து 41)

 

 

பண்ணமை முழவும் பதலையும் பிறவும்

கண்ணறுத்து இயற்றிய தூம்பொடு கருக்கிக்

காவின் தகைத்த துறைகூடு கலப்பையர்

கைவல் இளையர் கடவுட் பழிச்ச

மறப்புலிக் குழூ உக்குரல் செத்து வயக்களிறு

வரைசேர்பு எழுந்த சுடர்வீ வேங்கைப்

பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன்

மாயிருஞ் சென்னி அணிபெற மிலைச்சி

வழையமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்

பதிற்றுப் பத்து-41, பரணர்

 

 

நெடுவெண் நிலவினார் (குறுந்தொகை 47) வேறு ஒரு காட்சியை நம்முன் வைக்கிறார்:-

 

வானில் பிரகாசிக்கும் நிலவைப் பார்த்த தோழி , காதலன் வருவதற்குரிய நேரம் அதுவல்ல என்கிறாள்; ஏனெனில் கீழே வேங்கை மரத்தின் மஞ்சள் நிறப்பூக்கள் பாறைகளின் மீது விழ்ந்து கிடக்கின்றன. இதைப் பார்த்து புலி என்று காதலன் அஞ்சக் கூடும்:-

 

கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்

இரும்புலிக் குருளையின்  தோன்றும் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை  வெண்ணிலவே

 

–நெடுவெண்ணிலவினார், குறுந்தொகை 47

 

புறநானூற்றிலும் (பாடல் 202) புலி வருகிறது!

 

அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை

மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்

இரும்புலி வரிப்புறம் கடுக்கும்

 

இப்படிப்பட்ட மரத்தைக் கண்ட யானைகள் அது உண்மையான வேங்கைப் புலி என்று அஞ்சி ஓடுகின்றனவாம்!

 

உறுபுலி உருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்

கறுவுகொண்டு அதன் முதல் குத்திய யானை –கலி.38

 

வேங்கை தா அய தேம்பாய் தோற்றம்

புவிசெத்து வெரீஇய புகர்முக வேழம் – அகம்.12

 

இவ்வாறு எண்ணற்ற குறிப்புகளுள. சில குறிப்புகளை மட்டும் எடுத்துக்காட்டுகளாக கொடுத்தேன்

 

 

காளிதாசனில் வேங்கை மரம்

 

व्याघ्रानभीरभिमुखोत्पतितान्गुहाभ्यः
फुल्लासनाग्रविटपानिव वायुरुग्णान्।
शिक्षाविशेषलघुहस्ततया निमेषा
त्तुणीचकार शरपुरितवक्त्ररन्ध्रान्॥ ९-६३

 

vyāghrānabhīrabhimukhotpatitānguhābhyaḥ
phullāsanāgraviṭapāniva vāyurugṇān |
śikṣāviśeṣalaghuhastatayā nimeṣā
ttuṇīcakāra śarapuritavaktrarandhrān || Raghuvamsa 9-63

 

 

தசரதர் அச்சமற்றவர், வேட்டையாடச் சென்றபொழுது குஹைகளில் இருந்து வெளிவந்த புலிகள், அவரை நோக்கிப் பாய்ந்தன. பாய்கின்ற அப்புலிகள் காற்றினால் ஒடிக்கப்பட்டு கீழே விழுகின்ற வேங்கை மரக் கிளைகள் போல் காணப்பட்டன. தசரதர் நொடிப்பொழுதில் அம்புகளை அந்தப் புலியின் வாயில் புதைத்தார். அப்பொழுது அவை அம்பு நிறைந்த அம்பறாத் துணிகள் போல் இருந்தன.இது அப்படியே தமிழில் உள்ளது Raghuvamsa 9-63

 

–சுபம்–

 

.

வாக்கு நயம், யாக்கை நயம்-காக்கை இசை, குயில் இசை (Post No.3883)

Written by London Swaminathan

 

Date: 6 May 2017

 

Time uploaded in London: 14-48

 

Post No. 3883

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

ஒரு தமிழ்ப் புலவர் குயிலையும் காக்கையையும் வைத்து நமக்கு ஒரு நல்ல அறிவுரை வழங்குகிறார்.

