நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி

Pasupathinath Temple at Kathmandu, Nepal

எழுதியவர்: ச.நாகராஜன் 

 

வானவியல், கணித, ஜோதிட மேதை

 

ஸ்ரீபதி புதிய பாதையை ஜோதிடர்களுக்குக் காண்பித்த மகா மேதை! இவர் வாழ்ந்த காலம் கி.பி.1019 முதல் 1066 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீபதியின் தந்தையார் பெயர் நாகதேவர். நாகதேவரின் தந்தையாரான கேசவரும் ஒரு ஜோதிட மேதை தான். பிரபல ஜோதிட மேதையான லல்லரின் ஜோதிட நூல்களைக் கற்றுத் தேர்ந்த  ஸ்ரீபதி பெரும் வானவியல் நிபுணராகவும் கணித மேதையாகவும் ஜோதிடத்தில் புது நெறி காட்டும் புரவலராகவும் திகழ்ந்தார். கோளங்களைப் பற்றிய இவரது ஆராய்ச்சி குறிப்பிடத் தகுந்தது.

 

 

நேபாளத்தை சேர்ந்தவர்

துருவ மானஸம் (1056ல் எழுதியது) என்னும் நூலில் இவர் தன்னைப் பற்றிக் கூறுகையில்,”நேபாளத்தைச் சேர்ந்த கபிலவாஸ்துவில் ரோஹிணி நதி பாயும் ஊர் எங்களது ஊர்” எனக் குறிப்பிடுகிறார்.இந்த நூல் 105 செய்யுள்களைக் கொண்டது. இதில் கிரகங்களிருக்கும் நிலைகள், செல்லும் பாதை, கிரகணங்கள் ஆகியவை நன்கு விளக்கப்பட்டுள்ளன.நாளுக்கு நாள் இவர் புகழ் பாரதமெங்கு பரவியது. மூன்று ஸ்கந்தங்களிலும் வல்லவரான இவர் பல அரிய நூல்களை இயற்றினார். ஆகவே இவரை மரியாதையாக அனைவரும் ஸ்ரீபதி பட்டர் என அழைக்கலாயினர்.

Another View of the Paupathinath Temple

ஸ்ரீபதி பத்ததி

ஜோதிடர்களுக்கு சவாலான ஒரு விஷயம் பாவம் மற்றும் ராசி சந்திகளில் இருக்கும் கிரகங்களின் பலத்தை நிர்ணயிப்பது தான். பராசரர் வழியிலிருந்து மாறி இவர் புது பத்ததியை உருவாக்கினார். இதன் படி பத்தாம் இடத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி அதையொட்டி பல புதிய பாதைகளை சுட்டிக் காட்டினார். இந்த பத்ததி (வழிமுறை) கற்பதற்கு மிகவும் கடினமானது. என்றாலும் கூட  மிகவும் பிரபலமானது.ஜாதக பத்ததி அல்லது ஸ்ரீபதிபத்ததி என்ற பெயரால் இது சிறப்புற அழைக்கப்பெற்று ஜோதிடர்களின் மனம் கவர்ந்த நூலாக இன்று விளங்குகிறது.

 

 

ஸ்ரீபதியின் இதர நூல்கள்

வராஹமிஹிரரின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்தன. அவரை வியந்து போற்றி அவர் பாதையில் தான் ஒரு வழி நூலையும் இயற்றினார். இவரது சித்தாந்தசேகரம் என்ற அரிய வானவியல் நூல் 19 அத்தியாயங்களைக் கொண்டது. 125 செய்யுள்களைக் கொண்ட இவரது கணிததிலகா பூர்த்தியாகாத ஒரு நூல்.ஜோதிட மேதை ஸ்ரீதரரின் நூலை ஒட்டி அவர் இதை எழுதத் தொடங்கினார்.இதன் 14ம் அத்தியாயத்தில் அல்ஜீப்ராவின் பல்வேறு சமன்பாடுகளையும் சூத்திரங்களையும் அவர் அன்றே விளக்கி இருப்பதைக் காணும் மேலை நாட்டார் இன்று வியந்து அவரைப் போற்றுகின்றனர்.திக்கோதிதகரணம் (1039ல் எழுதியது) சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றி 20 செய்யுள்களில் விளக்குகிறது.20அத்தியாயங்கள் கொண்ட ஜ்யோதிஷ ரத்னமாலா லல்லரின் ஜ்யோதிஷரத்னகோசத்தைத் தழுவி இவரால் எழுதப்பட்டது. இந்த நூலுக்கு மராத்தியமொழியில் இவர் ஒரு விளக்க உரையையும் எழுதினார். மராத்திய மொழியின் புராதன நூலாக இது இலங்குகிறது.ரத்னமாலையில் இவர் மக்களைப் பரிவுடன் அழைக்கும் பாங்கு வியந்து போற்றுதற்கு உரியது.

 

 

மறைந்த நூல்கள் பல    

ஸ்ரீபதி எழுதிய பல நூல்கள் மறைந்து விட்டன. பீஜ கணிதம் போன்ற இவரது சிறந்த நூல்கள் இன்று காணக் கிடைக்கவில்லை.(என்றாலும் கூட கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருந்த கிருஷ்ணமிசிரர் என்னும் அந்தணர் இவரது அரிய நூலான சித்தாந்த சேகர விவரணத்தை வியாக்யானத்தோடு முதல் 4 அத்தியாயம் 75 சுலோகங்கள் வரை அச்சிட்டுள்ளார்.)

 

ஜோதிடத்தில் ஒரு சுவாரசியமான திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு பத்ததியை உருவாக்கி புது வழி காட்டியவர் ஸ்ரீபதி என்பதால் இவரது நூல்களை ஜோதிட ஆர்வலர்கள் மிகவும் ஆர்வத்துடன் தேடிக் கற்று வருகின்றனர்.

******************

கலியுக முடிவு பற்றி லிங்க புராணம்

முன்னர் வெளியான சந்தானம் சுவாமிநாதன் கட்டுரைகள்: (1) டிசம்பர் 21ஆம் தேதி உலகம் அழியுமா? (2) “உலக அழிவு” பற்றி மகா பாரதம். இவ் வரிசையில் இதோ மூன்றாவது கட்டுரை:

 

கலியுக முடிவு பற்றி லிங்க புராணம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:

1.திருடர்கள் மன்னர்கள் ஆகிவிடுவர். மன்னர்கள் திருடர்கள் ஆகிவிடுவர்.

2.மக்களின் சொத்துக்களை ஆட்சியாளர்கள் பறிமுதல் செய்து அதைக் கெட்ட வழியில் செலவிடுவர்.

3.கொஞ்சம் படித்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் பெரிய சாமியார்களாகக் கருதப்படுவர்.

4.நிறைய நாடோடிகள் (அகதிகள்?) நாடு நாடாகச் செல்வர்.

5.தாய்மார்களின் கர்ப்பத்திலேயே கருக்கள் அழிக்கப்படும்

6. கோர மிருகங்களின் தொல்லைகள் அதிகரிக்கும்

7.மக்கள் தவறான முடிவுகளுக்கு ஜே போடுவார்கள்

8.ஒருவரை ஒருவர் நம்பமாட்டார்கள். பொறாமை அதிகரிக்கும்.

9.ஆயுட்காலம் குறையும். பலர் 16 வயதி இறப்பார்கள்.

10.பசி, பிணி இவற்றால் கஷ்டப்படுவோர் பூமிக்கடியில் வசிப்பார்கள்.

11.இளம் பெண்கள் கற்பை விலை பேசுவார்கள்

12. மழைக்கான அதிபதி கண்ட கண்ட இடங்களில் கண்ட கண்ட காலங்களில் மழையைக் கொட்டுவான்.

13.கடைக்காரர்கள் கொள்ளை லாபம் அடிப்பர்.

14.கடுமையான, அசிங்கமான மொழி பயன்படுத்தப்படும்

15.பிச்சைக்காரர்கள், வேலை இல்லாதோர் அதிகரிப்பர்

16.ஆட்சியாலர்கள் மக்களுக்கு பாதுகாப்பு வழங்காமல் மக்களின் செல்வத்தை வரிகள் மூலம் பறிப்பதில் குறியாக இருப்பர்.

17.பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக இருக்கும். வேறு லட்சியம் அதுவும் இல்லாமல் பானக்காரர்களின் சொல் கேட்பர்.

18.தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.

19.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்கப்படும்.

லிங்க புராணம் எழுதப்பட்டு 1500 ஆண்டுகட்கு மேலாகிவிட்டது. அப்போதே இப்படி உலகம் தறிகெட்டுப் போகும் என்று எப்படிக் கண்டுபிடித்தனர்? ஞானிகளின் த்ரிகால ஞானம் (முக்காலப் பார்வை) என்றே சொல்ல வேண்டும்.

