பாரதி பாட்டில் பகவத்கீதை

11th December is Bhrathy’s Birth Day

பாரதி படிக்காத நூல்களே இல்லை என்று தோன்றுகிறது. அவனே கம்பன், இளங்கோ, காளிதாசன் முதலிய பல பெரும் புலவர்களின் பெயர்களைச் சொல்லி பாராட்டுகிறான். பாணிணி, ஆதி சங்கரன், உ.வே.சா, தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் ஆங்கிலப் புலவர்கள் ஷெல்லி, கீட்ஸ் ஆகிய புலவர்களும் அவனை ஆட்கொண்டனர். ஆழ்வார்கள், சைவப் பெரியார் நால்வர் ஆகியோர் செல்வாக்கும் அவனது பாடல்களில் உள்ளது. குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி போலவே பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி இருக்கிறது. சங்கப் புலவர்களின் செல்வாக்கு மிகவும் காணப்படுகிறது. ஆயினும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பகவத் கீதையின் செல்வாக்குதான் பல பாடல்களில் தூக்கி நிற்கிறது. அது மட்டுமல்ல பிரெஞ்சு தேசிய கீதம், தாமஸ் மூரின் உடோபியா போன்ற துக்கடா மொழிபெயர்ப்புகளை விட்டு விட்டு, ஒரு நூல் என்று எடுத்தால் அவன் பகவத் கீதை மொழிபெயர்ப்பு ஒன்றுதான் மிஞ்சும்.

பாரதியின் பகவத் கீதை மொழிபெயர்ப்பில் இலக்கிய நயம் எதையும் பார்க்கமுடியாது. இது ஓரு புனித நூல். அதில் அவன் சொந்த சரக்கைச் சேர்க்க விரும்பவில்லை. ஆனால் பாரதி பாடல்களில் பகவத் கீதை மேற்கோள் வரும் இடமெல்லாம் இலக்கிய நயத்தைக் காணலாம். கண்ண பிரானைவிட அதே கருத்தை கொஞ்சம் ஆணித்தரமாகவே கூறுவான். இதோ சில இடங்கள்:

போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை

புகன்றதெவருடைய வாய்? – பகை

தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத

தேவி மலர்த்திரு வாய்.

 

இந்தியாவின் பணி

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்

என்று அவன் கூறுவதே பகவத் கீதையை மனதிற்கொண்டுதான் என்பதை கீழ்கண்ட மேற்கோள் தெள்ளிதின் விளக்கும்:

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”

என்றுரைத்தான் கண்ணபெருமான்;

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை

இந்தியா உலகிற்களிக்கும் -–ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்– ஆம் ஆம்

இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க!”

கிருஷ்ணார்ஜுன தரிசனம்

ஆரிய தரிசனம் என்ற பாடலில் கிருஷ்ணார்ஜுன தரிசனம் என்ற தலைப்பில் கீதையின் சாரத்தைப் பிழிந்து தருகிறான்:

வில்லினை எடடா!—கையில்

வில்லினை எடடா!—அந்தப்

புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா.

வாடி நில்லாதே– மனம்

வாடி நில்லாதே;–வெறும்

பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே

“க்லைப்யம் மாஸ்மகம:” என்ற ஸ்லோகத்தின் பொருளைத் தருவதோடு அடுத்த சிலவரிகளில் ஆன்மா அழியவொண்ணாதது என்பதையும் கூறுகிறான். இதைப் படித்துப் பயனுறவேண்டும்.

ஞான வாள்

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,

வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,

ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்

வாளாலே அறுத்துத் தள்ளி”

இதுவும் பகவத் கீதை ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பே. ஞான வாள்

என்பது கிருஷ்ணனின் சொல்.

 

சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது

இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.

“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள், உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
 
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் “

இப்படி எவ்வளவோ இடங்களில் பகவத் கீதையை நேரடியாகவும்  இன்னும் பல இடங்களில் மறைமுகமாகவும் போதிக்கிறான்.”பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம்: என்ற கருத்தை

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய்—அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்”

 

பாரதி கீதையை மொழிபெயர்த்தபின் கீதை முன்னுரை என்ற கட்டுரையில் கீதை குறித்த தனது அணுகுமுறை என்ன என்று விளக்கினார். இறைவன் எங்கும் உளன், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்பதே அவன்  கீதையில் கண்ட உண்மை.