 

ஒருவருடைய தோற்றத்தைக் கண்டு அவரை எடை போடாதீர்கள். அவருடைய பேச்சை வைத்து, அதாவது கருத்து ஆழத்தைக் கொண்டு, அவரை எடை போடுங்கள் என்று தமிழ்ப் புலவர் மொழிகிறார்.

 

ஒருவர் பட்டு வேஷ்டி, ஜரிகை அங்க வஸ்திரம், குங்கும சந்தனப் பொட்டு, வைர மோதிரம் அணிந்து மேடை ஏறிப் பாட வரலாம். ஆயினும் அவர் பாடும் பாட்டு ரசிக்கும்படியாக இல்லையானால் கூட்டம் கலைந்துவிடும். அது போலவே ஒருவர் நன்றாக உடை அணிந்து பெரிய மனிதர் தோரணையில் உலா வரலாம். ஆயினும் அறிஞர் இடையே அவர் பேசத் துவங்கினால் அவருடைய உண்மை மதிப்பு தெரிந்துவிடும்.

 

வாக்கு நயத்தாலன்றிக் கற்றவரை மற்றவரை

ஆக்கை நயத்தால் அறியலாகாதே – காக்கையொடு

நீலச் சிறுகுயிலை நீடிசையால் அன்றியே

கோலத் தறிவருமோ கூறு

–நீதி வெண்பா

பொருள்:-

காக்கையொடு நீலச் சிறுகுயிலை-காக்கையையும்   அதைப் போலவே கருநிறக் குயிலையும்

 

நீடு இசையால் அன்றி – இனிமை மிக்க இசைக்குரலால் அல்லாமல்

கோலத்து அறிவருமோ கூறு-  உருவத்தினால் அவற்றின் பெருமையை அறியக்கூடுமோ, நீ சொல்

(அவற்றின் பெருமையை எப்படி உருவத்தால் அறிய முடியாதோ, அதைப் போலவே)

 

கற்றவரை மற்றவரை – படித்த பெரியவர்களையும், படிக்காத மற்றவர்களையும்

வாக்கு நயத்தால் அன்றி – அவரவர்களின் பேச்சின் இனிமையினால் அல்லாமல்

ஆக்கை நயத்தால் அறியலாகாதே – உடம்பு அழகினால் அறிய முடியாது.

 

 

இதைப் போலவே சம்ஸ்கிருதத்திலும் ஒரு பா உண்டு:-

 

காகஹ கிருஷ்ணஹ பிகஹ கிருஷ்ணஹ கோ பேதஹ பிககாகயோஹோ

வசந்த காலே சம்ப்ராப்தே காகஹ காகஹ பிகஹ பிகஹ

 

பொருள்:-

காகமும் கறுப்பு, குயிலும் கறுப்பு; பின்னர் குயிலுக்கும் காகத்துக்கும் வேறு என்னதான் வேறுபாடு?

(ஓ அதுவா?)

 

வசந்த காலம் வந்துவிட்டால், காக்கை காக்கைதான், குயில் குயில்தான்! ( அதாவது அதன் வண்டவாளம் தெரிந்து விடும்.குயில் இனிமையாகப் பாடத் துவங்கும்; காகம் கர்ண கடூர சப்தம் உண்டாக்கும்)

 

 

ஏன் இப்படிக் காகத்தையும் குயிலயும் ஒப்பிடுகிறார்கள் என்றால், காகத்தின் கூட்டில் குயில்கள் முட்டை இடும். அவைகளுக்கு அடைகாக்கத் தெரியாது. காக்கையும் குயிலின் தந்திரத்தை அறியாமல் எல்லாவற்றையும் அடை காத்து குஞ்சு பொறிக்கும். வசந்த காலம் வருகையில் குயில் இனிமையாகப் பாடிக்கொண்டு பறந்தோடிப் போகும்.