Contact swami_48@yahoo.com

 

“உலக அழிவு” பற்றி மகாபாரதம்

மகா பாரதத்தில் இல்லாதது எதுவும் இல்லை. “வ்யாச்சோசிஷ்டம் ஜகத் சர்வம்” என்பது பெரியோர் வாக்கு. அதாவது வியாச முனிவரின் எச்சில்தான் இந்த உலகம் முழுதும். அவர் வாயில் விழாத சப்ஜெக்ட் (விடயம்) இப்பூவுலகில் எதுவும் இல்லை. முன்னரே வெளி உலக வாசிகள் பற்றியும், பீஷ்மரின் ஊசி மருத்துவம் (அக்யுபன்க்சர்) பற்றியும் காலப் பயணம் பற்றியும் (டைம் ட்ராவல்) தனித் தனி கட்டுரைகள் எழுதிவிட்டேன்.

இப்பொழுது மாயன் காலண்டரில் உலக அழிவு பற்றி இருப்பதாக வதந்தி கிளம்பி இருப்பதால் எல்லோருக்கும் இதில் ஆர்வம் பிறந்திருக்கிறது. மகாபாரதம் கலியுக முடிவு பற்றி என்ன சொல்லி இருக்கிறது எனபதைச் சொல்லுகிறேன். பல இடங்களில் உலக முடிவு பற்றிப் பேசப்பட்டாலும் வன பர்வத்தில் கலியுகத்தின் இறுதிக் காலம் பற்றி விரிவாகக் காணலாம்.

நம்மைப் போலவே பாண்டவர்களில் மூத்தவரான தர்மருக்கும் இதில் ஆர்வம் இருந்திருக்கிறது. இது ஒரு அதிசயமான, ஆர்வமூட்டும் விஷயம் என்று பீடிகை போட்டுவிட்டு, மார்க்கண்டேய முனிவரிடம் கீழ்கண்ட கேள்விகளைக் கேட்கிறார் தர்மர்:

தர்மங்களும் நற்குணங்களும் அழிந்தபின்னர் என்ன நடக்கும்? அப்போது மனிதர்கள் என்ன உண்ணுவார்கள், எப்படிப் பொழுதைக் கழிப்பார்கள்?, அவர்கள் எந்த அளவுக்கு பலம் உடையவர்களாக இருப்பர்? கலியுகம் முடிந்த பின்னர் கிருத யுகம் துவங்குமா?

(தர்மரின் கேள்விகளை இந்தக் காலத்தில் படிக்கும்போது நம் முன்னோர்கள் எவ்வளவு தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று எண்ணி வியக்க வேண்டியுள்ளது. அன்றாட உப்பு ,புளி, மிளகு பற்றிப் பேசாமல் இந்தப் பூவுலகின் தோற்றம், முன்னேற்றம், முடிவு குறித்து சிந்திப்பதை வேறு எங்கும் காண முடியாது. இந்துப் புராணங்களிலும் மகாபாரதத்திலும் மட்டுமே காண முடியும்)

மார்கண்டேய முனிவரின் பதிலில் உள்ள ‘பாயிண்டு’களை மட்டும் பார்ப்போம்:

1.கிருத (சத்திய) யுகத்தில் ஏமாற்று, மோசடி, பேராசை, பொய் கிடையாது. அப்போது தர்மம் என்னும் மாட்டுக்கு நான்கு கால்கள் இருந்தன. திரேதா யுகத்தில் பாவங்கள், ஒரு காலை வெட்டிவிட்டன. அடுத்த தூவாபர யுகத்தில் பாவங்கள் பெருகி அறம் அழியவே தர்மத்துக்கு இரண்டு கால்கள் மட்டுமே எஞ்சின. கலியுகத்திலோ இது ஒரே கால் ஆகிவிடும்.

2.ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் உடல் பலம், ஆன்ம பலம், புத்தி ஆகியன குறைந்து கொண்டே வரும். கலியுகத்தில் நான்கு வருணத்தாரும் பொய்யாக ஆசார அனுஷடானங்களைப் பின்பற்றுவர். ஒருவரை ஒருவர் ஏமாற்றுவர். போலி அறிஞர்கள் பொய்மை வாதத்தால் உண்மையை மறைப்பர். ஆயுள் குறைவால அதிகம் கற்க முடியாது. கல்விக் குறைவால் விவேகம் வராது. பேராசை, காமம், கோபம், அறியாமை ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் வஞ்சிப்பர். முதல் மூன்று ஜாதியினர் நாலாவது ஜாதி அளவுக்கு தாழ்ந்து விடுவர்.

3.மீன், ஆடு முதலிய உணவு அதிகரிக்கும். பசுமாடுகள் குறைந்துவிடும். ஆசை காரணமாக ஒருவரை ஒருவர் கொல்லுவர். மனைவியர் நண்பர்கள் போல இருப்பார்கள். திருடர்கள், நாஸ்தீகர்கள் அதிகரிப்பர். தானியங்கள் விளையாமையால் ஆறுகளிலும் ஏரிகளிலும் இறங்கி பயிர் செய்வர். அப்படியும் வறண்ட பூமியாகவே இருக்கும்

4. அப்பன் , மகன் சொத்தையும், மகன் அப்பன் சொத்தையும் அபகரிப்பன். சாஸ்திர விதிகளுக்குப் புறம்பான விஷயங்களை அனுபவிப்பர். பிராமணர்கள் வேதங்களை நிந்திப்பர்.. ஹோமம் முதலியவற்றைப் பின்பற்றார்.

5.மிலேச்சர் போன்று நடக்கத் துவங்குவர். யாக யக்ஞங்கள் நடக்காது. மகிழ்ச்சி குறையும். பலமும் அறிவும் குறையும் ஒருவர் ஒருவருடன் வாதிடுவர். காக்கும் தொழிலில் உள்ளவர்கள் தண்டனை அளிப்பதில் மட்டும் கருத்தைச் செலுத்துவர். அவர்கள் நேர்மையான மக்களையும் அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்களையும் அபகரிப்பர்.

6. மனைவிமார்கள், கணவனுக்கு பணிவிடை செய்யார். பார்லி, கோதுமை விளையும் நாடுகளை நோக்கி மக்கள் செல்லுவர். ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் மதியார். வருண வேறுபாடுகள் அகன்று எல்லோரும் ஒரே மாதிரி இருப்பர். தோட்டங்களையும் மரங்களையும் அழிப்பர்.ஐயோ போன்ற கதறல்கள் அதிகரிக்கும்.

கல்கி அவதாரம்

7. சூரியன், சந்திரன், குரு மூவரும் புஷ்ய நட்சத்திரத்துடன் ஒரே ராசியில் பிரவேசிக்கையில் புதிய கிருத யுகம் துவங்கும். (பீஷ்ம பர்வத்தில் ஓரிடத்தில் யுக முடிவில் சந்திரனை ஐந்து கிரகங்கள் பீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நிறைய கிரகங்கள் ஒரே ராசியில் சேருவது பொதுவாக நன்மை இல்லை என்பது கருத்து.)

இந்த நேரத்தில் சம்பல என்னும் ஊரில் ஒரு பிராமணர் குடும்பத்தில் கல்கி அவதரிப்பார். அவர் விஷ்ணுவின் புகழ் பாடுவார். தீயோரை அழித்து நல்லோரைக் காப்பாற்றுவார். அவர் பிறந்த பின்னர் பூமி எங்கும் மழையும் சுபிட்சமும் அமைதியும் நல்லாட்சியும் நிலைபெறும். அவர் கிருதயுகத்தைத் துவக்கிவைப்பார். அவர் துராசாரம் மிக்க மிலேச்சர்கள் அனைவரையும் ஒழிப்பார். அவர் மன்னர்களுக்கெல்லாம் மன்னராக விளங்குவார். அவர் நினைத்த மாத்திரத்தில் ஆயுதங்களும் படை பலமும் வந்து குவியும். கல்கி என்பவர் மகா பலவானாகவும், புத்திமானாகவும், குணவானாகவும், தேஜோமயமாகவும் ஜொலிப்பார். (வேறு சில புராணங்களில் அவர் வெண் புரவியில் (வெள்ளைக் குதிரை) பவனி வருவார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது).

 

8. உலக அழிவின்போது ஏற்படும் இயற்கைச் சீற்ற வருணணைகளைப் படிக்கையில் பூகம்பம், கடல் சீற்றம், சுனாமி, பெருந்தீ, வறட்சி, வெள்ளம், எரிமலைச் சீற்றம், விண்கல் வீச்சு —ஆகிய எல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆக முன்னோர்களும் தர்மம் குன்றும் போது இயற்கையும் மாறுபடும் என்று எதிர்பார்க்கின்றனர்.