 

இறுதியாக ‘கண்ணன் பாட்டிலும்’, ‘பாஞ்சாலி சபதத்திலும்’ பல இடங்களில் பகவத் கீதையைக் காண்கிறோம். அவைகளை வரி வரியாகப் படித்துச் சுவைத்துப் பயன் பெறுக.

Read also

நீங்கள் பாரதிப் பித்தன் என்றால் கீழ்கண்ட தலைப்புகளையும் காண்க:

(1).சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (2).பாரதியுடன் 60 வினாடிகள் (3) பாரதி நினைவுகள் Go to nilacharal.com for items 2 and 3 (4) பாரதி பாட்டில் பழமொழிகள் (5) 60 second Interview with Swami Vivekananda (6) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (7) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்

பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

 

பயமே இல்லாத பாரதி!

(All Quotes in English are words of Swami Vivekananda. All quotes in Tamil are words of Subramanya Bharathi: Swami)

பாரதியின் தேசபக்திப் பாடல்களும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்களும் பிரபலமான அளவுக்கு அவருடைய தெய்வ பக்திப் பாடல்கள் பிரபலமாகவில்லை. கண்ணன் பற்றிய பாடல்கள் மட்டும் ஓரளவுக்குப் பரவின. அவர் ஞானம் பற்றியும் பயம் ஒழிப்புப் பற்றியும் பாடிய பாடல்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. இது பற்றி அதிகம் விளக்குவதற்குப் பதிலாக அவருடைய வரிகளைப் படித்தாலே புரியும். இதையே சுவாமி விவேகனந்தரின் வீர வசனங்களிலும் காணும்போது மெய்சிலிர்க்கிறது.

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதினும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”

 

Fear is death, fear is sin, fear is hell,
fear is unrighteousness, fear is wrong life.
All the negative thoughts and ideas that are in
the world have proceeded from this evil spirit of fear.

—Swami Vivekananda

“அச்சம் தவிர்

ஆண்மை தவறேல்” (புதிய ஆத்திச்சூடி)

****

 

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,

வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,

ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்

வாளாலே அறுத்துத் தள்ளி”

Be a hero. Always say, “I have no fear.”
Tell this to everyone — “Have no fear.” –Swami Vivekananda

 

“இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே

எதற்குமினி உலைவதிலே பயன் ஒன்றில்லை;

முன்னர் நமது இச்சையினாற் பிறந்தோம் இல்லை;

முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை;

மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே

வையத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய்!”

 

“The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”– Swami Vivekananda

 

பேய்கள் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“நெஞ்சு பொறுக்குகுதில்லையே—இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சிஅஞ்சிச் சாவார்—இவர்

அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!

வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த

மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;

அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்

துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.”

 

Be strong! Don’t talk of ghosts and devils. We are the living devils. The sign of life is strength and growth. The sign of death is weakness. Whatever is weak, avoid! It is death. If it is strength, go down into hell and get hold of it! There is salvation only for the brave.—–Swami Vivekananda

“அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டாரடீ—கிளியே

ஊமைச் சனங்களடி!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் இல்லா

மாக்களுக்கோர் கணமும்—கிளியே!

வாழத் தகுதி உண்டோ?”

****

பயம்தான் பேய்

“பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்

பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;

வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்

வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

 

மரணம் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு

அச்சமும் உண்டோடா?—மனமே!

தேன் மடை இங்கு திறந்தது கண்டு

தேக்கித் திரிவமடா!”

 

“Many times I have been in the Jaws of death, starving, footsore, and weary; for days and days I had had no food, and often could walk no farther; I would sink down under a tree, and life would seem to be ebbing away. I could not speak, I could scarcely think, but at last the mind reverted to the idea: “I have no fear nor death; never was I born, never did I die; I never hunger or thirst. I am it! I am it! The whole nature cannot crush me; it is my servant. Assert thy strength, thou Lord of lords and God of gods! Regain thy lost empire! Arise and walk and stop not! ” And I would rise up, reinvigorated; and here I am today, living! Thus, whenever darkness comes, assert the reality, and everything adverse must vanish.