காளிதாசன், குயிலின் இந்தக் குணத்தைக் குறிப்பிட்டு பெண்களின் தந்திர புத்தியைச் சாடுகிறான். ஒன்றுமறியாத பறவை இனமே இப்படி ஏமாற்றினால், எல்லாம் அறிந்த மனித இனப் பெண்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்? என்று அவனது உலகப் புகழ் பெற்ற சாகுந்தல நாடகத்தில் ஒரு வசனம் வருகிறது (5-22)

 

அதே போல ரகு வம்ச காவியத்திலும் (12-39) சூர்ப்பநகை குயில் போல இனிமையாகப் பேசி ராம லெட்சுமணர்களைக் கவரப் பார்த்தாள் என்று காளிதாசன் சொல்லுவான். அதன் உட்பொருள் குயில் போலத் தந்திரம் செய்து ஏமாற்றப் பார்த்தாள் என்பதே.

இவ்வாறு ஓரிரு இடங்களில் குயில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், நூற்றுக் கணக்கான இடங்களில் பெண்களை வருணிக்கையில் குயில் போன்ற இனிமையான குரலையும் மயில் போன்ற அழகையும் உடையவர்கள் என்றே இந்தியப் புலவர்கள் போற்றிப் புகழ்வர்.

 

–subham–

.

Women are Cuckoos: Kalidasa and Tamil Poets agree! (Post No.3881)

Written by London Swaminathan

 

Date: 5 May 2017

 

Time uploaded in London: 14-12

 

Post No. 3881

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

Women are Cuckoos (Koels) say Kalidasa and other poets. Is it a compliment or a complaint? Both, I would say.

When the poets want to praise them, they say that women’s voice is like the Koel (Cuckoo). When they wanted to attack their cunningness, they say women are as cunning as a cuckoo!

 

There is a popular couplet in Sanskrit:

“The crow is black and the cuckoo is black. What is the difference between the two? It is when spring arrives that the crow is identified and the cuckoo is identified as cuckoo” (by their harsh and sweet voice)

 

kakah krsnah pikah krshnah ko bedhah pikakakayoho

vasanta kale samprapta Kakah kakah pikah pikah

 

Kalidasa in his most famous work, Shakuntalam says, “king Speaks,

Intuitive cunning is seen even in females

of lower creatures; what then of those

endowed with reason and understanding;

the cuckoo, as we know, has her young reared

by other birds before they take to the air”

(Shakuntalam Act 5- 22)

 

The voice of cuckoo is sweet but cuckoo is cunning by nature. In the Raghuvamsa (12-39), Surpanakha speaks in sweet voice as that of a cuckoo. But she is planning cunningly to capture Rama and Lakshmana by her magical wile.

 

in the Shakuntalam drama women are portrayed as tricky as cuckoo. Intuitive cunningness exists even in females other than humans (species of animals and birds). What then in regard to those that possess power of understanding? The female cuckoos indeed, cause their offspring to be reared by other birds, before flying in the sky (AS 5-22 and Malavikagni Mitram 3-41)

 

In hundreds of places, the poets described the voice of women is as sweet as a cuckoo.

 

In one of the verses in Niti Venba, a collection of didactic poems by an anonymous author, the poet says “a person’s nature can’t be known by his appearance but known only by his speech like we know a crow from a cuckoo from its difference in voice.”

 

–Subham–

 

 

 

காகத்திடம் கற்க வேண்டிய ஆறு விஷயங்கள்! (Post no.3880)

Written by London Swaminathan

 

Date: 5 May 2017

 

Time uploaded in London: 6-16 am

 

Post No. 3880

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் அழகாகச் சொல்லுகின்றனர்:

 

1.காலை எழுந்திரு

 

2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்)

 

3.மாலையிலும் குளி

 

4.பிற பெண்களிடம் போகாமல் உன் மனையில் புகு.

 

5.கிடைத்த உணவைப் பகிர்ந்து உண் (முதலில் எல்லோரையும் அழை)

 

6.எல்லோருடனும் பாடிப் பேசி மகிழ் (மாலை வேளைகளில் மரங்களில் காககங்கள் கா, கா என்று பேசி மகிழ்வதைக் காணலாம்).