9. இவை எதுவும் நாளையே நடைபெறப் போவதில்லை. ஆனால் சில விஷயங்கள் இப்போதே நடப்பதை மறுப்பதற்குமில்லை. இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பின் இதே வன பர்வத்தைப் படித்து புது அர்த்தம் ஏதேனும் புலப்படுகிறதா என்பதைப் பார்ப்போம்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்; வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவில்லை

-திரு ஞான சம்பந்தர்

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில், தேன் கடம்பின்

மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்; மாமயிலோன்

வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்; அவன்

கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கை எழுத்தே

-அருணகிரிநாதர்

சந்தானம் சுவாமிநாதன் எழுதிய இவைகளையும் காண்க:

(1)பழமொழியில் இந்துமதம் (2) Do Hindus Believe in E.T.s and Aliens? (3)Bhishma: First Man to Practise Acupuncture (4) Great Engineers of Ancient India 5) டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியுமா?

மாமன்னன் வல்லாளன் எழுதிய அற்புத நூல்!

Picture shows Edilpur Copper Plate of Sena Dynasty

மாமன்னன் வல்லாளன் எழுதிய அற்புத நூல்!

By ச.நாகராஜன் 

 

வங்க மன்னன் வல்லாளன் 

வங்காளத்தை ஆண்ட ஒரு மா மன்னன் நாட்டை ஆளுவதில்  வல்லவனாக இருந்ததோடு ஜோதிடத்திலும் வல்லவனாக இருந்தான் என்றால் ஆச்சரியமான விஷயம் தானே அது! சேனர் வமிசத்தைச் சேர்ந்த மன்னன் வல்லாள சேனன் (கி.பி.1160 முதல் 1178ம் ஆண்டு முடிய அரசாண்டவன் ) பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவன்.பகைவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன்.அவனைப் பற்றிய தாமிரச் செப்பேடுகள் அவன் புகழைப் பாடுகின்றன.மகதத்தில் நிகழ்ந்த போரில் பால வமிசத்தைச் சேர்ந்த மன்னர்களை அவன் வென்றான்.வல்லாள சேனரின் தந்தையான விஜய சேனர் அரசாண்ட போதே வல்லாளன் மிதிலைக்கு எதிரான போரில் அவருடன் சென்று வெற்றிக் கொடியை நாட்டினான். சாளுக்கிய ராணியான ராம்தேவியை மணம் புரிந்து கொண்டான்.

 

தன சாகரம் மற்றும் அற்புத சாகரம் 

வல்லாளன் பல் கலை வித்தகன். பேரறிஞன். ஜோதிடத்தில் புலி. சிறந்த சிவ பக்தன்.தனசாகர் என்ற நூலை 1168ம் ஆண்டு அவன் இயற்றினான். அடுத்து அற்புத சாகரம் என்ற ஜோதிட நூலை 1169ம் ஆண்டு எழுதலானான். ஆனால் அபூர்வமான இந்த நூல் முற்றுப் பெறவில்லை.18 ஆண்டுகள் நாட்டைத் திறம்பட ஆண்ட வல்லாளன் இறுதிக் காலத்தில் தன் மகன் லக்ஷ்மண சேனரிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்து விட்டு தன் மனைவியுடன் திரிவேணி சங்கமத்தின் அருகே கங்கைக் கரையில் அழகுற ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கி இருந்தான். இப்போதைய பங்களா தேஷில் டாக்காவில் உள்ள தாகேஸ்வரி ஆலயத்தை நிர்மாணித்தவன் இவனே என்று ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றனர்.தனக்கு முன்னால் ஜோதிடத்தில் வல்லவர்களாக இருந்த அனைத்து ரிஷிகள், மேதைகள் ஆகியோரின் நூல்கள் அனைத்தையும் வல்லாளன் முதலில் கற்றுத் தேர்ந்தான். பின்னர் தான் கண்டு பிடித்த அரிய முத்தான கருத்துகளைத் தொகுத்து அற்புத சாகரம் என்ற நூலை எழுதலானான்.

 

அற்புத சாகரம்

 பராசரர்,காஸ்யபர்,கர்கர்,வராஹமிஹிரர்,ரிஷிபுத்திரர்,வஸந்தராஜர்,  பிரம்மகுப்தர், பட்ட பலபத்ரா உள்ளிட்ட ஏராளமான மேதைகளை வல்லாளன் குறிப்பிடுவதால் இவன் அத்துணை பேரையும் நன்கு அறிந்தவன், அவர்களின் நூல்களைக் கரைத்துக் குடித்தவன் என்பது தெளிவாக விளங்குகிறது!தனது புதுமையான நூலின் அத்தியாயங்களுக்கு அத்தியாயம் என்றோ அதிகாரம் என்றோ பெயர்களைச் சூட்டாமல் சுழல் என்று பெயரைச் சூட்டினான் வல்லாளன். இதன் படி இவனது அற்புத சாகரத்தில் பூனைச் சுழல், நாய்ச் சுழல், நரிச் சுழல்,பல்லிச் சுழல், எறும்புச் சுழல், பறவைச் சுழல்,ஈச் சுழல், கொதுகுச் சுழல், சிலந்திச் சுழல், வண்டுச் சுழல், தவளைச் சுழல், கருங்குருவிச் சுழல்,கிருஷ்ணபட்சிச் சுழல், காகச் சுழல், இடிச் சுழல், பரிதி வட்டச் சுழல் என்பன போன்ற சுழல்கள் ஏராளம் உள்ளன். ஒவ்வொரு சுழலும் ஏன் ஏற்படுகிறது,அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப நவ கிரகங்கள் தரும் பலன்கள் என்னென்ன என்பனவற்றை அவன் விளக்கும் விதமே சுவாரசியமானது! சப்தரிஷி மண்டலத்தின் தோற்றத்தையும் வல்லாளன் அழகுற விவரிக்கிறான். பூமி, ராகு, கேதுக்கள் பற்றிய இவனது ஆராய்ச்சி பல புதிய உண்மைகளை விளக்குகிறது.

 

ஜோதிடத்தில் ஒரு மா மன்னன் ஆர்வம் உடையவனாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் அதில் வல்லவனாகி ஆராய்ச்சிகள் செய்து புதிய பாணியில் சிறந்த கருத்துக்களைக் கொண்ட ஒரு நூலை எழுதியது தான் அற்புதமான விஷயமாக ஆகிறது. அற்புத சாகரத்தை எழுதிய மன்னன் அற்புத மன்னனே எனச் சொல்ல வைக்கிறது.

 

My brother S Nagarajan’s other articles on Astrology, Astrologers and Astronomers are available on this blog. Please read them: swami.

Contact swami_48@yahoo.com

 

****************

தக்காளி ரசத்தின் மகிமை

 

தமிழர்களின் சாப்பாட்டில் சாம்பார், ரசம், தயிர்/மோர் என்று மூன்று ‘கோர்ஸ்’ உணவு இருக்கும். இன்றும் தமிழ்நாட்டு ஹோட்டல்களில் இதே முறை பின்பற்றப்படுகிறது. கல்யாணச் சாப்பாடுகளிலும் இதுதான் பிரதானம். சப்பாத்தி, பரொட்டா போன்றவை எல்லாம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை. கூட்டு, காய்கறிகள் மற்ற வெஞ்சனம் (சைட் டிஷ்) ஆகும். தமிழ் பிராமணர் வீடுகளில் இன்றும் இதே வழக்கம் நீடிக்கிறது. இந்த தக்காளி புற்றுநோயை ஒழித்துவிடும் என்று இப்போது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

தக்காளிக்கு சிவப்பு நிறம் கிடைக்க உதவுவது லைகோபின் என்னும் ஒரு பொருளாகும். இது புற்றுநோயின் எதிரி. அதாவது புற்று நோய் செல்களுக்கான ரத்த சப்ளையத் தடுத்துவிடுகிறது. இதை பிரிட்டனில் போர்ட்மவுத் பல்கலைக்கழகத்தில் பார்மஸி பிரிவைச் சேர்ந்த ம்ருதுலா சோப்ராவும் அவருடைய சகாக்களும் கண்டுபிடித்தனர். சமைக்கப்பட்ட தக்காளி நன்கு வேலை செய்கிறது. புற்றுநோய் செல்கள் ரத்த ஓட்டத்தைக் கடத்திச் சென்று தங்களுக்குப் பயன்படுத்தும். அதை தக்காளியின் லைகோபின் தடுக்கிறது அல்லது மெதுவாகச் செயல்படவைக்கிறது.

சோதனைச் சாலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி மனித உடலிலும் நடைபெறுகிறதா என்பதை அடுத்து ஆராயப்போகிறார்கள்.அவர்கள் முடிவை அறிவிப்பதற்கு முன்னால் நானே சொல்லிவிடுகிறேன். தமிழர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகச் சாப்பிடுவதன் காரணமே அதன் மருத்துவ குணத்தால்தானே.