Fear not, and it is banished. Crush it, and it vanishes. Stamp upon it, and it dies.”

Swami Vivekananda

 

“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்

அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்”

****

“சாகத் துணியிற் சமுத்திரம் எம்மட்டு

மாயையே—இந்தத்

தேகம் பொய் என்றுணர் தீரரை என்

செய்வாய்1—மாயையே”

****

“காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்

காலருகே வாடா—சற்றே உனை மிதிக்கிறேன்”

****

நிலவைப் பற்றிப் பாடும் பாடலில் கூட

“அச்சப் பேயைக் கொல்லும் படையாம்

வித்தைத் தேனில் விளயும் களியாய்

வாராய், நிலவே, வா” – என்று பாரதி பாடுகிறார்.

 

நீங்கள் பாரதிப் பித்தன் என்றால் கீழ்கண்ட தலைப்புகளையும் காண்க:

(1).சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (2).பாரதியுடன் 60 வினாடிகள் (3) பாரதி நினைவுகள் Go to nilacharal.com for items 2 and 3 (4) பாரதி பாட்டில் பழமொழிகள் (5) 60 second Interview with Swami Vivekananda

Pictures from Dinamalar and Facebook. Thanks. Contact: swami_48@yahoo.com

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!

பாரதி  (1882-1921) வாழ்க! வாழ்க!!

இன்று- செப்டம்பர் 11—பாரதி நினைவு தினம். அவரது பாடல் மனிதர்களை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்டவை. ஒன்றுக்கும் உதவாத உதிய மரம் போன்றவர்களை தேக்கு மரம் ஆக்கும் “பாசிடிவ்” கருத்துக்கள் உடையவை. சோர்வு, துயரம், சோம்பேறித்தனம் ஆகியவை அவனது வரிகளைப் படித்த மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி போல விலகிவிடும். சதா சர்வ காலமும் தமிழ் பற்றியும், இந்தியத் திரு நாடு பற்றியும், உலக மக்களின் உயர்வு பற்றியும், வேத வாழ்வு பற்றியும் சிந்தித்த தமிழ் சித்தன் பாரதி. தமிழுக்கு புது வடிவம் தந்த சிற்பி பாரதி. இதோ சில பொன் மொழிகள்:

1.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே—அதைத்

தொழுது படித்திடடி பாப்பா;

சேதமில்லாத ஹிந்துஸ்தானம்—இதைத்

தெய்வம் என்று கும்பிடடி பாப்பா.

உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்

தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்.

 

2.தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

3.இல்லை என்ற கொடுமை உலகில்

இல்லையாக வைப்பேன்

 

4.எல்லோரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா

உலகிற்களிக்கும்—ஆம்

இந்தியா உலகிற்கு அளிக்கும்.

5.உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்

 

6.தனி ஒருவனுக்கு உணவிலையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்.

7.மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

8.பாரத நாடு பார்க்கெல்லாம் திலகம்

நீரதன் புதல்வர் இன் நினைவு அகற்றாதீர்

 

9.நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல்

இமைப்பொழுதும் சோரதிருத்தல்

10.தோகை மேல் உலவும் கந்தன்

சுடர்க் கரத்து இருக்கும் வெற்றி

வாகையே சுமக்கும் வேலை

வணங்குவதே எமக்கு வேலை

11.வல்லமை தாராயோ, இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

12.மண்ணிலார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்

 

13. நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்

அதுவும் அற்றவர் வாய்ச் சொல் அருளீர்

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்

14.யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்;

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,

வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்

பூமிதனிலே யாங்கனுமே பிறந்த்தது இல்லை

உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை

 

15.காக்கை குருவி எங்கள் ஜாதி– நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசை எல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்

16. மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்;

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும்.