 

 

காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல்

மாலை குளித்து மனை புகுதல் – சால

உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும்

கற்றாயோ காக்கைக் குணம்

 

வள்ளுவனும் தமிழ் வேதமாகிய திருக்குறளில்  செப்பினான்:

 

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

 

பொருள்:-

 

பகல் நேரத்தில் பெரிய கோட்டானைச் சிறிய காகம் கூட வென்றுவிடும். அதனால் பகைவரை வெல்லக் கருதும் மன்னன், ஏற்ற காலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

பஞ்ச தந்திரக் கதையில், ஆந்தைகளைக் காகம் எப்படி வென்றது என்பதையும், அஸ்வத்தாமா படுகொலைகளுக்கு ஆந்தைகள் எப்படித் தூண்டின என்பது பற்றியும் ஒரு கட்டுரையில் முன்னரே தந்து விட்டேன்

 

 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்

அன்னநீ ரார்க்கே உள  (குறள் 527)

 

காகம், உணவு கிடைத்தால், அதனை மறைத்துத் தான் மட்டும் உண்ணாது, மற்ற காகங்களையும் அழைத்து உண்ணும். அதுபோன்றவர்களுக்கே செல்வச் சிறப்பு கிட்டும்

 

My articles on Crows

INDIAN CROW by Mark Twine ; 9 February 2013

 

What can a Crow Teach You?

Date : 5  August  2015

Strange Belief about Crows in India and Britain!!

Research Article No. 1678; Dated 26 February 2015.

 

Strange Bird Stories in Mahabharata!

Research Article no. 1711; dated 12 March 2015

 

பிரிட்டனில் கா கா ஜோதிடம்! மேலும் ஒரு அதிசயம்!!

Research Article No. 1679; Dated 27 February 2015.

 

கா…கா…கா…!!! கா..கா..கா..!!!

28 March 2013

 

–Subahm–

கழுதையும் குயிலும்; தமிழ்ப் புலவர் ஒப்பீடு! (Post No.3849)

Written by London swaminathan

Date: 25 APRIL 2017

Time uploaded in London:- 6-19 am

Post No. 3849

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

குயில், உங்களுக்கு ஏதாவது கொடுத்ததா? கழுதை உங்களுக்கு எதையேனும் கொடுக்க மறுத்து உங்களை விரட்டியதா? இல்லையே. பின்னர் ஏன் மக்கள், குயிலைக் காரணம் இல்லாமல் புகழ்கிறரர்கள்; கழுதையைக் காரணம் இல்லாமல் திட்டுகிறார்கள்? குயிலால் நமக்கு நன்மையும் வரவில்லை; கழுதையால் நமக்குக் கெடுதலும் வரவில்லை. இந்தப் புகழ்ச்சியும் இகழ்ச்சியும் அவரவர் குரலினால்தானே வந்தது? நாமும் இனிமையாகப் பேசினால் நமக்கும் குயில் போல் புகழ் உண்டாகும். கழுதை போலக் கத்தினால் நமக்கும் அவப்பெயர் உண்டாகும். இதை வலியுறுத்தி நீதி வெண்பா பாடிய புலவர் சொல்கிறார்:

 

மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின

வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் — நன்மொழியை

ஓதுகுயிலேதங்குதவியது கர்த்தபந்தான்

ஏதபராதஞ் செய்த தின்று

–நீதி வெண்பா

பொருள்:-

 

நன் மொழியை = மெல்லிய இனிய ஓசையை

ஓது குயில் = கூவுகின்ற குயில்

ஏது உதவியது = நமக்கு என்ன கொடுத்து விட்டது?

இன்று = ஒன்றுமில்லை

கர்த்தபம் = கழுதை

ஏது அபராதம் செய்தது = என்ன கெடுதி செய்தது?

இன்று = எதுவும் இல்லை

 

(அவ்வாறிருக்க குயிலை மட்டும் உலகம்    விரும்புவதேன்?