தக்காளியை 2500 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்க அஸ்டெக் (ஆஸ்தீக) நாகரீக மக்கள் கண்டுபிடித்தனர். பிறகு ஸ்பானியர்கள் இதை இலகம் முழுதும் கொண்டுசென்றனர். பிரிட்டிஷார் மூலம் நமக்கும் 300 ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்தது.

 

If you are a health freak, please read also other posts by Santanam Swaminathan:

1.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 2.நெல்லிக்காய் மகிமை: அவ்வையாரும் ஆல்பிரூனியும் அலெக்சாண்டரும் 3.வடக்கே தலை வைக்காதே 4. Amazing Medical Knowledge of Tamils 5. Why do Hindus practise Homeopathy? 6. Hindu Wisdom: Copper Kills Bacteria 7. Copper kills Cancer 8. How did a Pandya King get a Golden Hand?

யானைக் காப்பி:கோப்பை £30 (ரூ.2500)

 

லண்டன் பத்திரிக்கைகள் ஒரு சுவையான செய்தி வெளி யிட்டிருக்கின்றன. யானையின் ஆசன வாயிலிருந்து வரும் காப்பிக் கொட்டையை வறுத்து தயாரிகும் காப்பி இது. படிக்க கொஞ்சம் அறுவெறுப்பாக இருந்தாலும் குடிக்கச் சுவையாக இருக்குமாம். ஒரு கோப்பை 30 பவுண்டுகள் (இந்திய ரூபாய் ரூ2500).

யானைக்கு காப்பிக்கொட்டை பழங்களைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அது அவைகளை முழுதும் ஜீரணிக்காமல் பின்பக்கம் வழியாக வெளியே தள்ளிவிடும். அந்த யானை லத்தியிலிருந்து ஒவ்வொரு காப்பிக்கொட்டை பழத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். பிறகு கொட்டைகளை வெளியே எடுப்பார்கள். யானை வயிற்றிலுள்ள அமிலங்கள் அந்தக் காப்பிக் கொட்டைகளுக்கு ஒரு மாயாஜால சுவையைக் கொடுக்கிறது.

கனடா நாட்டைச் சேர்ந்த பிளேக் டின்கின் என்பவர் 3 லட்சம் பவுன்ட் செலவில் இந்த ஏற்பாடைச் செய்துள்ளார். அவர் 20 யானைகளுக்கு இப்படி கொடுத்து 70 கிலோ காப்பிக்கொட்டை உற்பத்தி செய்துவிட்டார். முழுதும் விற்றுப்போய்விட்டன.

ஒரே கேள்விதான். யானைக்கு முழுதும் ஒவ்வாத ஒரு பொருளைச் சாப்பிடக் கொடுத்து பின்னர் அதையே வெளியே தள்ளச் செய்வது நியாயமா? மேலை நாட்டினருக்குப் பணம் கிடைத்தால் போதும், தார்மீக சிந்தனை பறந்தோடிப் போய்விடும்.

இந்துக்கள் எல்லா மிருகங்களையும் விட பசுவையும் யானையையும் மிகவும் மதித்தனர். எல்லா கோவில்களிலும் மடங்களிலும் காலையில் கோ (பசு) பூஜையும் கஜ (யானை) பூஜையும் நடைபெறுகிறது. இதற்கு பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன. இதை இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர். மாட்டுச் சாணத்துக்கு பாக்டீரியா கிருமிகளைக் கொல்லும் சக்தி இருப்பதை அறிந்து வீட்டையும் சமையல் அறையையும் மெழுக சாணத்தைப் பயன்படுத்தினர். அதன் மூத்திரத்துக்கு உள்ள மகத்தான மருத்துவப் பயன்களை அறிந்து அதை மருந்திலும் சமயச் சடங்கிலும் பயன்படுத்துகின்றனர். உலகில் இரண்டு மிருகங்களின் சாணத்தை மட்டுமே இப்படிப் பயன்படுத்தமுடியும். ஒன்று பசு, மற்றொன்று யானை.

இந்துக்கள் சமயச் சடங்கில் பயன்படுத்தும் பஞ்சகவ்யம் பற்றிப் படித்துவிட்டு யானையைப் பார்ப்போம்.

பஞ்ச கவ்யம் என்றால் என்ன?

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், முக்கியச் சடங்குகளின் போது பஞ்ச கவ்யம் சாப்பிட வேண்டும். பஞ்ச கவ்யம் என்றால் பசு மாட்டிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்கள் என்று பொருள். இதோ விவேக சிந்தாமணி என்ன சொல்கிறது என்று படியுங்கள்: “இது கோமூத்திரம், கோமயம் (சாணி), பால், தயிர், நெய் இவை பஞ்ச கவ்வியம் என்று கூறப்படும். கோமூத்திரத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்னியும், பாலுக்குச் சந்திரனும் தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் தேவதைகள் என்று ஸ்மிருதிகள் கூறுகின்றன.

பின்னும் செந்நிறத்த பசுவிடம் கோமூத்திரத்தையும், வெள்ளைப் பசுவிடம் கோமயத்தையும், பொன்னிறப் பசுவினிடம் பாலையும், நீல நிறப்பசுவிடம் தயிரையும், கரு நிறப் பசுவினிடம் நெய்யையும் கொள்ளின் நலமெனப்படும்.

கோமூத்திரம், கோமயம் இவை இரண்டும் ஆறு மாத்திரை எடையும், நெய்யும் பாலும் மூன்று மாத்திரை எடையும், தயிர் பத்து மாத்திரை எடையும் இருத்தல் வேண்டும் இதை மந்திர பூர்வமாகக் கலந்து பிராமண சந்நிதியில் உண்டவன் சகல் பாபத்திலிருந்தும் விடுபட்டு சுத்தமடைகிறான்”.

 

யானை லத்தியின் மகிமை

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது தமிழ் பழமொழி. யானையின் தந்தத்தை மத சம்பந்தமான சிலை , பூஜைப் பொருட்களுக்குப் பயன்படுத்துவதை அறிவோம். கேரளத்தில் யானை வால் முடியை நோய்த் தடுக்கும் தாயத்தாகப் பயன்படுத்துவர். யானை லத்தி போட்டால் அதை மிதிக்க பெரியோர்களும் சிறியோரும் ஓடோடி வருவர். காலில் உள்ள பித்தவெடிப்பு, சேற்றுப் புண் இவைகளை குணப்படுத்தும் ஆற்றல் அதற்குண்டு. யானையின் மூத்திரத்தையும் தலையில் தெளித்துக் கொள்வார்கள். யானையின் துதிக்கை வழியாக வரும் தண்ணிரை தலையில் விழச் செய்வார்கள். இதை கஜ லெட்சுமி சிலைகளிலும் காணலாம். 2200 ஆண்டுகளுக்கு முந்திய கஜலெட்சுமி சிலைகள் இலங்கை, டென்மார்க் வரை சென்று அங்கு நாணயங்களிலும் பாத்திரங்களிலும் பொறிக்கப்பட்டன. இது பற்றி எனது முந்தைய கட்டுரைகளில் விரிவாகக் காணலாம்.

யானை லத்தி நல்ல உரமும் கூட.

யானை பற்றிய பழமொழிகளும் நாம் அதை எவ்வளவு மதித்தோம் என்பதைக் கட்டுகிறது. இதை எல்லாம் படித்த பின்னர் மேற்கூறிய யானை லத்தி காப்பியைக் குடிக்க நாம் எல்லோருக்கும் தயக்கமே இருக்காது. விலையை மட்டும் குறைத்தால் போதும்.

படிக்கவேண்டிய எனது மற்ற கட்டுரைகள்:

1.யானை பற்றிய நூறு பழமொழிகள் 2.Gajalakshmi in Kalidasa and Sangam Literature 3.Gajendra Moksha in Africa

Contact: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

பல்கலை வித்தகன் அதிசய மன்னன் போஜராஜன்

பல்கலை வித்தகன் அதிசய மன்னன் போஜராஜன்

எழுதியவர்: ச.நாகராஜன்

 

 

Picture of Siva Temple at Bhojapuri (Bhopal)

கவிதா ரஸிகர்களைக் கொண்ட உலகின் ஒரே தேசம் 

உலகிலேயே சரித்திரத்தில் நாம் காணும் எந்த தேச மன்னனும் நினைக்கக் கூட முடியாத ஒரு அபூர்வத்தை நிகழ்த்திக் காட்டிய ஒரே மன்னன் போஜராஜன். இன்றைய போபால் (போஜன் நிறுவிய போஜபாலே இன்று போபால்!)அந்தக் காலத்தில் போஜ சாம்ராஜ்யமாகத் திகழ்ந்தது. தாரா என்ற நகரைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி நடத்திய போஜராஜன்,

விப்ரோபி யோ பவேன்ன மூர்க்க: ச புராத்ஹிரஸ்து மேI                      கும்பகாரோபி யோ வித்வான் ச திஷ்டது புரே மமII“

என்று பிரகடனம் செய்தான்!