 

17.ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

அலையும் அறிவிலிகாள்—பல்

ஆயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வமுண்

டாம் எனல் கேளீரோ

18.பூட்டைத் திறப்பது கையாலே—நல்ல

மனந் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே—இன்ப

வீட்டைத்திறப்பது பெண்ணாலே

 

19.அன்பென்று கொட்டு முரசே—மக்கள்

அத்தனை பேரும் நிகராம்

இன்பங்கள் யாவும் பெருகும்—இங்கு

யாவரும் ஒன்று என்று கொண்டால்.

20.கட்டுண்டோம், பொறுத்திருப்போம்; காலம் மாறும்

தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.

*************

 

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்

 

எழுதியவர். சந்தானம் சுவாமிநாதன்

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பது பழமொழி. இதே போல போஜ ராஜன் ஆண்ட நாட்டில் எல்லோரும் கவி பாடுவார்கள் என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு.

போஜ ராஜன், அவனது ஆஸ்தான கவிஞன் காளிதாசன் ஆகியோர் மீது அடுத்த நாட்டு ராஜாவுக்கு பொறாமை. எப்படியும் போஜ ராஜனை மட்டம் தட்ட வேண்டும் என்று சொல்லி ஒரு தூதனை போஜனின் நாட்டுக்கு அனுப்பினான். போஜனின் நாட்டுக்கு வந்த தூதன், ஒரு தொலை தூர கிராமத்தில் வாழும் நெசவாளியைக் கூட்டிக் கொண்டு போஜனின் அரண்மனைக்கு வந்தான்.

“மன்னர் மன்னா ! உன் நாட்டில் சடு குடு விளையாடும் சிறுவர் முதல் குடு குடு கிழவி வரை எல்லோரும் கவி பாடுவார்கள் என்கிறீர்களே. இதோ இந்த நெசவாளி பாடுவானா? என்று கேட்டான். போஜ ராஜன் முகத்தில் புன் சிரிப்பு நெளிந்தது. கண்ணால் கோடி காட்டினான். அந்த நெசவாளி மிகவும் அடக்கமாக சம்ஸ்கிருதத்தில் பதில் தந்தான்.

“காவ்யம் கரோமி ந ஹி சாருதரம் கரோமி

யத்னாத் கரோமி யதி சாருதரம் கரோமி

பூபால மௌளி மணிமண்டித  பாத பீட

ஹே போஜராஜ கவயாமி வயாமி யாமி ”

இதன் பொருள்: நான் கவி பாடுவேன், ஆனால் நன்றாக பாட மாட்டேன். கொஞ்சம் முயற்சி பண்ணினால் கொஞ்சம் நன்றாக ஆகிவிடும். போஜ ராஜனே ! உனது காலடியில் இருக்கும் ரத்தினப் பலகையோ மாற்று நாட்டு மன்னர்களின் மணி முடியிலிருந்து செய்யப்பட்டது. நான் கவிதை செய்கிறேன், நெசவும் செய்கிறேன். இதோ உன் அனுமதியுடன் வெளியே போகிறேன்.

கவிதை செய்கிறேன் (கவயாமி) நெசவு செய்கிறேன் (வயாமி), வீட்டுக்குப் போகிறேன் (யாமி). கடைசி மூன்று வினைச் சொற்களில் தனது திறமை முழுவதையும் காட்டிவிட்டு சொந்த ஊருக்குப் பஞ்சாய் பறந்துவிட்டான்.

அடுத்த நாட்டு தூதனின் முகத்தில் அசடு வழிந்தது என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?

அன்பர்களே! சம்ஸ்கிருதம் ஒரு அற்புதமான மொழி. பசிபிக் மகா சமுத்திரம் அளவுக்கு பரந்தது, ஆழமானது. வேதம்,உபநிஷத், கீதை, உலகின் முதல் செக்ஸ் புத்தகம் காமசூத்திரம், உலகின் முதல் இலக்கண புத்தகம் பாணிணீயம், உலகிலேயே பழமையான மத புத்தகம் ரிக் வேதம், உலகிலேயே மிகப் பெரிய கதைப் புத்தகமான கதா சரித் சாகரம், உலகிலேயே முதல் அகராதியான அமர கோஷம், உலகின் உன்னத நாடக ஆசிரியன் காளிதாசனின் ஏழு நூல்கள், பல்லாயிரக் கணக்கான தனிப் பாடல்கள், உலகிலேயே மிக நீளமான நூலான மஹாபாரதம், ஏராளமான ரஹசியங்கள் அடங்கிய யோக, மருத்துவ, விஞ்ஞான நூல்கள்— இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதைக் கற்றுக் கசடற நின்றவர்கள் விரைவில் சூப்பர்மேன் ஆகிவிடுவார்கள் !!