அதன் மெல்லிய ஓசையினாலன்றோ!. ஆகவே)

 

சகம் = இந்த உலகம்

மென் = மெல்லிய

மதுர வாக்கால் = இன்சொலால்

விரும்பும் = யாரையும் விரும்பி மகிழ்கின்றது

மண்ணுலகம் = இன்சொல்லால் மகிழ்ந்த இவ்வுலகே

கடின = கொடுமையான

வன்மொழியினால் = வலிய சொல்லால்

இகழும் = எவரையும் இகழ்ந்து பேசும்

 

இதே (பெயர் தெரியாத)  புலவர் இன்னொரு பாடலும் பாடியிருக்கிறார்.

‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’

 

நாவின் நுனியில் நயம் இருக்கிற் பூமாதும்

நாவினிய நல்லோரும் நண்ணுவார் — நாவினுனி

ஆங் கடினமாகில் அத்திருவும் சேராள் முன்

ஆங்கே வரும் மரணமாம்

 

நாவின் நுனியில் = நாக்கு முனையில்

நயம் இருக்கில் = நல்ல நயமான சொற்கள் வெளிவந்தால்

பூமாதும் = லெட்சுமியும்

நா இனிய = இனிய சொற்களால்

நல்லோரும் நண்ணுவர் = பெரியோரும் அணுகுவர்.

நாவின் நுனி = அவ்வாறின்றி நாக்கின் நுனியானது

கடினம் ஆம் ஆகில் = கொடிய சொற்களைக் கூறினால்

அத் திருவும் = முன்னே சொன்ன லெட்சுமியும்

சேராள் = ஆங்கு வரமாட்டாள்

ஆங்கு மரணம் வரும் = சாவும் நேரிடலாம்.

My old article:

ஞயம்பட உரை; வெட்டெனப் பேசேல்; பழிப்பன பகரேல்;

Post No.3114; Date: 2 September 2016

 

–Subham–

2 கதைகள்! ஐயர் கதையும் குரங்கு கதையும்!!(Post No.3835)

Written by London swaminathan

 

Date: 20 APRIL 2017

 

Time uploaded in London:- 21-55

 

Post No. 3835

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com 

 

 

சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் தமிழனுக்கு நிகர் தமிழனே! தமிழ் வேதமாகிய திருக்குறள் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. இதே போல நாலு வரிப் பாடல்களிலும் – வெண்பாக்களிலும்- அரிய பெரிய கருத்துகளைக் காணலாம். நீதி வெண்பா என்றதோர் நூலை எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளன.

 

நல்ல நண்பர்களுக்கும் கெட்ட நண்பர்களுக்கும் வேறுபாடு என்ன? அவர்களால் என்ன நேரிடும் என்ற கருத்தை விளக்க இரண்டு கதைகள் உள்ளன. நான்கு வரிகளேயுள்ள ஒரு வெண்பாவில் அந்த இரண்டு கதைகளையும் புகுத்திவிட்டார் இந்த நூலை யாத்த ஆசிரியர்.

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்

சிறுவன் பகையாம் செறிந்த- அறிவுடைய

வென்றி வனசரன்றான் வேதியனைக் கத்தான் முன்

கொன்றதொரு வேந்தைக் குரங்கு

–நீதிவெண்பா

 

பொருள்:-

முன்னொரு காலத்தில் நல்லறிவு படைத்த வேடன் (வனசரன்) ஒருவன், வேதியனை (பிராமணனைக்) காப்பாற்றினான். குரங்கு ஒரு அரசனைக் கொன்றது. அறிவுடைய ஒருவன் பகைவனானாலும் அன்போடு கூடிய நண்பனாகிவிடுவான். அறிவில்லாதவன் (சிறுவன்) நண்பனாக இருந்தாலும் பகைவனாக ஆய்விடுவான்.