(இதன் பொருள்:-“அந்தணன் என்றாலும் படிப்பறிவற்றவன் என் தேசத்தில் வசிக்க வேண்டாம். குயவனாக இருந்தாலும் கற்றறிந்தவன் என் தேசத்தில் வசிக்கட்டும்”) அதே போல அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் உன்னதமான கவிதையை ரசிக்கும் திறன் கொண்டவராகத் திகழ்ந்தனர்.

 

84 அபூர்வ நூலைப் படைத்தவன் 

போஜராஜன் பல் கலை வித்தகன் . அஸ்வ சாஸ்திரம் சங்கீதம்,இசை, ஜோதிடம்,வானியல் உள்ளிட்ட ஏராளமான கலைகளில் வல்லவனாததால் இவனை பஹ¤வித்யா விஷாரத் (பல்கலை வித்தகன்) என அறிஞர்கள் அழைத்துப் போற்றினர். சுமார் 84 அரிய நூல்களைப் படைத்தவன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையின் தலையாய நூலாகத் திகழ்வதோடு அந்தத் துறையில் வேத கால ரிஷிகள் தொட்டு அன்றைய வரை இருந்த மேதைகள் அந்த துறை பற்றி கூறியவற்றைத் தொகுத்துக் கூறும் களஞ்சியமாகவும் திகழ்கிறது. அவன் இயற்றிய நூல்களில் சில:

சரஸ்வதி கண்டாபரணா: வடமொழி இலக்கணம் பற்றியது; சமராங்கத சூத்ரதாரா: ஆகாயவிமான வகைகள் அவைகள் கட்டும் விதம் பற்றிய தொழில்நுட்ப நூல்;தத்வ ப்ரகாசா: சிவன் குறித்த சித்தாந்த தந்த்ர சாஸ்த்ரம் பற்றியது;ரஸராஜ ம்ரிகங்கா: இரசாயன நூல் யுக்திகல்பதரு: கப்பல் எப்படிக் கட்டுவது, கப்பல் வகைகள் பற்றியது; தர்மசாஸ்த்ர விருத்தி: தர்மசாஸ்திரம் பற்றியது; சம்புராமாயணம்:காளிதாஸனுடன் இணைந்து பாடியது; ராஜமார்த்தாண்ட வ்ருத்தி அல்லது போஜ விருத்தி:பதஞ்சலி யோக சூத்ர விரிவுரை;         ச்ருங்காரப்ரகாசா: இந்த அரிய நூலில் சிருங்கார ரஸமே பிரதான ரஸம் என்பதை போஜராஜன் சுட்டிக் காட்டுகிறான். (இந்த நூல் மட்டும் 1926லிருந்து 2007 முடிய 25 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. உலகின் 74 நூலகங்களில் இது தனியிடம் பெற்றுள்ளது!)

 

பிரபல வரலாற்று ஆசிரியரான வின்சென்ட் ஆர்தர் ஸ்மித் உள்ளிட்ட ஏராளமான மேலை நாட்டு அறிஞர்கள் போஜராஜனைப் பற்றியும் அவனது வாழ்க்கை வரலாறுகள் பற்றியும் நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி அவனை வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.

 

காளிதாஸனோடு இயற்றிய போஜ சம்பூ 

      மஹாகவி காளிதாஸனின் உயிர் நண்பன் போஜன், போஜனைப் பற்றிய நூற்றுக் கணக்கான சம்பவங்களில் முக்கியமான ஒன்றை மட்டும் இங்கு பார்ப்போம்.

தன்னைப் பற்றிய காளிதாஸனின் உண்மையான மதிப்பீட்டை அறிய விரும்பிய போஜன் காளிதாஸனை தன் பேரில் ஒரு சரம கவி பாடுமாறு வேண்டிக் கொண்டான். சரம கவி என்பது ஒருவர் இறந்தவுடன் துக்கம் தாளாமல் அவரைப் பற்றி மனம் நெகிழ்ந்து பாடும் கவிதை. காளிதாஸன் திடுக்கிட்டான். பொய்யா வாக்கை உடைய தான் சரம கவி பாடினால் தன் ஆருயிர் நண்பன் உயிரை இழந்து விடுவானே! மனம் நடுங்கிய காளிதாஸன் அந்தப் பாட்டைப் பாட முடியாது என்று மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த போஜன் காளிதாஸனிடம் என் முகத்தில் விழிக்காதே, போ என்று கூறி விட்டான்.

 

மனம் நொந்த காளிதாஸன் ஒரு சந்யாசி வேடம் பூண்டு நாடெங்கும் சுற்றலானான். சில நாட்களிலேயே காளிதாஸன் இல்லாத வாழ்க்கை சாரமற்றுப் போக போஜன் அவனைத் தேடி மாறுவேடம் பூண்டு அலையலானான். ஒரு நாள் தற்செயலாக காளிதாஸனை ஒரு மண்டபத்தில் சந்திக்க இருவரும் அளவளாவினர். சந்யாசி வேடம் பூண்டவன் காளிதாஸனே என்பதைக் கண்டு கொண்ட போஜன் தான் யார் என்பதைத் தெரிவிக்கவில்லை.தான் தாரா நகரத்திலிருந்து வருவதாக அவன் தெரிவித்துக் கொண்டான். உடனே மனம் நெகிழ்ந்த காளிதாஸன், “அங்கே போஜ மன்னர் சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று ஆவலுடன் கேட்டான். தன் எண்ணம் நிறைவேற இது தான் சரியான சமயம் என்று எண்ணி மனம் மகிழ்ந்த போஜன்.”அடடா, உங்களுக்கு விஷயம் தெரியாதா? போஜ மன்னர் இறந்து விட்டார்!” என்று கூறினான். உடனே மனம் கலங்கி அழுத காளிதாஸனிடமிருந்து அற்புதமான சரம கவிதை வெளிப்பட்டது:

 

 

“அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதி I                                    பண்டிதா கண்டிதா சர்வே போஜராஜம் திவம் கதே II”

 

(இன்று தாரா நகரம் நிராதரவாகி விட்டது; சரஸ்வதி ஆதரவற்றுப் போனாள். பண்டிதர்கள் அனைவரும் போஜராஜன் சொர்க்கம் அடைந்ததால் சிதறிப் போனார்கள்) இதைக் கேட்டவுடன் மனம் மகிழ்ந்தான் போஜன். ஆனால் கவி வாக்கு பொய்க்காது என்பதால் அவன் உடனே கீழே விழுந்து உயிரை விட்டான். தன் நண்பன் போஜ ராஜனே தன் பாட்டைக் கேட்டு உயிரை விட்டான் என்பதை அறிந்த காளிதாஸன் அவன் உயிர் பிழைக்க  மாற்றுப் பாடலைப் பாடி அவன் உயிர் பிழைக்க வைக்குமாறு காளி தேவியை இறைஞ்சினான்.

“அத்ய தாரா சதாதாரா சதாலம்பா சரஸ்வதி I                                      பண்டிதா மண்டிதா சர்வே போஜராஜம் புவம் கதே II”

 

(போஜன் பூமியை அடைந்ததால்   தாரா நகரம் எப்போதும் ஆதரவுடன் திகழ்கிறது. சரஸ்வதிக்கு நிரந்தர ஆதரவு உள்ளது.பண்டிதர்கள் அனைவரும் மிகவும் ஆதரிக்கப்படுகின்றனர்)

பாடலைக் கேட்ட போஜன் உயிர் பிழைத்து எழுந்தான். நேரில் பிரசன்னமாகிய காளி அவன் விதி முடிந்தாலும் காளிதாஸனின் பாடலுக்காக மூன்றே முக்கால் நாழி அவன் உயிர் வாழ்வான் என்று அருளினாள். மீதமிருக்கும் ஒரு கணத்தையும் வீணடிக்காத போஜன் வாழ்வாங்கு வாழ ராமாயணத்தைத் தானும் காளிதாஸனும் சேர்ந்து பாடி இலக்கியம் படைக்க விரும்பினான். இருவருமாக இணைந்து பாடிய காவியம் போஜ சம்பூ என்றும் சம்பு ராமாயணம் என்றும் பெயரிடப்பட்டு நாடெங்கும் புகழ் பெற்றது. இன்றும் படிக்கக் கிடைக்கிறது.