இதே பொருளில் சுவாமிநாதன் எழுதிய வேறு கட்டுரைகள்:

  1. Largest story book in the World 2.சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம் 3.பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு 4 Ancient Sanskrit Inscriptions in strange places 5. Old Sanskrit Inscriptions in Mosques and Coins 6.  Sanskrit inscription and Magic Square on Tortoise 7.போஜராஜன் செய்த தந்திரம்

Contact: swami_48@yahoo.com  or swaminathan.santanam@gmail.com

 

 

பாரதி பாட்டில் பழமொழிகள்

தமிழ் மொழியில் இருக்கும் இருபதாயிரம் பழமொழிகளை 150 ஆண்டுகளுக்கு முன் மூன்று வெள்ளைக்காரர்கள் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டு அரிய பணியைச் செய்தனர். இன்னும் பத்தாயிரம் பழமொழிகள் பட்டியலிடப்படாமல் உள்ளன. மேலும் அவைகளை தலைப்பு வாரியாகத் தொகுக்க வேண்டும். பல சொற்களுக்கு இப்போதே பொருள் புரியவில்லை. இதே போக்கில் விட்டால் பிராமணர்களின் வேதங்களுக்கு எப்படி இன்று பொருள் சொல்ல முடியவில்லையோ அந்த கதி தமிழ்ப் பழமொழிகளுக்கும் எற்பட்டுவிடும். ராமர் கட்டிய பாலத்தில் அணிலும் சிறிது மண் போட்டு உதவியது போல நானும் ஏதோ சிறிய முயற்சிகளைச் செய்கிறேன்.
பழமொழிகளைப் பயன்படுத்தாத தமிழர்களைக் காண்பது அபூர்வம். வீட்டில் புரோகிதம் செய்துவைக்கும் புரோகிதர்கள் முதல் ரோட்டில் வடை சுட்டு விற்கும் கிழவிகள் வரை தமிழ்ப் பழமொழிகளைப் பயன் படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். சங்க இலக்கியமானாலும் சரி, கம்பன் பாடல் ஆனாலும் சரி பழமொழிகளைக் காணலாம். இந்தச் சிறிய கட்டுரையில் பாரதி பாடல்களில் கண்ட சில பழமொழிகளைக் காணலாம்.

1) எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தாரன்றே பூமி ஆள்வார்;

2) உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்று அறியீரோ- உணர்ச்சி கெட்டீர்!
பண்டாய்ச்சி ஔவை அன்னையும் பிதாவும்
பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ?

3) காற்றுள்ளபோதே நாம் தூற்றிக் கொள்வோம்
கனமான குருவை எதிர் கொண்டபோதே

4) கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காடும் மறாஇகள் எல்லாம்—நீவிர்
அவலை நினைந்து உமி மெல்லுதல் போல் இங்கு
அவங்கள் புரிவீரோ

5) சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும்
செய்தி அறியாயோ—நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?