 

பிராமணன் கதை

ஒரு வேதியனுக்கு அரசன் மாணிக்கக் கல்லைப் பரிசாகக் கொடுத்தான். அவரோ நெடுந்தொலைவு செல்ல வேண்டி இருந்தது. காட்டு வழியாக தனது சொந்த கிராமத்திற்குப் போக வேண்டி இருந்ததால் இதை இப்பொழுது விழுங்கி விடுவோம். ஊருக்குப் போய் வாந்தி எடுக்கும் மருந்தைச் சாப்பிட்டு, வெளியே எடுத்துவிடலாம் என்று எண்ணி அதை வாய்க்குள் போட்டு விழுங்கி விட்டார். இதை மரத்தின் மீதிருந்த ஒரு வேடன் பார்த்துவிட்டான். உடனே அந்தப் பிராமணனைப் பின்பற்றி நடந்து போய், நடுக்காட்டுக்கு வந்தவுடன் பிராமணனை மிரட்டி ரத்தினக் கல்லைக் கேட்டான். அந்தப் பிராமணனோ தன்னிடம் ரத்தினக் கல் எதுவும் இல்லை என்று சாதித்தான். இருவரும் மாணிக்கக் கல் பற்றி பேசியதை ஒரு வழிப்பறிக்கும்பல் கேட்டுவிட்டது

 

வேடனையும், வேதியனையும் தடுத்து நிறுத்தி மாணிக்கக் கல் எங்கே? என்று கேட்டனர். அவர்கள் தங்களிடம் இல்லை என்று சாதித்தனர். “ஓஹோ, அப்படியா இருவர் வயதையும் கீறிப் பார்த்துவிடுவோம் என்று பெரிய பட்டாக் கத்தியை உருவினர். உடனே அறிவும் அன்பும் மிக்க அந்த வேடன், ஐயோ பாவம்; அந்த மாணிக்கக்கல் உண்மையில் அந்த வேதியனுடையது. அதைப் பெற நான் முயற்சி செய்தது தவறு என்று ஒரு யோஜனை செய்தான்.

 

அந்த வழிப்பறிக் கும்பலை அணுகி, “ஐயன்மீர்! நாங்கள் நீண்ட கால நண்பர்கள் –ஆதலால் விளையாட்டாக மாணிக்கக் கல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் இதோ என் வயிற்றைக் கிழித்துப் பாருங்கள்; இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்; இல்லை என்றால் என் வாக்கை நம்பி அந்த  நண்பனையாவது போக விடுங்கள் என்றான். இப்படிச் சொன்ன மாத்திரத்தில் கத்தியை வைத்து வேடன் வயிற்றைக் கீறினர் வழிப்பறிக் கும்பல். ஒன்றும் காணததால் அந்தப் பிராமணனை விட்டுவிட்டனர். அந்த அறிவுள்ள வேடனின் உயிர்த் தியாகத்தை மெச்சியவாறே பிராமணனும் வழிநடைப் பயணத்தைத் தொடர்ந்தான். நல்ல அறிவுள்ளவர்களருகில் இருந்தால் நன்மை கிட்டும்

 

குரங்கு கதை

ஒரு அரசன் ஒரு குரங்கை தனது பிள்ளைபோல வளர்த்து வந்தான். அதுவும் அரசன் என்ன செய்யச் சொன்னாலும் செய்துவிடும். ஒருமுறை அரசன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மிகவு களைப்பாக  இருந்ததால் ஒரு மரத்தடியில் தூங்கச் சென்றான் அப்போது காவலுக்காக குரங்கின் கையில்  கத்தியைக் கொடுத்துவிட்டுத் தூங்கினான்.

 

அந்த நேரத்தில் அரசன் மீது ஒரு ஈ வந்து உட்கார்ந்தது. அரசனைக் காவல் காத்த குரங்குக்கு ஒரே கோபம். அரசன் வயிற்றில் உட்கார்ந்த ஈயை விரட்ட கத்தியால் ஓங்கி ஒரு போடு போட்டது. ஈ பறந்தோடிப் போனது; அரசனின் வயிறு இரண்டு துண்டு ஆனது. அறிவற்றவரை நண்பனாக வைத்திருந்தால் நாம் வம்பில் மாட்டிக்கொள்வோம்

 

சுபம்–