 

கஜினியை விரட்டியவன்

கி.பி. 1000ம் ஆண்டு முதல் 1050 முடிய அவன் செய்தஅரசாட்சி அனைவரையும் வியக்க வைத்தது! இன்றைய மத்யபிரதேசத்தில் உள்ள போபாலிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போஜ்பூரை அவனே ஸ்தாபித்தான். போஜேஸ்வர ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களை அவன் நிறுவினான்.இன்று தார் என்று கூறப்படும் நகரில் அவன் நிறுவிய வடமொழி மையம் ஒன்று போஜ்சாலா என்ற பெயரில் பல் கலைகளையும் கற்பித்தது. புஜபலா மற்றும் பீம பராக்ரம என்ற விசேஷ விருதுகளால் உலகினரால் அவன் அழைக்கப்பட்டதால் பாண்டவ பீமனைப் போன்ற அசாத்திய பலமும் வீரத்தையும் அவன் பெற்றிருப்பது தெரிய வருகிறது!மாபெரும் வீரனான போஜன் முகம்மது கஜினியைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். ஹிந்து மதத்தைப் பாதுகாத்த தீரனாகத் திகழ்ந்தான்.

 

போஜ ப்ரபந்தம்

போஜராஜனின் மூளையில் ஒரு கட்டி இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை மூலமாக எடுத்து அவனை வைத்தியர்கள் குணப்படுத்தியதாகவும் வரலாறு கூறி அதிசயிக்கிறது! இந்த அறுவைசிகிச்சையைத் தாங்கி போஜன் உயிர் பிழைத்து அரும் பெரும் செயல்களைப் புரிந்தான் என்பதையும் வரலாறு குறிப்பிடுகிறது!

போஜனின் சரித்திரம் பற்றி போஜ சரித்ரம் மற்றும் போஜப்ரபந்தம் ஆகிய இரு நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.இவற்றில் நூற்றுக்கணக்கான சம்பவங்கள் சுவை பட சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை காலகட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்து மன்னர்களும் கவிஞர்களும் வீரர்களும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தது போல எழுதப்பட்டுள்ளன என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்!

 

பின்னால் 17ம் நூற்றாண்டில் பல்லாள தேவர் எழுதிய போஜ ப்ரபந்தம் போஜனின் வாழ்க்கை வரலாற்றை நன்கு சித்தரிக்கிறது. இதன் படி சிந்துலர் முஞ்சர் ஆகிய இருவர் அண்ணன் தம்பிகள். சிந்துலரின் மகனாக போஜன் பிறந்தார். தன் தம்பிக்கு மகுடம் சூட்டி உரிய வயது வரும் போது போஜனுக்கு முடி சூட்டி அரியணையில் ஏற்றுமாறு கூறி சிந்துலர் முடி துறந்தார். ஒரு நாள் அரண்மனைக்கு வந்த ஜோதிடர் போஜனின் ஜாதகத்தைப் பார்த்து

 

“பஞ்சாஸர் பஞ்சவர்ஷாணி ஸப்தமாஸாதிநத்திரியம்                          போஜராஜோ போக்த வ்யஹ கௌடோதக்ஷ¢ணாபத’ என்றார்.

அதாவது இந்த போஜன் 55 வருடம் 7 மாதம் 8 நாள் கௌடதேசம் உள்ளிட்ட தென்னாட்டை பெரும் புகழுடன் ஆளப் போகிறான் என்று கூறினார். இதனால் கலக்கம் அடைந்த முஞ்ச ராஜன் போஜனைக் கொல்லுமாறு தன் பணியாளரிடம் உத்தரவிட்டான். குருகுலத்திலிருந்த போஜன் கொலை செய்வதற்காக அழைத்து வரப்படும் போது தன்னை முஞ்ச ராஜன் கொலை செய்ய ஆணை பிறப்பித்திருப்பதை அறிந்து ஒரு ஓலை நறுக்கைக் கொடுத்து அதை முஞ்ச ராஜனிடம் கொடுத்துத் தனது கடைசி ஆசையை நிறைவேற்றுமாறு வேண்ட கொலை செய்ய வந்தவர்கள் அதை முஞ்ச ராஜனிடம் சென்று தந்தனர். அந்த ஓலை நறுக்கில் ஒரு சுலோகம் இருந்தது.அதில் மகா புத்திசாலியான போஜன், “சத்யயுகத்தில் இருந்த உலகின் ஜ்வலிக்கும் மணி என்று கருத்தப்பட்ட சக்கரவர்த்தி மாந்தாதா இறந்து போனான். கடல் மீது பாலம் கட்டி ராவணனைக் கொன்ற ராமரும் இப்போது இல்லை! யுதிஷ்டிரர் போன்ற சக்தி வாய்ந்த அரசர்கள் இந்த பூவுலகை ஆண்டுள்ளனர். ஆனால் இந்த பூமி அவர்கள் இல்லாமல் கூட இன்னும் இருக்கிறது. ஓ முஞ்ச ராஜனே! இந்த பூமி நீ நிலையாக இருக்க, தான் போக விரும்புகிறது போலும்!” என்று  எழுதி இருந்தான்! இதைப் பார்த்தவுடன் முஞ்ச ராஜனுக்கு ஞானம் வந்து அவன் அரசைத் துறந்து போஜனையே அரசனாக்கினான். இளைஞனாக இருந்த போதே இப்படி அபாரமான கவித் திறமையையும் கூர்மையான புத்தியையும் கொண்டிருந்த போஜன் எப்படி நாட்டை ஆண்டிருப்பான் என்பதை நாம் யூகித்து உணர்ந்து கொள்ளலாம்!

 

 

ஜோதிட நூல் வித்வத்ஞான வல்லபா 

பூபாலக்ருத்ய சமுச்சயா என்னும் அவனது நூல் பல்வேறு விரதங்களை எப்படி எந்த திதியில் அனுஷ்டிப்பது என்பதையும் அதற்கான பலன்களையும் விவரிக்கிறது.கார்த்திகை சுக்ல ஏகாதசி அன்று விஷ்ணுவை எழுப்ப வேண்டும் என்றும் ஆஷாட சுக்ல ஏகாதசி அன்று அவர் நித்திரைக்குச் செல்வார் என்றும் இந்த நூல் விவரிக்கிறது. இது போன்ற ஏராளமான ரகசியங்களை ஜோதிடத்தின் அடிப்படையிலான திதி, நாள் முதலியவற்றால் இது விவரிப்பதால் போஜனது பரந்துபட்ட ஜோதிட மற்றும் ஆன்மீக அறிவு விளங்குகிறது!விலக்க வேண்டிய கறிகாய்கள், பழங்கள், உப்புகள். தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டிய நாட்கள் உள்ளிட்ட நுட்பமான விஷயங்களை இதில் போஜன் விவரிப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது என்று  மேலை நாட்டு ஆய்வாளர்கள் வியந்து கூறுகின்றனர்.

அடுத்து ஜோதிட சாஸ்திரத்தை விரிவாக விளக்கி வித்வத்ஞானவல்லபா என்ற அற்புதமான ஜோதிட நூலையும் அவன் எழுதியுள்ளான். 1970ல் பரோடா பல்கலைக் கழகத்தால் இந்த நூல் பிரசுரிக்கப்பட்டது. உலகின் தலை சிறந்த 31 பல்கலைக்கழகங்களில் இந்த நூல் இருக்கிறது.தஞ்சாவூர் சுவடிகள் காடலாக்கில் இந்த நூல் 14வது தொகுதியில் 11604 கேடலாக் எண்ணாகக் குறிப்பிடப்பட்டு அங்கு இருப்பதை உறுதி செய்கிறது!

 

சுருக்கமாகச் சொல்லப் போனால் இராமாயண மஹாபாரதம் மற்றும் புராணங்கள் சித்தரிக்கும் மாபெரும் மன்னர்களுக்கு நிகராக போஜன் தர்ம சாஸ்திரம் நூலை எழுதியதோடு அந்த தர்மத்தின் படி வாழ்ந்த  பல்கலை வித்தகன் என்று போற்றிப் புகழ்ந்து வணங்கலாம்!

*******************

Note: There were tow great kings with the same name Bhojarajan ruling at different times

டிசம்பர் 21ம் தேதி உலகம் அழியுமா?

Mayan-Calendar

 

Picture of Mayan Calendar

தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் 3000 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாகரீகத்தை நிலைநாட்டியவர்கள் மாயா இன மக்கள். அவர்களுடைய பழைய காலண்டர்/ பஞ்சாங்கம் டிசம்பர் 21 ஆம் தேதி முடிவு அடையப்போகிறது. இதைக் காரணம் காட்டி அந்த நாளில் உலகம் அழிந்துவிடும் என்று பல ஆண்டுகளாக ஏராளமான நூல்களும் கட்டுரைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’வை ஆயிரக கணக்கான மக்கள் இது பற்றி கேள்வி கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் இது பற்றி ‘நாசா’ பதில் சொல்லி வருகிறது உலகம் அழியாது என்று.

 

உலகில் இன்னும் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் என்பதற்கு மேலும் சாட்சியம் கிடைத்து இருக்கிறது. உலகம் அழியும் நாளில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இதை வாங்குங்கள் என்று முகமூடி, உடுப்பு ஆகியவற்றை விற்போரிடம் ஏரளமானோர் அதை வாங்கியும் வருகின்றனர்!