6) பெண் என்று சொல்லிடிலோ—ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே நினது
என்னம் இரங்காதோ

7) பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்

8) கை வைத்தது பசும்பொன் ஆகுமே—பின்பு
காலின் பயம் ஒழிந்து போகுமே

9) சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்
அரக்கர் தம் குலத்திடை வீடணனாகவும்
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்

10) வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்
வெயிலுள்ள போதிலே உலர்த்திக் கொள்வோம்
11) நரி வகுத்த வலையினிலே சிங்கம் தெரிந்து
நழுவி விழும்;சிற்றெறும்பால் யானை சாகும்;
வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்

12) சென்றதினி மீளாது, மூடரே
(போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்)

13) தாழ்வு பிறர்க்கென்னத் தான் அழிவான் என்ற
சாத்திரம் கேளாயோ (கெடுவான் கேடு நினைப்பான்)

பழமொழி ஆராய்ச்சி செய்பவர்கள் என்னுடைய பிளாக்—கில் பின்வரும் கட்டுரைகளைப் படிக்கலாம்:
பழமொழிகளில் இந்துமதம்
இந்துமதம் பற்றி 200 பழமொழிகள்
20000 தமிழ் பழமொழிகள்
ஒன்றுக்கும் உதவா உதிய மரமே !
உடம்பைக் கடம்பால் அடி!
Amazing collection of 20,000 Tamil Proverbs
******************

கம்பனுடன் 60 வினாடிப் பேட்டி

(கேள்விகள் ச. சுவாமிநாதனின் கற்பனை, பதில்கள் உண்மை)

கேள்வி: கம்பரே நீர் வணங்கும் கடவுள் யார்?

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா

அலகு இலா விளையாடு உடையார்- அவர்

தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே

கேள்வி: எவ்வளவோ ராமாயணம் இருக்கும்போது தாங்களும் பாடிய காரணம்?

ஆசைபற்றி அறையலுற்றேன் மற்றிக்

காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ!

கேள்வி: உமது ஆசை நியாயமான ஆசையே உம்மை விட இராமன் புகழ் பாட வேறு யாருக்கு அருகதை? அது சரி, முதலில் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்:

பல என்று உரைக்கின் பலவே ஆம்:

அன்றே என்னின் அன்றே அம்:

ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம்:

இன்றே என்னின் இன்றே ஆம்

உளது என்று உரைக்கின் உளதே ஆம்

நன்றே நம்பி குடி வாழ்க்கை!

நமக்கு இங்கு என்னோ பிழைப்பு? அம்மா!

(கடவுள் வாழ்த்து,யுத்தகாண்டம்)

கேள்வி: கோசலநாட்டில் உண்மை கூட இல்லையாமே!

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;

திண்மை இல்லை, நேர் செறுநர் இன்மையால்;

உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;

ஒண்மை இல்லை,பல் கேள்வி ஒங்கலால்.

கேள்வி: தாங்கள் ராமனைப் போற்றுவது ஏன்?

இனிய சொல்லினன்: ஈகையன்: எண்ணினன்:

வினையன்: தூயன்: விழுமியன்: வென்றியன்:

நினையும் நீதி கடவான் எனின்,

அனைய மன்னர்க்கு அழிவும் உண்டாம் கொலோ?

கேள்வி: ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான் என்ற பழமொழிக்குக் காரணம் என்னவோ?

“வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்

“இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்

சிந்தையாலும் தொடேன்” என்ற செவ்வரம்

தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய்

கேள்வி: அட, ராமன் ஏக பத்னி விரதன் என்று சீதையே சர்ட்டிபிகேட் கொடுத்துவிட்டாளா? யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்பது ராமனின் கொள்கையாமே?

குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு:பின் குன்று சூழ்வான்

மகனொடும் அறுவர் ஆனேம்:எம்முறை அன்பின் வந்த

அகனமர்க் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்!

புகலருங் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை! (6-4-143)

கேள்வி: வீடணனை நீர் ஏழாவது தம்பியாக ஏற்றது உலகம் காணாத புதுமை.

சூர்ப்பணகை, சீதை பற்றி உங்கள் மதிப்பீடு?

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்

செஞ்செவிய கஞ்ச நிமிர் சீறடியளாகி

அஞ்சொலின மஞ்சையென அன்னம் என மின்னும்

வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் (சூர்ப்பணகை)

அமிழ்தின் வந்த அமிழ்து (6-3935), அருந்ததி கற்பின் தேவி (5-468),அழ்கினுக்கு அழகு செய்தாள் (4-899) கருந்தடங் கண்ணீனாள்(4-417),

கரும்பு உண்ட சொல்(3-908), சிந்துரப் பவளச் செவ்வாயாள் (6-3938)

கற்பினுக்கு அணி (5-1269), தண்டமிழ் யாழினும் இனிய சொற்கிளி (2-774) (சீதை)

கேள்வி: அற்புதம்! கொடுமையான கைகேயியின் வார்த்தைகளைக் கூட மென்மையான அழகான சொற்களில் கவிதையாகப் புனைந்த பெரும் கவிஞர் அல்லவா நீவீர்?

“ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்,

தாழ் இருஞ் சடைகள் தாங்கி,, அருந்தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ் இரண்டு ஆண்டின் வா” என்று இயம்பினன் அரசன் என்றாள்.

கேள்வி: நன்றி, சதிகாரக் கைகேயி இந்த வார்த்தைகளை அரசன் தசரதன் மீது சுமத்தி விட்டாளா? பரதனை 1000 ராமனுக்கும் மேலானவன் என்று புகழ்ந்தீர்களா?

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை

தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி

போயினை என்ற போழ்து, புகழினோய் தண்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா

கேள்வி: அனுமன் பேசத்தெரிந்தவனாமே?

இல்லாத உலகத்து எங்கும் ஈங்கிவன் இசைகள் கூறக்

கல்லாத கலையும் வேதக் கடலுமே-எனும் காட்சி

சொல்லாலே தோன்றிற்றன்றோ யார் கொல் இச் சொல்லின் செல்வன்

வில்லார் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடை வலானோ?

கேள்வி: இராமனின் சஸ்பென்ஸைப் போக்க அனுமன் ஏதோ அழகாகப் பேசினாராமே?

கண்டெனென், கற்பினுக்கு அணியை, கண்களால்

தெண் திரை அலை கடல் இலங்கைத் தென் நகர்;

அண்டர் நாயக! இனி, துறத்தி, ஐயமும்

பண்டு உள துயரும்’ என்று, அனுமன் பன்னுவான்

கேள்வி: எங்கள் கவிஞர் கண்ணதாசன் பயன்படுத்திய உமது பாட்டு என்னவோ?

மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்

கைவண்ணம் அங்கு கண்டேன்: கால் வண்ணம் இங்கு கண்டேன்

கேள்வி: தாடகை வதத்தையும் அகலியையின் சாப விமோசனத்தையும் வண்ணச் சொற்களால் அலங்கரித்துவிட்டீர். போகட்டும், அகத்தியனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

உழக்கும் மறை நாலினும், உயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும், மதிக் கவியினும், மரபின் நாடி

நிழல்பொலி கணிச்சி மணி எற்றி உமிழ் செங்கண்

தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ்_தந்தவர் (2671)

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தவர் (2666)

கேள்வி: கண்டதும் காதலில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு போலும்!

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி,

கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான் ;அவளும் நோக்கினாள்

கேள்வி: போர்க்களத்தில் கூட ராமன் காட்டிய உயரிய பண்பு?

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா’ என நல்கினந்-நாகு இளம் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்

கேள்வி: அது சரி,பெண்களை இப்படி மட்டம் தட்டலாமா?

தூமகேது புவிக்கெனத் தோன்றிய

வாம மேகலை மங்கையரால் வரும்

காமம் இல்லை எனின் கடுங்கேடு எனும்

நாமம் இல்லை:நரகமும் இல்லை

கேள்வி: புரிகிறது,புரிகிறது, கண்மூடித்தனமான காமம் கூடாது.

நன்றி மறக்காமல் சடையப்ப வள்ளலைப் போற்றிப் புகழ்ந்து தள்ளுகிறீர்களாமே?

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடை வாள் ஏந்தப்

பரதன் வெண் குடை கவிப்ப இருவரும் கவரி கற்ற

விரை செறி குழலி ஓங்க வெண்ணெய்மன் சடையன் வண்மை

மரபுளோன் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி (10327)

நன்றி, கம்பரே உமக்கு 60 நொடிகள் என்ன, 60 நாட்கள் கொடுத்தாலும் எம் மக்கள் ரசிப்பார்கள்.அற்புதமான, அழகான கவிதைகள்!!!