 

மாயாக்கள் சொன்னதன் உண்மை என்ன?

மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்ற நாகர்கள் என்றும்  பாண்டவர்கள்- நாகா இன மோதல் அதிகரித்து ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தில் (அதாவது நாகர்கள் படுகொலை) முடிவடைந்தது என்றும் நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் காண்க.

மாயா இன மக்கள் இந்தியாவிலிருந்து சென்றதால் கலியுகக் கணக்கையே துவக்க ஆண்டாக வைத்திருக்கின்றனர். கொஞ்சம் வித்தியாசம் உண்டு. ஆனால் அதன் பின்னர் அவர்களாகவே இரண்டு மூன்று வகையான காலண்டர்களை உருவாக்கிப் பின்பற்றினர். அதில் ஒன்று டிசம்பர் 21 ஆம் தேதி முடிவடைவது உண்மைதான். ஆனால் அவர்கள் உலகம் அழியும் என்று சொல்லவில்லை. இருந்தபோதிலும் டிசம்பர் மாதத்தில் உலகையே உலுக்கிய சுனாமி ராட்சத அலைகள் வந்தது மக்களின் நினைவில் இன்னும் இருப்பதால் ஒரு பக்கம் பயம்!

 

மெக்சிகோவுக்கு அடித்தது ‘லக்கி ப்ரைஸ்’!

சாதாரணமாக மெக்ஸிகோ நாட்டில் உள்ள மாயா தொல் பொருட் சின்னங்களைப் பார்ப்பதற்கு இரண்டு கோடி சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்த ஆண்டு இந்த மாயா புரளியால் ஐந்தரைக் கோடி சுற்றுலாப் பயணிகள் வந்து மாயா இனச் சின்னங்களைப் பார்க்கிறார்கள். புரளி, வதந்திகளில் கூட கொஞ்சம் பயன் இருக்கிறது—சுற்றுலா வளர்ச்சி!

நாசா அமைப்புக்கு 5000 ஈ மெயில்கள் வந்திருப்பதால் அவர்கள் வான சாஸ்திரம் பற்றிச் சொல்லிக்கொடுக்க ஒரு அரிய வாய்ப்பும் இந்த வதந்தியால் கிடைத்துள்ளது! உயிரைக் காப்பாற்ற உபகரணங்கள், சிறப்பு உடைகள் விற்போருக்கு காசும் கிடைக்கிறது!

 

உலகம் அழிவது எப்போது?

உலகம் அழியும் என்ற புரளிகளும் வதந்திகளும் இந்த பூமிக்குப் புதிதல்ல. 1960—களில் அஷ்ட கிரஹ சேர்க்கையில் உலகம் அழியும் என்று புரளி கிளப்பப்பட்டது. உடனே சோதிடர்களும் கோவில்களும் நன்கு பயனடைந்தன. ஞான சம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகம்’ பிரபலமாகியது

போப்பண்டவர் இன்னொசென்ட்-3 1244ல் உலகம் அழியும்—அதாவது இஸ்லாமிய சமயம் தோன்றி 666 ஆண்டுகளில்— என்று கூறினார்.

மார்ட்டின் லூதர் 1600 ஆம் ஆண்டை ஒட்டி உலகம் அழியும் என்றார்.

கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1658ல் உலகம் அழியும் என்றார். அவர் கணக்கின் படி கடவுள் உலகைச் சமைத்த 7000 ஆண்டுகளில் உலகம் அழியவேண்டும்!

பிரபல ஆரூடக்காரர் நாட்ர்தாமஸ் 1999 இல் உலகத்தின் கதை முடிந்துவிடும் என்றார். சர் ஐஸக் நியூட்டன் 2000 ஆண்டில் உலகம் அழியும் என்றார். ஆனால் இன்று இதை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் உலகம் அழியவில்லை!

 

மாயா இன காலண்டர்

மாயா இன மக்களின் காலண்டர் துவங்கிய ஆண்டு கி.மு 3114.

அது 144,000 நாட்களுக்கு ஒரு முறை மாறும்.

அவர்கள் 394 ஆண்டுகளை ஒரு பக்தூன் என்று அழைப்பர். இப்போது 13ஆவது பக்தூன் முடிவடையப் போகிறது.

மாயா காலண்டர் டிசம்பர் 21 என்று உலக அழிவுக்கு நாள் குறிக்காவிட்டாலும் டிசம்பர் 21 நீண்ட இரவு நாள் என்பதால் மேலை நாட்டு சோதிடர்கள் இப்படி நாள் குறித்தார்கள்!

இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டில் பத்திரிக்கைகளில் தினமும் அடிபடும் பெரிய செய்தி பைரினிஸ் மலையில் இருக்கும் பிக் டெ புகாரா கிராமம் ஆகும். அங்கு வருபவருக்கு வெளி உலக வாசிகள் பாதுகாப்பு தருவார்கள் என்ற வதந்தி காரணமாக வீட்டு வாடகை லட்சக் கணக்கில் உயர்ந்து விட்டது. அதாவது டிசம்பர் 21 இரவு மட்டும் தங்க 1200 பவுண்டுகள் என்று ப்ரிட்டிஷ் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரெஞ்சு போலீசார் மிகவும் விழிப்புடன் நிலைமையைக் கவனித்து வருகின்றனர்.

 

மாயா இன மக்கள் பற்றிய எனது ஏனைய கட்டுரைகள்:

1.Amazing similarities between Hindu Ngas and Mayas 2.Are Mayas ,Hindu Nagas? 3. Amazing similarities—Part 2 (all published in April, May 2012 in my blogs) 4.மாயா இன மக்கள் இந்திய நாகர்கள் 5. நாகர்- மாயா இன அற்புத ஒற்றுமைகள்—பகுதி 1,பகுதி 2

contact: swami_48@yahoo.com

 

ஜோதிட மேதை பாஸ்கராசார்யர்

Picture: Postage Stamps issued by Hong Kong

ச.நாகராஜன் 

கலைகளின் தலைநகரம் உஜ்ஜயினி 

ஜோதிடம், வானவியல் மற்றும் கணிதம் ஆகிய கலைகளுக்கு தாயகமாகவும் தலைநகரகமாகவும் திகழ்ந்த உஜ்ஜயினிக்கு மேலும் புகழ் சேர்த்த ஒரு பெரிய ஜோதிடமேதை பாஸ்கராசார்யர். இவரது காலம் 1114 முதல் 1185 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரில் (விஜயபுரம் என்னும் ஊரில்) அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.இவரது தந்தையார் மஹேஸ்வரர் ஒரு பெரிய ஜோதிட மேதை. உஜ்ஜயினியில் இவர் வாழ்ந்த காலம் முழுவதும் ஜோதிடம் வானவியல் கணிதம் ஆகிய கலைகளுக்குத் தன்னை அர்ப்பணித்து பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகளைக் கண்டு உலகினரை வியக்க வைத்தார்.

சித்தாந்த சிரோமணி என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. கோள அத்யாயம் மற்றும் க்ரஹகணிதம் ஆகிய இரு பாகங்களைக் கொண்டுள்ள இதில் பூமி சூரியனைச் சுற்றி வரும் காலத்தை 9 தசமஸ்தான சுத்தமாக, 365.258756484 என்று கண்டுபிடித்துள்ளது பிரமிக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு.

 

லீலாவதியின் கதை

இவர் எழுதிய லீலாவதி என்ற நூலைப் பற்றிய சோகமான நிகழ்வு ஒன்று உண்டு! இந்த நூலை பின்னால் 1587ம் ஆண்டில் பாரசீக மொழியில் மொழி பெயர்த்த பைஜி என்பவர் இந்தக் கதையை விரிவாக எழுதியுள்ளார்.

லீலாவதி பாஸ்கராசார்யரின் அன்புக்கு உகந்த புத்திரி.அவள் ஜாதகத்தை கணித்த பாஸ்கராசார்யர் திடுக்கிட்டார். அவளுக்கு ஒரு குறிப்பிட்ட முகூர்த்தத்தில் கல்யாணம் நடந்தால் மட்டுமே அவளால் தீர்க்க சுமங்கலியாக வாழ்க்கை நடத்த முடியுமே தவிர அது தவறி விட்டால் அவள் வாழ்க்கை சிறக்க வாய்ப்பே இல்லை என்பதை அவர் ஜாதக மூலம் கண்டார்.

உரிய காலத்தில் திருமணத்தை நிச்சயித்த பாஸ்கராசார்யர் குறிப்பிட்ட முகூர்த்தம் தவறி விடக் கூடாதே என்ற எண்ணத்தில் ஒரு புதிய சாதனத்தை அமைத்தார்.ஒரு சிறிய கோப்பையில் துவாரம் ஒன்றைச் செய்து அதை ஒரு பெரிய பாத்திரத்தில் மிதக்க விட்டார்.சரியான முகூர்த்த நேரத்தில் அந்த கோப்பை பெரிய பாத்திர நீரில் மூழ்கி விடும். அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தி விடலாம் என்பது அவரது எண்ணம். எல்லாம் சரியான படி அமைக்கப்பட்டது.

ஆனால் திருமண நாளன்று (ஆறு வயதே ஆன) லீலாவதி அந்த கோப்பையில் என்ன இருக்கிறது என்று ஆவல் மீதூற  பார்க்கக் குனிந்த போது அவள் அணிந்திருந்த முத்து மாலையில் இருந்த ஒரு சிறிய முத்து நழுவி அவளை அறியாமல் அந்த கோப்பையில் விழுந்தது. அது சரியாக  கோப்பையிலிருந்த துவாரத்தை அடைத்து விட்டது. நேரம் சென்று கொண்டே இருந்ததைக் கவனித்த பாஸ்கராசார்யர் ஏன் கோப்பை மூழ்கவில்லை என்று ஆராயப் போனார். துவாரத்தை ஒரு சிறிய முத்து அடைத்திருந்ததையும் அதனால் நல்ல நேரம் கடந்து விட்டதையும் அறிந்து விசனித்தார். திருமணம் செய்து கொண்ட லீலாவதி சிறிது காலத்தில் கணவனை இழந்து விதவையானாள். அவளுக்கு ஆறுதல் தரும் விதத்தில் அவள் பெயரில் லீலாவதி என்ற புகழ் பெற்ற நூலை அவர் தனது 30வது வயதில் எழுதினார்!

லீலாவதி நூலின் புகழ்

லீலாவதி ஒரு அபூர்வமான நூல் இதில் 13 அத்தியாயங்களில் கணிதம் ஜியோமிதி சூத்திரங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் அடங்கி உள்ளன.டிபரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்னாமெட்ரி உள்ளிட்ட கணிதத் துறைகளில் அவரது கண்டுபிடிப்புகள் மேலை நாட்டினரை வியக்க வைக்கின்றன. லீலாவதியைப் படிப்பவர்களுக்கு சந்தோஷமும், உற்சாகமும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று பாஸ்கராசார்யரே கூறி இருப்பது உண்மை என்பதை இந்த நூலைக் கற்பவர்களுக்கு நன்கு புரியும். பொது மக்கள்  லீலாவதியைப் பற்றி, “லீலாவதியை நன்கு கற்றவர்கள் ஒரு மரத்தில் எத்தனை இலைகள் இருக்கிறது என்று நிச்சயமாகக்  கூறி விடுவர்” என்று கூறி அதைப் புகழ்ந்தனர்.

லீலாவதியைத் தவிர பீஜ கணிதம்,சித்தாந்த சிரோமணி, வசனபாஷ்யம்,கரணகுதூகலம்,ப்ரஹ்மதுல்யா ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். பாஸ்கராசார்யர் தனக்கு முன் வாழ்ந்த வானவியல் நிபுணரான பிரம்மகுப்தரின் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தினார். இவரது மகனான லோக்சமுத்ரரும் ஒரு பிரபல ஜோதிடராகத் திகழ்ந்தார்.லோக்சமுத்ரரின் மகன் பாஸ்கராசார்யரின் நூல்களைக் கற்பிக்க 1207ம் ஆண்டில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார்.

ஜோதிட சாஸ்திரத்தில் கிரக சஞ்சாரங்கள் மிக முக்கியமானவை. அவை குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைப் பொறுத்தே பலன்களைக் கூற முடியும். இந்த வகையில் கிரகங்களின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்கும் விதத்தைத் தன் நூல்களில் பாஸ்கராசார்யர் விளக்கியுள்ளார் என்பதே இவரது தனிச் சிறப்பு.

 

மயிலின் உச்சி எனத் திகழும் மாமேதை

 இந்திய கோவில் ஒன்றில் உள்ள மத்தியகால கல்வெட்டு பாஸ்கராசார்யரைப் பற்றிக் கூறுவது  அவரைப் பற்றிய சரியான கணிப்பாக அமைகிறது. அது இது தான்:                            ‘‘அறிஞர்களாலும் மேதைகளாலும் மதிக்கப்படும் அபூர்வ திறமைகள் கொண்ட ஒப்பற்ற பாஸ்கராசார்யருக்கு வெற்றி! புகழ் கொண்டு ஆன்மீகத்தில் சிகரம் ஏறிய அந்தக் கவிஞர் மயிலின்  உச்சி போலத் திகழ்கிறார்! ‘’

 

**********************

கவி மழை பொழிய ஆசையா?

அவ்வையார், கம்பன், அருணகிரிநாதர், குமரகுருபர சுவாமிகள், பாரதி, காளிதாசன் ஆகியோர் எல்லாம் கவி மழை பொழிந்து நம்மை அருள் வெள்ளத்திலும் ஆனந்த வெள்ளத்திலும் மிதக்கச் செய்தனர். அவர்களைப் போல கவி பாடவும் மொழி அறிவு பெறவும் ஆசைப் பட்டால் நீங்களும் அவர்களைப் போல இறைவனிடம் வேண்டுங்கள்.

பெரிய கவிஞர்கள் எல்லாம் இறைவனின் அருள் பெற்றே கவி பாடினர். அவர்கள் அல்லும் பகலும் அனவரதமும் “நாவில் சரஸ்வதி நல் துணையாக” (கந்த சஷ்டிக் கவசம்) என்றும் “நனி வாக்கை விநாயகர் காக்க” (விநாயகர் கவசம்) என்றும் வேண்டிப் பலன் பெற்றனர். இதோ அவர்கள் என்ன வேண்டினர் என்பதைப் படித்து, அதையே மனம் உருக வேண்டினால் மொழி அறிவு பெருகும், கவி மழை பொழியலாம், பல மொழிகளைப் பேசலாம்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தத் துதிகளை தினமும் படித்தால் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதோடு உண்மையான மொழி அறிவும், கவி புனையும் ஆற்றலும் பெறுவர்.

அவ்வையார்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்

நோக்குண்டாம்—மேனி நுடங்காது பூக்கொண்டு

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு

arunagirinathar

அருணகிரிநாதர்

புமியதனில் பிரபுவான புகலியில் வித்தகர் போல

அமிர்தகவித் தொடை பாட அடிமை தனக்கருள்வாயே

சமரில் எதிர்த் தசுர் மாள தனியயில் விட்டெறிவோனே

நமசிவயப் பொருளானே ரசதகிரிப் பெருமாளே

புகலி வித்தகர்=திரு ஞான சமபந்தர்

குமரகுருபரர்

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான்

எண்ணும் பொழுது எளிது எய்தநல் காய் எழுதாமறையும்

விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலுமன்பர்

கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலா வல்லியே

****

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்

பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்

விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

*****

 

தேசிய கவி சுப்பிரமணிய பாரதி: ஒரு கோடி தமிழ் பாடல்

வெள்ளை மலர்மிசை வேதக் கருப் பொருள்

ஆக விளங்கிடுவாய்!

தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு

விண்ணப்பம் செய்திடுவேன்;

எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி

இராதென்றன் நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்தி

வேல் சக்தி வேல் சக்தி வேல்!

*****

விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே

தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்

பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்த சுவைத்

தெண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே

***

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்

இமைப் பொழுதும் சோராதிருத்தல்—உமைக்கினிய

மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்

சிந்தையே இம்மூன்றும் செய்

***

பக்தியினாலே—இந்தப்

பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி!

சொல்லுவதெல்லாம்—மறைச்

சொல்லினைப் போலப் பயனுளதாகும், மெய்

வல்லமை தோன்றும்—தெய்வ

வாழ்க்கையுற்றேயிங்கு வாழ்ந்திடலாம்

***

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப் பெருக்கும்

கவிப் பெருக்கும் மேவுமாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம்

விழிபெற்றுப் பதவி கொள்வார்;

தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்

இங்கு அமரர் சிறப்பு கண்டார்.

*****

கம்பர் பாடிய சரசுவதி அந்தாதி

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என்னம்மை—தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே

இருப்பள் வாராதிங்கு இடர்

படிக நிறமும் பவளச் செவ்வாயும்

கடிகமழ் பூந்தாமரைப் போற்கையும்—துடியிடையும்

அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்

கல்லும் சொல்லாதோ கவி

காளிதாசர்

வாகார்த்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்த்தப் ப்ரதிபத்தயே

ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ (ரகுவம்சம் 1-1)

சொல்லும் பொருளும் போல சேர்ந்திருப்பவர்களும் உலகத்திற்குத் தாய் தந்தையாக இருப்பவர்களுமான பார்வதி பரமேஸ்வரனை, சொல், பொருள் இவைகளை அறியும்பொருட்டு வணங்குகிறேன்

*****************